2014 ஒக்டோபர் 29ஆம் திகதி ஹல்துமுல்லைப், மீரியாபெத்த தோட்டத்தில் நிகழ்ந்த பேரழிவில் மலையகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களில் புகலிடம் தேட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. மலையத்தில் இத்தகைய ஆபத்தை எதிர்நோக்கியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதனால் பீதியடைந்துள்ளன.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போனவர்களாகக் கருதப்படுவோரின் குடும்பங்களின் வேதனையில் நாமும் பங்குகொள்கின்றோம். காயமுற்று, தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து, தங்கள் எதிர்காலம் பற்றிய நிச்சயமின்றி அகதி முகாம்களில் வாழ்வோருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இலங்கை மக்கள் ஒன்றிணைந்து வெளிப்படுத்திய துயரமும், அனர்த்தத்திலிருந்து தப்பிப் பிழைத்தோருக்கு நாடெங்கிலும் இருந்து வரும் உதவிகளும் எமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகின்றன. பாதிக்கப்பட்டோரை அக்கறையுடன் பராமரிக்கும் அதிகாரிகள், முகவர்கள் ஆகியோரின் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம். இன, மத பேதமற்று மக்கள் இத்துயரில் பங்குகொண்டமை நம் எல்லோருக்கும் பொதுவான மனிதப்பண்பு நம் எல்லோரையும் ஒன்றிணைப்பதை வெளிப்படுத்துகின்றது. இத்தகைய இயற்கை அனர்த்தங்கள் நமது சூழல் பராமரிப்புபற்றி நாம் சிந்திக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தகின்றன.

இது முற்றிலும் தவிர்த்திருக்கக் கூடிய ஒரு துயரம் என்ற உண்மை எம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றது. அரசும், உரிய அதிகாரிகளும் உரிய நேரத்தில் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இப்பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றியிருக்க முடியும். தமது பாராமுகம், அசட்டை என்பவற்றுக்காக அரசையும், தோட்டக் கம்பனியையும் (மஸ்கெலிய தோட்டங்கள்) நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். மலையகப் பெண்ணகள், ஆண்கள், குழந்தைகளின் இந்த மரணங்களுக்கு அரசாங்கமும் தோட்டக் கம்பனியுமே பொறுப்புக் கூறவேண்டும் என்று நாம் கருதுகிறோம்.

நேரடியாகப் பாதிக்கப்பட்ட சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள எட்டு அம்சக் கோரிக்கையை நாம் அங்கீகரிக்கின்றோம். அரசு அவர்களின் கோரிக்கைக்குச் செவிமடுத்து அவற்றை நிறைவேற்ற முன்வருகின்றதா என்பதைக் காண நாம் விரும்புகிறோம்.

மலையத் தமிழ் மக்கள் அரசியல், பொருளாதார, சமூக அடிப்படையில் ஓரங்கட்டப்பட்டதன் நேரடி விளைவே இப்பேரிழப்பு என்று நாம் கருதுகிறோம். அவர்கள், இலங்கை அரசு முழுமையாகப் பொறுப்பேற்காத பாராபட்சம் காட்டப்படும் ஒரு மக்கள் பிரிவாக உள்ளவரை, காணி, வீடு, மற்றும் ஏனைய உரிமைகளைப் பொறுத்தவரை அவர்கள் சமத்துவமாக நடத்தப்படுவது உறுதிசெய்யப்படாத வரை நிலைமையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது. சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசரத்தை வலியுறுத்தும் எச்சரிக்கை மணியோசையாக மீரியாபெத்தை கருதப்பட வேண்டும்.

சுமார் பத்தாண்டுகாலமாக கொடுக்கப்பட்டுவந்த தெளிவான, அழுத்தமான எச்சரிக்கைகளைப் புறக்கணித்து அரசு செயற்படாதிருந்தமை நம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மண்சரிவின் ஆபத்து பற்றியும் அதனால் பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்கள் பற்றியும் 2005ஆம் ஆண்டிலேயே அடையாளம் காணப்பட்ட போதிலும், அதைத் தொடர்ந்து NBRO பல மதிப்பீடுகளைச் செய்திருந்த போதிலும் அதைத் தடுப்பதற்கும் குறைப்பதற்குமான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதன் விளைவே இந்த மரணங்களும் பேரழிவும். குற்றத்தை வெவ்வேறு திணைக்களங்கள் மீது சுமத்துவதையிட்டு நாங்கள் வருந்துகிறோம். அரசே இதற்குப் பொறுப்பேற்கவேண்டும் என்றும் – இவ்வளவு காலமாகத் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாதவர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் – நாம் கோரிக்கை விடுக்கின்றோம். எதிர்வர இருக்கும் ஆபத்தும், மக்களை வெளியேற்றும் உத்தரவும் இறுதி நாட்களில்கூட பாதிப்புக்கு ஆளாக்கக்கூடிய மக்களுக்கு தேவையான அவசரத்தடன் தெரிவிக்கப்படவில்லை என்பது கவலைக்குரியது. பேரழிவுக்குக் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களையே குற்றம்சாட்டி சில அமைச்சர்களும் அதிகாரிகளும் வெளியிட்டுள்ள அறியாமைமிக்க அறிக்கைகளால் நாம் வருத்தப்படுகிறோம்.

