படம் | The Associated Press Photo/Eranga Jayawardena, FOX NEWS

கலைஞர்கள், சிவில் சமூக பிரமுகர்கள் அடங்கிய பிரஜைகள் சக்தி என்னும் குழு “பொறியிலிருந்து விடுபடுவோம்” என்கின்ற தொனிப்பொருளில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவானதொரு அரசியல் கூட்டத்தினை கடந்த வாரம் ஹயிட் பூங்காவில் நடத்தியிருந்தது. பூங்காவிற்கு உள்ளும், அதன் வெளியே நடைபாதையிலும் ஒரே கூட்டம். “இது நான் சேர்த்த கூட்டமில்ல, தானா சேர்ந்த கூட்டம்” என ரஜனி பாணியில் கூற வேண்டும் போலிருந்தது. பொறுமையுடன் பல மணி நேரம் நின்றுகொண்டே சகல உரைகளையும் யாவரும் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். அவ்வப்போது கரகோஷம் எழுப்பவும் மறக்கவில்லை. அரசியல் மாற்றத்திற்கு தென்பகுதி தயாராகி வருவது போலத் தோன்றியது. இக்கூட்டத்தில் ரணில் – மைத்திரி எனப் பல அரசியல் தலைவர்கள் பேசினாலும், குறிப்பாக காமினி வியாங்கொட என்னும் எழுத்தாளரது பேச்சு பலரையும் கவர்ந்திருந்தது. அவர் புத்தபெருமானின் வாழ்க்கைக் கதைகளான ஜாதக கதைகளிலிருந்தும் கிராமியக் கதைகளிலிருந்தும் பல உதாரணங்களை எடுத்து விட்டு ஆட்சி மாற்றத்திற்காக ஏன் நாம் வாக்களிக்க வேண்டும் என்பதனை விளக்கிக் கொண்டிருந்தார். இப்பொழுது புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலிருந்தும் சிவில் சமூகத் தரப்பிலிருந்தும் பலவகையான அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில், காமினி கூறிய கதைகள் எமக்கும் பொருத்தமாக இருக்கின்றதைப் பார்க்கின்றோம்.

காமினி சொன்ன கதைகளிலொன்று எரிகின்ற வீடொன்றில் வாழ்ந்த மனிதர்களுடன் புத்தர் நடத்திய சம்பாஷணையாகும். ஒரு வீடு நன்றாக எரியத்தொடங்கி விட்டது. ஆனாலும், அதனைவிட்டு அங்கு வாழ்ந்தவர்கள் கிளம்புவதாயில்லை. ஏன் என்று புத்தர் விசாரிக்கின்றார். “நாங்கள் இங்கிருந்து கிளம்பினால் போவதற்கு வேறு வீடிருக்கின்றதா? சுவாத்தியமும் சாதகமாகவில்லையே? இன்னுமொரு நல்ல வீடின்றி தட்டுமுட்டுச் சாமான்களுடன் எங்கு போய்த் தங்குவது?” எனப் பல்வேறு சந்தேகங்களை அவர்கள் கிளப்பினர். அப்பொழுது புத்தபெருமான், “நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் நியாயமானதே. ஒரு உத்தரவாதமும் இல்லாத எதிர்காலந்தான் இப்பொழுது உங்கள் முன் நிற்கின்றது. ஆயினும், வாழ்க்கையில் முதன்மையாகச் செய்ய வேண்டியது, பின்பு செய்ய வேண்டியது.. என காரியங்கள் உண்டு. நீங்கள் வாழ்ந்தால்தானே உங்களுக்கு அடுத்து நடக்கப்போவது முக்கியமாகின்றது? எனவே, எல்லாவற்றையும்விட நீங்கள் உங்கள் உயிர்களைக் காப்பாற்றுவதே இப்பொழுது முக்கியமாகின்றது. அதனால், எரிகின்ற வீட்டிலிருந்து முதலில் உடனே கிளம்ப வேண்டும். நீங்கள் முதற்கட்டமாகத் தப்பித்துக்கொண்டதற்குப் பிறகுதான் நாம் அடுத்தடுத்த பிரச்சினைகளை நோக்க முடியும்…” என்று ஆலோசனை கூறினார். “நீங்கள் இப்பொழுது கிளம்பவில்லையானால் பின்பு கிளம்பவே முடியாதபடி நெருப்பில் அகப்பட்டுப் பொசுங்கிப் போய் விடுவீர்கள்…” என்றும் கூறவே அம்மக்கள் வெளியேறினராம். எல்லோருக்கும் தெரிய வேண்டும் என நாம் நினைக்கின்ற மிக எளிமையான போதனைதான். ஆனால், அதுவும்கூட சொல்ல வேண்டித்தானிருக்கின்றது.

