படம் | Foreign Correspondents Association of Sri Lanka
இலங்கையில் தேசியக் கட்சிகள் என்று எந்தக் கட்சியை கூறமுடியும் என அரசியல் விஞ்ஞானம் கற்கின்ற மாணவன் ஒருவன் கேள்வி எழுப்பினான். இதற்குப் பதிலளித்த விரிவுரையாளர் இலங்கையில் தேசியக் கட்சி என்று எந்தக் கட்சியையும் கூற முடியாது. ஏனெனில், அனைத்து சமூகங்களின் அபிலாஷைகளையும் உள்ளடக்கியிருந்தால் மாத்திரமே தேசிய கட்சி என்ற அந்தஸ்த்தை ஒரு கட்சி பெறமுடியும் என்று கூறினார். இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேசியக் கட்சிகள் என சிலரால் கூறப்படுகின்றன. ஆனால், அது தவறு. அந்த இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி அமைக்கின்றன. ஏனைய கட்சிகளும் அவ்வப்போது ஆதரவு கொடுக்கின்றன. அதற்காக தேசிய கட்சி என்ற அந்தஸ்த்தை அந்த இரு கட்சிகளும் பெற்றுவிட முடியாது எனவும் அந்த விரிவுரையாளர் விளக்கமளித்தார்.
கட்சிகளின் யாப்பு
அப்போது மாணவன் மீண்டும் கேட்டான் அந்த இரு கட்சிகளிலும் தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்களே என்றும், அதனால் அந்த கட்சிகளை தேசியக் கட்சிகள் என்று கூறுவதில் தவறு இல்லைத்தானே எனவும் கேள்வி தொடுத்தான். பதிலளித்த விரிவுரையாளர் தமிழ் – முஸ்லிம் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பதற்காக அந்த இரு கட்சிகளையும் தேசியக் கட்சிகள் என வரையறுக்க முடியாது என்றார். ஏனெனில், இரு கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் தமிழர்கள் அந்த கட்சிகளின் இரண்டாம் நிலை உயர் பதவிக்கு மாத்திரமே தகுதியுடையவர்கள். தலைவராக பொதுச் செயலாளராகவோ வரமுடியாது. சிங்களவர்கள் மாத்திரமே அந்த கட்சிகளின் தலைவர்களாக வரமுடியும். தேசியக் கட்சி என்றால் அதில் அங்கம் வகிக்கும் வேறு இனத்தை சேர்ந்த ஒருவர் தலைவராகவும் அந்த கட்சி ஆட்சி அமைக்கும்போது ஜனாதிபதியாகவும் அல்லது பிரதமராகவும் வரக்கூடிய தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், அந்த இரு கட்சிகளின் யாப்பிலும் அவ்வாறு இல்லை. இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை ஓரளவுக்கேணும் தேசிய கட்சி என அழைக்கலாம். ஏனெனில், வேறு இனத்தவர்களான மன்மோகன் சிங்க, தேவகௌடா, நரசிம்மராவ் ஆகியோர் பிரதமராக பதவி வகித்தனர். ஆனால், இலங்கையில் அவ்வாறான நிலை இல்லை. ஆகவே, தேசியக் கட்சிகள் என்று அந்த இரு கட்சிகளையும் கூற முடியாது. வேண்டுமானால் தலைநகரில் உள்ள அரசியல் கட்சிகள் என்று அழைக்கலாம் எனவும் விரிவுரையாளர் விளக்கமளித்தார். அந்த இரு கட்சிகளின் யாப்பின் பிரகாரம் தமிழ் – முஸ்லிம் மக்கள் உறுப்பினராகலாம். ஆனால், தலைமை பதவி என்பதும், ஆட்சியமைக்கும் போது ஜனாதிபதி பிரதமர் பதவி என்பதும் சிங்களவர்களுக்கு மாத்திரமே உரியது என யாப்பில் கூறப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்காகத்தான் தேசியம் என்றால் என்ன என்பது குறித்து அறிவு நிலைசார்ந்த புரிதல் அவசியம் என்றும் விரிவுரையாளர் அடித்துக் கூறினார்.
அரசியல் யாப்பில் மட்டுமல்ல
ஜனாதிபதி – பிரதமர் பதவிகள் சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரமே உரியது என்பது இலங்கையின் அரசியல் யாப்பில் மாத்திரமல்ல தேசியக் கட்சிகள் என கூறப்படுகின்ற ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் யாப்புக்களிலும் அவ்வாறுதான் வரையறை செய்யப்பட்டிருக்கின்றது. முன்னாள் வெளியுறவு அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமர் பிரதமராக பதவியேற்பதற்காக பௌத்த சமயத்தை தழுவினார் என அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனாலும், தமிழர் என்ற காரணத்தினால் பின்னர் அந்தப் பதவியும் கைநழுவிப் போனது. ஆகவே, இது வரலாறு. ஒரு இனத்தினுடைய இருப்பையும் அடையாளத்தையும் உறுதிப்படுத்த முடியாத கட்சிகளை தேசியக் கட்சிகள் எனக் கூற முடியாது என்பது அரசியல் விஞ்ஞான ரீதியான கருத்து. ஆகவே, சில தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அந்த இரு கட்சிகளில் உறுப்புரிமை பெறுவதால் அந்த கட்சிகளின் கொள்கை கோட்பாடுகளுக்கு ஏற்பவே செயற்பட முடியும்.
