படம் | Amalini De Sayrah Photo, CPALANKA

பொதுத் தேர்தல் சூடிபிடித்திருக்கின்ற சூழ்நிலையில் மலையக மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதிகளை வழங்கிவரும் அரசியல்வாதிகளிடம் தாங்கள் காலம்காலமாக முகம்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் இருக்கின்றனவா? தீர்க்க திட்டமெதுவும் வைத்திருக்கின்றனரா? எனக்  கேட்ட பின்னரே யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து மக்கள் தீர்மானிக்க வேண்டும் என அருட்தந்தை மா. சத்திவேல் கூறுகிறார்.

‘மாற்றம்’ தளத்துக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில் –

தொடர்ந்து கூலிகளாக இருக்கவேண்டுமா?

“மலையகத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கட்சிகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமையிலான கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்த இரு கட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கான காணியை பெற்றுத் தருவோம் எனக் கூறுகிறார்கள். ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்பு இருந்த அரசு மலையக மக்களுக்கு 7 பர்ச்சர்ஸ் காணி வழங்குவதாக உறுதியளிந்திருந்தது நினைவில் இருக்கிறது. அதேபோல், புதிய அரசும் மலையக மக்களுக்கு 7 பர்ச்சர்ஸ் காணியைத்தான் வழங்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்த 7 பர்ச்சர்ஸ் காணி என்பது மலையக மக்களுடைய பொருளாதாரத்தை வளர்க்க, அபிவிருத்தி செய்ய போதுமானது அல்ல.

பெருந்தோட்ட மக்களுடைய பொருளாதாரம் மிகவும் பின்தங்கியுள்ள சூழ்நிலையில், இவர்கள் சுயபொருளாதாரத்தின் ஊடாக அபிவிருத்தி அடைவதற்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

7 பர்ச்சர்ஸ் காணி தருவதாகக் கூறும் – வாக்கு கேட்கவரும் அரசியல்வாதிகளிடம், “நாங்கள் தொடர்ந்து கூலிகளாகத்தான் இருக்கவேண்டுமா? அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? இந்த கூலி நிலையிலிருந்து எப்போது விடுதலை பெறுவோம்? அதற்கான திட்டம் ஏதேனும் இருக்கிறதா?” என மக்கள் கேட்கவேண்டும்.

இளைஞர்களின் வெளியேற்றத்தை தடுக்க திட்டம் இருக்கிறதா?

வருடத்திற்கு 16,000இற்கும் மேலானோர் பெருந்தோட்டத்தை விட்டு வெளியேறுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வெளியேறுபவர்கள் நகர்புறங்களில் வீடுகளிலும், கடைகளிலும் வேலை செய்து வருகின்றனர். பெருந்தோட்டங்களில் இருந்து வெளியேறும் இளைஞர்களின் வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான திட்டமெதுவும் இருக்கின்றனவா?

மலையகத்தில் மக்கள் தொடர்ச்சியாக வாழுகின்றபோது, அந்த மண்ணுக்குரிய பண்பாடோடு, கலை கலாசாரத்தோடு வாழக்கூடிய மக்களாக அவர்கள் இருப்பார்கள். மலையக மண்ணிலிருந்து அவர்கள் வெளியேறிவிட்டால் அந்த மண்ணுக்கும் அவர்களுக்குமான உறவுநிலையில் பாதிப்பு ஏற்படும்.

இது திட்டமிட்டு செய்யப்படுகின்ற அரசியல் நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன். மலையகத்தில் ஒரு தொழிற்படை மட்டும் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் அரசியல்வாதிகள் செயற்படுகின்றார்கள்.

மலையகத்தில் இருந்து வெளியேறி நகர்புறங்களில் – பிரதானமாக கொழும்பில் வேலை செய்யும் மலையக இளைஞர்களை பாதுகாப்பதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட – அமைச்சுக்கு உட்பட்ட ஒழுங்குவிதிகள் இருக்கின்றனவா? சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளனவா?

கூட்டு ஒப்பந்தம் = ‘மாமா தொழில்’

சம்பள உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் கூட்டு ஒப்பந்தம் என்பது சாதாரண மொழியில் கூறுவதாக இருந்தால், ஒரு ‘மாமா’ தொழிலாகத்தான் இருக்கிறது. கம்பனிகளுக்கு வேண்டியவர்களை ஒப்பந்த ரீதியில் கொடுக்கிறார்கள். எனவே, இந்த நிலையில் மாற்றம் ஏற்படவேண்டும். அப்போதுதான் மக்களின் வாழ்க்கையில் அபிவிருத்தி ஏற்படும், அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொண்டு இந்த நாட்டின் பிரஜைகளாக வாழ முடியும். ஆகவே, இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திட்டங்களை அரசியல்வாதிகள் கொண்டிருக்கின்றனரா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. தங்களை நாடி வாக்கு கேட்கவரும் அரசியல்வாதிகளிடம் மக்கள் கேட்கவேண்டிய கேள்வியாக இவை உள்ளன” என்றார் அவர்.

காணொளி நேர்க்காணலை கீழ் காணலாம்.