படம் | Foreign Correspondents’ Association of Sri LankaOfficial Facebook Page

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவாரா அல்லது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ போட்டியிட்டு மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைப்பாரா என்பதும்தான் தற்போது எல்லோருடைய பேச்சாகவும் உள்ளது. இலங்கையில் தேர்தல் என்றாலே அரசியல்வாதிகள் கட்சி மாறுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேருவதும் வழமை. வேட்பு மனுத் தாக்கல் முடிவடையும் வரை எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத நிலைதான் காணப்படும். ஆனால், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வித்தியாசமான நகர்வுகள் இடம்பெறுவதை காணக்கூடியதாக உள்ளது.

கட்சியை காப்பாற்றுவதே நோக்கம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசில் பிரதான கட்சியாக விளங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள், மூத்த உறுப்பினர்கள்தான் இம்முறை எதிரணிக்கு மாறிச் சென்றுள்ளனர். மேலும், பலர் மாறிச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. ஐக்கிய தேசிய கட்சி ஜே.வி.பி. உள்ளிட்ட ஏனைய எதிர்க் கட்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உட்பட பல பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து எதிரணியாக செயற்படும் நிலையில் அந்தப் பக்கமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மாறிச் செல்கின்றனர். ஆனால், அதனை கட்சித் தாவல் என்று கூற முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புதுப்பிக்கும் ஏற்பாடு என்றுதான் சொல்ல முடியும்.

ஏனெனில், முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் முன்னாள் தலைவியுமான சந்திரிக்கா பொது எதிரணியில் முக்கியமான செயற்பாட்டாளராக விளங்குகின்றார். ஆகவே, அந்தப் பக்கம் மாறிச் சென்று பொதுச் சின்னம் ஒன்றில் பொது வேட்பாளரை போட்டியிடச் செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை தோற்கடிக்கலாம் என்பது பிரதான நோக்கம். பொது வேட்பாளர் வெற்றி பெற்றதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புதுப்பிக்கலாம் என்பது அவர்களுடைய எதிர்ப்பார்ப்பு. இதனால், அரசில் இருந்து பொது எதிரணிக்கு மாறிச் செல்லும் உறுப்பினர்களை கட்சிதாவும் உறுப்பினர்கள் என கூறமுடியாது. ஜாதிக ஹெல உறுமயவும் அரசிலிருந்து விலகி எதிரணியின் பொது வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கின்றதே தவிர கட்சி மாறினார்கள் என்று அர்த்தப்படுத்த முடியாது.

முஸ்லிம் தமிழ் கட்சிகள்

இந்த இடத்தில் அரசில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் தொடர்பாக கேள்விகள் எழுகின்றன. இந்தக் கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு கொடுப்பதாக கூறிக் கொண்டே இருக்கின்றன. ஆனால், தமிழ் – முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை இம்முறை பொது வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் அவருக்கே வாக்களிப்பது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஆதரவு கொடுக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் உள்ளக அச்சுறுத்தல்கள் அல்லது செஞ்சோற்றுக் கடன் என்ற பல்வேறு விதமான சங்கடங்களுக்குள் கட்டுண்டு கிடப்பதால் அரசை விட்டு வெளியே வர முடியாத நிலையில், ஆதரவு வழங்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது எனலாம். சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்தக் கட்சிகள் மிகவும் இலகுவாக எதிரணிக்கு மாறிச் சென்றிருந்தன.

ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசிலிருந்து அவ்வாறு இலகுவாக மாறிச் செல்லக்கூடிய சூழல் இல்லை என்பதை அவர்கள் உணருகின்றனர். ஆனால், அரசின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற சிறிய சிங்களக் கட்சிகள் அரசிலிருந்து விலகுவது இலகுவானது. ஏனெனில், அவர்களை கடுமையாக அச்சுறுத்தினால் பெளத்த சிங்கள வாக்குகளை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் அரசு குறைந்தபட்சமேனும் அவர்கள் மீதான ஆத்திரத்தை அமர்த்தி வாசிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. ஆனால், ஆதரவு வழங்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளை அச்சுறுத்தி ஆதரவு வழங்குமாறு கோருவது அரசுக்கு இலகுவானது.

