படம் | இணையதளம்

அரசாங்கம் முன்வைக்கின்ற வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் அவ்வரசாங்கத்தின் அரசியல் செல்நெறி அபிவிருத்தி மற்றும் பொருளாதார தொடர்பிலான கொள்கை என்பன வெளிவருவதோடு வெளிநாட்டு முதலீடுகள் சர்வதேச அரசியல் தொடர்பிலான விடயங்களும் வெளிக்கொணரப்படும்.

அடுத்த ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பும் அதனைத் தொடர்ந்து விவாதமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பொதுவாக மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சில பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவையெல்லாம் பெருந்தோட்ட மக்களை எந்தளவில் சென்றடையும் என்பது கேள்விக்குறி. பெருந்தோட்ட மக்கள் தமக்கான பொருட்களை வாங்குகையில் 100, 50 கிராம்களிலேயே வாங்குகின்றனர். அதுமட்டுமல்ல கடனாகவோ சில்லறைக் கடைகளிலும் பொருட்களை வாங்குகின்ற போது விலைக்குறைப்பினை முழுமையாக அவர்களால் அனுபவிக்கமுடியாது.

வரவு – செலவுத் திட்டத்தை தனியார் துறையினருக்கு ரூபா 2,500 சம்பள அதிகரிப்பு யோசனை முன்வைக்கப்படடுள்ளது. தற்போது சம்பள ஒப்பந்தம் கைசாத்திடப்படாத நிலையில் தொழிலாளர்களுக்கான சம்பளம் ரூபா 770 எனத் தீர்மானிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், ரூபா 2,500 அதிகரிப்பு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்குப் பெருந்தோட்ட தொழிலாளர்களையும் சென்றடையுமா? நாட் சம்பளத்தில் மேலும் ரூபா 100 அதிகரிக்கப்படுமா?

புதிய ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்ட முன்வரைபில் 25 கிராமங்களை உள்ளடக்கிய கொத்தனிக் கிராமம் அமைக்கப்படுமெனவும், அக்கொத்தனிக் கிராமத்தில் வாசனை திரவியங்கள் (சாதிக்காய், ஏலம், கராம்பு…) உற்பத்திக்கும், பாற்பண்ணை உற்பத்தியை அதிகரிக்கவும் யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. இத்திட்டம் பெருந்தோட்டத் துறைக்கும் அறிமுகப்படுத்தப்படுமா?

மதுரட்ட பெருந்தோட்டக் கம்பனியும், தலவாக்கல பெருந்தோட்டக் கம்பனியும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தி 5 வருட காலங்களுக்கு தேயிலை உற்பத்தியை அதிகரிக்க (இலாபத்தை தமதாக்க) தேயிலை காணிகளை பகிர்ந்தளிக்கின்றனர். இவ்வொப்பந்தத்தில் கம்பனி அறிமுகப்படுத்தாத வேறு மரங்களை நடவோ, மறக்கரி உற்பத்தியில் ஈடுபடவோ அனுமதியில்லை. குறிப்பிட்ட 5 வருடங்களின் பின்னர் தற்போதைய ஒப்பந்தக்காரர்களுக்கு குறிப்பிட்ட காணியை மீளளிப்பதற்கான உத்தரவாதம் இல்லை. இதேபோன்று ஒப்பந்தம் மூலம் எதிர்காலத்தில் தொழிலாளர்களுக்கு இடையில் காணி பகிர்ந்தளிக்கப்படும் என பெருந்தோட்ட கம்பனிகளின் முகாமைத்துவ செயலாளர் குறிப்பிடுகின்றார். இந்நிலையில் எவ்வாறு கொத்தனி கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பெருந்தோட்டங்கள் உள்வாங்கப்படும்?

அடுத்ததாக பசுமை பூமி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீட்டோடு சேர்ந்து 7 பேர்ச் காணி கொடுப்பதாகவே கூறப்படுகின்றது. குறிப்பிட்ட காணி தொழிலாளர்களின் வதிவிடமாக இருக்கும், தொழிலிடம் வேறாக இருக்கும். இவ்வாறு தொழிலிடத்திலிருந்து வதிவிடம் பிரிந்திருக்கும் நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வு மற்றும் பொருளாதாரம் வளர்ச்சியை காணமுடியாது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுத் திட்டத்திற்கென ரூ. 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக வரவு – செலவு திட்ட அறிக்கை கூறுகிறது. வீடுகளை இழந்த மீரியாபெத்த மக்களுக்கு ஒரு வருடம் கடந்தும் வீட்டுத் திட்டம் முழுமையடையவில்லை. அதேபோன்று மின்சார ஒழுக்கின் காரணமாகவும் வேறு காரணங்களினாலும் வீடுகளை இழந்த பல குடும்பங்கள் பல்வேறு விதமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கான அவசர திட்டங்கள் வரவு – செலவு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. குறிப்பிடப்பட்டுள்ள தொகையில் அமைக்கப்படும் வீடுகள் தொடர்பான விபரங்கள் தெளிவுப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து கம்பனிகளிடம் பெருந்தோட்டங்கள் இருக்கையில் கம்பனித் தோட்டங்களுக்கிடையில் எந்த எண்ணிக்கையில் எத்தனை வருடக் கால எல்லைக்குள் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன? வீடுகள் நிர்மாணிக்கப்படுகையில் முன்னுரிமை ஆட்சியோடு இணைந்துள்ள கட்சிகளின் உறுப்பினர் குடும்பங்களுக்கா பாதிக்கப்பட்டோருக்கா எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாவோர்களுக்கா?

