படம் | Flickr

சுதந்திர இலங்கைக்கு முன்னரான நாட்டை காலனித்துவத்தில் வைத்திருந்த பிரிட்டிஷ்காரனும் சரி, அதன் பின்னரான சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்களும் சரி மலையகத் தோட்டத் தொழிலாளர்களை உழைக்கும் இயந்திரங்கள் போல் கருதி அவர்கள் தொடர்பாக பொருளாதார கொள்கைகளைக் கடைப்பிடித்தனரே தவிர, அந்த மக்களின் உரிமைகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாக எவ்வித அக்கறையினையும் கொண்டிருக்கவில்லை.

200 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ்காரரால் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பிட்ட போது என்ன நிலைமையில் இருந்தார்களோ அதிலிருந்து இன்னும் மாறுபடாத, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாகத்தான் மலையக தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் இருந்து வருகின்றன.

இந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்கள் இருக்கின்றபோதும், அவர்களால் அந்த மக்கள் ஏமாற்றப்படுவதாகவே தெரியவருகின்றது. இவர்களுக்கென அந்தப் பிரதிநிதிகள் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகத் தெரியவில்லை.

குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் லயத்து வாழ்க்கை முறைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து காணியுடன் தனியான வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு நீண்டகாலமாகக் கோரிக்கைகளை விடுத்துவருகின்றனர். ஆனால், அதற்கான முறையான நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலைமையே காணப்படுகின்றது.

தொடர்ச்சியாக கடந்த வரவு – செலவுத் திட்டங்களில் மலையக மக்களுக்கு 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பாகக் கூறப்படுகின்றபோதும் அந்தத் திட்டம் எவ்வாறு அமையும் என்பது அந்த மக்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கே தெளிவில்லாமல் இருக்கின்றது. எவ்வாறாயினும் அது மாடி வீட்டுத் திட்டமாக அமையக்கூடாது. தனியான காணியுடன் தனியான வீட்டுத் திட்டமாகவே அமைய வேண்டும் என்பதே மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதேவேளை, கிட்டத்தட்ட 2 இலட்சத்து 50 ஆயிரம் வரையான குடும்பங்கள் லயன்களில் வசிக்கின்றன. ஆனால், 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பாக மாத்திரமே கதைக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் இந்த 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பதில்கூட இன்னும் தாமதமே நிலவுகின்றது.

இந்நிலையில், மலையக மக்களின் அரசியல் பிரதிநிதிகளோ, தோட்டத் தொழிலாளர்கள் எத்தனை பேர் லயன்களில் வசிக்கின்றனர்? எத்தனை வீடுகள் அமைக்கப்பட வேண்டும்? அதற்காக எவ்வளவு காணிகள் வேண்டும்? அந்தக் காணிகளை எங்கு பெற்றுக்கொள்ள முடியும்? என்ற சரியான புள்ளி விபர தகவல்கள்கூடத் தெரியாத நிலைமையிலேயே இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் அவர்களால் மலையக மக்களுக்கு வீடமைப்பு தொடர்பான அழுத்தங்களை அரசிற்கு விடுக்க முடியுமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இதேவேளை, தற்போது கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தின் பின்னர் மலையகத்தில் புதிய வீடமைப்புத் திட்டம் தொடர்பான விடயங்களே கதைக்கப்படுகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மலையக அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர். அவர்கள் இப்போது அந்த மக்களுக்கு புதிய வீட்டுத்திட்டங்கள் தொடர்பாகக் கதைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் அது வெறும் பேச்சளவில் மாத்திரமே காணப்படும் விடயமாகவே உள்ளது. மலையக மக்கள் தொடர்பான சரியான புள்ளிவிபர தகவல்கள் எதனையும் தெரியாது பல அரசியல்வாதிகள் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அறிக்கைவிட்டு ஏமாற்று அரசியலைத் தொடருகின்றனர்.

மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தைத் தொடர்ந்து விழித்துக் கொண்டுள்ள மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் அரசையும் அதனுடன் ஒட்டியிருக்கும் அரசியல்வாதிகளையும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இவ்வாறான கேள்விகளில் இருந்து தப்பித்துக் கொள்ள வீட்டுத்திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் உறுதிமொழிகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு உறுதிமொழிகளை முன்வைத்து இரண்டு விடயங்களை சாதித்துக் கொள்ள மலையக அரசியல்வாதிகளும் மற்றும் அரசும் முயற்சிக்கலாம். அதாவது, மலையக மக்களுக்கு புதிய வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்து மக்களின் கேள்விகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் அதேவேளை, அந்த வீட்டுத் திட்டத்தைக் காட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கலாம். மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இனியும் ஏமாறக்கூடாது.

இந்நிலையில், மலையக மக்கள் தமது போராட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டிய அவசியத்தை மீரியபெத்த மண்சரிவு சம்பவம் எடுத்துக்காட்டிவிட்டது. இனியும் ஏமாற்று அரசியலுக்கு மலையக மக்கள் இடமளிக்கக் கூடாது. காணியுடன் தனியான வீடுகளைப் பெற்றுக் கொள்ளும் வரை போராட வேண்டும்.

தினக்குரல் பத்திரிகைக்காக நல்லுசாமி ஜெயகாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.