படம் | AFP, South China Morning Post

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஏற்கனவே போட்டியிட்ட இரு ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் பிரசாரங்களுக்கு கையாண்ட அணுகுமுறைகள் சிறுபான்மை இனத்தவர்களுக்கு, குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வுகளை சிங்களவர்கள் மத்தியில் தூண்டிவிடுபவையாகவே அமைந்திருந்தன. 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசு நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுத்த சமாதான முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பிரசாரங்களையே ராஜபக்‌ஷ முன்னெடுத்தார். அடுத்து உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு 2010 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போர் வெற்றியைக் காட்சிப்படுத்தி இராணுவ வாத அரசியல் சிந்தனைகளின் அடிப்படையில் அவர் பிரசாரங்களை முன்னெடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

இப்போது மூன்றாவது பதவிக் காலத்துக்கு மக்களின் ஆணையை பெறுவதற்கெனக் கூறிக்கொண்டு 2015 முற்பகுதியில் ராஜபக்‌ஷ நடத்தவிருக்கும் தேர்தலிலும் அவரது தரப்பிலான பிரசாரங்கள் இலங்கை சமுதாயத்தில் காணப்படுகின்ற இனப்பிளவை மேலும் ஆழப்படுத்தி சிறுபான்மை இனத்தவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளுக்கு விரோதமான உணர்வுகளை சிங்கள மக்கள் மத்தியில் மேலும் உக்கிரமடைய வைக்கக்கூடியவையாக அமையப்போகின்றன என்பதற்கான தெளிவான அறிகுறிகளை காணமுடிகிறது.

அண்மையில் நாட்டின் வட பகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ராஜபக்‌ஷ கிளிநொச்சியில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றியபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்கு முன்வரக் கூடிய முதல் நபராக தானே இருப்பார் என்று கூறியிருந்தார். அவ்வாறு கூறியதன் மூலமாக தனது அடுத்த தேர்தல் பிரசாரங்களின் தொனிப்பொருள் எத்தகையதாக அமையப் போகின்றது என்பதை அவர் முழு நாட்டுக்கும் உணர்த்தியிருந்தார்.

ஜனாதிபதியே எடுத்துக் கொடுத்த அந்த அடியைப் பின்பற்றி இன்று தென்னிலங்கையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களும் அவர்களின் நேச சக்திகளும் கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தலைநகரில் இடம்பெறுகின்ற செய்தியாளர் மாநாடுகளில் அமைச்சர்களினால் கூறப்படுகின்றவற்றை நோக்கும்போது தேர்தல் அறிவிப்பு வெளியானதும் முனைப்படையவிருக்கும் பிரசாரங்களின்போது எத்தகைய விடயங்கள் சிங்கள மக்களுக்கு கூறப்படவிருக்கின்றன என்பதைத் தெளிவாக புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

நாட்டில் மீண்டும் பிரிவினைவாதப் போர் தலைதூக்காமல் இருக்க வேண்டுமானால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர வேண்டும் என்று மாத்திரமல்ல, மகிந்த ராஜபக்‌ஷவே தொடர்ந்தும் ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று இவர்கள் எல்லோரும் நாட்டு மக்களுக்கு கூற முன்வருகின்றார்கள். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் வேலைத் திட்டத்தை முன்வைத்து தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கு எதிரணிக் கட்சிகள் வகுத்துவரும் தந்ரோபாயத்தை முறியடிக்க ஆளும் கட்சியினர் வேறு வழியின்றி முற்றுமுழுதாக மீண்டும் இனவாத அரசியலை தீவிரப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு இலங்கை தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டிருக்கக்கூடிய அவர்களின் சட்டபூர்வமான அரசியல் பிரதிநிதிகள் தனிநாட்டுக் கோரிக்கை பற்றி இப்போது பேசுவதில்லை. வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசியல் அணி என்று சர்வதேச சமூகமே ஏற்றுக் கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பயனுறுதியுடைய அதிகாரப் பரவலாக்கத்துக்கு வழிவகுக்கக்கூடிய அரசியல் இணக்கத் தீர்வொன்றை ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் காண்பதே நோக்கம் என்று நாட்டுக்கு மாத்திரமல்ல முழு உலகிற்குமே பிரகடனப்படுத்தியிருக்கின்றது. இந்த நிலைப்பாட்டை இரா. சம்பந்தன் போன்ற மூத்த தமிழ் தலைவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அடிக்கடி கூறிவந்திருக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க கூடிய அரசியல் சமிக்ஞைகளைக் காண்பித்து ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதில் அக்கறை காட்டுவதற்குப் பதிலாக ராஜபக்‌ஷ அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரிவினையைக் கைவிடவில்லை என்றும் – பிரிவினைவாத ஆபத்து ஒழிந்துவிடவில்லை என்றும் – விசமத்தனமானதும் விதண்டாவாதமானதுமான பிரசாரங்களை இடையறாது செய்து கொண்டிருக்கின்றது.

