படங்கள் | செல்வராஜா ராஜசேகர்

மலையக மக்களின் உரிமைகள் அனைத்தும் முழுமையாக கிடைத்துவிடும் போல எண்ணத் தோன்றியது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தலில் வெற்றி பெறும் வரை மலையக மக்களுக்குள்ள அத்தனைப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் மலையக அரசியல்வாதிகளிடம் இருந்து வெளிப்பட்டதைப் பார்த்தபோது. ஏனைய மக்களைப் போன்று மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வழிசெய்வோம், 7 பர்ச்சர்ஸ் காணிகளைப் பெற்றுத் தருவோம், காணியுரிமை மக்களுக்கு வழங்கப்படும், வீட்டுரிமை வழங்கப்படும், மலையக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என மயிர் சிலிர்க்கும் வகையிலான வாக்குறுதிகள் அனைத்து மலையக தோல்வியுற்ற, வெற்றி பெற்ற வேட்பாளர்களிடம் இருந்து வந்தாயிற்று.

சரி, இந்த வாக்குறுதிகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு, கொஞ்சம் 11 மாதங்கள் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போம். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி பதுளை, கொஸ்லந்தை, மீரியாபெத்தை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை குறித்து இவர்கள் அறிவார்களா? அனர்த்தம் இடம்பெற்று 11 மாதகாலமாகியும் இன்னும் நான்கு மாடிகள் கொண்ட பழைய தேயிலை தொழிற்சாலையில் – கீழ் மாடியில் – சிறிய அறைகளில் அடைப்பட்டுக் கிடக்கும் உறவுகளை இழந்த அந்த மக்களின் துயரத்தை அரசியல்வாதிகள் பங்கெடுத்தார்களா?

PANO_20150812_071154

மண்சரிவு இடம்பெற்ற பகுதியின் இப்போதைய நிலையை 360 டிகிரி கோணத்தில் பார்க்க இங்கே அல்லது படத்தை கிளிக் செய்யவும்.

கூப்பன்களுக்கு வழங்கப்படும் அரிசியில் அரிசியை விட புழுக்கள் அதிகம் குடியிருப்பது அவர்களுக்குத் தெரியுமா? முகாமினுள் காற்று வெளியேற முடியாமல் சுவாசிப்பதற்கே கஷ்டத்தை எதிர்கொள்ளும் மக்களின் நிலை குறித்து அறிய முற்பட்டார்களா? உறவுகளை, பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் கல்விக்கு அரசியல்வாதிகள் உதவினார்களா? 11 மாதகாலமாகியும் 75 வீட்டுகள் கொண்ட திட்டத்தில் 4 வீடுகள் மட்டுமே (அதுவும் முழுமை பெறாத) கட்டப்பட்டுள்ளன என்பதை அறிவார்களா? ஒரு மாதத்திற்குள் 4 வீடுகளை கட்டிமுடித்த இராணுவத்தினருக்கு ஏனைய வீடுகள் கட்டி முடிப்பதற்கான பொருட்கள் வந்துசேருவதில்லை என்பதை அறிந்துகொள்ள முற்பட்டார்களா? மண்சரிவு இடம்பெற்ற இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கவிருப்பதாக கூறினார்களே, அதற்கு என்ன நடந்தது? மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் – லயன்களில் வாழ்ந்து வருபவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் தொந்தரவு செய்கிறார்களே, அவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்களா? மண்சரிவு இடம்பெற்று 3 மாதங்களில் அவர்களுக்கான கூப்பன்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதை அறிவீர்களா?

PANO_20150812_110354பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடுகள் அமைக்கப்பட்டு வரும் பிரதேசத்தை 360 டிகிரி கோணத்தில் காண இங்கே அல்லது படத்தை கிளிக் செய்யவும்.

