படம் | The Associated Press Photo/Eranga Jayawardena, FOX NEWS
இப்படியொரு தலைப்பில் கட்டுரையொன்று குறித்து சித்தித்துக் கொண்டிருக்கும் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு அமெரிக்க மத்திய புலனாய்வு பணியகம் (CIA) சதிசெய்வதாக ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்களான டிலான் பெரேரா மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்படி அமைச்சர்கள் இவ்வாறு தெரிவித்திருக்கின்றனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதிலிருந்து இந்த உடைவின் பின்னால் மேற்குலக சக்திகளின் திரைமறைவு சூழ்ச்சிகள் இருப்பதாகவே அரச தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். பொதுவாக அவர்கள் மேற்குலக சக்திகள் என்று குறிப்பிட்டபோதும் அவர்கள் குறிப்பிடுவது அமெரிக்காவையே! தற்போது இதனை வெளிப்படையாக பேசும் நிலை உருவாகியிருக்கிறது.
இலங்கையில் யுத்தம் நிறைவுற்ற பின்புலத்தில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களுக்கு அமெரிக்காவே தலைமை தாங்கியது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசிற்கு தொடர் நெருக்கடிகளை கொடுக்கும் வகையில் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மீது பிரேரணைகளை கொண்டுவந்தது. அமெரிக்காவின் தொடர்ச்சியான அழுத்தங்களின் விளைவாகவே ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் மீது விசாரணை மேற்கொள்ளும் நிலைமை உருவாகியது. இத்தகையதொரு பின்னணியில்தான் ஜனாதிபதி ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முற்பட்ட வேளையில் சற்றும் எதிர்பாராத வகையில், அதுவரை அவரது செயற்பாடுகளுக்கு பக்கபலமாக இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து களமிறங்கியிருக்கிறார். இந்த பின்புலத்தில் அரசு, இதன் பின்னணியில் அமெரிக்கச் சதியிருப்பதாக குற்றம்சாட்டுவதை சாதாரண சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் இலகுவில் கூறிவிட முடியாது. இலங்கையின் மீது தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்துவரும் அமெரிக்கா, ஏன் இதன் பின்புலத்தில் இருந்திருக்கக் கூடாதென்று கேள்வியெழுப்பும் போது அது சிங்கள தேசியவாத உணர்வால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் ஒரு குடிமகனை கவரவே செய்யும். அந்த வகையில் எதிர்வரும் நாட்களில் தெற்கின் தேர்தல் மேடைகளில் அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரங்கள் தீவிரமடையலாம்.
ஆனால், அரச தரப்பினரோ அல்லது தெற்கின் தேசியவாத அமைப்புக்களோ, இந்தியா தொடர்பில் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களோ சந்தேகங்களோ இதுவரை வெளிப்படுத்தவில்லை. இத்தனைக்கும் ஆளும் மஹிந்த ராஜபக்ஷ அரசு சீனாவுடன் அதிகம் நெருங்கிச் செல்வதான விமர்சனங்கள் இருக்கின்ற நிலையில், உண்மையிலேயே ஆட்சி மாற்றத்தில் இந்தியாதான் கூடுதல் கரிசனை கொண்டிருக்க வேண்டும். ஆனால், இந்தியா தேர்தல் தொடர்பில் பெரியளவில் நாட்டம் காண்பித்ததாகத் தெரியவில்லை. அதேவேளை, இந்திய தூதரக சந்திப்புக்களில் பங்குகொண்ட சிலருடன் உரையாடிய போது ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்படும் என்பதற்கான வலுவான நம்பிக்கை அங்கு காணப்படவில்லை என்றே அறியமுடிகிறது. பலரும் எதிர்வு கூறுவது போன்று மஹிந்த ராஜபக்ஷவின் மக்கள் செல்வாக்கு பெருமளவு வீழ்சியடைந்துவிட்டதாகவும் இந்தியா கருதவில்லை என்றே அறியமுடிகிறது.
