படம் | Facebook

நேற்று ஊவா மாகாண சபையின் ஆறாவது கூட்டத்தொடரின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஊவா மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் விநியோகம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டானுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னாண்டோவுக்கும் இடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.

ஹரீன் பெர்னாண்டோ தனது வாதத்தின்போது, “இ.தொ.கா.வின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கடந்த ஐந்து வருட காலமாக எந்த அபிவிருத்தி வேலையும் செய்யவில்லை. ஐ.தே.கட்சியே எதிர்க்கட்சியிலிருந்து அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது” என தெரிவித்திருக்கிறார்.

இதனை இடைமறித்து பேசிய இ.தொ.கா. உறுப்பினர்கள், 5 வருடகாலமாக தங்களால் தங்களின் தேர்தல் இலக்கத்தைப் பொறித்த ஜெக்கெட்டுக்களை மட்டுமே தோட்ட மக்களுக்கு கொடுக்க முடிந்துள்ளது எனத் தெரிவித்திருக்கின்றனர்.

அதற்கு ஹரீன், ஜெக்கெட் மட்டுமல்ல உள்ளாடைகளையும் கொடுப்பேன் என ஆவேசமாக கூறியிருக்கிறார். இதனையடுத்து கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்திய இ.தொ.காவினர் ஹரீனின் பேச்சை பகிஷ்கரித்து வெளிநடப்பு செய்திருக்கின்றனர். வெளியேறுவதற்கு முன்னர், “தேர்தல் காலங்களில் வாக்கு கேட்க தோட்டங்களுக்கு சென்றபோது உள்ளாடை வாங்கிக் கொடுப்பேன் என்றா வாக்கு கேட்டீர்கள். இவரது பேச்சு எமது சமூகத்தினை கேவலப்படுத்தியுள்ளது. ஊவா மாகாணத்தின் தோட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களான நாங்கள் எங்கள் சமூகத்தை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஏழை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மை. ஆனால், நாங்கள் பிச்சைக்காரர்கள் இல்லை.” – இவ்வாறு தன்மானத்துடன் பேசிவிட்டுதான் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.

சரி, ஹரீன் மலையக மக்களை இழிவுசெய்யும் வகையில் பேசினாரா? இல்லையா என்பதை ஆய்வு செய்வதை விடுத்து, இது பற்றி பேசுவதற்கு இ.தொ.காவினருக்குத் தகுதி இருக்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது கட்சி பாராமல் தேர்தல் சட்டவிதிகளை மீறி லஞ்சமாக பல்வேறு வகையான பொருட்கள் வழங்கப்பட்டிருந்தன. மின்சாரப் பாவனைப் பொருட்கள், வீட்டு கூரைக்கான தகரம், பணம், பாடாசாலைப் பொருட்கள், மருந்து வகைகள், உடைகள், மதுபானம் என வாரி வாரி வழங்கப்பட்டன. அரச தரப்பே அதிகமாக தேர்தல் சட்டவிதிகளை மீறியதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் தெரிவித்திருந்தன.

இதில், முக்கியமாக அப்போது முதலமைச்சர் வேட்பாளராக இருந்த சஷீந்திர ராஜபக்‌ஷ அரச சொத்துக்களைப் பயன்படுத்தி அப்பட்டமாக விதிமீறல்களில் ஈடுபட்டிருந்தார்.

“சொல்வதைச் செய்யும் இல. 15; சஷீந்திர ராஜபக்‌ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு” என பொறிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் அடங்கிய பையொன்றும் சஷீந்திர ராஜபக்‌ஷவால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்துப் பொருட்களோடு பெண்களின் உள்ளாடை ஒன்றும் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியது. ஊவா மாகாணத்திலுள்ள விகாரை ஒன்றுக்கு சென்றிருந்த ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவுக்கு விகாரையின் பிரதான பிக்கு, சஷீந்திர ராஜபக்‌ஷ வழங்கிய பையைக் கொடுத்து தனக்கும் பெண்களின் மார்புக் கச்சை ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

அதை அவர் நாடாளுமன்றிலும் கொண்டுவந்து காண்பித்திருந்தார். வீடியோவைக் கீழே காணலாம்.