இன்னும் கேள்விகள் உண்டு, கேட்பதற்கு. இலங்கையில் இடம்பெற்ற இரண்டாவது மிகப்பெரிய இயற்கை அனர்த்தம், பாதிக்கப்பட்டவர்கள் எதுவித வசதியுமற்ற – உரிமைகளற்ற மக்கள் தொகுதியினர் என்பதை அரசியல்வாதிகளும் அறியாதிருக்க வாய்ப்பில்லை. ஆக, இதுவரை எத்தனை மக்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளார்கள் என்பதை கூட 11 மாதங்களாக தேடியறிந்து சரியான எண்ணிக்கையைத் தெரியப்படுத்த முடியாத உங்களால், எவ்வாறு மலையக மக்கள் ஏனைய இன மக்களுக்கு இணையான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என உறுதி கூற முடியும்? இன்னும் 17 நாட்களில் ஒரு வருடம் பூர்த்தியாகப் போகின்ற நிலையில் மண்சரிவு இடம்பெற்ற இடத்தில் இன்னும் நினைவுச் சின்னம் அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. பதிலாக, மண்சரிவின் காலடியில் ஒற்றையாக நின்று கொண்டிருக்கும் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் தேர்தல் சுவரொட்டிகளில் மண்மேடைப் பார்த்தவாறு அரசியல்வாதிகள் சிரித்துகொண்டிருக்கின்றனர்; மண்ணினுள் ஆன்மாக்கள் அழுதுகொண்டிருக்கின்றன.

IMG_7987

###

மண்சரிவிலிருந்து உயிர் பிழைத்த – இன்னும் தொழிற்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் – அனர்த்த அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மீரியாபெத்தை மக்களின் மனக்குமுறலைப் பாருங்கள்.

IMG_7971

காலை ஏழரை மணியிருக்கும், மண்சரிவு இடம்பெற்ற பகுதியைப் பார்த்தவாறே அவசர அவசரமாக நடந்து கொண்டிருந்தார் அவர். வெள்ளம் அடித்துச் சென்றதனால் பாதையில் பாறைகள் முளைத்திருக்கின்றன. கீழே பார்த்தவாறு காலை எடுத்துவைப்பதும், காடாக காட்சியளிக்கும் மண்சரிவை ஏக்கமாகப் பார்ப்பதுவுமாக விறு விறுவென நடந்துகொண்டிருந்தார்.

55 வயதான வீராச்சாமி தனது அக்கா, அண்ணன் மனைவி, தம்பியின் மனைவி என மூவரை இந்த அகோர மண்சரிவில் இழந்திருக்கிறார். உயிரிழந்த ஒருவருக்குத் தலா ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா அரசால் வழங்கப்பட்டதாக வீராச்சாமி கூறுகிறார்.

“அக்காவயும், அண்ணன் சம்சாரத்தையும் எடுத்துட்டாங்க. தம்பி சம்சாரத்ததான் எடுக்க முடியல்ல” – என்னைப் பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தவர் மேலே திரும்பி பார்க்கிறார்.

“நாலு வீடுக கட்டியிருக்காங்க. மத்த வீடுக கொஞ்சம் செவுரு ஏத்தியிருக்காங்க. எங்களுக்கு வீடு தாரத பத்தி இதுவர யாரும் ஒன்னும் சொல்லல” – வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் பேசுகிறார் வீராச்சாமி.

“தம்பி நேரமாகுது, கெரேஜுக்கு போகனும்” என்று விடைபெற்றவர் மீண்டும் மேலே பார்ப்பாரா என பார்த்துக் கொண்டிருந்தேன், பார்த்துக்கொண்டுதான் சென்றார்.

###

IMG_8012

“எங்களுக்கு ஒரு உதவியும் இல்லயே, வீடு குடுக்க மாட்டேங்கிறான். இப்ப இதுலயும் இருக்க வேணாம், போ போனு தொரத்துறான். வீடு ஒன்னு குடுக்காம எங்க போய் சட்டி முட்டியெல்லாம் போட்டுக்கிட்டு இருக்கிறது?” என்கிறார் செல்லம்மா.

கையில் சாணம் சேகரித்த வாளியுடன், கையில் அப்பிய சாணத்துடன், கீழ் நோக்கிய சாரி முனையொன்றை தூக்கி இடுப்பில் சொருகியவாறு இருக்கிறார் 63 வயதான செல்லம்மா.

மண்சரிவு இன்னும் கொஞ்சம் நூலளவில் கையை அகல விரித்திருந்தால் செல்லம்மாவும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்; மீதி இரண்டு லயன்களைச் சேர்ந்தவர்களும் புதையுண்டிருப்பார்கள். லேசாக பூமி குலுங்கினாலே போதும், இப்போதுள்ள லயன் அறைகள் உடைந்து தரைமட்டமாகிவிடும். அந்தளவுக்கு வெடிப்புகள்.