மலையகப் பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய பாதிப்புக்களை எதிர்நோக்குவோர்களுக்கு காணி மற்றும் வீடுகள் தொடர்பாக வரவு – செலவு திட்ட உரையில் குறிப்பிடப்படவில்லை.

மேலும், பல்வேறு பகுதிகளில் தனியார் தோட்டங்களில் பல ஆயிரம் பேர் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் தொழிலுரிமைகள், வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் அவற்றை வெளியில் சொல்லவோ, அவற்றுக்கான விடிவைத் தேடவோ இயலாதவர்களாக இருப்பதோடு, வீடுகளும் இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளன. தனியார் தோட்ட உரிமையாளர்களும் அவற்றைத் திருத்துவதற்கு எந்த நடவடிக்கையும் முன்னெடுப்பதில்லை இத்தகைய பின்னணியில் தனியார் தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் வதிவிட பாதுகாப்பு தொடர்பில் வரவு – செலவுத் திட்டம் எத்தகைய யோசனையையும் முன்வைக்கவில்லை.

வரவு – செலவுத் திட்ட உரைகளில் பெருந் தோட்டத்துறை தொடர்பாக பல முன்மொழிவுகள் கடந்தகால வரவு – செலவுத் திட்ட உரைகளில் பெரும் அமளியோடு முன்வைக்கப்பட்டன. 50 ஆயிரம் வீட்டுத் திட்டம், மாடிவீட்டுத் திட்டம், வெறுமையாய் கிடக்கும் 37 ஆயிரம் ஹெக்டயர் காணிகள் பகிர்ந்தளிப்பு எனக் கூறப்பட்டாலும் அவை எல்லாம் ஆட்சியாளர்களின் கனவில் இருந்ததே தவிர மக்களை சென்றடைய வில்லை.

கிராமிய கட்டமைப்புகளை பொருளாதார மற்றும் அபிவிருத்தி நோக்கி திட்டமிடுகின்ற அரசாங்கங்கள், ஆட்சியாளர்கள் பெருந்தோட்ட தொழில்சார் மக்களை அபிவிருத்தியின், வளர்ச்சியின் மைய புள்ளியை நோக்கி அழைத்துவர மறுப்பதேன்? மலையக மற்றும் பெருந்தோட்டத்துறை பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி திட்டங்களை ஏதும் முன்வைத்ததா? முன்வைத்தும் ஏற்றுக் கொள்ளப்படவில்லையா?

மலையக சமூக ஆர்வலர்கள் 2005ஆம் ஆண்டு மலையக மற்றும் பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி தொடர்பாக 10 ஆண்டுத் திட்டத்தை முன்வைத்தனர். அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சமிக்ஞை காட்டப்பட்டும் பின்னர் கிடப்பில் போடப்பட்டது. அதன் விடயங்கள் கடந்தகால வரவு – செலவுத் திட்டங்களில் உள்வாங்கப்படவில்லை. இவ்வாண்டு ஆரம்பத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மலையக சமூக ஆர்வலர்கள் பெரும் நம்பிக்கையோடு இன்னுமொரு திட்டத்தினை மலையக தலைமைகளிடம் கையளித்தனர். அதன் உள்ளடக்கம் எதிர்வரும் ஆண்டிற்கான வரவு – செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

மலையத்தின் வளர்ச்சிக்கு கல்வியின் பங்கு முக்கியமானது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் இடைவிலகலைத் தவிர்க்கவும் உயர்கல்வியை தொடர்வதற்கு புதிய திட்டங்கள் மலையகத்திற்கு என அமுல்படுத்தப்படல் வேண்டும். கடந்த காலத்தில் மலையகத்திற்கென தனியான பல்கலைகழகத்தின் தேவை உணரப்பட்டதோடு, அதற்கான இடம் அடையாளப்படுத்தப்படுவதாக தெரியவருகின்றது. இப்பல்கலைகழகம் அவசரமாக நிறுவப்படுவதற்கான திட்டங்கள் புதிய வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

புதிய அரசாங்கமும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்து பின்நோக்கி தள்ளுவது போல் 200 வருட காலமாக வளர்ச்சியற்று இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வைத்திருக்கவே விருப்பம் கொண்டுள்ளதாகவும், மலையகத்தின் அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் அரசின் திட்டங்களுக்கு அமைவாகவே செயற்படுவதுமாகவே தெரிகிறது.

மலையகத்தின் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் அபிவிருத்தியில் தொழிற்சங்கமும் அரசியல் கட்சிகளும் தமது பங்கினை ஆற்ற வேண்டும். அடிப்படைத் தேவைகளையும் அபிவிருத்திக்கான செயற்பாடுகளையும் மலையகத்தில் உறுதி செய்வதன் மூலமே மலையகத் தேசியத்தை காப்பாற்ற முடியும். தமிழ் முற்போக்குக் கூட்டணி தமது கொள்கை பிரகடனம் தொடர்பாக ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டியில், மலையகத் தேசியம் தமது உயிர்மூச்சு எனக் குறிப்பிட்டது. புதிய ஆண்டின் வரவு – செலவுத் திட்ட முன்வரைபில் மலையகம் தொடர்பாக – பெருந்தோட்டத் தொழிலாளர் நலன் விடயமாக – பெரிதாக ஒன்றும் கூறாமை உயிர்மூச்சை அழிப்பதற்கான செயலாகவே கருத வேண்டியுள்ளது.

அருட்தந்தை மா. சத்திவேல்