படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka

பிரேமதாஸ அரசிலிருந்து லலித் அத்துலத்முதலியும் காமினி திஸாநாயகவும் பிரிந்து அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்த காலம் அது. ஒரு நண்பரைச் சந்திக்கவென கொழும்பு வெள்ளவத்தைக்குச் சென்றிருந்தேன். நண்பர் வசிக்கும் ஒழுங்கையினூடாகச் செல்லும்போதே சகல வீடுகளும் அமைதியாக இருப்பது போல தென்பட்டது. அவரது வீடும் சகல யன்னல் கதவுகள் மூடி வெகு அமைதியாகக் காட்சியளித்தது. மணி அடித்தபோது வெளியே வந்தார். “என்ன, இந்த நேரத்தில் இந்தப் பக்கம்?” என்றார். “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? என்ன எல்லாம் அமைதியாக இருக்குதே” என்றேன் நான். இதற்கு ஒருவித படபடப்பு தொனிப்பட “தெரியாதா, லலித் – காமினி பிரிஞ்சுட்டாங்களல்லவா?” என்றார் அவர். “அதுக்கு உங்களுக்கென்ன, அவங்கள் தங்களுக்குள்ள சண்டை போடட்டுமேன்” என்று அலட்சியமாகச் சொன்னேன் நான். “ஐயோ, அவங்கள் தொடங்கினாலும் கடைசியாக எங்களிலதானே வந்து முடிப்பாங்கள்… தமிழருக்கெதிரா ஏதும் கலவரம் வரலாம் எண்டு நாங்களெல்லாரும் கவனமா இருக்கிறம், நீங்களும் கெதியா வீடு போய்ச் சேருங்க” என்று முடித்தார் அவர். எனக்கோ ஒரே குழப்பம். ஏன் இந்தச் சனங்கள் இப்படிப் பயப்பட்டுச் சாகுதுகள் என்று எண்ணியபடி எனது வீட்டுக்குத் திரும்பினேன். கடைசியில் பார்த்தால் அவர் சொன்னது சரியாகத்தான் போய்விட்டது. தமிழர்களை வைத்துக்கொண்டு நாட்டை ஆளுகின்றார் பிரேமதாச என “ஐந்து லிங்கங்களின் ஆட்சி” என்னும் விடயத்தை வைத்து பொதுக் கூட்டங்களிலெல்லாம் தாளிக்க ஆரம்பித்தனர் காமினி – லலித் ஜோடி. இதன் காரணமாக அந்தக் காலத்தில் சாடையாக தமிழர் எதிர்ப்பு தொடர்பாக ஒரு முறுகு நிலை ஆரம்பித்தது உண்மைதான். லலித் அத்துலத்முதலியின் கொலையுடன் அது ஒருவாறு நின்றது. எப்படி தமிழ் மக்கள் சிங்கள அரசியல்வாதிகளைப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என வியந்துதான் போனேன்.

இன்றும் கிட்டத்தட்ட அதே நிலைமைதான். பிரேமதாச போலவே இந்த ஜனாதிபதியின் அணியிலிருந்து பலர் வெளியேறி அவருக்கு அச்சுறுத்தலாகி விட்டனர். பிரேமதாசவிலும் பன்மடங்குகள் அதிகமாகத் தமது பதவி பறிபோகுமோ என்னும் அச்சத்திலிருப்பவர் அவர். அதனால், அதனை எந்தக் காரணங் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்பது சகலருக்கும் தெரியும். எதிரணிக்கோ தூரத்தில் வெற்றி தெரிகிறது. இந்தத் தடவையும் “தமிழர்களில் வந்து முடிக்கும்” சில முயற்சிகள் இல்லாமல் போகாது. எதிரணி சிறுபான்மை வாக்குகளில் அதிகம் தங்கி நிற்பதால் அது ஆளும் கட்சியினால்தான் செயற்படுத்தப்படும். அப்படிச் செயற்படுத்துவார்கள் என்கின்ற பீதியினால் எதிரணியினரும் தமிழ் தேசியப் பிரச்சினையைப் பற்றி ஒரு வார்த்தையும் கூறாமல் மௌனம் சாதிக்கின்றனர். அவர்கள் தீர்வினைப் பற்றிப் பேசாவிட்டாலும்கூட தமிழ் மக்கள் தமக்கே வாக்குகளைப் போடுவார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இந்த ஆட்சியைக் கலைப்பதற்கு தமிழ் மக்களின் வாக்குகளை வேண்டி நிற்கின்ற எதிர்க்கட்சிகள், பின்பு தாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்களா? ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. போன்ற கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சிக்கு வரும் எதிரணி தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்குமா? இவ்வாறான கேள்விகள் எழுந்த நிலையில், வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களின் செயற்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியதாகவுள்ளது.

