படம் | ZEENEWS
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த வாரத்தைய இலங்கை விஜயம் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுடன் கைச்சாத்திடுவதற்காக 28 வருடங்களுக்கு முன்னர் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்புக்கு வருகை தந்த பிறகு இந்தியப் பிரதமர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட (இரு தரப்பு உறவுகளின் அடிப்படையிலான) முதலாவது அரசு முறை இலங்கை விஜயமாக அமைந்தது. மோடி அவர்கள் வட மாகாணத்துக்கும் சென்று நிகழ்வுகளில் பங்கேற்றதன் மூலமாக அப்பகுதிக்கு விஜயம் செய்த முதலாவது இந்தியப் பிரதமர் என்ற வரலாற்றுப் பெருமையையும் தனதாக்கிக் கொண்டார்.
முன்னைய இலங்கை அரசினால் கடைப்பிடிக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கை காரணமாக கொழும்புக்கும் புதுடில்லிக்கும் இடையிலான உறவுகளில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டிருந்த நெருடல் நிலையை அகற்றக் கூடியதாக மோடியின் விஜயம் அமைந்தது என்பதும் ஜனவரியில் பதவியேற்ற இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்குச் சென்று திரும்பிய இரு வாரங்களில் அந்நாட்டுப் பிரதமர் இலங்கைக்கு வருகை தந்தார் என்பதும் முக்கியமாகக் குறிப்பிடக்கூடிய அம்சங்களாகும். மைத்திரிபால சிறிசேனவின் புதுடில்லி விஜயத்தின் போது இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு குறித்து மோடி அவர்கள் எந்தப் பேச்சையும் எடுக்கவில்லை. நீண்ட நாள் நெருடலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான உறவுகளை வளர்த்தெடுக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பதால் தற்போதைக்கு இனப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் இந்தியா கொழும்புடன் பேச்சை எடுப்பதற்கான சாத்தியங்கள் குறைவு என்று அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மோடி அவர்கள் இலங்கைக்கு வந்த முதல் நாளே இனப் பிரச்சினை குறித்து பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதி செயலகத்தில் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்தியப் பிரதமர், “இலங்கை ஐக்கியப்பட்ட நாடாக இருக்க வேண்டுமென்பதே இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால், மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கலைச் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை விரைவாகவும் முழுமையாகவும் இலங்கை அரசு நடைமுறைப்படுத்துவதைக் காண இந்தியா விரும்புகிறது” என்று குறிப்பிட்டார். அத்துடன் நின்று விடாமல் அவர் தமிழர்கள் உட்பட இலங்கைச் சமூகத்தின் சகல பிரிவு மக்களினதும் அபிலாசைகளுக்கு இடமளிக்கக் கூடிய ஒரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு வசதியாக 13ஆவது திருத்தத்துக்கு அப்பாலும் (13+) செல்வதில் நாட்டம் காட்ட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
அரசியல் அமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் 13+ என்ற விவகாரங்கள் பல வருடங்களாகப் பேசப்பட்டு வருகின்றவையே. உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்திலும் சரி, போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரான கால கட்டத்திலும் சரி அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்வது குறித்து இந்தியத் தலைவர்களுக்கு பல தடவைகள் உறுதியளித்திருந்தார். ஆனால், அவரோ அல்லது அவருக்கு முன்னர் ஆட்சியதிகாரத்தில் இருந்த ஜனாதிபதிகளோ 13ஆவது திருத்தத்தைத் தானும் நடைமுறைப்படுத்துவதில் அக்கறைகாட்டவில்லை.
இரு வருடங்களுக்கு முன்னர் வட மாகாண சபைக்கு தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக மாகாண சபைகளுக்கு இருக்கக் கூடிய காணி அதிகாரங்களையும் பொலிஸ் அதிகாரங்களையும் இரத்துச் செய்வதற்கு அரசியல் அமைப்புத் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு ராஜபக்ஷ அரசின் அனுசரணையுடன் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், அவை பிறகு கைவிடப்பட்டன. இதற்கு இந்தியாவிடமிருந்து வந்திருக்கக் கூடிய நெருக்கு வாரங்களே காரணம் என்பதில் சந்தேகமில்லை. மாகாண சபைகளுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களை குறைப்புச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட பிரயத்தனங்களை இந்தியாவினால் தடுக்கக் கூடியதாக இருந்த போதிலும், 13ஆவது திருத்தத்தில் இருகின்ற அதிகாரங்களை மாகாண சபைகள் நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதிக்காமல் இருக்கின்ற கொழும்பின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சுமார் மூன்று தசாப்தங்களாக புதுடில்லியினால் இயலாமல் இருக்கிறது.
