படம் | கட்டுரையாளர்

“ஓகொல்லங்கே லமய்ன்ட மொனவத்ம தன்னே நெஹ. இகென கன்னேம நெஹ, நம விதரக் லியன்ன இகென கத்தனம் எதி. ஏக தியாகன ஹம்பகரன்ன புலுவன்னே” என சிங்களத்தில் அந்த ஆசிரியர் சொல்ல பெற்றோர் விளங்கியும் விளங்காமலும் ஒவ்வொருவரின் முகங்களையும் பார்க்கின்றனர். சிங்களம் ஓரளவு தெரிந்த ஒருவர் அங்கிருந்த பெற்றோர்களுக்கு விளங்கப்படுத்தினார், “உங்க பிள்ளைகளுக்கு ஒன்டும் தெரியல்ல, படிக்குறாங்களே இல்ல, அவங்களுக்கு பேர் எழுத தெறிஞ்சா போதும், அத வச்சிகிட்டு சம்பாச்சிக்கலாம்” என்டு டீச்சர் சொல்றாங்க, அவர் மொழிபெயர்த்து கூறினார். கொஞ்சம் சிங்களத்திலும், இடையில் தமிழும் சொறுகிக் கொள்ள, கை பாஷையிலும் ஆசிரியருக்கு பதில் அளித்துவிட்டு, பிள்ளைகளின் எதிர்காலமும் தங்களது வாழ்க்கையைப் போன்று ஆகிவிடுமோ என்று எதிர்காலம் குறித்து நம்பிக்கை இன்றி பெற்றோர்கள் பாடசாலையை விட்டு வெளியேறுகின்றனர்.

மொனராகலை நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் மஹகொடயாய கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள சாமகம்மான எனும் கிராமத்தில் வாழும் தமிழ்ப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் இருள் சூழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.

நான் வேலைபார்க்கும் நிறுவனத்தின் வேலைத்திட்டம் ஒன்றிற்காக சாமகம்மான கிராமத்துக்குச் செல்ல நேர்ந்தது. சாமகம்மான, தமிழில் மொழிபெயர்த்தால் ‘சமாதான கிராமம்’. அமைதியான, வசதிகள் நிறைந்த, தன்னிறைவடைந்த செழிப்புமிக்க கிராமமாக இருக்கும் என்ற எண்ணத்துடன் பயணத்தை ஆரம்பித்தேன். கிராமத்தைப் பார்க்க, மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதாக தோன்றவில்லை. உண்மை, பிரச்சினைகள் இல்லைதான், பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு. சிறுபான்மையினரான தமிழ் மக்கள் எல்லா பக்கமும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி ஒருவர் ஆவேசத்துடன் பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம், வேலை முடியட்டும் என்று நிகழ்ச்சியை திட்டமிட்ட நேரத்திற்கு முன் முடிப்பதற்காக சக நிறுவன நண்பர்களையும் விரைவுபடுத்தினேன். மாலை 5 மணிக்கு முடிக்கவேண்டும், 4.30 மணிக்கு முடித்துவிட்டோம். அப்பாடா, அவரைச் சந்தித்தேன். ஆர். சிவகுமார், 32 வயது, இரண்டு பிள்ளைகளின் தந்தை. அவரிடம் கொஞ்சம் நேரம் கிராமம், தமிழ் மக்களின் வாழ்வு குறித்து பேசிக் கொண்டிருந்தேன். இந்த கிராமத்துக்கு தமிழ் மக்கள் வருகை குறித்த வரலாறை சிவகுமார் கூற ஆரம்பித்தார்.

SPF_9834

“1992ஆம் ஆண்டுகள்ள நாமண்டி கிராமத்துள இருந்து நாங்க இங்க கொண்டுவரப்பட்டோம். அப்போ நாங்க வாழ்ந்த நாமண்டி கிராமத்த இராணுவத்தோட தேவைக்காக எடுத்துக்கிட்டாங்க. இங்க முகாம் அமைக்க போராங்க, உங்க எல்லாத்துக்கும் 20 பர்ச் காணியும், தனித் தனி வீடும் கட்டித் தாரோம் எண்டு சொல்லிதான் எங்க எல்லாத்தயும் ஜனாதிபதி பிரேமதாச ஐயாட காலத்துல இங்க கூட்டிகிட்டு வந்தாங்க. வீடும் காணியும் குடுத்து குடியமர்த்தினாங்க. ஆனா இதுவரை யாருமே வந்து பார்க்கல, இங்க இருக்கிற சனம் எப்படி வாழுது, தொழிலுக்கு என்ன செய்றாங்க, இஸ்கூல் வசதி, தண்ணி வசதி, பஸ் வசதினு ஒன்னுமே ஒழுங்கா இல்ல. நாங்க ரொம்ப கஷட்டத்துல வாழ்றம்” என்றார் சிவகுமார்.

