படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka
கடந்த வாரம் சீன கடற்படையின் நீர்மூழ்கி கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றது. இது இந்திய மட்டத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. இதே துறைமுகத்தில் ஏழு வாரங்களுக்கு முன்னரும் கூட சீனாவின் நீர்முழ்கியொன்று தரித்து நின்றிருந்தது. சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்த வேளையிலேயே சீன கடற்படையின் நீர்மூழ்கி கொழும்பு துறைமுகத்தில் தரித்துநிற்பதான செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், மேற்படி நீர்மூழ்கி சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு இரு தினங்களுக்கு முன்னரேயே கொழும்பிற்கு வந்துவிட்டதாக பின்னர் வெளியான செய்திகள் தெரிவித்தன. சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதான செய்திகள் ஏற்கனவே அறியப்பட்டிருந்த நிலையிலேயே, ஜப்பானிய பிரதமரின் இலங்கைக்கான விஜயம் இடம்பெற்றிருந்தது. சீன ஜனாதிபதியின் விஜயத்திற்கு முன்னர் ஜப்பானிய பிரதமரின் விஜயம் இடம்பெற்றதானது ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பலம்பொருந்திய சக்திகளுக்கு இடையிலான போட்டியை தெளிவாக படம்பிடித்திருந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் சீனாவின் நீர்மூழ்கி கொழும்பில் முதல் தடவையாக தரித்து நின்றது. சீனாவின் நீர்மூழ்கி முதல் தடவையாக கொழும்பிற்கு வந்த வேளையில் இந்தியாவின் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி வியட்நாமிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். கடந்த வாரம் வியட்நாம் ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றிருந்த வேளையில்தான் மீண்டும் சீனாவின் நீர்மூழ்கி கொழும்பிற்கு வந்திருக்கிறது.
மேற்படி விஜயத்தின் போது தென் சீனக் கடல் எல்லை பகுதியில் நிலவும் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதில் இந்தியாவின் உதவியை வியட்நாம் ஜனாதிபதி கோரியிருந்தார். வியட்நாம் தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் இராணுவ தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. இந்த பின்னணியில் சீன – வியட்நாம் உறவு மோசமடைந்து காணப்படுகிறது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் இந்திய – வியட்நாம் உறவு வலுவடைந்து செல்கிறது. இந்திய – வியட்நாம் உறவு வலுவடைந்து காணப்படுகின்ற பின்புலத்தில்தான் சீன – இலங்கை உறவு வலுவடைந்து செல்கிறது. இவ்வாறான விடயங்களை தொகுத்து நோக்கினால் சீனா மறைமுகமாக இந்தியாவிற்கு ஒரு பதிலை சொல்ல விளைகிறதா என்னும் கேள்வியெழுகிறது. அதாவது, தென் சீனக் கடல் பகுதியில் இந்தியா தன்னுடைய செயற்பாடுகளை விஸ்தரிக்க முற்பட்டால் சீனா இந்து சமுத்திர பிராந்தியத்தில் தன்னுடைய செல்வாக்கை பலப்படுத்த முயலும். கொழும்பு துறைமுகத்தில் தன்னுடைய நீர்மூழ்கிகளை தரித்துநிற்கச் செய்ததன் வாயிலாக சீனா அவ்வாறானதொரு செய்தியை சொல்ல முற்பட்டிருக்கலாம்.