அயல் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய முடியாது என்ற வாதம் இது விடயத்தில் இந்தியாவினால் முன்வைக்கப்படுவதாக இருந்தால் அது பொருத்தமானதாக இருக்காது. ஏனென்றால், ஜெயவர்தனவுடன் ராஜீவ் காந்தி சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட போது அதில் இனப் பிரச்சினையின் மற்றைய தரப்பினரான தமிழர்கள் சம்பந்தப்படுத்தப்படவில்லை. இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான நோக்கத்துடன் கைச்சாத்திடப்பட்டது என்று கூறப்பட்ட அந்த உடன்படிக்கையில் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தில் எவரும் கைச்சாத்திடவில்லை. தமிழர்களின் நலன்களை உத்தரவாதப்படுத்தும் பொறுப்பை இந்தியாவே தன்வசம் எடுத்துக் கொண்டது என்றே அதை அர்த்தப்படுத்த வேண்டும்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கோரிக்கை
வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் மோடி அவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாக ‘இந்து’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றிலும் பிறகு அவர் யாழ்ப்பாணத்துக்குச் சென்ற வேளையில் அவர் முன்னிலையிலும் தமிழர்களின் உரிமைகளையும் நலன்களையும் ‘உத்தரவாதப் படுத்துவதில்’ இந்தியாவுக்குள்ள பாத்திரத்தை நினைவுபடுத்தினார். அத்துடன், அரசியல் அமைப்புக்கான 13ஆவது திருத்தம் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக ஒருபோதும் அமையப் போவதில்லை என்பதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கைத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான அரசியல் அணியின் நிலைப்பாடாக இதுவே இருந்து வருகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும்.
எது எவ்வாறு இருந்தாலும், சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது முதல் இன்று வரையான கால கட்டத்தில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசுகளை புதுடில்லியினால் இணங்க வைக்கவோ வழிக்குக் கொண்டு வரவோ முடியவில்லை. இந்த இலட்சணத்தில் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்வது குறித்த பேச்சு வேறு.
இலங்கை வந்த பிரதமர் மோடியும் தனது பங்கிற்கும் அதைக் கூறிவிட்டுச் சென்றிருகிறார். குறைந்தபட்சம் தற்போது 13ஆவது திருத்தத்தில் இருக்கின்ற அதிகாரங்களை மாகாண சபைகள் அனுபவிக்க வகை செய்து போதாமைகளுடனென்றாலும் இயங்க வைக்க முடியாத நிலையில் 13+ பற்றி பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
சந்திரிகா கூறியது
13ஆவது திருத்தம் இலங்கைப் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு பதவியல் இருந்த அரசுகள் அதை நடைமுறைப்படுத்துவதில் எந்தளவுக்கு சூழ்ச்சித்தனமாக நடந்து கொண்டன என்பதை 11 வருடங்களாக இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த திருமதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவிடமிருந்தே தெரிந்து கொள்வோம்.
இந்திய காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயர் ராஜீவ் காந்தி பற்றி எழுதிய நூல் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக 2009 முற்பகுதியில் புதுடில்லிக்குச் சென்ற திருமதி குமாரதுங்க அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் நிகழ்த்திய உரையில் இருந்து ஒரு பகுதி,
“மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஏற்பாடுகளை உள்ளடக்கிய 1987 சமாதான உடன்படிக்கையை இலங்கையில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த சகல அரசுகளுமே சூழ்ச்சித் தனமாகச் சீர்குலைத்திருக்கின்றன. உடன்படிக்கையில் விதந்துரைக்கப்பட்டிருப்பதன் பிரகாரம் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டிருக்குமேயானால், இனநெருக்கடி நீண்ட காலத்துக்கு முன்னரே முடிவுக்கு வந்திருக்கக் கூடும். இலங்கை எதிர்நோக்குகின்ற நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்கு பொருத்தமானதாக இன்னமும் கூட அரசியல் அமைப்புக்கான 13ஆவது திருத்தம் விளங்குகிறது. அந்தத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த நானும் முயற்சித்தேன். ஆனால், இலங்கையின் அரசியல் கட்சிகளில் சில பிரிவினர் அதற்கு அனுமதிக்கவில்லை. அதை நடைமுறைப்படுத்தினால் நாளடைவில் இலங்கையில் தனித் தமிழ் நாடு தோன்றுவதற்கு வாய்ப்பாகிவிடும் என்று அந்தக் கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன. அந்தக் கட்டத்தில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய முயற்சிகள் முறியடிக்கப்பட்டிருக்காவிட்டால் பிரச்சினை தீர்ந்திருக்கும். ஆனால், இலங்கையின் சகல அரசுகளுமே அந்தத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாதிருப்பதை உறுதிசெய்து கொண்டன. என்னாலும் கூட அதை நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கவில்லை”.
வீ. தனபாலசிங்கம்