படம் | UKTAMILNEWS

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடதுசாரிக் கட்சிகளின் முன்னணியினர் தமது ஜனாதிபதி வேட்பாளர் சகிதம் பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடத்தியுள்ளனர். சுருக்கமாகக் கூறினால், யுத்தம் முடிந்து 5 வருடங்களுக்குப் பின்னும் ஏன் இன்னும் இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது, ஏன் வட பகுதியில் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது எனப் பல கேள்விகளை அவர்கள் எழுப்பியுள்ளனர். இந்த இடதுசாரிக் கட்சிகளின் முன்னணியின் பின்னணியினை முதலில் ஆராய்ந்து கொண்டு அவர்களின் அரசியலுக்கு பின்பு வரலாம்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜ கட்சி, சமசமாஜ கட்சி போன்ற இடதுசாரிக் கட்சியினர் (அத்தனை பிரிவினைகள் இருப்பதனால் எதற்கு என்ன பெயர் என்பதே எமக்கு நினைவுக்கு வராமல் போகலாம்) தொடர்ந்தும் மஹிந்த அரசில் அங்கத்துவம் வகிப்பது சில காலமாக பிரச்சினைக்குரிய விடயமாக அக்கட்சிகளின் சில உறுப்பினர்களினால் பார்க்கப்பட்டு வந்திருக்கின்றது. இந்த நிலையில், ஜனாதிபதி முறைமைக்கு எதிராகவும் குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் எதிரணி திரண்டு வந்த நேரத்தில்கூட அரசில் அங்கத்துவம் வகித்த இடதுசாரி அமைச்சர்கள் வெளியேறவில்லை. இதனைக் கண்டித்து அக்கட்சிகளின் ஒரு சாரார் வெளியேறியிருக்கின்றனர். அவர்கள் வெளியேறிய கையுடன், தொழிலாளர் ஆட்சியின் ஜனநாயகப் பாரம்பரியத்தின் வழக்கமான அம்சமாக அத்தனை பேரினதும் கட்சி அங்கத்துவமும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. எனவே, தலைமைத்துவம் அரசில் தொடாந்தும் அங்கத்துவம் வகிக்கும். ஆனால், அதைக் கேள்விக்கு உட்படுத்தக்கூடாது என்கின்ற வழக்கமான செய்தியே உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தப் பட்டிருக்கின்றது. ஏதோ, வெளியேறியவர்கள் ஒரு கூட்டணியாகச் சேர்ந்திருக்கின்றார்கள். அவர்களுடன் முன்னிலை சோஷலிஸக் கட்சியும் சேர்ந்திருப்பது போலத் தெரிகிறது. அதன் விளைவுதான் யாழ்ப்பாணத்தில் நடந்த இப்பத்திரிகையாளர் மாநாடாகும்.

