படம் | timesofoman
வடமாகாணசபை தெரிவுசெய்யப்பட்டதன் பயனாக அங்குள்ள மக்களின் அபிவிருத்திக்கு சில வாய்ப்புகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன என்று அபிப்பிராயப்படுபவர்கள் பலர். இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே கடந்த ஜனவரி மாதம. 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘ வடக்கினை ஜனநாயகமயப்படுத்தல்: ஆளுகை, அபிவிருத்தி நலிவுத்தன்மை என்பன பற்றிய கலந்தரையாடல்’ என்கின்ற தலைப்பில் கொழும்பின் இனத்துவக் கற்கைக்கான சர்வதேச நிலையமானது ஒரு நாள் செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தது. ஆளுகை, அபிவிருத்தி, நலிவுத்தன்மை ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்ட விடயங்களாகும். மக்கள் பங்கேற்கும், அவர்களுக்குப் பொறுப்புக் கூறும் வெளிப்படைத்தன்மை மிக்க ஆளுகை இன்றி சகலருக்குமான அபிவிருத்தி ஏது? அதேநேரம், நலிவுற்ற மக்கள் வாழும் பிரதேசங்களில் ஆளுகையை பலப்படுத்தும் வழி ஏது? எனவேதான் ஒன்றின் மீதொன்று செல்வாக்குச் செலுத்தும் இம்மூன்று முக்கிய காரணிகளையும் எடுத்து இந்த செயலமர்வு நடத்தப்பட்டது பொருத்தமாகக் காணப்பட்டது.
வட மாகாணத்தின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட வட மாகாணசபையின் கல்வி அமைச்சர், முன்னாள் வட கிழக்கு மாகாணசபையின் உதவிப் பிரதம செயலாளர், மற்றும் ஆய்வாளர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் போன்ற பலர் பிரதம பேச்சாளர்களாகக் கலந்துகொண்ட இவ்வரங்கில், மாகாண சபை உறுப்பினர்கள், அரச நிர்வாகிகள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் போன்றோரும் பங்குபற்றியிருந்தனர். இதனை ஆரம்பித்து வைத்த இனத்துவ கற்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான திரு. மறியோ கோமஸ் அவர்கள, 2009ஆம் ஆண்டு யுத்த முடிவையும் அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபையையும் சமீப காலங்களில் நிகழ்ந்த இரு முக்கிய வரலாற்றுச் சம்பவங்களாக எடுத்துக் காட்டி, இதன் பின்னரான வட மாகாண மக்களின் அரசியல் அபிவிருத்திப் போக்குகளை நெறிப்படுத்த உதவுவதற்கான கலந்துரையாடல் இது என விளக்கம் அளித்தார்.
பேச்சாளர்களின் கருத்துக்களும் இதனுடன் உடன்பட்ட கருத்துக்களாகவே காணப்பட்டன. ‘யுத்தகாலங்களில் வெளி நடப்புக்கள் அறியாதவர்களாக, புதிய அரசியல் நிர்வாக வரைவிலக்கணங்களினதும் சொற்பதங்களினதும் தாற்பரியங்களை அறியாதவர்களாக வாழ்ந்து விட்டோம். அந்த வகையில் எம்மை இம்முறைவழிகளைக் கற்றுக்கொள்ளும் பாதையில் செல்ல உதவும் இனத்துவக் கற்கைக்கான சர்வதேச நிலையத்துக்கு நன்றி’ என்றே முதலமைச்சர் தனது உரையினை ஆரம்பித்தார். இக்கருத்தரங்கில் பேசப்பட்ட விடயங்கள் பல கேட்பவர்களின் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் அமைந்தது மறுக்க முடியாததாகும்.
“ஓர் ஜனநாயக சட்டகத்தில் செயற்படுத்தும் அதிகாரத்தின் மூலமும், அந்த அதிகாரத்தின் வழியே செயற்படுத்தப்படும் திட்டங்களின் பயனாளிகளும் மக்களே. எனவே, ஆளுகைக்கான கட்டமைப்புகள் அதன் நம்பிக்கைப் பொறுப்பு வாய்ந்தவர்கள் (Trustees) மக்களுக்கு நன்மைகளைச் செய்வதற்கான சட்டகமேயன்றி வேறில்லை. இவ்வாறு நோக்கினால், ஆளுபவர்கள் ஆளப்படுபவர்கள் என்கின்ற பாரம்பரிய நோக்கிலிருந்து வேறுபட்டு நாம் ஜனநாயகம் என்பதனை நம்பிக்கைப் பொறுப்பு இரண்டறக் கலந்திருக்கும் (மக்களும் அவர்களுக்கு சேவை செய்வதற்காக அதிகாரம் கொண்டிருப்பவர்களும்) ஒன்றிணைந்த முறைவழியாகப் பார்க்கலாம். இதனால்தான் வடக்கில் நிர்வாகத்திலிருந்து இராணுவம் விலக்கப்படவேண்டும் என நாம் கோருகின்றோம்..” என நல்லாளுகை பற்றிய தனது விளக்கத்தினை முன்வைத்தார் முதலமைச்சர்.