அந்தக் கட்சிகளில் அங்கம் வகித்து தமது இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர் என்று வெறுமனே கூறலாம். ஆனால், எதையும் சாதிக்க முடியாது என்பதை இலங்கையில் 1931ஆம் ஆண்டு டொனமூர் யாப்புடன் அரசியல் கட்சிகள் தோன்றிய காலத்தில் இருந்து காண முடியும். இதனால்தான் இனவாத கட்சிகள் தோன்றியது. தமிழ் – முஸ்லிம் கட்சிகளில் சிங்கள உறுப்பினர்கள் அங்கம் வகிப்பது இல்லை. தமிழ் கட்சிகளில் தமிழர்களும் முஸ்லிம் கட்சிகளில் முஸ்லிம்களும் அங்கம் வகிப்பதால் அந்தக் கட்சிகள் இனவாதக் கட்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஐக்கிய தேசிய கட்சியிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் ஆரம்ப காலத்தில் இருந்து தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கு உரிய இடம் வழங்கியிருந்தால் இனவாத கட்சிகள் தோற்றம் பெற்றிருக்க வாய்ப்பில்லை. 1920ஆம் ஆண்டு பிரித்தானியரை எதிர்க்க தேசிய இயக்கம் உருவாக்கப்பட்டபோது இனவேறுபாடுகள் இருக்கவில்லை.
தேர்தலில் யாருக்கு ஆதரவு
ஆனால், அதன் பின்னரான செயற்பாடுகள் 1921இல் தமிழர் மகா சபையை தோற்றுவித்தது. அதன் தொடர்ச்சிதான் இன்றைய அரசியல் நிலை. இந்த அடிப்படையில் இருந்துதான் மேற்படி மாணவனின் கேள்வியும் எழுந்தது என்ற முடிவுக்கு வரலாம். அரசியலமைப்பிலும் மேற்படி இரு கட்சிகளின் யாப்புகளிலும் தமிழர்களுக்கு தலைமைப் பதவி இல்லை என்ற நிலையில் தோற்றம் பெற்ற இனவாத கட்சிகளை சிறுபான்மை கட்சிகள் என்று அழைக்கலாமா என்ற கேள்வியும் எழுகின்றது தேசிய இனம் என்று வரையறை செய்யும்போது தமிழ்க் கட்சிகளை சிறுபான்மை கட்சிகள் என கூற முடியாது. அரசியலமைப்பின் 19ஆவது பிரிவில் சிங்களம் – தமிழ் ஆகிய மொழிகள் அரச கரும மொழிகள் என கூறப்பட்டுள்ளன. ஆகவே, எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மை கட்சிகள் என்று விளக்கமளிக்க முடியாது.
எனவே, சிங்களத் தேசியம் தமிழ்த் தேசியம் என்ற கருத்துக்கள் தவிர்க்கப்பட முடியாதவை. சிங்களத் தேசியம் என்பதற்கு இருக்கக்கூடிய அங்கீகாரம் தமிழ்த் தேசியத்துக்கும் இருப்பதாக ஐரோப்பியர் காலத்துக்கு முன்னரான வரலாற்று ஆதாரங்களை சிலர் முன்வைப்பதில் நியாயங்கள் உண்டு.
இந்த நிலையில், இனவாதக் கட்சிகள் என்று கூறப்படுகின்ற தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்கவுள்ளனர் என்பதுதான் இங்கு கேள்வியாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தேர்தலை பகிஷ்கரித்தால் வடக்கு கிழக்கில் இருந்து குறைந்தது நான்கு இலட்சம் வாக்குகளாவது இல்லாமல் போகவேண்டும். ஆனால், அவ்வாறான நிலை ஏற்படுமா என்பது சந்தேகமே. ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரித்தாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஏற்படும் என நம்பிக்கை வைக்க முடியாது. ஆனால், ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டால் தற்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் சற்று குறைவடையும் என சிலர் கூறுகின்றனர்.
தேசியம் பற்றிய புரிதல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலரும் அவ்வாறு நம்புகின்றனர். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறாது விட்டாலும் தற்போதைய நிலையில் தமிழ் மக்கள் எதிர்க்கட்சிகள் நிறுத்தும் வேட்பாளாருக்கு வாக்களிப்பார்கள் என்பது கண்கூடு. இந்த இடத்திலேதான் மேற்படி மாணவன் எழுப்பிய கேள்விகளுக்கான நீண்ட விளக்கம் ஒன்றை தமிழ்த் தலைமைகள் முன்வைக்க வேண்டும். சுய தேவைகளுக்கான வேலைத் திட்டங்களில் ஈடுபடாமல் அரசியல் ரீதியான அறிவுவையும், குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் வருகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏன் தமிழ் மக்களுக்கு சங்கடமான நிலை ஏற்படுகின்றது என்பது தொடர்பாக விளக்கமளிக்கும் போது தேசியம் பற்றிய புரிதல் இயல்பாகவே எழும்.
தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.