தொடர்ந்தார்,

“இந்த கிராமத்துல மட்டும் மொத்தமா ஸ்கூல் போற வயசுல உள்ள 50, 60 புள்ளங்க இருக்குறாங்க தம்பி. அதுலையும் கொஞ்சம் பேர் தான் இஸ்கூல் போகுதுங்க. எங்க கிராமத்துக்கு பக்கத்துல தமிழ் இஸ்கூல் எதுவும் இல்ல. அதால பக்கத்துல இருக்குற சிங்கள இஸ்கூலுக்குதான் நெறைய அம்மா அப்பா அவுங்க புள்ளங்கள அனுப்புறாங்க. இந்த சிங்கள இஸ்கூலுக்கு போனாலும் தமிழ் மொழியில எல்லாம் அங்க எதுவும் சொல்லி கொடுக்க மாட்டாங்க. தனி சிங்கள இஸ்கூல் அது. அந்த இஸ்கூல்ல தமிழ் சொல்லி கொடுக்குற டீச்சர் யாரும் இல்ல. அதால இந்த புள்ளங்களுக்கு சொந்த மொழிலயும் படிப்பு இல்ல, சிங்கள மொழிலயும் படிப்பு இல்ல தம்பி. சிங்கள புள்ளங்களுக்கே மொத இடத்த குடுக்கிறாங்க. எங்க புள்ளங்கள கண்டுகிறதே இல்ல. எதுவும் சொல்லி கொடுக்கவும் மாட்டாங்க. நீங்க ஏன் இப்படி பண்றீங்கனு அம்மா, அப்பாமார் போய் கேட்டதுக்கு டீச்சர்ஸ் சொல்லிருக்காங்க, உங்க புள்ளைங்களுக்கு ஒன்டும் தெரியல்ல, படிக்குறாங்க இல்ல, அவங்களுக்கு பேர் எழுத தெறிஞ்சா போதும், பொழச்சிக்கலாமுனு பொறுப்பே இல்லாம பதில் சொல்லிருக்காங்க தம்பி. எங்க புள்ளங்களுக்கு தமிழ் நல்லா தெரியும், இப்ப சிங்கள இஸ்கூலுக்கு போன பிறகு தமிழ் பேசுறதும் புள்ளங்களுக்கு கஷ்டமா இருக்குது… சிங்களமும் கலந்துதான் பேசுறாங்க. சிங்களம் ஓரளவு பேசுறாங்க. அது சிங்களத்துல படிக்கிறதுக்கு போதாது போலனு நெனக்கிறேன். புள்ளங்க மட்டுமில்ல, இங்க இருக்கிற அம்மா, அப்பாமார்களுக்கும் சிங்களம் பெருசா தெரியாது. அன்டக்கு டீச்சர் சொன்னதுகூட வௌங்களயாம். கிட்ட இருந்த ஒருத்தர்தான் டீச்சர் சொன்னத சொல்லியிருக்கிறாரு. நானும் அன்டக்கு இஸ்கூலுக்குப் போகத்தான் இருந்தேன். கூலி வேலைக்காக மொனராகல டவுன் பக்கம் போயிருந்தன். அதனால போக முடியல”.