“இன்னொரு ஸ்லிப்பு வந்து நாங்க பொய்ட்டாலும் பரவாயில்ல. அதுதான் இந்த லயத்தில வந்து இருக்கிறம். ஒரு எட்டு, ஒன்பது குடும்பம் இருக்கம், ஸ்லிப்பு வந்து மூடுனாலும் பரவாயில்லனு நெஞ்சு வெறுத்துப் போய் இருக்கோம். எந்த உதவியும் அரசாங்கம் குடுக்க மாட்டேங்குதே. கூப்பன் குடுத்துக்கிட்டு இருந்தான், இப்ப அதயும் நிப்பாட்டிட்டான்”.

எந்தவித வருமானமும் இல்லாத பிள்ளைகளற்ற செல்லம்மா, சுகவீனமுற்ற கணவரின் உதவியுடன் வீட்டு வாசலில் மரக்கறி பயிரிட்டு வருகிறார்.

###

IMG_8026

“ஒரு வருஷம் முடிஞ்ச பிறகு ஒரு பூசைய குடுத்திட்டு, மகாமுனி சாமிய தூக்கி நிப்பாட்டலாமானு நினைச்சிருக்கம். அப்படி இல்லனா ஒரு நாலு தகரம் போட்டு இப்படியே வச்சி கும்புட வேண்டியதுதான்”.

உடைந்த நிலையில் கீழே சாய்ந்து கிடக்கும் மகாமுனி கடவுளை வழிபட வந்திருந்த 50 வயதான சுப்ரமணியம் இவ்வாறு கூறுகிறார். மண்சரிவு முதலில் தன்னோடு இழுத்துக் கொண்டு சென்றது இந்த மகாமுனி கோயிலைத்தான். அந்த இடத்தில் கோயில் இருந்ததற்கு அடையாளமாக மரமொன்றே இருக்கிறது. கீழே சாய்ந்து கிடக்கும் சிலையின் கைகள், கால்கள் என சிதறுண்டு காணப்படுகிறது.

“இந்த மாதம் திருவிழா வச்சிருக்கனும். இந்தியாவுல இருந்தெல்லாம் மகாமுனிய கும்புட வருவாங்க. 200, 250 வேஷ்டி மகாமுனிக்கு கெடக்கும். புள்ளங்க இல்லாதவங்க இந்த மாதம் வந்து நேத்திக்கடன் வச்சிட்டுப் போனா, அடுத்த வருஷம் இதே மாசம் புள்ள கெடக்க இருப்பாங்க. அவ்வளவு சக்தி வாய்ந்த சாமி இது. நாங்க என்னதான் பாவம் செஞ்சோமோ?” – கண்ணீர் முந்தி வருகிறது சுப்ரமணியத்துக்கு.

PANO_20150812_083018360 டிகிரி கோணத்தில் மகாமுனி கோயில் அமைந்திருந்த பகுதி மற்றும் கீழே வீழ்ந்து கிடக்கும் மகாமுனி சிலையைக் காண இங்கே அல்லது படத்தை கிளிக் செய்யவும்.

###

IMG_8049

பாடசாலை போகாத வயதுள்ள இரண்டு பிள்ளைகளுடன் ஞானசேகரனும் அவரது மனைவியும் செல்லம்மா இருக்கும் லயன் குடியிப்பில்தான் வாழ்ந்து வருகிறார்கள். நான் அங்கு சென்றபோது லயன் அறையிலிருந்த தகரம், பலகை என இன்னொரு தற்காலிக வீடொன்று அமைப்பதற்கான பொருட்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்க அவரது மனைவி அவற்றை பிரதான பாதைக்குக் கொண்டு சென்றுகொண்டிருந்தார். ஏன்? எதற்காக இவற்றை அகற்றுகிறீர்கள் எனக் கேட்டேன்?