சிங்கள அரசியல்வாதிகளின் போக்கு அறிந்த தமிழ் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தரத் தேவையில்லைதான். ஆயினும், இவ்விடயத்தைப் பற்றிப் பல கருத்துக்கள் நிலவுகின்றதனால் அவற்றை ஆராயவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அவற்றில் ஒரு அபிப்பிராயமாக ஜனாதிபதியுடன் தேர்தல் பேரம் பேசச் சொல்லி தமிழர் முன்னேற்றக் கழகம் அழைத்திருக்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகள் மிகவும் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில்தான் ஜனாதிபதியுடன் பேரம் பேசலாம் என்பதனால் அவர் 13ஆம் திருத்தச் சட்டத்தினை முழுமையாக செயற்படுத்தினால் மட்டுமே தமிழ் மக்கள் வாக்குகள் என்கின்ற ரீதியில் பேரம் பேசப்படவேண்டும் என்கிறது அது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு பேரம் பேசும் அரசியல் உபாயம் எங்களை எங்கு கொண்டு போய் விட்டது என்பதை நாம் மறக்கலாமா? கொடுக்கும் வாக்குறுதிகள் எவற்றையுமே நிறைவேற்றாது அல்லது அப்படி நிறைவேற்றுவது போல பாசாங்கு செய்து பின்னர் செயற்படுத்தப்பட விடாது தடைபோடுவதே கடந்த கால ஆட்சியாளர்களின் வழக்கமாக இருந்திருக்கின்றது. அதாவது, 13ஆம் திருத்தச் சட்டத்தினை முழுமையாக செயற்படுத்துகின்றேன் என்று வர்த்தமானியில் அறிவித்தாலும்கூட அது நடைமுறையில் எப்படிச் செயற்படுத்தப்படாமல் தடுப்பது என்பதையெல்லாம் நன்கு தெரிந்து கொண்ட கள்ளர் கூட்டம் இது. இதனைத் தெரிந்தும் திரும்ப தேர்தல் பேரங்களுக்கு நாம் போனால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

அடுத்து, தமிழ் வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தி தமிழ் தேசிய அபிலாஷைகளை உலகுக்குத் தெரிவித்தலையும், சிங்கள நாட்டின் தேர்தல்களில் தமிழ் மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதைக் காட்டுதலையும் செய்ய வேண்டும் என்பது வேறு தரப்பாரின் கோரிக்கையாகவுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறையினை அகற்றுவதால் (அது உண்மையில் அகற்றப்படுமா என்பது வேறு) மட்டும் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாது என்பது உண்மை. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அறிமுகம் செய்வதற்கு பல வருடங்களுக்கு முன்னரேயே தமிழ் தேசியப் பிரச்சினை முதிர்ச்சி கண்டு விட்டது. இப்போதைய எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் எந்தக் காலத்திலும் இனப்பிரச்சினையைப் பற்றிப் பிரஸ்தாபித்தவரல்ல. தனது முதல் பத்திரிகையாளர் மாநாட்டிலும் ஜனாதிபதி யுத்தத்தை வெற்றி கொண்டதற்கு அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டுதான் ஆரம்பித்தார். அந்த அளவுக்கு இனவாதத்தில் ஊறிய சிங்கள வாக்காளர்களுக்கு அடிபணிய வேண்டியிருப்பதுடன், கடந்த கால யுத்தம் இழைத்த அநீதியினை நோக்கக்கூடிய இயல்பு இல்லாதவராகவும் அவர் இருப்பதைக் கண்டோம். ஏதோ கடவுள் கிருபையினால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்றி ரணில் விக்கிரமசிங்கவை அவர் பிரதமராக்குவாரெனில், ரணில் மூலம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு இடமுண்டு. ஆனால், எந்தப் பேச்சுவார்த்தைகளும் எந்தக் கொள்கை மாற்றங்களும் ஆட்சியிலிருக்கும் கூட்டணி அரசின் தயவிலேயே நடத்தப்பட முடியும் என்பதனை நாம் மறக்கலாகாது. எனவே, அவர் மூலமோ ஐக்கிய தேசியக் கட்சி மூலமோ தீர்வு கிடைக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாதுதான்.

