மலையக மக்கள் உரிமைகளைப் பெற்று கௌரவத்துடன் வாழவேண்டும் என அரசியல் மேடைகளில் அரசியல்வாதிகள் பேசும் வீராவேசப் பேச்சு மலைகள் மீது பட்டு மீண்டும் மீண்டும் எதிரொலி எழுப்பிவருகின்றது. எதிர்வரும் 17ஆம் திகதிக்குப் பின்னர் ஆட்சிபீடமேறியவுடன் தாங்கள் வாக்களித்த அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியிலும் இருப்பதாகவே தெரிகிறது.

கொஞ்சம் 10 மாதங்களுக்குப் பின்னால் சென்று பார்ப்போம். இலங்கையில் இரண்டாவது மிகப்பெரிய இயற்கை அனர்த்தமான மண்சரிவு இடம்பெற்ற மீரியாபெத்தை சம்பவம் குறித்து வாக்கு பிச்சை கேட்க வீடுவீடாக வந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு நினைவிருக்கிறதா? நினைவிருக்கலாம்… ஆனால், மக்கள் பிரதிநிதிகள் என பரப்புரை செய்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகள், அனர்த்தத்தின் பின்னர் அம்மக்களின் துயரத்தில் பங்கெடுத்துக்கொண்டார்களா? கடந்த 10 மாதங்களாக அவர்களின் நிலை என்னவென அறிந்துள்ளார்களா? இன்னும் 2 மாதங்களில் ஒரு வருடம் பூர்த்தியாகப் போகின்ற நிலையில் மண்சரிவு இடம்பெற்ற இடத்தில் நினைவுச் சின்னம் அமைப்பதற்குப் பதிலாக துயரமும், இழப்பும் அப்பியிருக்கின்ற மிச்சம் மீதியுள்ள சுவர்களில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டுமளவிற்கு மனிதம் அற்ற மனிதர்களாக மலையக அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள்.

Untitled-1

Untitled-2

மலையக மக்களின் உரிமைக்காகப் போராடவும் துணியும் அரசியல்வாதிகள் இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்களா?

1. மீரியாபெத்தை மண்சரிவில் மொத்தம் எத்தனைப் பேர் உயிருடன் புதையுண்டார்கள்?

2. அவர்கள் கொலை செய்யப்பட்டதற்குப் பொறுப்பானவர்கள் – குற்றவாளிகள் யார்?

3. “ஜனாதிபதி (அப்போதைய) மஹிந்த ராஜபக்‌ஷ, விசாரணைக் கமிஷன் ஒன்றினை அமைத்து இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எனக்குத் தொலைப்பேசி மூலம் தெரியப்படுத்தினார்” என மண்ணினுள் புதையுண்ட உடலங்களின் சூடு தணியும் முன்பே அந்த இடத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்திருந்தார். அந்த விசாரணைக் கமிசனுக்கு என்ன நடந்தது?

4. அனர்த்தம் இடம்பெற்று 10 மாதங்கள் கடந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதில் ஏன் இவ்வளவு தாமதம்? இதுரை 4 வீடுகள் மட்டுமே கட்டிமுடிக்கப்பட்டுள்ளன (அதுவும் முழுமை பெறவில்லை). “இப்போதைக்கு வீடுகள் அனைத்தையும் கட்டிமுடித்திருக்கலாம். கட்டுமானப் பொருட்கள் நேரகாலத்துக்கு வந்துசேருவதில்லை” என கட்டுமானத்துக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகளில் ஒருவர் எம்மிடம் கூறுகிறார். ஆக, இந்த நிலை குறித்து அறிவீர்களா? அறிந்தும் அறியாத மாதிரி உள்ளீர்களா?

5. பழைய தேயிலை தொழிற்சாலையில் – 5க்கு 10 அடி அறைகளில் – தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மக்களின் தற்போதைய நிலை பற்றி அறிந்திருக்கிறார்களா?

6. ஒவ்வொரு சிறிய அறைகளிலும் மண்ணெண்னை அடுப்புகளை பயன்படுத்துவதால் அங்குள்ளவர்கள் சுவாசிப்பதற்கு முடியாமல் திணருவதை அறிவீர்களா?

7. 700, 1,200 கூப்பன்களுக்கு வழங்கப்படும் அரிசியில் அரிசியை விட புழுக்களும் வண்டுகளும் குடியிருப்பதை அறிவீர்களா?

8. அனர்த்தம் இடம்பெறலாம் என – அபாயமிக்க இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ள – பகுதிகளில் வேறு வழியின்றி – தங்குவதற்கு இடமின்றி – மக்கள் குடியிருக்கிறார்கள். அவர்களுக்கு வழியேற்படுத்தி தந்துள்ளீர்களா?

9. மண்சரிவு இடம்பெற்ற பகுதியை அப்படியே மூடிவிட முடிவுசெய்துவிட்டு – மக்களுக்கு சாக்குபோக்கு கூறி அந்த இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கவிருப்பதாகச் சொன்னார்களே (அரசு), 10 மாதங்களாகியும் இன்னும் கட்டப்படாதது குறித்து ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா? அப்படி அவர்கள் அமைக்காவிட்டாலும், ஏன் உங்களது கட்சிப் பணத்தைக் கொண்டாவது, வாக்குச் சீட்டுக்காவது அமைக்காதது ஏன்?

கொஸ்லந்தை, மீரியாபெத்தை மண்சரிவு அனர்த்தப் படங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.