“ஸ்லிப் போனவுடன் பூணாகல தமிழ் வித்தியாலயத்துல 2 மாசமா இருந்தம். பிறகு கொஸ்லந்தை கணேஸா தமிழ் வித்தியாலயத்துக்கு கொண்டுவந்தாங்க. 2, 3 மாசம் கூப்பனும் தந்தாங்க. பிறகு சொந்தக்காரங்க வீட்ல போய் இருங்கனு எங்கள அனுப்பி விட்டாங்க. எங்களுக்கு எங்கயும் போய் தங்க முடியாது. இந்த லயத்துலதான் வந்து இருந்தம். பிறகு கரன்ட வெட்டிட்டாங்க. திரும்பவும் இங்க இருக்க வேணாம்னு சொல்றாங்க. இருக்க வேணாம்னா நாங்க எங்க போய் இருக்கிறது. ஒரு பாதுகாப்பான இடத்தில தற்காலிகமா வீடொன்ன அமைச்சு கொடுத்து போகச் சொன்னா பரவாயில்ல. சந்தோஷமா போகலாம். ஆனா இதுவரைக்கும் ஒன்னுமே நடக்கல்ல. இப்ப எங்கயாவது போவோம்னு சாமாங்களயெல்லாம் வெளியில எடுத்துக்கிட்டு இருக்கம். புள்ளங்கள பாதுகாக்கனுமே” – என்னுடைய முகத்தைப் பார்த்து பேச அவரது மனம் ஏதோ தடைபோட்டுக் கொண்டிருந்தது.

பத்திரிகைக்காரர்களும், டிவிகாரர்களும் வந்து படம், வீடியோ எடுத்துக்கொண்டு மட்டும்தான் போகிறார்கள், ஒன்றும் நடப்பதில்லை என்று அவரிடமிருந்து விடைபெறும்போது கூறினார். மனம் தடைபோட இது காரணமாக இருக்கலாம்.

###

­IMG_8105

மகாமுனி கோயிலோடு அடித்துச் செல்லப்பட்ட மேகலாவின் வீட்டில் அவரது கணவரின் உறவினர்கள் ஐவர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்திருக்கின்றனர். மூன்று பிள்ளைகளுடனும் கணவருடனும் பூணாகலை தேயிலை தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள 8க்கு 10 அடி கொண்ட முகாம் அறையில் வாழ்ந்துவருகிறார். ஓரமாக போடப்பட்டிருக்கும் கட்டிலுடன் அறை வெற்றிடம் முழுமையடைந்துவிட்டது. மீதப்பட்டிருக்கும் இடத்தில் சமைக்கவும் கதவு திறக்கவும் போதுமானதாக இருக்கிறது. பிள்ளைகள் விளையாட இடமில்லை.

மண்சரிவில் முதன்முதலாக அடித்துச் செல்லப்பட்ட, உறவுகளை இழந்த மேகலா குடும்பத்துக்கு வீடு தரமுடியாது என அதிகாரிகள் கூறியிருக்கிறார்களாம்.

“எஸ்டேட்ல யாரும் வேலை செய்யாததனால பதிவு இல்லயாம், அதனால வீடு தர முடியாதுனு சொல்றாங்க” – வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்று வருவதை மேகலாவின் கண்களும் முகமும் அப்படியே காட்டுகிறது.

“வீடு கிடைக்குமானு சந்தேகத்திலதான் இருக்கிறம். ஏ.ஜி. ஒபிஸுக்கும் போய் பேசிக்கிட்டுதான் இருக்கிறம். பாதிக்கப்பட்ட எல்லாத்துக்கும் வீடு தாறதா சொன்னாங்க. ஆனா முடிவு என்னனு தெரியல்ல” – என்கிறார் மேகலா.

தேர்தலில் வென்றவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டேன்?

“தேர்தல்ல யார் வென்றாலும் பரவாயில்ல. எங்களுக்கு வீடு கட்டி கொடுத்தா அதுவே போதும்” – வீடுதான் என்கிறார் மேகலா.

###

IMG_8120

“காசு, பணம், சொத்து, சுகம் எதுவும் ஆச இல்லாமலே போயிருச்சி, இனி எங்களால ஒழைக்க முடியாது, ஒரு வீட்ட கட்டிக் கொடுத்தீங்கனா அதுவே போதும்” என்கிறார் முகாம் அறையில் மகள், மருமகன், 3 பேரப்பிள்ளைகள் என 5 பேருடன் கடந்த 11 மாதங்களாக வாழ்ந்து வரும் 62 வயதான ஜெயலெச்சுமி.