இவருக்குப் பின் பேசிய அகிலன் கதிர்காமர் அவர்கள், மீள் கட்டுமானம் புனர்வாழ்வு போன்ற முறைவழிகளில் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தினார். தமிழ் மக்கள் சுய மீளாய்வினை மேற்கொள்ள வேண்டும் என்றும், தம் மத்தியில் சாதீய பாகுபாடுகளைக் களைய முன்வரவேண்டும் என்றும் கோரினார். வழங்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் சகலருக்கும் சென்று சேரவேண்டுமெனில், சாதி வர்க்கப் பாகுபாடுகளுக்கு அப்பால் சகலரும் பங்கேற்கும் அபிவிருத்தி முறைவழிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பது இவருடைய உரையின் உட்கருத்தானது. மாகாண சபையின் நிதிக் கையாளுகையைப் பற்றிப் பேசிய முன்னாள் வட கிழக்கு மாகாண உதவிப் பிரதம செயலாளர் திரு. கிருஷ்ணானந்தன் அவர்கள், இது தொடர்பாக மத்திய அரசுக்கும் மாகாண சபைக்குமிடையிலான முரண்பாடுகளை விளக்கி, ஆனால் இத்தனை தடைகளுக்குள்ளும் சில வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன எனத் தனது உரையை முடித்துக்கொண்டார்.
அபிவிருத்தியைப் பற்றிய உரைகளும் அதன் பல அம்சங்களைத் தொட்டன. வடக்கு இளைஞர்கள் பாரம்பரியமாக செய்யப்படாத வேலைகளின் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளுவதில் காட்டும் அசிரத்தைகள், நிர்வாகிகளது எதேச்சாதிகாரமான மனப்பாங்குகள், புலம்பெயர் தமிழ் மக்களது உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஒருமுகமான செயற்பாடு இல்லாமை போன்ற பல விடயங்கள் இதில் அலசப்பட்டன. நலிவுத்தன்மை என்னும் விடயத்தின் கீழ் பேசிய வட மாகாண கல்வி அமைச்சரின் உரையும், உளநோய் வைத்தியரான வைத்திய கலாநிதி கணேஷின் உரையும் இவ்விடயங்கள் பற்றிய பல பெறுமதியான தகவல்களைத் தந்தன.
ஒவ்வொரு உரைக்குப் பின்னரும் நடந்த கலந்துரையாடலில் பார்வையாளர்கள் தமது கேள்விகளை வீசியும் கருத்துக்களைக் கூறியும் பங்குபற்றிய விதம் யாழ் மாவட்டத்தில் இவ்வகையான செயலமர்வுகளின் தேவையையே எடுத்துக் காட்டிற்று. முதலமைச்சரின் நல்லாளுகை பற்றிய விளக்கத்தினைப் பலரும் சிலாகித்துப் பேசினர். பேச்சாளர்களின் கருத்துக்களை மேலும் ஊக்குவிப்பதற்கான பல கருத்துக்களும் யுக்திகளும் முன்வைக்கப்பட்டன. இதில் முதலமைச்சரை நோக்கித்தான் நீண்டநேரம் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. இக்கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது அவரும் தமது நிர்வாகத்திற்கு தகுந்த ஆளணி இல்லாத குறையையும், ஒவ்வொரு துறைகளிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் தமக்கு உதவியாக இல்லையென்பதையும் கூற மறக்கவில்லை. மாகாணசபைகளுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதிகள் நிர்வாகத்துக்கு மட்டுமே போதுமானதாகவும், வரியினூடான வருமானம் மிகக்குறைவாக இருக்கின்றதுமான நிலையில், புலம்பெயர் சமூகத்தின் நிதியுதவியுடன்தான் இயங்கலாம் என்கின்ற முடிவுக்குத் தாங்கள் தள்ளப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். இந்த விடயமே பிற்பகுதியில் எதிர்காலச் செயற்பாடுகள் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டபொழுது பலராலும் குறிப்பிடப்பட்ட விடயமாகியது.
