படம் | INFOLIBRE

மனித உரிமை குற்றங்களையிட்ட உண்மை, நீதி ஆகிய விடயங்களிலே ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் பப்லோ டீ கிறீப் என்பவர் ஏப்ரல் முதல் வாரத்திலே இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு அண்மையிலே அந்த விஜயம் தொடர்பான தனது அவதானிப்புக்களை வெளியிட்டிருந்தார். இலங்கையிலே இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களையிட்ட நீதி மீது ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் அந்த அவதானிப்புக்களை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். பப்லோ டீ கிறீப் என்பவர் நிலைமாற்றுக்காலநீதியிலே பிரசித்திபெற்ற நிபுணர் என்பதால் மாத்திரமன்றி இலங்கையின் பொறுப்புக்கூறலைக் கண்காணிக்கவும், வேண்டப்படும்போது அரசுக்கும் சிவில் சமூகத்துக்கும் உதவுவதற்கும் பொறுப்பானவர் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தினால் இனங்காணப்பட்ட ஒருவராய் இருப்பதாலும் அவற்றை நாம் உன்னிப்பாக அவதானிக்கவேண்டும். அவ்வகையிலே அவரது கண்ணோட்டங்கள் உள்ளக ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் முக்கியத்துவம் பெறுபவை. குறிப்பாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை செப்டம்பர் 2015இலே இலங்கையைப் பற்றிக் கலந்துரையாடும்போது அதன் அங்கத்துவ நாடுகளின் எண்ணங்கள் மீது அவரது கணிப்பீடுகள் பெரும் செல்வாக்கைச் செலுத்தக்கூடியவை. அங்கு பாதிக்கப்பட்டோரைப் பற்றிப் பேசும் பிரதிநிதிகள் வினைத்திறனுடன் செயற்படுவதற்கு, ஐ.நாவின் விசேட நிபுணர் தெரிவிக்கும் செய்திகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அவர்களது அடுத்த கட்ட நகர்வை அதற்கேற்பத் திட்டமிடவேண்டும்.

விசேட நிபுணரின் கருந்துக்களிலே உள்ள திடமான அம்சம் எதுவெனில் அவரது அவதானிப்புக்களிலே பாதிக்கப்பட்டோரின் உரிமைகள் விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளமையேயாகும். மேலும், நீதியையும், உண்மையையும் மேற்கொள்வதற்கு இலங்கை அரசே தொடர்ந்தும் பொறுப்பாயுள்ளது என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது, ஆட்சி மாறியுள்ளதால் பொறுப்புக்கூறவேண்டிய அவசியம் இல்லை எனும் எண்ணப்போக்குக்கு எதிராகப் போரிட அந்த விசேட நிபுணர் உதவியுள்ளார். மாறாக, பொறுப்புக்கூறுதலையும் உண்மையையும் உருவாக்கிடச் சரியான படிமுறைகளைப் புதிய அரசு எடுக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

விசேட நிபுணரின் அவதானிப்புக்கள் இலங்கையின் விசாரணை ஆணைக்குழுக்களைக் காரசாரமாகக் கண்டிப்பதுடன் ஆரம்பிக்கிறது. ஒரு சில ஆணைக்குழுக்கள் பயனுள்ள சிபார்சுகளைச் செய்துங்கூட அவைகள் அமுல்படுத்தப்படாதிருக்கும் அதேவேளை, வேறு சில ஆணைக்குழு அறிக்கைகள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவே இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த ஆணைக்குழுக்கள் மீது மக்கள் நம்பிக்கையிழந்து வருவதையும், இலங்கை கடந்த காலத்தை வினைத்திறனுடன் கையாளவேண்டுமாயின் விசாரணை ஆணைக்குழுக்களை அது தொடர்ந்தும் தொடரமுடியாது என்பதையும் அவர் குறிப்பிட்டுக்கூறியுள்ளார். விசேட நிபுணர் விடுத்த இந்தக் கருத்துக்கள் வரவேற்கத்தக்கனவாகும். காணாமற் போனோரையிட்டதான தற்போதைய விசாரணை ஆணைக்குழுவை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பில்லை என்பதையும் அவை காண்பிக்கின்றன. வேறொரு அறிக்கையை விடுப்பதால் சர்வதேச அழுத்தத்தில் இருந்து அரசு தப்பித்துக்கொள்ள எதிர்பார்க்கமுடியாது என்பதை பப்லோ டீ கிறீப் தெளிவுபடுத்தியுள்ளார்.