வெற்றிலை போட்ட வாய், உதடு வரைக்கும் சிவந்திருக்கிறது. கடுமையான கூலி வேலையாக இருக்கும் போல, கை, கால்களில் கீறல்கள். நாட்டு மருந்தை மட்டுமே கண்டிருக்கும் புண்கள். தன்னுடைய 14 வயதான மகளையும் 13 வயதான மகனையும் சிங்கள பாடசாலைக்கே அனுப்பி வைத்திருக்கிறார். ஏன் அருகில் தமிழ் பாடசாலை இல்லையா? என்று சிவகுமாரிடம் கேட்க,

“4 கிலோமீற்றர் தூரத்துல தமிழ் இஸ்கூல் ஒன்னு இருக்கு. அங்க யாரும் பெருசா போறதில்ல. பஸ்சுக்கு காசு கொடுத்து அனுப்புற அளவுக்கு ஆளுங்ககிட்ட காசு இல்ல. ரெண்டு மூனு வீட்ல மட்டும் சீசன் டிக்கட் வாங்கி குடுத்து இஸ்கூலுக்கு அனுப்புறாங்க. அந்த சீசன் டிக்கட்ட வாங்கி குடுத்தும் எந்த பிரயோசனமும் இல்ல. இந்த பக்கத்தால போற எந்த பஸ்சுமே இங்க நிப்பாட்ட மாட்டாங்க. இங்க இருந்து அவளோ தூரம் நடந்து பொய்ட்டு வாரதுனா… பொம்பள புள்ளைங்களுக்கு பாதுகாப்பு இல்லையே தம்பி. இதனால நெறைய புள்ளைங்க இஸ்கூலுக்கு போறதையே நிப்பாட்டிடாங்க” என்கிறார் சிவகுமார்.

“இங்க கொஞ்சம் பேர் தமிழ் இஸ்கூல்லயும், கொஞ்சம் பேர் சிங்கள இஸ்கூல்லயும் படிக்குறாங்க. பாதி பேர் வேலைக்குதான் போறாங்க தம்பி. ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு இருக்க முடியாதுதானே. அதனாலதான் நெறைய பசங்க சின்ன வயசுலையே படிப்ப விட்டுட்டு வேலைக்கு போய்டுறாங்க”

சிவகுமார் சொல்லாவிட்டாலும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது, சிவகுமாரும் அவ்வாறானதொரு சூழ்நிலையினால்தான் படிப்பை கைவிட்டிருப்பார் என்று.

அமைதியாக இருந்தது அந்த இடம். “அந்த தம்பி சொல்றது எல்லாமே உண்மதான் தம்பி” என்று பின்னால் ஒரு குரல் கேட்கிறது. திரும்பி பார்த்தேன், வயது முதிர்ந்த ஒரு பெரியவர் வெற்றிலையை சப்பிக் கொண்டிருந்தார்.

இருள் சூழத் தொடங்கியது, மாலை 6.00 மணியிருக்கும். வாயிலிருந்த வெற்றிலை துப்பிவிட்டு என்னருகே வந்த முதியவர்,

“இந்த கிராமத்துக்கு நாங்க வரும்போது 30 குடும்பங்கள் மட்டும்தான் இருந்தம். அதால எங்களுக்கு 30 வீடுகள கட்டி குடுத்தாங்க. வீடு கட்டி குடுத்ததோட அவங்க கடம முடிஞ்சி போச்சினு ஆமிக்காரங்க பொய்டாங்க. ஆனா நாங்க இங்க வந்த நாட்கள்ல இருந்து இதுவரைக்கும் முகம்கொடுக்காத பிரச்சின என்டு எதுவுமே​ இல்ல தம்பி. இப்ப நாங்க எல்லாருமா 82 குடும்பங்களா இங்க வாழ்ந்துட்டு இருக்கம். அப்போ எங்களுக்கு 20 பர்ச் காணி குடுத்திருந்தாலும் அதுல பாதி இப்போ “பொரஸ்ட் டிபார்ட்மண்டுக்கு சொந்தமனு புடிச்சிகிட்டாங்க. மிஞ்சி இருக்குற இந்த இடத்துலதான் எங்க வாழ்க்க நடக்குது. அதுலையும் பார்திங்கனா ஒரு வீட்டுக்குள்ள நாங்க 4 குடும்பம், இல்லாட்டி 5 குடும்பம்னு வாழ வேண்டி இருக்குது. மழ காலம் வந்துட்டா வீடு எல்லாம் ஒழுக ஆரம்பிச்சிடும். ஒழுங்கான டொய்லட் வசதி இல்ல, தண்ணி வசதி இல்ல, இதுகளுக்கு நோய் நொடினு வந்தா கூட பக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி இல்ல தம்பி, அவசரத்துக்கு கொண்டு போக”.