இன்று, “இவனும் கள்ளன்தான், அவனும் கள்ளன்தான், இரண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்”, “தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும்”, “மூன்றாவது வேட்பாளரை தமிழர்கள் நிறுத்த வேண்டும்”, “இது சிங்கள மக்களுடைய அர்த்தமில்லாத அரசியல் என தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்திற்குக் காட்ட வேண்டும்” என்றெல்லாம் பேசிக்கொண்டு நிற்பது எரிகின்ற வீட்டிலிருந்துகொண்டு தமது எதிர்காலத்தைப் பற்றி வியாக்கியானம் செய்த மக்கள் மாதிரியேயல்லவா இருக்கின்றது? முதலில் தமிழ் மக்கள் தம்மிடம் இருப்பவற்றைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு எந்தக் கள்ளனுடன் என்ன செய்ய வேண்டுமென்பதனைப் பார்க்கலாமே.

இந்த ஆட்சியின் கீழ் இராணுவமயமாக்கலின் ஊடாக, காணி அபகரிப்பின் ஊடாக, சிங்கள மக்களின் குடியேற்றங்களின் ஊடாக இருப்பதையெல்லாம் தமிழ் மக்கள் இழக்க ஆரம்பித்துள்ளனர். இப்பிரச்சினைகள் பற்றி ஏதேனும் நடவடிக்கை எடுத்தாலும், அதுவெல்லாம் விழலுக்கிறைத்த நீராய், செவிடன் காதில் ஊதிய சங்காய் பயனின்றிப் போகும் நிலையில், எதிரில் கண்டவற்றையெல்லாம் புல் டோசர் மாதிரி நசுக்கிச் செல்லும் அரசாக இது இருக்கின்றது. எந்த சர்வதேச விசாரணையையும் தனக்கு வாக்குகளாக மாற்றும் சாமர்த்தியம் கொண்டிருக்கின்றது. இராணுவத்தில், நிர்வாகத்தில், அரசியல் கட்சிகளுக்குள், மாகாண அரசியல் நிர்வாகத்துக்குள் என சகல படிநிலைகளிலும் தமது விசுவாசிகளைப் படிப்படியாகப் போட்டுக்கொண்டு வருகின்றது. அது மக்களால் தெரிவு செய்யப்படும் அரசாக இருக்கும்வரையில் எவராலும் அசைக்க முடியாத சக்தியாக உலகில் வலம் வரவும் அதற்கு முடியும். இப்பொழுது வாய்ப்பினைத் தவறவிட்டால் இனி பல யுகங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியாதபடி எம்மை மீறிய சக்திகளாக மாற்றம் பெற நேரலாம். அதற்குள் தமிழ் மக்கள் புதைக்கப்பட்டு விடுவர். இவ்வாறு எப்படிப் பார்த்தாலும், இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு உதவுவது ஒன்றுதான் தமிழ் மக்கள் முன் நிற்கும் ஒரேயொரு தெரிவாகும். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறினை நாம் மீண்டும் விடக்கூடாது.