நீர்மூழ்கிகள் அணுவாயுதங்களுக்கு அடுத்தபடியாக மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாகக் கருதப்படுபவை. இரகசியமாக எப்பகுதிக்கும் சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டவையாக இருப்பதால் கடற்போர்களின் போது முதலில் இரத்தம் சிந்தவைக்கும் ஆற்றல் நீர்மூழ்கிகளுக்கே உண்டு. சீனாவிடம் மொத்தமாக 51 நீர்மூழ்கிகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது சீனாவிடம் அணுவாயுதங்களை தாங்கியிருக்கும் ஜந்து நீர்மூழ்கிகள் உண்டு. இதில் மூன்று கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை (ballistic missiles) தாங்கியிருப்பவையாகும். ஆனால், வெளியில் தெரியாதவாறு இன்னும் பல நீர்மூழ்கிகள் சீனாவிடம் இருக்கலாம். ஏனெனில், வல்லரசுகளின் உண்மையான இராணுவ ஆற்றலை அவைகள் ஒரு போதும் வெளியிடுவதில்லை. சீனா அண்மைக்காலமாக அதனுடைய கடற்படை ஆற்றலை விஸ்தரித்து வருகின்ற சூழலில் தென் சீனக் கடலில் இவ்வாறான ஏவுகணைகளை தாங்கியிருக்கும் நீர்மூழ்கிகளை நிறுத்திவைக்க முயல்கிறது. ஆனால், தென் சீனக் கடல் பகுதியில் 90 வீதமானவை வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் ஆள்புல எல்லைக்குரியவையாக கருதப்படுகின்றன. மேற்படி தென் சீனக் கடல் பகுதியின் வழியாகவே உலகின் 50 வீதமான சரக்குக் கப்பல்கள் பயணிக்கின்றன. அந்த வகையில் 5.3 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள் இக்கடல் வழியாகவே கொண்டுசெல்லப்படுகின்றன. இந்த அடிப்படையில்தான் சீனா இக்கடல் பகுதியில் அதனுடைய கடற்படை ஆற்றலை அதிகரிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கின்றது. சீனா அதனுடைய கடற்படை ஆற்றலை விஸ்தரித்து வருகின்ற பின்னணியிலேயே இந்தியா கடந்த மாதம் அதனுடைய நீர்மூழ்கிகளை 15ஆல் அதிகரிப்பதற்கான அறிவிப்பை செய்திருந்தது. IHS Jane’s Defense Weekly மேற்கோள்காட்டி இந்த விடயங்களை அவதானித்தால் சீனாவின் கடற்படை விரிவாக்கல் திட்டமானது ஏனைய நாடுகளுக்கும், அவைகளின் கடற்படை ஆற்றலை விரிவுபடுத்த வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தோனேஷியா அதனுடைய 12 நீர்மூழ்கிகளை களத்தில் இறக்கியிருக்கின்றது மேலும், இரண்டு புதிய நீர்மூழ்கிகளை கொள்வனவு செய்யவுள்ளது. வியட்நாம் ஏலவே ரஷ்யாவிடமிருந்து மூன்று நீர்மூழ்கிகளை (kilo-class submarines) பெற்றிருக்கிறது. மேலும், 2016இல் மூன்று புதிய நீர்மூழ்கிகளை பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூரிடம் ஏற்கனவே ஆறு நீர்மூழ்கிகள் இருக்கின்ற நிலையிலேயே மேலும் இரண்டு புதிய நீர்மூழ்கிகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளது. அவுஸ்திரேலியா அதனிடமுள்ள ஏவுகணைகளைத் தாங்கக் கூடிய நீர்மூழ்கிகள் பழசாகிவிட்டதால் அவற்றிற்குப் பதிலாக புதிவற்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் சீனாவின் கடற்படை ஆற்றல்கண்டு அச்சமடைந்ததன் விளைவுகளாகும். சீனாவின் நீர்மூழ்கி தந்திரோபாயம் பற்றி கூறும் அமெரிக்காவை தளமாகக் கொண்டிருக்கும் வெளிவிவகார கொள்கைகளுக்கான (Foreign Policy Research Institute in Philadelphia) நிறுவனத்தை சேர்ந்த பெலிக்ஸ் சாங் (Felix Chang), “இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது தென்கிழக்காசியா நீர்மூழ்கிகளின் தாய்வீடாக இருந்தது. ஆனால், தற்போது இக்கடற்பகுதியானது ஆடம்பர உல்லாசப்பயணத்திற்கான உறைவிடமாக மாறிவிட்டது. அதன் காரணமாகவே சீன கடற்படை புதிய பகுதிகளை விருத்திசெய்ய முயல்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