எமது நாட்டில் இடதுசாரிக் கட்சிகளின் ஆரம்ப கால வரலாறு போற்றப்படத்தக்கதாகும். காலனித்துவ ஆட்சி நிலவிய காலத்தில் மக்கள் மத்தியில் வாழ்ந்து அவர்களுக்கு தமது உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வினை அன்றைய இடதுசாரிக் கட்சிகள் ஏற்படுத்தின. தெற்குப் பிரதேசங்களில் மலேரியாக் காய்ச்சல் உக்கிரமாகப் பரவியபோது சமசமாஜக் கட்சியினர் செய்த சேவை வரலாற்றிலும் கூறப்பட்டிருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் இடதுசாரிக் கட்சிகள் வலுப்பெற்றதும் அங்கு பெண்களின் குரல் ஓங்கியதும் இடதுசாரிகளின் சிந்தனைச் செல்வாக்கின் விளைவுகளாயின. அன்றைய அரசின் இராணுவப் படைகளின் நலத்துக்காக விற்கப்பட்ட பொப்பி மலர்களுக்குப் பதிலாக, அந்த இயக்கத்திற்கு எதிராக இலங்கை நாட்டுக்குரிய சூரியகாந்திப் பூவினைத் தங்கள் சுதந்திர வேட்கை இயக்கத்தின் சின்னமாக வரித்துக்கொண்டனர். அன்று மிகப் பிரபலமான பிரேஸ்கேர்டில் வழக்கு இவை சட்டரீதியாகவும் அன்றைய அரசிற்கு சவால் விடத் தயாராக இருந்த நிலைமையையே காட்டியது. எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் நாட்டிலும் சமூகத்திலும் பெரும்பான்மை இனத்தினர் ஆதிக்கம் செலுத்திய அந்த நிலையானது இக்கட்சிகளுக்குள்ளும் பிரதிபலித்தது மிகத் துரதிர்ஷ்டமாகும். வர்க்கப் போராட்டக் காரணியை மட்டும் முன்னிறுத்திய இவர்கள், இனத்துவம் மற்றும் பெண் அடிமைத்தனம் போன்ற காரணிகள் கூட ஒடுக்கு முறைக்கு வழிகோல முடியும் என்பதை உணரத் தவறி விட்டார்கள். இதனால், அவற்றைத் தமது கட்சிகளில் நிவர்த்தி செய்யும் கொள்கைகளைக்கூட கைக்கொள்ளவில்லை. எத்தனையோ போற்றத்தக்க தமிழ் புத்திஜீவிகள் இக்கட்சிகளில் அங்கம் வகித்திருந்தும் கட்சியின் தலைமைப்பீடம் சிங்களமாகத் தொடர்ந்தது. முன்பு ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டமாக இருந்ததனால் கட்சிக்குள்ளிருந்த இவ்வேறுபாடுகள் வெளியில் தோற்றவில்லை. ஆட்சிப் பதவிகளில் சிங்களவர்கள் உட்கார்ந்தபோது எந்தச் சிங்களவர்களுக்கும் அரசியல் அதிகாரம் கிட்ட முடிகின்ற வாய்ப்புக்கள் புதிய அரசின் கீழ் தோன்றின. இந்தச் சூழ்நிலைகளில் இடதுசாரிக் கட்சிகளின் தலைமைத்துவத்தின் கோட்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இம்மாற்றங்களுக்கு தேர்தல் அரசியலும் இன்னுமொரு காரணமாயிற்று.

தேர்தல் அரசியலானது கடைக்குப் போய் சேலை வாங்குவதைப் போலாகும். நல்ல தரம், அழகு, விலை, குறிப்பிட்ட சேலை பொருத்தமானதா இல்லையா என்னும் யதார்த்த பூர்வமான கேள்விகளுக்கு அப்பால, ஒவ்வொரு மனிதர்களினதும் உணர்வுகள்தாம் ஒரு சேலையை வாங்குவதா இல்லையா என்கின்ற முடிவைத் தீர்மானிப்பதாகும். அதனை ஆங்கிலத்தில் “Feel Good Factor” என்பார்கள். சேலை மிக விலையானதாக இருந்தாலும், ஏதோ ஒவ்வொருவரினதும் பழைய அனுபவங்களின் அடிப்படையில் அதனைத் தொட்டுத் தூக்கும்போது நல்ல உணர்வு தோன்றினால் உடனடியாகக் காசைக் கொடுத்து அதனை வாங்கி விடுவார்கள். இன்றும் மஹிந்தவைப் பார்த்தால் சிங்கள மக்களுக்கு நல்ல உணர்வு தோன்றுவதைப் பார்க்கலாம். அதுவே அவரது வாக்கு வங்கியாகின்றது. அவர் நடக்கும்போதும் பேசும்போதும் மிக உறுதியானவராகத் தெரிகின்றார். குடும்ப சமேதராக எப்பொழுதும் காட்சியளிக்கின்றார். குழந்தைகளைத் தூக்கித் தூக்கி முத்தம் கொடுக்கின்றார். இவை பலவகையாகும்.

மக்களுக்குப் பொருளாதாரம் முக்கிய விடயம் என்பார்கள். சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எமது நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ச்சியடைந்திருந்தபோது ஐக்கிய தேசியக் கட்சி அரசில் ரணில் ஆட்சிக்கு வந்து அதனை ஒருவாறு சரிப்படுத்தியதைக்கூட மக்கள் அடுத்த தேர்தலில் சட்டை செய்யவில்லையே. அவரைப் பார்ப்பதற்கு வெளிநாட்டுச் சக்திகளின் கைப்பொம்மையாக அவர் ஆடுவார் போல பலவீனராகத் தெரிகின்றாராம். இங்கோ மஹிந்த அரசின் கீழ் நாம் எமது வருங்காலத் தலைமுறைகளையும் சேர்த்து சீனாவுக்கு எம்மை அடகு வைத்துவிட்டுக் கிடக்கின்றோம். எனவே, தேர்தல் அரசியலில் போய் கொள்கை அரசியல் பண்ண முடியாது என்பதே முடிந்த முடிவாகும். அந்தத் தவறினை இடதுசாரிக் கட்சிகள் செய்தன. இனியென்ன, மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்கும் வகையில் தமது அரசியலையும் மாற்றிக்கொண்டனர்.