“மீரியாபெத்தையில இருந்திட்டு வந்து ஆசையே இல்லாம போயிருச்சி. எனக்கு பென்ஷனா அஞ்சு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் குடுத்தாங்க. அவ்வளவுக்கும் நகைதான் எடுத்தன். எல்லாம் மண்ணோட மண்ணா போயிருச்சி” – கண்ணீர் கொட்ட சாரித் துண்டை எடுத்து துடைத்துக் கொள்கிறார் ஜெயலெச்சுமி. தனக்கு அத்தனை நகைப் பொருட்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னும் இருக்கிறார் அவர்.

“எங்க லயன்தான் மேலேயே இருந்திச்சி. ஒரு நேரம் அது எனக்கு கிடைக்கும். கிடைக்கும்கிற நம்பிக்கையிலதான் இன்னக்கும் நான் இருக்கேன்” – திரும்பவும் கண்ணீர் பாய்கிறது.

###

IMG_8124

“இப்ப மீரியாபெத்தைய எல்லாரும் மறந்திட்டாங்க. மண்சரிவு நடந்தப்போ எல்லா பக்கமிருந்தும் வந்தாங்க. ஆனா, இப்ப இந்த முகாமுக்கு யாருமே வாரதில்ல. நாங்க எப்படியிருக்கம்னு யாருமே வந்து தேடிப்பார்க்கிறதில்ல. நாங்களே போய் ரிப்போர்ட் பண்ணினாதான் இங்க உள்ள பிரச்சின வெளியில தெரியவருது” – என்கிறார் 26 வயதான கலைமகள்.

தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு யாரும் இங்கு வருவதில்லை எனக் குறைகூறுகிறார் கலைமகள்.

“இந்த முகாமுக்குள்ள உள்ள காற்று வெளிய போக முடியாததால சுவாசிக்க முடியாம கஷ்டத்த எதிர்நோக்க வேண்டியிருக்கு. முக்கியமா வயசுபோனவங்க கஷ்டப்படுறாங்க. இங்க எல்லா வீட்லயும் லாமண அடுப்புதான் இருக்கு. அதனால இரவானதும் லாமண பொக முகாம் பூரா நிரம்பியிருக்கும். காலப்போக்குல நல்ல இருக்குறவங்களுக்கும் நோய் வரலாம். லாமண அடுப்ப வெளியில வச்சி சமைங்கனு ஏ.ஜி. ஒபிஸ்ல இருந்து வந்தவங்க சொன்னாங்க. புள்ளங்கள வீட்டுக்குள்ள விட்டுட்டு நாங்க வெளியில போய் எப்படி சமைக்க முடியும்” என்கிறார் கலைமகள். நாங்கள் இருந்த பகல் நேரமே மண்ணெண்ணை மனம் காற்றோடு கலந்துவருவதை உணர முடிந்தது. ஒரே நேரத்தில் அடுப்பை பற்றவைத்தால் எப்படியிருக்கும்?

“ஒரு மாசத்துக்குள்ள வீட கட்டித்தாறம். அதுவரைக்கும் பெக்ரிகுள்ள இருங்கனு சொன்னாங்க. இன்னக்கு 11 மாசமாகிடுச்சி. இன்னும் வீடு கட்டி குடுத்தபாடில்ல. மீரியபெத்த மக்களுக்கு சேவை செய்யனும்கிற மனசு இப்ப யார்கிட்டயும் இல்ல” – விரக்தியுடன் பேசுகிறார் கலைமகள்.

“மீரியாபெத்தயில பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட கட்டி குடுத்து, பழைபடி அவங்க சந்தோஷமா வாழனும். முன்ன எப்படி சந்தோஷமா இருந்தமோ மறுபடியும் அப்படி நாங்க வாழனும்” என்கிறார் கலைமகள்.

“நாங்க குடியேறப்போகும் பகுதியில மண்சரிவில உயிரிழந்தவங்களுக்காக நினைவுச் சின்னம் ஒன்ன அமைச்சுத் தரனும்னு கேட்டுக்கொள்றோம். மீரியாபெத்த தோட்டத்த அப்படியே எந்தவித பாவனைக்கும் உட்படுத்தாம விட்டுடனும்னுதான் நாங்க எல்லாரும் நினைச்சிருக்கம்” – இதையாவது நிறைவேற்றித் தருவார்களா என்றது கலைமகளின் பார்வை.

###

IMG_8172

64 வயதான ஆண்டி கொழும்பில் வீடொன்றில் வேலை செய்துவருபவர்.