மேற்படி தகவல்களின் அடிப்படையில் நோக்கினால் சீனாவின் நீர்மூழ்கி தந்திரோபாயமானது மிகவும் தெளிவாகவே அதனுடைய கடற்படை விரிவாக்கத்துடன் தொடர்புபட்ட ஒன்றாகவே தெரிகிறது. பொதுவாக பலம்பொருந்திய சக்திகள் தங்களின் இராணுவ ஆற்றல் அல்லது இராணுவ பிரசன்னத்தின் ஊடாக சில பூடகமான செய்திகளை வெளிப்படுத்துவதுண்டு. சில தினங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் சில போர் விமானங்கள் ஜரோப்பிய ஆகாய எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து பதற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. ரஷ்ய போர் விமானங்கள் ஜரோப்பிய ஆகாய எல்லையை ஊடறுத்தமையானது பனிப்போர் காலத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருந்ததாகக் கருதப்படுகிறது. இது பற்றி கருத்துத் தெரிவித்திருக்கும் நேட்டோவின் பேச்சாளர், ரஷ்ய போர் விமானங்கள் இவ்வாறு ஜரோப்பிய ஆகாய எல்லையை ஊடறுப்பதானது நிச்சயமாகவே வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இதே போன்றே சீனா அதனுடைய இரகசிய (clandestine) கடல் நடவடிக்கைகளுக்காக கையாளும் நீர்மூழ்கிகளை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருப்பதானதும் வழக்கத்திற்கு மாறான ஒன்றல்ல என்பதே இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்களின் அவதானமாக இருக்கிறது.
எனினும், சீனாவின் பாதுகாப்பு அமைச்சு இது வழக்கமான ஒரு விடயமே என்று பதிலளித்திருக்கின்றது. உலகில் இராணுவ பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற சூழலில் ஒவ்வொரு நாடுகளும் தங்களுடைய கடற்படை ஆற்றலை பெருக்குவதில் தீவிரம் காட்டிவருகின்றன. இவ்வாறு பலம்பொருந்திய சக்திகள் தங்களின் நிகழ்சி நிரல்களுக்கு ஏற்ப பாதுகாப்பு விவகாரங்களை கையாளும் போது அவற்றுடன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியில் உறவுகளை பேணிவரும் சிறிய நாடுகள் அறிந்தோ அல்லது அறியாமாலோ பலம்பொருந்திய சக்திகளின் நிகழ்சி நிரலால் விழுங்கப்படுவதுண்டு. இதில் தப்பி பிழைப்பது மிகவும் கடினமானதொரு விடயமாகும். அவ்வாறானதொரு நிலைமை இலங்கைக்கும் ஏற்படுகின்றதா என்பதை பொறுத்திருந்தே நோக்க வேண்டியிருக்கிறது. யுத்தம் நிறைவடைந்த பின்னணியில் சீன – இலங்கை நெருக்கம் என்றுமில்லாதவாறு அதிகரித்து சென்றது. இதன் தொடர்ச்சியாகவே சீனா, இலங்கையின் பிரதான நிதியுதவியாளராக மாறியது. அதுவரை இலங்கைக்கு உதவி வழங்கிவந்த நாடுகளில் முதலிடத்தில் இருந்த ஜப்பானை, சீனா பின்தள்ளியது. இந்த பின்னணியில் நோக்கினால், சீனாவின் வேண்டுகோள்களை கொழும்பால் இலகுவாக நிராகரிக்க முடியாது போகலாம். சீனாவின் வேண்டுகோள் அதன் இராணுவ ஆற்றலின் விரிவாக்கத்தோடு தொடர்பட்டிருந்தாலும் அதற்கும் கொழும்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. அவ்வாறு சீனா இராணுவ நோக்கில் இலங்கையைப் பயன்படுத்த விளையுமாயின் அது நிச்சயமாக இந்தியாவிற்கு கவலையளிக்கும் ஒரு விடயமாகவே இருக்கும்.
தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.