அடுத்ததாக, விசேட நிபுணர் நல்லிணக்கம் பற்றிய விடயத்தையும் கலந்துரையாடுகிறார். நல்லிணக்கம் இடம்பெறுவதற்கு அரசியற்தீர்வு தேவைப்படுவதுடன் உண்மை, நீதி, திருத்தியமைப்புக்கள் ஆகியவையும் அத்துடன், கடந்தகால குற்றச்செயல்கள் மீளவும் இடம்பெறாது எனும் உறுதிப்படுத்தலும் அவசியம் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். பாதிக்கப் பட்டவர்கள் ஒரு அம்சத்தை அடைந்தெய்துவதற்கு வேறொரு அம்சத்தைக் கைவிடும்படியாக எதிர்பார்க்கமுடியாது என்றும் கூறுகிறார். அதாவது, அந்த விசே, நிபுணர் நீதியும் சத்தியமும் அரசியற்தீர்வுக்காக விலைபோகாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். மாறாக, மெய்யான நல்லிணக்கத்துக்கு பாதிக்கப்பட்டோர் சகலரினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். நல்லிணக்கம் கடந்த காலத்தை மறந்துவிடுவதால் அல்ல அதனை நேர்மையுடன் கையாள்வதாலேயே எய்தப்பெறும்.

அடுத்தடுத்துவந்த அரசாங்களிலே ஆதிக்கம் செலுத்திவந்த எண்ணப்போக்குகளான விசாரணை ஆணைக்குழுக்களை அமைப்பது, அரசியற்தீர்வோ, நீதியோ, உண்மையோ இல்லாமல் நல்லிணக்கம் எய்தப்பெறலாம் எனும் எண்ணம் ஆகியவற்றை மேற்படியான அவதானிப்புக்கள் தெளிவாகக் கண்டிப்பதாய் உள்ளது. ஆனாலும், அந்த விசேட நிபுணர் தமிழ் தரப்பினர், சிவில் சமூகம் உட்பட அனைத்துத்தரப்பினர்களுக்கும் பொதுவாகத் தொடர்புபட்ட சில அவதானிப்புகளையும் வெளியிட்டுள்ளார். முதலாவதாக, அவர் குறிப்பிடுவதாவது, நிலைமாற்றுக்கால நீதி மற்றும் பொறுப்புக்கூறுதல் ஆகியவைகள் ஒரு பகுதியினருக்கு நன்மைபயக்கும் சாதனங்கள் என்ற கோணத்திலல்ல, மாறாக மனித உரிமைகள் எனும் கோணத்திலேயே நோக்கப்படவேண்டும். குறிப்பாக அவர் இந்தக் கருத்துக்களை அரசு மற்றும் சிவில் சமூகம் ஆகிய இரு தரப்பாரையும் பொறிவைத்தே கூறியுள்ளார். நிலைமாற்றுக்கால நீதியை மனித உரிமைகள் கோணத்திலே அணுகுவது என்றால் என்ன என்பதை விளக்கி, தீர்வுகள் தேவைப்படும் பாதிப்புக்குள்ளானோரைத் தீர்மானிப்பதற்கான ஒரேயொரு நிர்ணயம் அவர்களது உரிமைகள் மீறப்பட்டனவா என்பதே என்கிறார். இன மற்றும் சமயக் காரணிகள் இங்கு பொருத்தமற்றது. அவர் கூறவிளைவது என்னவென்றால், பொறுப்புக்கூறுதலை சில அரசியற் கட்சிகள் தமது அரசியல் நலன்களை மேம்படுத்தும் அரசியற் கருவியாகப் பயன்படுத்த இயலாது என்பதையே. கிறீப் உடைய கருந்துக்களை வாசித்தால், நீதியைத் தேவையற்றவிதத்திலே அரசியல்மயப்படுத்த நாடும் தமிழ் அரசியற் கட்சிகளையும், சிவில் அமைப்புக்களையும் பொறிவைத்தே அவை கூறப்பட்டுள்ளது தெளிவு. நீதிக்கான எமது கோரிக்கைகள் பல, தமிழர்களின் உரிமைகள் மீறப்பட்டன எனும் அடிப்படையிலேயே முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்பதைத் தமிழ்ச்சமூகத்துக்கு ஞாபகமூட்டுவதாய் இது உள்ளது. அதன்படி, உரிமைகள் மீறப்பட்ட வேறு சமூகத்தவர்களுக்கும் நீதி கிட்டவேண்டும். எனவே, உரிமைகள் மீறப்பட்டிருந்தால், அது தமிழர்களால் மீறப்பட்டிருந்தாலுங்கூட, முஸ்லிம் மற்றும் சிங்களப் பாதிப்புற்றோருக்கும் நாம் நீதிவேண்டிப்போராடவேண்டும். இரண்டாவதாக, முதலாவதற்குத் தொடர்பானதாக அந்த விசேட நிபுணர் குறிப்பிடுவது என்னவென்றால், மோசமான மீறுதல் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டம் விசேட கவனிப்பைப் பெறவேண்டியதேயாயினும், நிலைமாற்றுக்கால நீதியானது அகன்றுபட்டதான காலவரையறையைக் கருத்திற் கொள்ளவேண்டும் என்பதாகும். அதன்படி, சசல சமூகங்களையும் சேர்ந்த பாதிப்புற்றவர்களை அது கருத்திற் கொள்ளவேண்டும். இந்தக் கருந்திற் தொனிக்கும் தாற்பரியம் என்னவெனில், அனைத்துத் தரப்பாராலும் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களும் ஆராயப்படவேண்டும் என்பதாகும்.