இங்கு பிறிதொரு விடயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவின் மத்தியில் இருக்கும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் நோக்கில், அவர்கள் ஆட்சி மாற்றமொன்றை எவ்வாறு பார்க்க முற்படுவர் என்பதிலும் வேறுபட்ட அவதானங்கள் உண்டு. கிடைக்கும் சில தகவல்களின்படி, பாரதிய ஜனதா தலைமையிலான கொள்கைவகுப்புப் பிரிவினருக்கு ஆட்சி மாற்றத்தில் பெரிய ஆர்வமில்லை என்றே கூறப்படுகிறது. இதற்குக் காரணம் தற்போது இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் மிகவும் வலுவாக இருக்கின்றன. இலங்கையின் புலனாய்வு கட்டமைக்களும் மிகவும் வலுவாக இருக்கின்றன. இதற்கு தற்போதிருக்கும் பாதுகாப்பு கட்டமைப்புக்களே காரணம் ஆகும். ஆனால், சடுதியாக ஒரு ஆட்சிமாற்றம் ஏற்படுமாயின், இதில் சடுதியான தளர்வும் ஏற்படும். இலங்கை சடுதியாக ஒரு ஸ்திரமற்ற நிலைக்குள் தள்ளப்படும். பொதுவாக ஒரு நாட்டின் உள்ளக பாதுகாப்பு ஸ்திரமற்றிருக்கும் போதே, பல்வேறு சக்திகளும் அந்த ஸ்திரமற்ற நிலைமையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ள முயல்வர். இதில் உலகளாவிய தீவிரவாத சக்திகளும் அடக்கம். ஏற்கனவே, இந்தியாவை இலக்கு வைத்திருக்கும் சில சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத சக்திகள், இலங்கையை ஒரு தற்காலிக தங்குமிடமாக பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதான தகவல்கள் வெளியாகியிருக்கின்ற நிலையில், பாரதிய ஜனதா தலைமையிலான இந்தியா, இவ்வாறான விடயங்களில் கவனம்கொள்ளாதிருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே, இலங்கையைச் சேர்ந்த சிலர் இந்தியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுமிருக்கின்றனர். எனவே, இப்படியான பாதுகாப்பு விடயங்களை கருத்தில் கொண்டே இந்தியா ஆட்சி மாற்றத்தை உற்றுநோக்கும். ஆட்சி மாற்றத்தை நிறுத்துப் பார்க்கும்.
இங்கு தமிழர்கள் எவ்வாறு ஆட்சி மாற்றத்தை பார்க்கிறார்கள் என்பது இந்தியாவிற்கு ஒரு விடயமல்ல. தமிழர்கள் ஆட்சி மாற்றத்தை எப்படியும் விளங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் ஜனநாயகம் மலரும், நல்லாட்சி உதயமாகும் என்பதெல்லாம் தமிழர் தரப்பின் புரிதலாக இருக்கலாம். ஆனால், இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ தன்னுடைய நீண்டகால நலன்களிலிருந்தே விடயங்களைப் பார்க்கும். தமிழர்களின் பிரச்சினை, தமிழர்களுக்குரிய ஒன்றேயன்றி அது வேறு எவருக்குமுரியதல்ல. இதனை எப்போது தமிழர்கள் விளங்கிக் கொள்கின்றரோ, அன்றுதான் நிலைமைகளில் மாற்றம் ஏற்படும். இந்தியா நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இங்கு பிறிதொரு விடயத்தையும் அவதானிக்க முடிகிறது. அரசு அமெரிக்காவின் மீது வெளிப்படையாகவே குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், எதிரணியைச் சேர்ந்த ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவோ, பகிரங்கமாகவே சீனாவை இலக்குவைத்து பேசுகின்றார். தாம் ஆட்சிக்கு வந்தவுடன் சீனாவின் திட்டங்களை முடக்கவுள்ளதாக பகிரங்கமாகவே ரணில் அறிவித்திருக்கின்றார். சுற்றுலாக் கைத்தொழில்துறை தலைவர்களை சந்தித்து பேசியபோதே ரணில் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். அங்கு பேசிய ரணில், தற்போதுள்ள ஆட்சி தோற்கடிக்கப்பட்டு புதிய அரசு பதவிக்கு வந்ததும் சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இல்லாதொழிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார். அரசு அமெரிக்காவின் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்துவரும் பின்புலத்தில், ரணில் அமெரிக்காவை திருப்திப்படுத்தும் வகையில் சீனாவை இலக்குவைத்து பேசியிருப்பது இறுதியில் அரசின் குற்றச்சாட்டிற்கே வலுச்சேர்ப்பதாக அமையும். ஒரு வகையில் நடைபெறவுள்ள தேர்தல் இலங்கை மக்களுக்கானதாக இருக்கிற அதே வேளை, அமெரிக்க, இந்திய மற்றும் சீனா போன்ற பலம்பொருந்திய சக்திகளுக்கான தேர்தலாகவும் மாறியிருக்கிறது. ஆனால், இந்தியா இதில் தெளிவாக இருப்பதாகவே தெரிகிறது.
தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.