படம் | Eranga Jayawardena / AP Photo, CTV NEWS
இலங்கை அரசு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியாதளவிற்கு நாளுக்குநாள் தென்னிலங்கை அரசியலில் குழப்பங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்தவாரம் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றவுள்ளதாக அரசு முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால், நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட குழப்பங்களை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இலங்கையில் என்றுமில்லாதவாறு நாடாளுமன்ற வளாகத்திற்குள்ள்ளேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதமிருந்தனர். நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமென்று ஒரு சாராரும், தேர்தல் சட்டத்தை மாற்றிய பின்னர்தான் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமென்று இன்னொரு சாராரும் என நாடாளுமன்றம் இரண்டாக பிளவுண்டு கிடக்கின்றது. அமெரிக்க தூதுவர் உள்ளடங்கலான மேற்கு இராஜதந்திரிகளுடனான சந்திப்பின் போது அரசியல் அமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளாமல் தான் நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால வாக்குறுதி அளித்திருக்கின்றார். இவ்வாறு மைத்திரிபால தெரிவித்திருக்கும் நிலையில் 19ஆவது திருத்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் அபிப்பிராயங்களையும் உள்வாங்கி மீள்வரைபு செய்தால் மட்டுமே தங்களால் ஆதரவளிக்க முடியுமென்று எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்திருக்கின்றார். இதிலும் ஒரு குழப்பமுண்டு. உண்மையில் நிமல் சிறிபால் டி சில்வா என்பர் யார்? அவர் எதிர்க்கட்சியா அல்லது ஆளும் கட்சியா?
நிமல் சிறிபால டி சில்வா மைத்திரிபால சிறிசேனவின் தலைமையை ஏற்றுக்கொண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதுடன் பின்னர் தேசிய அரசு ஒன்றிலும் இணைந்து கொண்டவர். இதனைத் தொடர்ந்தே யார் அடுத்த எதிர்கட்சி தலைவர் என்னும் கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்தே நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரான இரா.சம்பந்தனுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தமிழரசு கட்சியும் தங்களுக்கே எதிர்கட்சித் தலைவர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும், அதுவே நாடாளுமன்ற நடைமுறையென்றும் குறிப்பிட்டு சபாநாயகருக்கு கடிதமொன்றையும் அனுப்பியிருந்தது. சம்பந்தன் ஜயாவும் தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆசனம் கிடைக்கப் போவதாகவே நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் இறுதியில் எதுவும் நிகழவில்லை. கிழக்கு மாகாண சபை விவகாரத்தில் எவ்வாறு ஜயா தோல்வியடைந்தாரோ அதே போன்றே எதிர்க்கட்சி விவகாரத்திலும் அவரது எதிர்பார்ப்பு தோல்வியடைந்தது. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து சம்பந்தன் ஜயா தொடர்ந்தும் தோல்விகளையே சந்தித்து வருகின்றார். இது தொடர்பில் பிறிதொரு பத்தியில் விரிவாக பார்ப்போம். உண்மையில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவம் செய்தவர்கள் பலர் தேசிய அரசு ஒன்றில் இணைந்துகொண்டதன் பின்னர், உண்மையில் அவர்கள் எதிர்க்கட்சியினர் அல்ல. ஆனால், நிமல் சிறிபால டி சில்வா தற்போதும் எதிர்கட்சித் தலைவராகவே அபிப்பிராயங்களை தெரிவித்து வருகின்றார். ஊடகங்களும் அவரது கருத்துக்களை எதிர்கட்சித் தலைவரின் கருத்துக்களாகவே வெளியிட்டு வருகின்றன. தென்னிலங்கை அரசியல் எந்தளவிற்கு குழம்பிப் போயுள்ளது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். அதாவது, யார் ஆளுங்கட்சி, யார் எதிர்கட்சி என்று விளங்கிக்கொள்ள முடியாதளவிற்கு நிலைமைகள் குழப்பமடைந்துள்ளன. இவ்வாறானதொரு சூழலில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் எவ்வாறு ஒருமித்த கருத்துடன் தென்னிலங்கையால் செயலாற்ற முடியும்? உண்மையில், ஆட்சி மாற்றம் இலங்கையின் அரசியல் ஸ்திரத் தன்மையை நிலைகுலையச் செய்திருக்கிறது. இவ்வாறு நான் குறிப்பிடுவதால் சில அரைகுறை தமிழ்த் தேசிய வாதிகள், நான் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்திற்கு ஆதரவளித்ததை விமர்சிப்பதாக நொந்து கொள்ளலாம். ஆனால், எவருடனும் நொந்து கொள்வதால் நிலைமைகளை மாற்றிவிட முடியாது. ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமைகளை உற்று நோக்கும் ஒரு அவதானியாகவே எனது அபிப்பிராயங்களை பதிவுசெய்ய விளைகின்றேன். ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமைகள் எதிர்பார்த்தது போன்று சுமூகமாக இருக்கின்றதா அல்லது குழப்பமடைந்திருக்கிறதா? இன்று தென்னிலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வுகளை உற்று நோக்கும் ஒருவர் மேற்படி கேள்விக்கான விடையை கண்டடைய சிரமப்பட வேண்டியதில்லை. நான் மேலே சுட்டிக்காட்டிய விடயங்களை தொகுத்து நோக்கினால் நீங்கள் தென்னிலங்கை அரசியல் தொடர்பில் எத்தகைய முடிவுக்கு வருவீர்கள்?