அடுத்ததாக, மனித உரிமைகள் மீறுதலால் பாதிக்கப்பட்டோருக்கும் சிவில் சமூகத்தினருக்கும் இடையே இடம்பெறவேண்டிய கலந்துரையாடல்களின் முக்கியத்துவத்தை விசேட நிபுணர் சுட்டிக்காட்டுகிறார். இவ்வகையிலே மூன்று குறிப்புக்களை அவர் முன்வைத்துள்ளார். முதலாவதாக, பொறுப்புக்கூறும் பொறிமுறையை வடிவமைப்பதிலே பாதிக்கப்பட்டோருக்கும் பங்கேற்கும் உரிமை உண்டு; இரண்டாவதாக, பொறுப்புக்கூறும் அமைப்புக்களின் வடிவமைப்பிலே பங்கேற்கப் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டால் மாத்திரந்தான் அவர்கள் அந்த அமைப்புக்களை நம்பி, அதனுடன் இணைந்து வேலையாற்றுவார்கள்; மூன்றாவதாக, பொறுப்புக்கூறும் பொறிமுறைகளை அகன்றுபட்ட தரப்பார்கள் சொந்தமேற்பது அதன் நீடியகால நம்பகத்தன்மைக்கு அவசியமானதாகும். இந்தக் கருத்துக்கள் ஜனாதிபதி சிறிசேனவும் அவரது அரசும் அறிவித்த அணுகுமுறை மீதான விமர்சனமாகவே நோக்கப்படவேண்டும். அண்மையிலே ‘டைம்’ சர்வதேச சஞ்சிகைக்கு ஜனாதிபதி சிறிசேன வழங்கியுள்ள பேட்டியொன்றிலே, அரசு ஜூன் மாதத்திலே ஒரு பொறுப்புக்கூறும் பொறிமுறையை அறிவிக்கும் என்று கூறியுள்ளார். இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்பதை பப்லோ டீ கிறீப் சுட்டிக்காட்டுகிறார். அரசு தமது தீர்மானத்தை வெறுமனே அறிவித்து பாதிக்கப்பட்டோர் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கமுடியாது. மாறாக, எடுக்கப்படவேண்டிய படிமுறைகளைப்பற்றி அவர்கள் பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதிகளுடனும் சிவில் சமூகத்தினருடனும் பேசி, விளக்கி, பேச்சுவார்த்தைகளிலே ஈடுபடுவதற்கு நேரம் எடுத்தாகவேண்டும். இப்படியான கலந்துரையாடல்கள் நீடிய செயன்முறைகளாக இருக்கும் என்பதை அந்த விசேட நிபுணர் ஒத்துக்கொள்கிறார். அவரது கருத்துக்களிலேட அது நீடிய செயன்முறையாக இருக்கும் என்பதையும் அதற்கு நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் கருத்து என்னவெனில், வரும் மாதங்களிலே பாதிப்புற்ற அனைத்துக் குழுக்களுடனும் அரசு பேச்சுவார்த்தை செயன்முறையை ஆரம்பிக்கவேண்டும் என்பதாகும். ஆனால் தமிழர்களுக்கும் அதிலே ஒரு செய்தி உள்ளது. சில தமிழ் அரசியற் கட்சிகளும் சிவில் சமூகக் குழுக்களும் கூறிவருவதைப்போல, உள்ளூர் பொறிமுறைகளை நாம் முற்றாகப் புறக்கணிக்கிறோம் என்று தொடர்ந்தும் கூறத்தலைப்பட்டால், நாம் ஒத்துழைக்கவில்லை என எம் மீது குற்றஞ்சுமத்திச் சாக்குப்போக்குச் சொல்வதற்கு அரசுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்களாக ஆகிவிடுவோம். சர்வதேச சமூகத்திடம் அரசு சென்று, “நாம் அவர்களுடன் பேச முனைந்தோம், அவர்களோ அதை விரும்பவில்லை” என்று கூறக்கூடும். தமிழரைப் பல தசாப்தகாலங்களாத் தொடர்ந்தும் ரணகளப்படுத்திவரும் அப்படியான மதியற்ற தீவிரச் சிந்தனைப் பொறிக்குள் நாம் சிக்கிவிடக்கூடாது.

அரசுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் சிவில் சமூகக் குழுக்களுக்கும் காலக்கிரமம் பற்றி விடுக்கப்படும் கருத்துக்கள் மனதிற் கொள்ளவேண்டியது முக்கியமாகும். அவை சுட்டிக்காட்டுவது என்னவென்றால், சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்பதாகத் துரிதப்படுத்தப்பெற்ற பொறுப்புக்கூறும் செயன்முறையைக் காணத் துடிக்கவில்லை. மாறாக, பாதிக்கப்பட்டோர் மற்றும் சிவில் சமூகத்தினருடன் இணைந்து நிலைமாற்றுக்கால நீதிக்கான பொறிமுறை பற்றிய தனது பாரத்தைப் பகிரவே அவர்கள் வாஞ்சிக்கின்றனர். இந்தக் கடமையைச் செய்வதற்குத் தவறும்பட்சத்திலேயே செப்டெம்பர் மாதத்திலே அரசு கண்டனத்துக்கு உள்ளாக்கப்போகிறது. அதேபோலத் தமிழ்ச் சமூகத்துக்கும், நீடியகாலப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைச் சர்வதேசச் சமூகத்திடம் கோரி நிற்பதைவிட, நம்பத்தகுந்த பொறிமுறையொன்றைப் பொறுமையாகக் கட்டியெழுப்பும்படி ஞாபகமூட்டப்படுகிறது. ஆனாலும், தமிழ்ச் சமூகத்திற்குள் உள்ள பலர் தாம் ஏற்கெனவே நீண்டகாலம் காத்திருந்ததாயும், இனிமேலும் அவர்களைக் காத்திருக்கச் செய்யக்கூடாதெனவும் சுட்டிக்காட்டக்கூடும், அது சரியானதுந்தான். அந்தத் தேவையையும் விசேட நிபுணரின் கருந்துக்களுள் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. பொறுமையான பேச்சுவார்த்தைக்குரிய விடயங்களையும், உடனடியான முன்னேற்றம் காணப்படவேண்டிய விடயங்களையும் வேறுபடுத்துவதன்மூலம் இதனை அவர் செய்துள்ளார். குறிப்பாக, காணாமற்போனோர் விடயத்திலே அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கான விசாரணையிலும், இராணுவத்தால் சுவீகரிக்கபட்டுள்ள காணிகள் விடுக்கப்படுதலிலும், நியாயப்படுத்தமுடியாத கைதுகளை முடிவுக்குக் கொண்டுவருதலிலும், மக்களை தொந்தரவு செய்தலைக் குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கின் பெண்களைத் தொந்தரவு செய்தலை நிறுத்துதலிலும் உடனடியான முன்னேற்றம் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இலங்கை அரசுக்கு பாதிப்புற்றோருடன் கலந்துரையாடி உண்மை அறிதல் மற்றும் பொறுப்புக்கூறுதல் ஆகியவற்றுக்கான கொள்கைத் திட்டங்களை வகுப்பதற்கு நேரம் வழங்கப்படலாம் என்பதை விசேட நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயினும், நிலங்களை விடுவித்தல், காணாமற்போனோர் பற்றிய விசாரணை, இரகசிய தடுப்புக் காவலிலே வைக்கப்பட்டுள்ளோரை விடுவித்தல், மற்றும் வடக்குக் கிழக்கிலே இராணுவத்தினரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிலே அரசு தாமதிக்கலாகாது.