ஆக, “உள்ளாடையும் கொடுப்பேன்” என தெரிவித்தமைக்கே மலையக மக்கள் மீது அக்கறைக் கொண்டவர்களாக வீர வசனம் பேசிவிட்டு வெளிநடப்பு செய்த உங்களால், ஏன் சஷீந்திர ராஜபக்‌ஷவுக்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்க முடியவில்லை. ஏன்? அவர் கொடுப்பதால் மலையக மக்கள் இழிவுபடுத்தப்பட மாட்டார்களோ? அவர் வழங்கியது விலை உயர்ந்த உள்ளாடையோ?

மலையக மக்களை இழிவுபடுத்துவது யார்?

மலையகத் தோட்டத் தொழிலாளர்களை இழிவுபடுத்துவது – கேவலப்படுத்துவது வேறு யாருமல்லர். அவர்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கப் போராடுகிறோம் எனகட கூச்சலிடும் நீங்கள்தான் அவர்களை மரியாதையாக நடத்துவதில்லை.

பண்டாரவளையில் கடந்த மே மாதம் இடம்பெற்ற இ.தொ.காவின் மேதினக் கூட்டத்தின்போது மலையக மக்களின் பிரதிநிதி எனக்கூறிக் கொள்ளும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடந்துகொண்ட விதத்தை யாவரும் அறிந்திருப்பார்கள்.

அன்று மேதின மேடையில் இருந்த ஊடகவியலாளர் கொழும்பில் இருந்து வந்தவர் அல்ல. அவர் மலையகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே. அவர் தனது ஊடகத் தொழிலை செய்யவிடாது அமைச்சர் தள்ளி வீழ்த்தியதை எவ்வாறு கூறுவது? “மலையக சமூகத்தை வழி நடத்த இ.தொ.காவிற்குத் தெரியும்” எனத் தெரிவிக்கும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், கட்சியின் பொதுச்செயலாளர் செய்த இந்த நடவடிக்கைக்கு என்ன சொல்லப் போகிறார்? இதுவா மரியாதையாக நடத்துவதென்பது?

மலையக மக்களை இழிவுபடுத்துவது யார்?

அண்மையில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க பூணாகலை தமிழ் பாடசாலைக்குச் சென்றிருந்த இ.தொ.கவினர், அங்கும் பாதிக்கப்பட்ட மக்களிடம் தாங்கள் பெரியவர்கள் என்றவாறு செயற்பட்டுள்ளமையை காணக்கூடியதாக இருந்தது. மண்சரிவில் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுடன் மக்களாக சேர்ந்து, அவர்களுக்கு ஆதரவாக, அரவணைப்பாக தனிப்பட்ட வகையிலும் பேசி, அவர்களை இயல்பு வாழ்க்கைக்குள் கொண்டுவருதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம். (அரசியல் மேடை என்று நினைத்தார்களோ?) தாங்கள் மேலானவர்கள் என்ற மமதையுடன் சிறு மக்கள் கூட்டம் நிறைந்திருந்த மைதானத்தின் ஒரு ஓரப்பகுதியில் இருந்த உயரமான இடத்தில் (மக்களிலும் பார்க்க) வரிசையாக ஆணை வழங்குபவர்களாக உட்கார்ந்திருக்க, மண்சரிவில் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்த மக்கள் அவர்களுக்குக் கீழ் கையைக் கட்டியவாறு நின்றுகொண்டிருக்கின்றனர். நவீன அடிமைத்தனம் மலையகத்தில் இல்லை என பிபிசிக்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருந்தாலும் நடைமுறையில்…?

thondaman_koslantha_metting_006
படம் | lankasrinews

ஏன் இந்த நடைமுறை? உறவுகளை இழந்த அவர்களை அணைத்து ஆறுதல் அளிக்கவேண்டுமல்லவா? ஏன் அவ்வாறு செய்ய மறுக்கிறீர்கள்? இதுவா மரியாதையாக நடத்துவதென்பது?

மலையக மக்களை இழிவுபடுத்துவது யார்?