தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இதுவரை வாய்திறக்காத, பொதுவேட்பாளராகியும் இன்னும் திறவாத, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழர் தொடர்பாக எதுவும் குறிப்பிடாத, தமிழர்களை வேண்டப்படாதவர்களாக – விரோதிகளாக எண்ணும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என எவ்வாறு கோர முடியும் என கேள்வி எழுப்புகிறார் சட்டத்தரணி வி. புவிதரன்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்குவதை விடுத்து தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையாவது தன்னால் வழங்க முடியும் என மைத்திரியால் உறுதியளிக்க முடியுமா என மேலும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
‘மாற்றம்’ தளத்துக்கு வழங்கிய நேர்க்காணலின் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“மஹிந்த ராஜபக்ஷ எந்த விதத்திலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு தகுதியற்றவர். மறுபக்கம் மைத்திரிபால சிறிசேன, இனப்பிரச்சினைக்கான தீர்வாக எதை முன்வைத்திருக்கிறார் என்று பார்த்தால், ஒன்றும் இல்லை; பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறுவதற்கு நியாயமான காரணம் இருக்கிறதா எனப் பார்த்தால், ஒன்றும் இல்லை; தமிழ் மக்களைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. அதைவிட மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனமானது, ஒற்றையாட்சி, பௌத்தத்துக்கு முன்னுரிமை போன்றவற்றையே முதன்மைப்படுத்தி நிற்கின்றது.
மேலும், 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவேண்டிய அதிகாரங்களை தான் ஒருபோதும் கொடுக்கப் போவதில்லை என பேட்டிகளில், மேடைகளில் பொதுவேட்பாளர் தெரிவித்துவருகிறார்.
மோதகமும் கொழுக்கட்டையும்
இந்த நிலையில், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் என எந்த அடிப்படையில் கோரமுடியும்? மைத்திரிக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதனால் குறைந்தபட்ச ஜனநாயக உரிமையாவது கிடைக்கும் என்பதில் எதுவித நம்பிக்கையுமில்லை. உதாரணமாக, திருகோணமலையில் நகர சபையால் கட்டப்பட்ட சந்தைக் கட்டடத்தை திறப்பதற்கு மைத்திரிபால அனுமதிப்பாரா? அல்லது கண்ணியாவில் உள்ள சிவன் கோயிலை திருத்துவதற்கு அனுமதி கிடைக்குமா? இதுபோன்ற சாதாரண ஜனநாயக உரிமைகள் கூட தமிழ் மக்களுக்கு கிடைக்காத ஒரு சூழலில் – கிடைக்கும் என்ற உறுதிமொழி வழங்கப்படாத நிலையில் – எவ்வாறு மைத்திரிக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோரமுடியும்?
அதேநேரம், தமிழ் மக்கள் வாக்களிக்காவிட்டால், அது மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. தமிழ் மக்கள் முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷவும், மைத்திரிபால சிறிசேனவும் மோதகமும் கொழுக்கட்டையும் போன்றவர்கள். எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவானால் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் வலுப்பெறும் என சிலர் கூறிவருகின்றனர். அவரது ஆட்சியின் கீழ் தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்களை விட புதிதாக என்ன கஷ்டத்தைதான் அனுபவிக்க. அத்தனையும் அனுபவித்துவிட்டார்கள்.
பிடிமானம் இல்லை
மைத்திரிபால வெற்றிபெற்றவுடன், தமிழ் மக்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் போது அதற்கு அவர் கைவிரித்து விட்டால், ஒரு தீர்வை வழங்குமாறு அவரை நெருக்குவதற்கு எம்மிடம் எதுவித பிடிமானமும் இல்லை. இதுவரை காலமும் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு நெருக்குதல் கொடுத்துக் கொண்டிருந்த மேற்குலகமும் கையைவிரித்துவிட்டு, மைத்திரிபாலவிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடும்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்திருக்கும் மேற்குலகம் இதுவரை காலமும் மேற்குலக எதிர்ப்புவாதத்தை கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசை எமது பிரச்சினையை பயன்படுத்தியே கைக்குள் வைத்துள்ளது. ஆகவே, மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவாகும் பட்சத்தில் தீர்வுக்காக மேலும் அழுத்தங்களை அவர் சந்திக்க நேரிடலாம். இந்த நிலையில், மேற்குலகையும் இந்தியாவையும் சரியான முறையில் கையாண்டு எமக்கான சிறந்த தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான பொறுப்பு தமிழ்த் தலைமைகளுக்கு உள்ளது.
தவறவிடப்பட்ட சந்தர்ப்பம்
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருக்கலாம். தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான அடிப்படை கோரிக்கை என்ன என்பதனை முன்வைத்து, இதனை சர்வஜன வாக்கெடுப்பாகக் கருதி, அதன் மீது இலங்கை முழுவதுமாக உள்ள தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோரியிருக்கலாம். அதன் அடிப்படையில் தெரிவாகும் மஹிந்தவுடனோ அல்லது மைத்திரிபாலவுடனோ எமது உரிமையை இன்னும் வலுவாகக் கோரியிருக்கலாம். அதுதவிர, மக்கள் வழங்கிய ஆணையை சர்வதேச சமூகத்திடமும் முன்வைத்து எமக்கான நியாயபூர்வமான தீர்வை எதிர்பார்த்திருக்கலாம். எமக்குக் கிடைத்த சிறந்ததொரு சந்தர்ப்பத்தை தமிழ்த் தலைமைகள் தவறவிட்டுள்ளன.
வெற்றுக் காசோலையில் கையெழுத்து
இப்படியொரு சந்தர்ப்பத்தை கைநழுவ விட்டு, வெற்றுக் காசோலையில் கையெழுத்து வைத்ததைப் போன்று எதுவித உடன்படிக்கையும் மேற்கொள்ளாமல் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் கோரியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் இந்தத் தேர்தல் குறித்து அக்கறைக் கொள்ளத் தேவையில்லை” – என்றார் அவர்.
நேர்க்காணலை கீழ் காணலாம்.