எனவே, விசேட நிபுணரின் அவதானிப்புக்கள் சமநிலையானதும், நேர்மையானதுமாகும். பாதிக்கப்பட்டோருக்கு – குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கிலே உள்ளவர்களுக்கு – அவர் தனது ஆழ்ந்த கரிசனையைக் காண்பிக்கும் அதேவேளை, ஒரு சமூகத்துக்குப் பட்சபாதம் காண்பிப்பதற்கு எதிராக அவர் எச்சரிக்கிறார். மேலும், அவரது சிபார்சுகளுள் அநேகமானவை அரசுக்கே விடுக்கப்பட்டாலுங்கூட, தமிழ் சமூகத்துக்கும் சிவில் சமூகத்துக்கும் தமிழரோ, சிஙகளவரோ, முஸ்லீமோ பாதிப்புற்ற அவர்கள் அனைவரையும் அரவணைக்கும்படியாக ஞாபகப்படுத்துகிறார். இறுதியாக, துரித செயலாற்றத்துக்கு எதிராக அவர் எச்சரித்து, குற்றவியல் வழக்குத்தாக்கல்கள், திருத்தியமைப்புக்கள் மற்றும் உண்மை அறியும் ஆணைக்குழு போன்ற விடயங்களிலே பொறுமையான கலந்துரையாடலை அவர் சிபார்சு செய்து, அதேவேளை இனியும் தாமதிக்க முடியாத உடனடியான சில விடயங்கள் உள்ளதையும் தெழிவுபடுத்தியுள்ளார்.

செப்டெம்பர் 2015 அண்டிவருகையிலே ஐ.நாவின் இலங்கைபற்றி மேற்கொண்ட சர்வதேச விசாரணை அறிக்கையை வெளியிடும்போது, பொறுப்புக்கூறுதல் மற்றும் நிலைமாற்றுக்கால நீதி ஆகியவற்றிலே அறிவுள்ளவராகவும் மதிக்கப்பெறுபவருமான இவருடையை பரிந்துரைகள் எமது உபாயத்திட்டங்களுள் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். அப்படிச் செய்வதாற்தான் எமது சாணக்கிய நகர்வுகள் வெற்றியை உறுதிப்படுத்தும். மூன்று காரியங்களையிட்டதான எமது கவனத்தை அவை வேண்டிநிற்கும். முதலாவதாக, பொறுமை வேண்டப்பட்ட இடத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கும் அதேவேளை, அவரசமாகக் கவனிக்கப்படவேண்டிய விடயங்களிலே அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தளராமல் அரசுக்கு நெருக்குதல் கொடுக்கவேண்டும். இரண்டாவதாக, எமது அரசியல் மற்றும் சிவில் சமூக நடவடிக்கைகளுக்கு எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களை மாத்திரமல்லாது சகல பாதிக்கப்பட்டோரையும் ஆதரிப்பதன் மூலம் மனித உரிமைகள் அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டும். முன்றாவதாக, நிலைமாற்றுக்கால நீதி மற்றும் பொறுப்புக்கூறுதல் ஆகியவற்றுடன் இடைப்படும் எந்தப் பொறிமுறையும் எமது பங்களிப்புடனும் ஒப்புதலுடனுமே இடம்பெறவேண்டும் என்பதை நிர்ப்பந்திக்க வேண்டும். எங்களுடைய கடமைகளை முற்றாக செயற்படுத்துவதால் மற்றுமே அரசுக்கெதிரான அழுத்தத்தை நீடிக்க வைக்க முடியும் என்பதை தமிழ் தரப்பினர் இப்போதாவது உணரவேண்டும்.

நிறான் அங்கிற்றல்