படம் | Ishara Kodikara/ AFP, FCAS

17ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவதுடன் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு கிடப்பிலுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசு உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. தேர்தல், பொலிஸ், நீதித்துறை மற்றும் பகிரங்க சேவை ஆகியவை உட்பட முக்கியமான அரச நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்பட 17ஆவது திருத்தம் வழிவகுக்கின்றது. அதேபோன்று, எந்த ஒரு அரச நிறுவனத்திலும் பொதுமக்கள் சுயாதீனமாக கேள்வி கேட்பதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் இடமளிக்கின்றது.

சிவில் சமூகம்

17ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்போது அந்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் ஆணைக்குழுக்களில் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பது கட்டாயமானது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற அரச உயர் அதிகாரியான எமல் பெரேரா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் வலியுறுத்தியிருந்தார். இந்தச் சட்ட மூலம் உருவாக்கப்படுவதற்கு காரணமாக இருந்த பலர் இன்று மைத்திரிபால சிறிசேனவின் அரசில் அங்கம் வகிக்கின்றனர். ஆகவே, இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் பிரச்சினை இருக்காது என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

1998இல் மதியுரைச் சபை

இந்தச் சட்ட மூலத்தை உருவாக்குவது தொடர்பான மதியுரைச் சபை ஒன்று 1998ஆம் ஆண்டு செப்ரெம்பர் 17ஆம் திகதி கூட்டப்பட்டது. மதியுரைச் சபைக்கு கரு ஜெயசூரிய (தற்போது அமைச்சர்) தலைமை தாங்கினார். முதலாவது கூட்டம் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. நவம்பர் மாதம் 30ஆம் திகதி மதியுரைச் சபை 17ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான அறிக்கை ஒன்றை கையளித்தது. அதில் கே.எச்.ஜே. விஜயதாஸ, பிரட்மன் வீரக்கோன், டி.எம். சுவாமிநாதன் (தற்போது அமைச்சர்) ஆகியோர் உள்ளிட்ட 18 பேர் கையொப்பமிட்டிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சியில் இந்தச் சட்ட மூலம் 2001ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்தச் சட்ட மூல தயாரிப்பில் பெரும் பங்களிப்பு இருந்தது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்த அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தடையாக இருந்தனர் எனக் கூறலாம். சட்ட மூலத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்களை செயற்படுத்தவும் அவற்றுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யவும் 10 பேர் கொண்ட அரசியலமைப்புச் சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

மக்கள் நலன் இல்லை  

அந்த 10 பேர் கொண்ட அரசியலமைப்புச் சபையில் ஜனாதிபதி சார்பான பிரதிநிதி ஒருவரும் தமிழ் – முஸ்லிம் மக்கள் சார்பாக ஒவ்வொரு பிரதிநிதிகளும் அங்கம் வகிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், ஜனாதிபதி சார்பாக நியமிக்கப்படும் பிரதிநிதி தொடர்பாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டது. இதனால், 10 பேர் கொண்ட அரசியலமைப்புச் சபை அமைக்கப்படுவதில் இழுபறி நிலை ஏற்பட்டது. சட்ட மூலத்தின் பிரகாரம் அரச உத்தியோகத்தர்களை நியமிப்பது, அவர்களுக்கான இடமாற்றங்களை செய்வது, பதவி உயர்வு வழங்குவது போன்ற விடயங்கள் சுயாதீன ஆணைக்குழுவிடம் இருக்க வேண்டும். ஆனால், அந்த சுயாதீன ஆணைக்குழுவில் ஜனாதிபதி, அமைச்சர்கள் போன்ற அரசியல் தலைவர்கள் அங்கம் வகித்தால் அதில் அரசியல் தலையீடுகள் இருக்கும் என சிவில் அமைப்புகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் அப்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.