1970ஆம் ஆண்டு அன்றைய ஐக்கிய முன்னணி அரசில் அட்டகாசமாக அதிகாரம் வகித்துக்கொண்டிருக்கும்பொழுது, “வர்க்கப் போராட்டத்தின் அரங்காக எமது நாடாளுமன்றத்தினை மாற்றியிருக்கின்றோம்” என அபத்தமாக தமது நடவடிக்கைகளை இடதுசாரிகள் நியாயப்படுத்தினர். ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு முதலாளித்துவ சமூகத்தில் வர்க்கப் போராட்டத்தின் களமாக அந்த நாட்டின் நாடாளுமன்றம் என்றுமே அமைய முடியுமா? அதுமட்டுமன்றி, விகிதாசாரத்தின் மூலம் நோக்கின், சிங்கள மக்களைவிட அதிகமாக வடக்கு தமிழ் மக்களும் தோட்டத் தொழிலாளர்களும் இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்த நேரத்தில் அப்பட்டமான இனவாதிகளாகவும் மனச்சாட்சியின்றி மாறினர். 1970களில் கல்வி அமைச்சர் பதியுதீன் மொகமட் தமிழ் மாணவர்களுக்கு எதிரான தரப்படுத்தலைக் கொண்டு வந்தபோது எனது தகப்பனார் என்.எம். பெரேரோவிடம் ஓடினார். “அமைச்சரவையில் பதியுதீன் சகல புள்ளிவிபரங்களையும் காட்டியபோது அது நியாயமாகத்தான் எமக்குத் தெரிந்தது” என்று பதில் கூறி அவரை அனுப்பிவிட்டார் என்.எம். சிறுபான்மைத் தேசியங்களின் எச்ச சொச்ச உரிமைகளையும் துவம்சம் செய்த அரசியலமைப்புச் சட்டத்தினை வரைந்தார் இடதுசாரிப் பெருந்தலைவர் கொல்வின் ஆர் டிசில்வா. 1979ஆம் ஆண்டு அன்றைய ஜே.ஆர். அரசு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்தி அதனை நசுக்குவதற்கு புல் வீரதுங்கவை வடக்கிற்கு அனுப்பிபோது இடதுசாரிக் கட்சிகள் என்னதான் செய்தன? அந்த நேரத்தில் தென்பகுதியின் ஜனநாயகவாதிகளே இனங்களுக்கிடையில் சமத்துவமும் நீதியும் பேணும் இயக்கம் (மேர்ச்) என்று ஒரு அரசு சாரா நிறுவனத்தை ஸ்தாபித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகப் போராடினர். இன்றுவரை யுத்தத்திற்கு எதிராகவும், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவும் இந்நாட்டிலும் சர்வதேசத்திலும் மிகத் தெளிவாகக் குரல் கொடுத்த சமூகம் என்ஜிஓ சமூகம் மட்டுமேயாகும். அதற்காகவே இன்று ராஜபக்‌ஷ அரசு அதனை மன்னிக்கத் தயாரின்றி இருக்கின்றது.