மண்ணில் நிலவுகின்ற உண்மை நிலைக்கு முரணாக சிங்கள மக்களுக்கு கற்பனாவாதப் பீதியை காட்டுகின்ற படுமோசமான உபாயத்தை அரசும் அதன் நேச சக்திகளும் கடைப்பிடிக்கின்றன. உண்மையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது கடைப்பிடிக்கின்ற அரசியல் அணுகுமுறைகளும் அவர்களின் செயற்பாடுகளும் பிரிவினைவாதத்தை மீண்டும் கிளப்புமா இல்லையா என்பதை ஆட்சியாளர்கள் நன்கு அறிவார்கள். புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் செயற்பாடுகளினால் இன்றைய சூழ்நிலையில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா இல்லையா என்பதையும் அரசு நன்கு அறியும். ஆனால், அவர்களுக்குத் தேவையானதெல்லாம் நாடு எதிர்நோக்குகின்ற உண்மையான நெருக்கடிகளில் இருந்து சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான ஒரு பூச்சாண்டியேயாகும்.

அத்துடன், இராணுவமயச் சூழ்நிலைக்குள் ஒடுக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் தங்களின் நியாயபூர்வமான அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக முற்றிலும் ஜனநாயக ரீதியான வழிமுறைகளில் என்றாலும் கூட எந்தவிதமான அரசியல் செயற்பாடுகளிலும் இறங்கக்கூடாது என்று அரசு நினைக்கின்றது. அவ்வாறு இறங்காதிருப்பதை உறுதி செய்து கொள்ளும் ஒரு தந்திரோபாயமாகவே தமிழ் பகுதிகளில் நடத்தப்படக்கூடிய எந்தவொரு எதிர்ப்பியக்கத்துக்கும் அரசு புலி முத்திரை குத்தி பிரிவினைவாத ஆபத்து தலைகாட்டப்பார்க்கின்றது என்று சிங்கள மக்களுக்கு கூறுகிறது.

சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களுக்கும், இப்போது முன்னரைக் காட்டிலும் முஸ்லிம்களுக்கும் எதிரான அரசியல் உணர்வுகளைத் தணிய விடாமல் வைத்திருப்பதன் மூலம் மாத்திரமே தங்களால் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள முடியும். எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்பதே ஆட்சியாளர்களின் உறுதியான நம்பிக்கை. இதன் பிரகாரமே அவர்களின் தற்போதைய பிரசார முஸ்தீபுகள் அமைந்திருக்கின்றன.

இலங்கையின் இறைமைக்கு எதிராக சர்வதேச சதி, புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் செயற்பாடுகளினால் இலங்கைக்கு பேராபத்து, பிரிவினைவாத ஆபத்து மீண்டும் தலைதூக்குகிறது என்ற சுலோகங்கள் எல்லாம் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகள் சிங்கள மக்கள் மத்தியில் தணிந்து போகாமல் இருப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டவையேயாகும்.

இலங்கையின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, சுயாதிபத்தியம் என்பன எல்லாவற்றையும் பெரும்பான்மையான சாதாரண சிங்கள மக்கள் ஆட்சியதிகாரக் கட்டமைப்பின் மீதான சிங்கள பௌத்தர்களின் மேலாதிக்கம் என்பதற்கு அப்பால் வேறு எதுவுமாக விளங்கி வைத்திருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை.

ஜனாதிபதித் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியானதும் இந்தப் பிரசாரங்கள் மேலும் உக்கிரமடையும். எதிரணியினர் கூட இதற்கு இரையாகி தங்களுக்கு இருக்கக்கூடிய ஆதரவுத்தளத்தை காப்பாற்றுவதற்காக பதிலுக்கு இனவாத அணுகுமுறைகளில் அக்கறை காட்ட நிர்ப்பந்திக்கப்படக்கூடிய ஆபத்தும் இருக்கின்றது. அதற்கான சில அறிகுறிகளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட எதிரணியின் சில தலைவர்களின் பேச்சுகளிலும் செயல்களிலும் ஏற்கனவே காணக்கூடியதாக இருக்கின்றது.

வீ. தனபாலசிங்கம்