மேற்படி அரச நிறுவனங்களை சுயாதீனமாக செயற்படுத்துவதற்கு ஓய்வு பெற்ற அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அல்லாத துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் அந்த ஆணைக்குழுக்களில் அங்கம் வகிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால், அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவும், எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவரை ஒருவர் குறை கூறி தட்டிக் கழித்திருந்தனர். இது மக்கள் நலன் சார்ந்தது, மக்கள் அரச நிறுவனங்கள் மீதும், ஏன் அரசின் மீதும் நம்பிக்கை வைத்து ஜனநாயக உரிமைகளை மக்கள் அனுபவிக்க வேண்டும் என தேசிய சமாதான பேரவை மாற்றுக் கொள்கை மையம் உள்ளிட்ட பொது அமைப்புகள் அப்போது சுட்டிக்காட்டியிருந்தன.

தலையீட்டை விரும்பினர்

ஆகவே, தேர்தல் பொலிஸ் மற்றும் பகிரங்க சேவை ஆகிய அரச துறைகள் சுயாதீனமாக செயற்பட இந்த அரசியல்வாதிகள் விரும்பவில்லை என்பதை இது உணர்த்துகின்றது. அரச நிறுவனங்களுக்கு ஆட்களை சேர்த்தல், தேர்தல் திணைக்களம் சுயாதீனமாக செயற்படுதல் போன்ற விடயங்கள் தங்களின் ஆட்சி அதிகாரத்துக்கு ஆபத்தாக அமைந்து விடும் என்று எண்ணியதனால் அரசும் எதிர்க்கட்சியும் ஒருவரை ஒருவர் குறை கூறி அதனை தட்டிக் கழித்தனர் என்ற முடிவுக்கு வரலாம். இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அரசு அந்தச் சட்ட மூலத்தையே நீக்கிவிட்டு ஜனாதிபதிக்கு அதிகாரங்களை அதிகரிக்கும் 18ஆவது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி 17ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் எதிர்ப்பு வெளியிட்டார். ஆனால், இப்போது கேள்வி என்னவென்றால், 2001ஆம் ஆண்டு இந்தச் சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் அமுல்படுத்தப்பட்டபோது அரசும் எதிர்க்கட்சியும் ஆதரவு வழங்கியிருந்தன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளும் ஆதரவு வழங்கின. ஆனால், சட்ட மூலம் நிறைவேறியதும் அதனை ஏன் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரமுடியாமல் போனது? இந்தச் சட்ட மூலத்தை ஆரம்பத்தில் தயாரித்தது ஐக்கிய தேசியக் கட்சிதானே? அதனை அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவும் ஏற்றுக் கொண்டார்தானே?

அனைவரும் பொறுப்பு

ஆகவே, அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஏன் 17ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த முடியாமல்போனது? ரணில் விக்கிரமசிங்க 2002ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின்னரும் கூட அந்தச் சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போனமைக்கு காரணம் என்ன? அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் சந்திரிக்கா. ஆகவே, மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் அரசியல் தலையீட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விரும்பியிருந்தன என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. இந்த நிலையில், மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் 17ஆவது திருத்தச் சட்டம் முற்றாக ரத்துச் செய்யப்பட்டதை ரணில் விக்கிரமசிங்கவும் சந்திரிக்காவும் எவ்வாறு விமர்சிக்க முடியும்?

எவ்வாறாயினும், இவற்றுக்கு முடிவு கட்டி மக்கள் நலன் சார்ந்த சட்டங்களில் கவனம் செலுத்துவதற்குரிய முறையில் தற்போதைய ஆட்சி மாற்றம் வசதியாக அமைந்துவிட்டது. அத்துடன், எதிரும் புதிருமாக இருந்த ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்று சேர்ந்து செயற்படுகின்றமையினால் இலகுவாக அந்தச் சட்ட மூலங்களை நடைமுறைப்படுத்தலாம். 17ஆவது திருத்தச்சட்டமும், தகவல் அறியும் உரிமைச் சட்டமும் இனப்பிரச்சினை தீர்வுக்கானது அல்ல. ஆனாலும், சிவில் சமூகங்களின் உரிமைகளை அது உறுதிப்படுத்துகின்றது. 60 ஆண்டு கால தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய வகையில் இந்த இரு பிரதான கட்சிகளும் ஒன்று சேர்ந்தமை சாதகமானதுதான். ஆனால், அதனை முன்னெடுப்பதற்கான மனச்சாட்சியும் ஒன்று சேர வேண்டும்?

தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.