வட மாகாணசபை சிவில் சமூகத்துடன் ஒரு தொடர்பினையும் பேணாது தனித்து நிற்கின்றது எனச்சிலர் அபிப்பிராயப்பட்டனர். பல்கலைக்கழகங்களைச் சார்ந்த அறிஞர்கள், சமூகப் பணியில் அனுபவம் வாய்ந்த சிவில் சமூகப் பிரதிநிதிகள், அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் போன்றோர் அடங்கிய ஒரு நிபுணத்துவக் குழு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அது வட மாகாண சபைக்கான ஆலோசனைக் குழுவாகச் செயற்பட வேண்டும் என்பதும் அங்குள்ள பெரும்பான்மையினரின் கருத்தாகியது. காலஞ்சென்ற பேராசிரியர் துரைராஜா அவர்கள் தான் தலைமை வகித்து நடத்திய தன்னார்வத் தொண்டரடங்கிய அபிவிருத்திக் குழுவினைப் போன்று இக்குழு செயற்பட்டு ஒரு ஆறு மாத காலங்களிலேயே புலம்பெயர் தமிழ் மக்கள் நிதியுதவி மற்றும் முதலீடு செய்யக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கலாம் எனவும் சிலர் கருதினர். வட மாகாணத்தில் இயங்கும் அரசு சாரா நிறுவனங்கள் இவற்றிற்கான சில உட்கட்டுமான வசதிகளைச் செய்து தரக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதும் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறு இயங்கினால் வட மாகாணசபை ஏனைய மாகாணங்களுக்கான முன்னுதாரணமாகவும் திகழலாம் என்றும் கூறினார்கள்.
மொத்தத்தில், கொழும்பு அரசு என்னதான் தடைகளை இட்டாலும், தாம் ஒற்றுமையாக ஒன்றிணைந்து இயங்குவதன் மூலம் அதன் நிகழ்ச்சி நிரலைத் தோற்கடிப்போம் என்கின்ற தொனியே எங்கும் கேட்டது. இதற்கான சகல மனித வளங்களையும் தம்மால் திரட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையே எல்லோர் பேச்சிலும் இழையோடிற்று. ஆனால், இங்கு ஒரு முக்கிய காரணியினை ஒருவரும் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு சகல துறையினரையும் இணைத்து இயக்குவதற்குரிய ஓர் அரசியல் தலைமைத்துவம் அவசியம் என்னும் காரணியே அது. பேராசிரியர் துரைராஜா தனது அபிவிருத்திக் குழுவினை இயக்குவதற்கு விடுதலைப் புலிகள் வழங்கிய அரசியல் தலைமைத்துவம் முக்கியமாக இருந்தது. பிரச்சினை இதுதான். இவ்வகையான பணியில் சகலரையும் ஒன்று திரட்டும் தரிசனமும் ஆற்றலும் நாம் தெரிவு செய்த அரசியல் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றதா? தனது நிர்வாகம் இயங்குவதற்கு ஆளணியும் நிபுணர்களும் இல்லை என முதலமைச்சர் குறைப்படும்பொழுது அது குறித்து அவருடைய கட்சி என்ன செய்தது என்பதே எமது கேள்வியாகும். இதுவரை இவர்கள் வடக்கிலுள்ள சிவில் சமூக அமைப்புக்களைத் திரட்டி அவர்களின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தார்களா? பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்விமான்களுடன் கலந்துரையாடி எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுவது பற்றியும் புலம்பெயர் சமூகத்தினது முதலீடுகளைப் பெற்றுக்கொள்ளும் வழிவகைகள் பற்றியும் பேசினார்களா? குறித்த நிபுணத்துவம் உள்ள தனி நபர்களைத் தொடர்பு கொண்டாவது ஆளணிகளைத் திரட்டத்தான் முயற்சித்தார்களா?
நிர்வாகத்தின் பல பொறுப்புக்களைச் சுமந்து நிற்கும் முதலமைச்சர் இதையெல்லாம் செய்ய முடியாது. அவருக்குப் பின்னால் அவருடைய கட்சி இயந்திரம் துணை நிற்க வேண்டும். ஆனால், கூட்டமைப்பிற்கே உரிய ஸ்டைலொன்று இருக்கின்றதே. தம்மைச் சேர்ந்தவர்கள் அரசியல் பதவிக்கு வந்தால் அவர்கள் கூட்டாக அதிகாரம் பெறுவதற்கு அதுவே போதுமானதாகும், பிறகென்ன? அவர்களை அம்போவென்று விட்டு விட்டு எல்லோரும் அவரவர் வேலைக்குப் போய்விடுவார்கள். பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ?
அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்
தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.