ஆனால், அதற்காக இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்துதல் எந்த அளவுக்கு உகந்த உபாயமாகின்றது? முன்பு எத்தனையோ தடவைகள் ஒருமுகமாக வாக்களித்து தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாஷைகளை இந்த நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் காட்ட வில்லையா? அதன் விளைவாக ஒவ்வொரு தடவையும் எமக்கு ஏதேனும் மேலதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொண்டோமா என்றால் அதுவுமில்லை. ஆட்சி மாற்றம் மிக அவசியமாகத் தேவையிருப்பதால் தென்னிலங்கையின் முற்போக்கு சக்திகளும் எதிரணியினருடன் இன்று அணி திரண்டிருக்கின்றன. மேலும், சிங்கள மக்களின் உதவியுடனேயே தமிழ் மக்கள் தமக்கென தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்கின்ற யதார்த்தத்தின் அடிப்படையில், புறம்போக்காக ஓர் உபாயத்தினை தமிழ் மக்கள் கைக்கொள்வது தம்மை இம்முற்போக்கு சக்திகளிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தும் உசிதமில்லாத செயலாகும். இந்த உபாயம் தமிழ் மக்களின் வாக்குகளை உரிய குறிக்கோள் நோக்கிச் செலுத்த விடாமல் வீணடிக்கவே உதவும். அத்துடன், வெறுமனே வாக்குகளால் மட்டும் சாதிக்கக்கூடிய மாற்றங்களை நாம் கோரி நிற்கவில்லை என்பதனையும் இங்கு உணரவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் முதன்மையான கடமை ஆட்சி மாற்றத்திற்கு உதவி புரிதலாகும். ஏனெனில், ஆட்சி மாற்றத்தினால் தமிழ் மக்களுக்கு சில பல நன்மைகள் கிடைக்கப் பெறும். வடக்கு கிழக்கில் இராணுவக் கெடுபிடிகள் தளரும். அங்கு சிவில் நிர்வாகம் வருவதற்கு இடமிருக்கும். அப்பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்களின் வீரியம் குறைவடையலாம். தோல்வியடைந்த ஜனாதிபதியும் அவர் தளபதிகளும் சர்வதேச விசாரணைகளுக்கு மிக விரைவாக உட்படுத்தப்படுவர். மொத்தத்தில், தமிழ் மக்கள் சாவகாசமாக மூச்சு விடுவதற்கு அவகாசம் கிடைக்கும். இது கொடுக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி உடனடியாக உரிமைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய மக்கள் போராட்டத்தினை ஆரம்பிப்பதே நமக்கு முன்னாலுள்ள ஒரே வழியாகும். இப்போராட்டத்தின் இலக்கினை ஸ்ரீலங்கா அரசினை ஜனநாயகமயப்படுத்தும் இலக்காக உருவகப்படுத்த வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்றுவது மட்டுமில்லாமல், சகலரும் நீதியுடனும் சமத்துவத்துடனும் இந்நாட்டில் வாழக்கூடிய அரசியலமைப்புச் சட்டத்தினையும், அதனுள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வினையும் முன்வைக்கும் இயக்கமாக இது திகழ வேண்டும். இம்முறையில் தென்னிலங்கையின் பல முற்போக்குவாத சக்திகளும் தமிழ் மக்களுடன் இணைவதற்கு வாய்ப்பிருப்பதோடு, ஹெல உறுமய போன்ற கட்சிகளை ஓரங்கட்டவும் இது உதவும். ஒரு புதிய ஜனநாயக அரசிற்கான இயக்கத்தினைத் தமிழ் மக்கள்தான் தலைமை வகித்து ஆரம்பித்து வைக்க வேண்டும் என்பது எமது நாட்டின் இன்றைய யதார்த்தமாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மாவை சேனாதிராஜா அஹிம்சா போராட்டத்தினைத் முன்னெடுக்கப்போகிறார் என தனது பதவியேற்பு வைபவத்தில் சூளுரைத்தவர். அவர் தனது சொற்களை செயலில் காட்டுவதற்கு இதோ தருணம் கூடி வந்திருக்கின்றது. ஜனவரி 8ஆம் திகதி பொது வேட்பாளரின் வெற்றியினை தமிழ் மக்கள் உறுதி செய்வர். அந்த ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு, ஜனநாயகத்தினையும் சுதந்திரத்தினையும் கோரும் அஹிம்சா போராட்டத்தினை ஆரம்பித்து வைப்பாரா அவர்?

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.