நான்கு கேள்வி

சரி, இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை தோற்கடிப்பது என்ற ஒரு பொதுக் கொள்கையின் கீழ் இடம்பெறும் வழமைக்கு மாறான வித்தியாசமான அரசியல் நகர்வுகள் தொடர்பாக நான்கு கேள்விகள் எழுகின்றன.

ஒன்று – பொதுவேட்பாளர் வெற்றி பெற்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புதுப்பிக்கும் திட்டத்தில் ஜாதிக ஹெல உறுமய ஒத்துழைத்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்குமா? அல்லது ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் எதிர்க்கட்சியாகவே இருக்குமா?

இரண்டாவது – மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈபிடிபி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற தமிழ் கட்சிளை புதிய ஜனாதிபதி தனது அணியில் சேர்த்து மீண்டும் அந்த அசிங்கமான அரசிலை தொடருவாரா?

மூன்றாவது – இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன? சர்வதேச விசாரணைக்கு புதிய ஜனாதிபதி ஒத்துழைப்பாரா? அல்லது சர்வதேச விசாரணை தேவையில்லை, போரை நடத்தியர்களை மட்டும் விசாரித்தால் போதும் என புதிய ஜனாதிபதி கூறி இனப்பிரச்சினையின் சர்வதேச முக்கியத்துவத்தை குறைக்க முற்படுவாரா?

நான்காவது – வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய இராணுவ முகாம்களை அகற்றவும், சிங்கள குடியேற்றங்களை நிறுத்தவும் உத்தரவிடுவாரா?

ஆகவே, அந்த வெற்றியின் பின்னால் உள்ள மேற்படி நான்கு கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய முறையில் பொது எதிரணியை உருவாக்கிய பிரமுகர்கள் முன்நின்று செயற்படுவார்களா? அல்லது வெற்றிபெற்றதும் அதே பல்லவிதான் பாடப்படுமா என்பதும் சந்தேகமாகவுள்ளது. அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகியுள்ள சில உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைவதாகவும் கூறப்படுகன்றது. ஏனெனில், அவர்களுக்கும் சந்திரிக்காவுடன் ஏற்கனவே முரண்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், ஆட்சி மாற்றம் என்ற ஒரே நோக்கில் முரண்பாட்டிலும் ஓர் உடன்பாடு என்ற அடிப்படையில் தற்போது செயற்படும் பொது எதிரணி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது வெளிப்படையானது.

தேசிய அரசு

ஆகவே, பொது எதிரணி வேட்பாளர் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றதும் உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை நடத்தி தேசிய அரசு ஒன்றை அமைக்க வேண்டிய நிலை ஏற்படலாம். வெற்றியின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீளவும் புதுப்பிக்கப்பட்டாலும் ஆதரவு வழங்கிய பிரதான கட்சிகளின் ஆதரவு பொதுத் தேர்தலிலும் தேவைப்படும் நிலையில் இம்முறை தேசிய அரசை நோக்கி பயணிக்கக் கூடிய புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகக் கூடிய சாதகமான நிலைமையும் உள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றி பிரதமர் தலைமையிலான ஆட்சியை எற்படுத்துவதே தமது இலக்கு என பொது எதிரணியின் முக்கியத்தர்கள் கூறுகின்றனர். வெற்றி பெற்று மூன்று மாதங்களில் ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றி நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படுவார் என பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

ஆகவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புதிப்பிக்கும் அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசொன்று அமைக்கப்பட்டால் அது சந்திரிக்காவினுடைய அரசியல் வெற்றியாக இருப்பதுடன் சிங்கள அரசியலின் புதிய கலாச்சாரமாகவும் மாறலாம். 2003இல் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு இழைத்த அநீதிக்கான மன்னிப்பாகவும் அது அமையலாம். ஆனால், கடந்த 60 ஆண்டுகால இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தொடர்ந்தும் இருட்டறைக்குள்ளேதான் இருக்கும் நிலை?

அ.நிக்ஸன்