முதியவரால் தொடர்ந்து பேசமுடியவில்லை, இருமல் வந்து தடை போடுகிறது. தொடர்ச்சியான இருமல்… இருமும் போது தலை வயிறை முட்டுகிறது. இருமல் நிற்க இன்னும் ஒரு அவராகும் (மணித்தியாலம்), பெண்ணொருவர் கூறுகிறார். அவரைக் கூட்டிக்கொண்டு ஒருவர் செல்ல, அவர்களோடு கூடியிருந்த இன்னும் சிலரும் அங்கிருந்து விடைபெற்றனர்.

வீட்டுக்கு வருமாறு என்னை சிவகுமார் அழைத்தார். தண்ணீர் அருந்திவிட்டு வீட்டுத் திண்ணையில் அமர்ந்தவாறு, ஹொஸ்பிட்டல் வசதி இருக்கா அண்ணன்? என்று கேட்டேன். அங்கும் பிரச்சினை இருக்கிறது போல, அவரது அமைதி வெளிக்காட்டுகிறது.

“இங்க எங்களுக்கு கிராமத்துல ஹொஸ்பிடல் எல்லாம் ஒன்னும் இல்ல தம்பி. ஏதாவது அவசரம்னா நாங்க புத்தல ஹொஸ்பிடலுக்குதான் போகனும், அங்கத்தான் இப்பயும் போறம். ஆனா அங்க வேல செய்ற டொக்டர், நர்ஸ் எல்லாருமே சிங்களம் பேசுறவங்க. அதால எங்களுக்கு தான் பெரிய பிரச்சின, நாங்க சொல்றது அவங்களுக்கு வெளங்காது, அவங்க சொல்றது எங்களுக்கு வெளங்காது. சில நேரத்துல ஏசுவாங்க, என்ன ஏசுவாங்கனு கூட எங்களுக்கு தெரியாது. வாயால கொஞ்சமும், நடிச்சிக் காட்டியும்தான் எங்களுக்கு உள்ள நோய டொக்டருக்கு புரியவைக்கிறோம். அவங்களுக்கு புரிஞ்சிச்சா? நோய்க்கான மருந்துதான் தாராங்களா? நாங்க சரியான மருந்ததான் குடிக்கிறோமானு கூட எங்களுக்கு தெரியாது. நாங்கதான் இன்னைக்கு இருந்து நாளைக்கு செத்தாலும், புள்ளங்க கொஞ்சமாவது படிச்சி நல்ல வேலை பார்ப்பாங்கனு கனவோட இருந்தா அதுவும் நடக்குறமாதிரி இல்லபோல தம்பி. உங்களால ஏதாவது செய்ய முடிஞ்சா, செய்யப்பாருங்க தம்பி, புண்ணியமா போகும்”.

மணி 7.00ஐ தாண்டிச் சென்று கொண்டிருந்தது. சிவகுமாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. என்னால் என்ன செய்ய முடியும்? சிவகுமாருக்கு என்ன பதில் சொல்வது? போய்வாரேன் என்று மட்டும் சொல்லிவிட்டு அவரிடமிருந்து தொலைவானேன்..

மலையகத்தில் கல்வி நிலைக்கு, சுகாதாரம், போக்குவரத்துக்கு, மொழிப் பிரச்சினைக்கு சாமகம்மான கிராமம் ஓர் உதாரணம் மட்டுமே. பல கிராமங்கள் இதைவிட மோசமான நிலையில் இருக்கின்றன. ஆட்சிபீடமேறும் அரசுகளின் தொடர்ச்சியான புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகின்றன இதுபோன்ற கிராமங்கள். ‘மாற்றம்’ அரசின் காற்று கூட இந்த பக்கம் வந்ததாக இல்லை. அண்மையில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் இந்த மக்கள் கொஞ்சம் கவனிக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் வாக்களிப்பதற்கான அறிவைப் பெற்றுக் கொள்வதற்காகவாவது இங்குள்ள பிள்ளைகளுக்கு தாய் மொழியில் தங்குதடையின்றி கல்வி கற்பதற்கு அரசியல்வாதிகள் அருள்புரிவார்கள் என்று நம்புவோம்.

எம். பிரதீபன்