தற்போது நிலைமைகளை மேலும் சுவைப்படுத்தும் வகையில் முன்னாள் பொருளாதார அமைச்சரும் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் மிகவும் சக்திவாய்ந்த அமைச்சராக இருந்தவருமான பசில் ராஜபக்ஷ, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மஹிந்தவின் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்காவிற்குச் சென்றிருந்த பசில், தான் இலங்கை திரும்பினால் விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை துல்லியமாக அறிந்திருந்தும், ஏன் தற்போது நாடு திரும்ப வேண்டும்? அவர் தற்போது கைதுசெய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த ராஜபக்ஷ குடும்பத்தினர் பழிவாங்கப்படுகின்றனர் என்னும் பிரச்சாரம் சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டால், அது எதிர்கால தென்னிலங்கை அரசியலில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தலாம்? இங்கு இன்னொரு விடயத்தையும் உற்றுநோக்க வேண்டும். கைதுசெய்யப்பட்டிருக்கும் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குகொள்வதற்கும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவர் என்ன சொல்லக் கூடும்? ஏனெனில், பசில் ராஜபக்ஷ குற்றவாளி என்றால் பசில் ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட்ட அரசியல் வாதிகளுக்கும் நிதி மோசடிகளுடன் தொடர்பிருக்காதா? பசில் ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட்ட ரிசாத் பதியுதீனின் செயற்பாடுகளும் வெளிச்சத்திற்கு வருமா? இதன் இறுதி விளைவாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுறுமா? அதற்கான ஒத்திகை ஒன்றின் காட்சியா தற்போது அரங்கேறுகிறது? அனைத்திற்குமான பதில் எதிர்காலத்திடம் மட்டும்தான் உண்டு. காலம் ஒன்றே அணைத்து முடிச்சுக்களையும் அவிழ்த்துப் போடும் ஆற்றலாளன்.
தென்னிலங்கையின் குழப்பநிலை தொடர்பில் பேசுகின்ற போது ஏன் இவ்வாறானதொரு குழப்ப நிலை ஏற்பட்டது என்பது குறித்தும் சிறிது அவதானிப்பது, விடயங்களை மேலும் இலகுவாக விளங்கிக்கொள்ள உதவலாம். ஆட்சி மாற்றம் குறித்து பலரும் பேசியளவிற்கு ஆட்சி மாற்றத்தின் தன்மை தொடர்பில் பேசப்படவில்லை. நான் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து எழுதிய பத்தியொன்றில், ஆட்சி மாற்றமென்னும் மகிழ்சியான காட்சிக்கு பின்னாலிருந்த சர்வதேச சக்திகள் தொடர்பில் பேசியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இன்றைய தென்னிலங்கையின் குழப்பங்கள் அனைத்திற்குமான கரு அங்கிருந்துதான் உருப்பெற்றது. இப்போது நிகழ்வது அந்த கரு வளர்ந்து அதன் வேலையை காட்டத் தொடங்கியிருக்கிறது. அவ்வளவே! மஹிந்தவின் வெளிவிவகார கொள்கை இந்திய அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு சவாலான ஒன்றாக மாறியது. அந்தச் சவாலை எதிர்கொள்ளும் ஒரு உபாயமாகவே ஆட்சி மாற்றத்தை இந்திய, அமெரிக்க தரப்புக்கள் கையிலெடுத்தன. இதன் விளைவாக இடம்பெற்ற ஒரு வீட்டு வேலையின் (Home Work) பெறுபேறே நிகழ்ந்திருக்கும் ஆட்சி மாற்றம். தவிர, இது ஒரு இயல்பான ஆட்சி மாற்றமல்ல. வெளியாரின் தந்திரோபாய காரணங்களுக்காக அரை குறையாக ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றமொன்றே இது. மஹிந்தவின் ஆட்சியில் அதிருப்தியடைந்து பெரும்பான்மையான சிங்கள மக்கள் மஹிந்தவிற்கு எதிராக திரும்பியிருக்கவில்லை. மாறாக மஹிந்தவிற்கும் அவருடன் இருந்தவர்களுக்கும் இடையிலான உள் முரண்பாடுகளை கையாண்டு, ஆட்களை கழற்றியெடுப்பதன் மூலம் மக்களை திருப்பியெடுக்கலாம் என்னும் கணிப்பிலிருந்தே ஆட்சி மாற்றத்திற்கான