மலையக மக்களின் உரிமைகள் எதிர்வரும் காலங்களில் முழுமையாக கிடைத்துவிடும் போலத்தான் தோன்றுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து நேற்று முந்தைய நாள் வரை மலையக மக்களுக்குள்ள அத்தனைப் பிரச்சினைகளும் மலையக அரசியல்வாதிகளின் திருவாயிலிந்தே வெளியேறியிருந்தன. அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் அந்த வாய்களில் இருந்தே வந்தாயிற்று. ஏனைய மக்களைப் போன்று மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வழிசெய்வோம், 7 பர்ச்சர்ஸ் காணிகளைப் பெற்றுத் தருவோம், காணியுரிமை மக்களுக்கு வழங்கப்படும், வீட்டுரிமை வழங்கப்படும், மலையக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என மயிர் சிலிர்க்கும் வகையிலான வாக்குறுதிகள் அனைத்து மலையக வேட்பாளர்களிடமும் வந்தாயிற்று.

சரி, இவையனைத்தையும் பெற்றுத்தருவீர்கள் என எவ்வாறு நம்புவது?

கொஞ்சம் 10 மாதங்கள் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போம். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி பதுளை, கொஸ்லந்தை, மீரியாபெத்தை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை குறித்து அரசியல்வாதிகள் அறிவார்களா? அனர்த்தம் இடம்பெற்று 10 மாதகாலமாகியும் இன்னும் நான்கு மாடிகள் கொண்ட பழைய தேயிலை தொழிற்சாலையில் – கீழ் மாடியில் – சிறிய அறைகளில் அடைப்பட்டுக் கிடக்கும் உறவுகளை இழந்த அந்த மக்களின் துயரத்தை அரசியல்வாதிகள் அறிவார்களா? கூப்பன்களுக்கு வழங்கப்படும் அரிசியில் அரிசியை விட புழுக்கள் குடியிருப்பது அவர்களுக்குத் தெரியுமா? முகாமினுள் காற்று வெளியேற முடியாமல் சுவாசிப்பதற்கே கஷ்டத்தை எதிர்கொள்ளும் மக்களின் நிலை குறித்து அறிய முற்பட்டார்களா? உறவுகளை, பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் கல்வி நிலைக்கு வேட்பாளர்களாக நிற்கும் அரசியல்வாதிகள் உதவினார்களா? 10 மாதகாலமாகியும் 75 வீட்டுகள் கொண்ட திட்டத்தில் 4 வீடுகள் மட்டுமே (அதுவும் முழுமை பெறாத) கட்டப்பட்டுள்ளன என்பதை அறிவார்களா? ஒரு மாதத்திற்குள் 4 வீடுகளை கட்டிமுடித்த இராணுவத்தினருக்கு ஏனைய வீடுகள் கட்டி முடிப்பதற்கான பொருட்கள் வந்துசேருவதில்லை என்பதை அறிந்துகொள்ள முற்பட்டார்களா? மண்சரிவு இடம்பெற்ற இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கவிருப்பதாக கூறினார்களே, அதற்கு என்ன நடந்தது? மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் – லயன்களில் வாழ்ந்து வருபவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் தொந்தரவு செய்கிறார்களே, அவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்களா? மண்சரிவு இடம்பெற்று 3 மாதங்களில் அவர்களுக்கான கூப்பன்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதை அறிவீர்களா?

இன்னும் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இலங்கையில் இடம்பெற்ற இரண்டாவது மிகப்பெரிய இயற்கை அனர்த்தம், பாதிக்கப்பட்டவர்கள் எதுவித வசதியுமற்ற – உரிமைகளற்ற மக்கள் தொகுதியினர் என்பதை அரசியல்வாதிகளும் அறியாதிருக்க வாய்ப்பில்லை. ஆக, இதுவரை எத்தனை மக்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளார்கள் என்பதை 10 மாதங்களில் தேடியறிந்து சரியான எண்ணிக்கையை தெரியப்படுத்த முடியாத உங்களால் எவ்வாறு மலையக மக்கள் ஏனைய இன மக்களுக்கு இணையான உரிமைகளைப் பெற்று வாழவைப்பதற்காக தங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கமுடியும். இன்னும் 2 மாதங்களில் ஒரு வருடம் பூர்த்தியாகப் போகின்ற நிலையில் மண்சரிவு இடம்பெற்ற இடத்தில் நினைவுச் சின்னம் அமைப்பதற்குப் பதிலாக துயரமும், இழப்பும் அப்பியிருக்கின்ற மிச்சம் மீதியுள்ள சுவர்களில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டி மண்ணினுள் புதையுண்ட மக்களின் ஆன்மாக்களும் குமுறுகின்ற அளவுக்கு மனிதம் அற்ற மனிதர்களாக மலையக அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள்.

மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலை குறித்து Microsoft Sway மூலமாக ‘மாற்றம்’ தளம் முன்வைக்கும் புகைப்படக் கட்டுரை.

PANO_20150812_071154மண்சரிவு இடம்பெற்ற பகுதியின் இப்போதைய நிலையை 360 டிகிரி கோணத்தில் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

PANO_20150812_083018360 டிகிரி கோணத்தில் மகாமுனி கோயில் மற்றும் கீழே வீழ்ந்து கிடக்கும் மகாமுனி சிலையைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

PANO_20150812_110354பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடுகள் அமைக்கப்பட்டு வரும் பிரதேசத்தை 360 டிகிரி கோணத்தில் காண இங்கே கிளிக் செய்யவும்.