“புள்ளங்க படிப்புதான் முக்கியம். ஓலெவல், கொலர்ஷிப் படிக்கிற புள்ளங்க நிறைய பேர் இங்க இருக்காங்க. கொஞ்சம் பேர் கொழும்புல படிக்கிறாங்க. சிலர் உதவி செய்றாங்க அவங்க படிக்கிறதுக்கு. கொஞ்சம் பேர் இங்க படிக்கிறாங்க” என்கிறார் ஆண்டி.

படிச்சாதான் எங்கள மாதிரி மண்வெட்டிய பிடிச்சிகிட்டு கான (கால்வாய்) வெட்டாம நல்லமாதிரி இருக்கலாம் என்று கூறுகிற ஆண்டி, இங்க படிக்கிறவங்களுக்கு ஏதாவது உதவி செஞ்சா நல்லா இருக்கும் என்றும் கூறுகிறார்.

###

IMG_8178

“எங்களுக்கான வீடுகள எப்பதான் கட்டிக்கொடுப்பாங்கனு தினம் தினம் செத்துக் கொண்டுதான் இருக்கிறம். வீடுதான் எங்களுக்கு முக்கியம்” என்கிறார் காமதேவன்.

தலை தீபாவளிக்கு வீட்டுக்கு வந்திருந்த மகள், மருமகன் மண்ணில் புதையுண்ட சம்பவத்தை அவரால் இன்னும் மறக்கமுடியவில்லை. தொடர்ந்து பேசாமல் இடையிடையே நிறுத்தி நிறுத்தி பேசுகிறார். உறவுகளை இழந்த நினைவு பேசவிடாமல் மூச்சை அடைக்கிறது. நிதானித்து பேசத் தொடங்குகிறார்.

“வரும்போது இங்க இருந்த வசதி அப்படியே குறைஞ்சிருச்சி. இருந்தாலும் நாங்க இருக்கிற இடத்த நாங்கதான் சுத்தப்படுத்தி வச்சிக்கனும். டொய்லட் கட்டி குடுத்திருக்காங்க. அத நாங்கதான் கழுவி சுத்தமா வச்சிக்கனும். யாரும் வந்து கழுவி குடுக்கமாட்டாங்க” என்று கூறுகிறார் காமதேவன்.

இங்குள்ள மக்கள் ஒற்றுமையாக இருந்து பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல் ஒவ்வொருவரும் குழுக்குழுவாக பிரிந்து செயற்படுவதாக கவலை தெரிவிக்கிறார் அவர்.

“ஒரு இடத்த தெரிவு செஞ்சி நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்போவதாக போன அரசாங்கத்த சேர்ந்தவங்க சொன்னாங்க. இப்ப ஒருத்தர் வந்து, நினைவுச் சின்னம் அமைக்கனும்னு சொன்னார். நினைவுச் சின்னம் அமைக்கப்படுமா? இல்லையா என்பது கேள்விக் குறிதான் – அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை அற்றுப் போயுள்ளதை காமதேவனின் பேச்சில் காணமுடிகிறது.

###

IMG_8157

திருமணம் முடிக்காத 52 வயதான பரமேஸ்வரி தம்பி, அவரின் மனைவி இழந்தவர். மண்ணில் புதையுண்டவர்களின் மூன்று பிள்ளைகளையும் அவர் பராமரித்து வருகிறார்.

“தம்பி, தம்பி சம்சாரம், மாமா மண்ணோடு மண்ணா போய்ட்டாங்க. அவங்க புள்ளங்கள நான்தான் பார்த்துக்கிறேன். அவங்கள நல்லா படிக்கவைக்கனும். ஒரு வேலையும் இல்லாம எப்படித்தான் அவங்கள படிக்க வைக்கப் போறேனோ?” எதிர்காலம் குறித்து எந்தவித நிச்சயம் இல்லாமல் பேசுகிறார் பரமேஸ்வரி.

“மகாமுனி கோயில்ல சாமி பாத்து கொஞ்சம் காசு உழைச்சிக்கிட்டிருந்தேன். இப்ப அதுவும் இல்ல. என்ன செய்றதுனு தெரியல்ல. யாராவது உதவி செஞ்சாங்கனா புண்ணியமா போகும்” – வேறு எந்த வழியும் தெரியாமல் உதவியை நாடுகிறார் பரமேஸ்வரி.

முழுமையான காணொளி தொகுப்பை கீழே காணலாம்.