இன்று திடீரென்று ஓடி வந்து சிறுபான்மை மக்கள் உரிமைகளைப் பற்றி இவர்கள் பேசுகின்றனர். இதுவும் தேர்தல் மகிமையோ? இரு பிரதான கட்சிகளும் தமிழ் பிரச்சினைகளைப் பற்றிப் பேசப் பயப்படுகின்றனர் என்கின்றனர். அவ்வாறாயின், தமிழ் மக்களின் உரிமைகளை நிராகரிக்கும் நிலையில் சிங்கள மக்கள் இன்னும் இருப்பதுதான் இவர்கள் இதுவரை மக்கள் மத்தியில் செய்த வேலையின் இலட்சணமா? ஒரு நியாயபூர்வமான அரசியல் கோரிக்கையை முன்வைத்ததற்காகத் தமிழர்களைக்கொன்று குவித்த சிங்கள அரசுகளுக்குக் கீழ் நின்று அவர்களின் கட்சிகள் பணியாற்றினவே. அதிலும் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் முற்பிறவியான ஜேவிபியானது தமிழர்களின் அழிவைத் தூண்டித் தூண்டி விட்ட கட்சியல்லவா? இவற்றைப் பற்றியெல்லாம் தமிழ் மக்களுக்கு ஒரு விளக்கமும் கொடுக்கத் தேவையில்லையா?

ஆனால், நாம் கடந்தகாலத் தவறுகளுக்காக இடதுசாரிக் கட்சிகளை சிலுவையில் ஏற்ற வரவில்லை. அவை தமது நோக்கங்களையும் செயற்பாடுகளையும் மூலோபாயங்களையும் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதையே கேட்கின்றோம். எமக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் அரசியல் சமூகக் கட்டமைப்பே தேவை என்பது உண்மையாகில், அக்கட்டமைப்பினை ஒரு குழுவினர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதால் மட்டும் அடைந்து விடமுடியுமா? அடி தொடங்கி நுனி வரை உருவாக வேண்டிய இம்மாற்றமானது சகல சமூகத்தினரதும் அல்லது குறைந்தபட்சம் சமூகத்தின் குறிப்பிடத்தக்க பகுதியினரது ஒத்துழைப்போடும் ஒருங்கிணைவோடும் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றமாகும். அதற்கு அம்மக்கள் மத்தியில் எத்துணை விழுமிய மாற்றங்கள் மற்றும் கண்ணோட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அவர்களது நடத்தைப் பண்பாடுகளில் எத்துணை மாற்றங்கள் தேவை. இந்த நவீன 21ஆம் நூற்றாண்டில்கூட இன்னமும் சாதிப்பிரிவினைகளை எம்மால் ஒழிக்க முடியவில்லையே. இந்த சமூகம் போய் சோஷலிஸ அரசினைத் தாபிக்க முடியுமா? சூழ்நிலை (சமூகம்) மனிதனை மாற்றுகின்றது என மார்க்ஸ் சொன்னார்தான். ஆனால், அச்சூழ்நிலையையும் மனிதர்கள்தானே உருவாக்க வேண்டியதாகவுள்ளது? இந்த இயங்கியல் தொடர்பினைப் புரிந்து கொண்டால் திடீர் சமையல் செய்யப் புக முடியாது. இது நீண்டகால நோக்கில் மக்கள் மத்தியில் எந்தவித புகழோ, கைமாறோ எதிர்பாராமல் செய்ய வேண்டிய வேலை என்பது தெரியும்.

இந்தப் பணியானது இன்று நாம் விளங்கிக் கொள்ளும் அரசியல் கட்சிகளின் அமைப்பு மூலமாகவோ அல்லது தேர்தல் அரசியல் மூலமாகவோ செய்யக்கூடிய பணியல்ல. இன்று அரசியல் கட்சிகள் ஒரு சிறு குழுவினர் புரியும் ஆட்சி (Oligarchy) மட்டுமே. அவை நாம் விரும்பும் சீர்திருத்தத்தினைக் கொண்டுவரக் கூடியனவல்ல. புதிய முறையில் சிந்தித்து புதிய அரசியல் கட்டமைப்புக்களை உருவாக்கும் நாள் வந்துவிட்டது. ஒவ்வொரு மக்கள் குழுமமும் தமது நலன் சார்ந்து சிந்திக்கும் வலையமைப்புக்களாகவும் கூட்டமைப்புக்களாகவும் மாறி மாறி உருவாக்கிக்கொள்ளும் அமைப்புக்களாகக்கூட இவை இருக்கலாம். இடதுசாரிகளுக்கு ஒரு ஆலோசனை. தேர்தல்களில் நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதை விட்டு விட்டு தொடர்ந்து மக்களைச் சந்தியுங்கள், உரையாடுங்கள், அவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள், அவர்களுடன் இணைந்து உலகை மாற்றுங்கள்​.

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.