இந்த நிலையில், புலம்பெயர் தமிழர்களின் தலைமைகள் வெளியிடும் அறிக்கைகளும் சர்ச்சைக்குரிய விடயங்களாகப் போகின்றன. “இத்தேர்தலில் தோற்றால் மஹிந்த ராஜபக்‌ஷ போர்க்குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவார் என்பது போன்ற பகிரங்க அறிக்கைகளை விடுகின்றனர். அரசியல் சதுரங்கத்தில் எதிர்த்தரப்பினர் மத்தியில் பயத்தினையும் கிலியினையும் உண்டாக்கினால் நாம் எமது குறிக்கோளுக்கு எதிராகச் செயற்படுபவர்களாவோம். சிங்கள மக்களில் அனேகம் பேர் அத்தகைய பயத்துடன் இத்தேர்தலை நோக்குகின்றனர். தமது சார்பில் பிரபாகரனை அழித்தவரை போர்க்குற்ற விசாரணைக்கு கொண்டு செல்வது அவர்களுக்கு விரும்பத்தக்க விடயமல்ல. எனவே, அவர்களின் பயத்தினை உறுதிப்படுத்துவதுபோன்ற செயற்பாடுகளில் இறங்குவது இத்தேர்தலில் தமிழ் மக்கள் தமது நலன்களுக்கு எதிராகச் செயற்படுவது போன்றதாகும். இராணுவத்திற்கு வேறு அந்தக் கிலி இருக்கின்றது. ஜனாதிபதி போர்க்குற்ற விசாரணைகளுக்கு இழுக்கப்பட்டால் அதன் தலைமையுமல்லவா இழுக்கப்படும்? இச்சக்திகளையெல்லாம் ஆட்சியாளர் பக்கம் சாய விடக்கூடாது. இதனால்தான் எதிரணியினரும் தாம் போர்க்குற்ற விசாரணைகளை அனுமதிக்க மாட்டோமென திரும்பத் திரும்ப வாக்குறுதியிளித்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கிருக்கும் ஒரேயொரு தெரிவு போலவே தற்சமயம் ஆட்சியிலிருக்கும் குடும்பத்திற்கும் தம் முன் ஒரேயொரு தெரிவுதான் இருக்கின்றது. இத்தேர்தலில் வெற்றி காண்பதுதான் அதற்கிருக்கும் ஒரேயொரு தெரிவாகும். எனவே, வெற்றி காண்பதற்கான பல யுக்திகளைக் கையாளும் என்பதனை நாம் எதிர்பார்க்கலாம். 2010 ஜனாதிபதித் தேர்தல்களில் தேர்தல் ஆணையாளர் அலரி மாளிகையில் சில மணிநேரங்கள் குடியேறியதை நாம் மறக்க இயலாது. யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியினை இதே காரணத்திற்காக மாற்றம் செய்தாகி விட்டது. வட மாகாணத்தின் வாக்குகளை மூன்று இலட்சத்தினால் குறைத்தாலே ஜனாதிபதிக்கு வெற்றி என்கின்றனர். இதேபோல் சில குறிப்பிட்ட தென் மாவட்டங்களிலும் பல பொலிஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் மோசடிகள் நடக்காமல் தடுப்பது எதிர்க்கட்சியினரின் அல்லது தேர்தல் கண்காணிப்பாளர்களின் கடமை என்று மக்கள் இருக்கக்கூடிய காலமல்ல இது. இனி வருங்காலம். மக்கள் அனைவருமே தாம் வாக்களிக்கும் பொறுப்புள்ளவர்களாக இருப்பது, தம்மைச் சார்ந்த ஏனையோரையும் வாக்களிக்கும் பொறுப்புள்ளவர்களாக மாற்றுவது, இயலுமான விதங்களில் தேர்தல் கண்காணிப்பினைச் செய்வது போன்ற கடமைகளை செயற்படுத்த வேண்டிய காலமாகும். வாக்குரிமை ஒன்றே இப்பொழுது மக்கள் கைகளில் எஞ்சியுள்ள ஆயுதமாகும். அதனை மிகக் கவனமாகப் பிரயோகிக்க முயலவேண்டும். வாக்களிக்கும் கட்டத்தில், வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படும் கட்டத்தில், வாக்குகள் எண்ணப்படும் சமயத்தில், அவ்வெண்ணிக்கைகள் கணினியில் பதியப்படும் சமயத்தில், அவையெல்லாம் ஒன்றுகூட்டி கொழும்பு தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் சமயத்திலெல்லாம் அதீத கண்காணிப்பு தேவையாகின்றது.

மக்கள் கூட்டமாக வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பது, பெட்டிகள் வாகனங்களில் ஏற்றப்படும்பொழுது அவ்வாகனத்தில் வேறு பெட்டிகள் போடப்பட்டிருக்கின்றனவா என உறுதி செய்வது, வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்படும் சாலைகளில் பொது மக்கள் அணிவகுத்து நின்று அவ்வாகனங்கள் எங்கும் திசை திருப்பப்படாததனை உறுதி செய்வது, வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களில் எதிர்க்கட்சியினர் சார்பாக (குறைந்தது பத்துக் கட்சிகளாவது போட்டி போடுகின்றனவே) அவர்களுக்குத் தேவையான தொண்டர் படைகளை சுழற்சி முறையில் வழங்குவது, வாக்குகள் எண்ணப்படும் நேரங்களில் அடிக்கடி மின்சாரம் வெட்டப்படும் சம்பவங்கள் நடக்கின்றதனால் அந்நேரம் கைவசம் வேறு பட்டரி விளக்குகளை வைத்திருப்பது போன்ற பல நடவடிக்கைகளை நாம் கைக்கொள்ளலாம். மக்கள் உறுதியுடன் ஒன்று கூடிச் செயற்படுகின்றனர் என்பது ஒன்றே மோசடியில் ஈடுபடுபவர்களின் ஊக்கத்தினைக் கெடுத்துவிடும்.

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.