திட்டங்கள் வகுப்பட்டன. இதன் காரணமாக பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஆட்சி மாற்றமொன்றிற்கான தேவையை உணர்ந்திருக்கவில்லை. இதன் காரணமாகவே பெரும்பான்மையான சிங்கள மக்கள் மஹிந்தவையே ஆதரித்திருந்தனர். இந்த நிலைமை ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்தவை ஆதரித்து நின்றவர்களுக்கு தோல்வி மனப்பாண்மையை கொடுக்கவில்லை. காரணம், அவர்கள் எவரும் தமிழ் மக்களின் வாக்குகளை நம்பியிருப்பவர்கள் அல்லர். மைத்திரிபால சிறிசேன தேர்தலில் வெற்றி பெற்றிருந்த போதும் சிங்கள மக்கள் அவரை பெரும்பான்மையாக ஆதரிக்கவில்லை என்னும் உண்மை தெற்கின் சிங்கள தேசியவாத அரசியலை மஹிந்த – மைத்திரி என்று பிளவுபடுத்தியது. இந்தச் சவாலை இன்றுவரை மைத்திரிபாலவினால் வெற்றிகொள்ள முடியவில்லை. இதுவே இன்றைய தென்னிலங்கையின் அனைத்து குழப்பங்களுக்கும் காரணமாகும்.
இந்த குழப்பங்களை மைத்திரிபாலவினால் வெற்றிகொள்ள முடியாதுபோனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி – மைத்திரி அணி – மஹிந்த அணி என்று இரண்டாக பிளவுறுவதை தடுக்க முடியாது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த தலைமையில் ஒரு தரப்பினர் களமிறங்குவதும், இறங்காமல் விடுவதும் மைத்திரியின் இணக்கப்பாடுகளிலேயே தங்கியிருக்கிறது. 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவேன் என்று மைத்திரி தெரிவித்திருக்கின்ற நிலையில், நாடாளுமன்ற அமர்வுகளின் போதும் அதனை செயற்படுத்த முடியாது போனால், மைத்திரியிடம் எஞ்சியிருக்கப் போகும் திட்டம் என்னவாக இருக்க முடியும்? எனது கணிப்பின் படி, நிலைமைகள் மேலும் மோசமடைந்து செல்லுமிடத்து ஜனாதிபதி மைத்திரிபால நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி பிரதமர் ரணிலை கோரலாம். அதனை ரணிலால் நிறைவேற்ற முடியாது போகும் போது ரணில் பிரதமர் பதவியை இழக்கவும் நேரிடலாம்.
ஜக்கிய தேசியக் கட்சியை பொருத்தவரையில் ரணில் பிரதமராக வர வேண்டுமாயின், தற்போதிருக்கின்ற சூழலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு அவசியம் நிகழ வேண்டும். ஒருவேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிளவுறவில்லையாயின், ஜக்கிய தேசியக் கட்சி எதிர்காலத்திலும் அதிகாரத்திற்கு வருவது சாத்தியமானதாக இருக்காது. அதேவேளை, மஹிந்தவுடன் இணங்கிச் சென்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டுமாயின், மஹிந்தவின் ஆதரவாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படும் விசாரணைகள் மைத்திரிபால கைவிட வேண்டியேற்படும். அவ்வாறு மஹிந்தவுடன் சமரசம் செய்தால் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் பலவற்றை எதிர்காலத்தில் அவரால் நிறைவேற்ற முடியாது போகலாம். மீண்டும் கட்சி சிறைக்குள்ளேயே மைத்திரி முடங்க நேரிடும்.
குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்த அரசால் எதனையும் செய்ய முடியாது போகலாம். ஒருவேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக உடைந்து தேர்தலை எதிர்கொண்டாலும் கூட மஹிந்தவின் தலைமையிலான அணியினர், கணிசமான ஆசனங்களை கைப்பற்றக் கூடிய வாய்ப்புண்டு. அவ்வாறானதொரு நிலைமை உருவாகுமாயின், அப்பொழுதும் கூட தமிழர் பிரச்சினையை தென்னிலங்கையால் கையாள முடியாது போகலாம். மொத்தத்தில் தென்னிலங்கையின் குழப்பங்கள், இறுதியில் தென்னிலங்கையின் சிங்கள தேசியவாத அரசியல் அரங்கில் என்ன வகையான மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றது என்பதை பொறுத்திருந்தே நோக்க வேண்டும்.
தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.