தங்கள் தொடர்ச்சியான, பாரதூரமான அசட்டைக்காகத் தோட்டக் கம்பனியை நாம் கண்டிக்கிறோம். தோட்டச் சொந்தக் காரர்களையும் தேசத்தையும் வளப்படுத்துவதற்காக இந்தத் தோட்டங்களில் தலைமுறை தலைமுறைகளாகத் துயருற்ற தொழிலாளர்களின் உயிர்களும் நலன்களும் ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை என்பதையே இது காட்டுகின்றது. அவர்களுக்கு எதிரான தெளிவான சான்றுகள் இருக்கும்போது மண்சரிவு ஆபத்து பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் மறுப்பதும் வேறு பல பொய்கள் சொல்வதும் எமக்கு அதிர்ச்சி ஊட்டுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களையும் ஊடகங்களையும் சந்திப்பதற்கு அவர்கள் மறுப்பதும், தங்கள் செயற்பாடுகளுக்குப் பொறுப்பேற்க அவர்கள் மறுப்பதும் கண்டிக்கத்தக்கது. நடைபெற்ற துயரம்பற்றி இதுவரை பகிரங்க அறிக்கை எதையும் கம்பனி வெளியிடவில்லை. கம்பனி தமது பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வராவிட்டால் இப்பிரச்சினையை எழுப்புவதற்கு அவர்களின் உற்பத்தியை வாங்குவோரரையும் நுகர்வோரையும் நாடிச்செல்ல நாம் நிர்ப்பந்திக்கப்படுவோம்.

உயிர் இழப்பு, வாழ்வாதார இழப்பு, சொத்து இழப்பு ஆகியவற்றுக்குரிய நஷ்ட ஈடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களில் மீள் குடியமர்த்துதல் ஆகியவற்றுக்கான திட்டங்களை உடனடியாக அறிவித்து நடைமுறைப் படுத்துமாறு அரசையும் கம்பனியையும் நாம் கோருகின்றோம். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரங்களைத் தொடரக்கூடிய வகையில் கிட்டிய தூரத்தில் பாதுகாப்பான இடங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்றும், குறைந்த பட்சம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற தரத்தில் வீடுகளைக் கட்டுவதற்குரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டும் என்றும் நாம் கோருகின்றோம்.

2012, 2014ஆம் ஆண்டுகளுக்கான தேசிய வரவு – செலவுத் திட்டத்தில் மலையகத் தமிழர்களுக்குத் தருவதாக வாக்களிக்கப்பட்ட காணியும் வீடமைப்புத் திட்டமும் போதிய மூலவழங்களுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாம் கோருகின்றோம். வாக்குறுதிகளைத் தவிர இந்த நோக்கத்துக்காக ஒரு சதம்கூட ஒதுக்கப்படவில்லை என்பதை ஏமாற்றத்துடன் அறியத்தருகிறோம்.

ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட பொலிஸ் விசாரணையில் எமக்கு நம்பிக்கை இல்லை. மலையகத் தமிழ் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய உயர் தொழில் வாண்மையர், அனர்த்த அபாய நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட பக்கச்சார்பற்ற ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் – அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால அட்டவணை வழங்கப்பட வேண்டும் என்றும் – அவர்களின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாம் கோருகின்றோம்.

முழு மலையகப் பிரதேசத்தையும் உள்ளடக்கும் வகையில் அனர்த்த அபாயக் குறைப்புச் செயற்திட்டம் ஒன்று நிபுணர்களதும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய சமூகத்தினரதும் ஆலோசனையுடன் உருவாக்கப்பட்டு, அதை நிறைவேற்ற தேசிய முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் நாம் கோருகின்றோம். இதுபற்றித் தீர்மானிப்பதற்கு நாடாளுமன்றத்தில் ஒரு விசேட அமர்வுக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என தோட்டத் தொழிலாளர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களை நாம் கேட்டுக்கொள்கிறோம்.

நிவாரணப் பணிகளை வரவேற்கும் அதேவேளை, உடனடியான மீட்புப் பணிகள் பற்றியும் அதைத் தொடர்ந்த தேடுதல் நடவடிக்கைகள் பற்றியும் மீள்குடியமர்வுச் செயற்பாடுகள் பற்றியும் நாம் அக்கறை கொண்டிருக்கிறோம்.

ஐந்து நாட்கள் கழிந்த பின்னரும்கூட இறந்தவர்கள், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை பற்றி ஓரளவு உறுதியுடன் கூறமுடியாமை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சரின் பொறுப்புணர்வற்ற பெரிதும் வேறுபடுகின்ற ஏறுக்குமாறான கருத்துக்கள் என்பன மலையகத் தமிழ்மக்கள் பற்றிய மொத்தமான புறக்கணிப்பையே காட்டுகின்றன. மரணித்தவர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய சரியான தகவல்கள் ஊடகங்களில் தெளிவாகவும் பொறுப்புணர்வுடனும் கிரமமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.

தேடுதல் நடவடிக்கைகள் முப்படைகளால் மந்தகதியில் மேற்கொள்ளப் படுகின்றன. அதில் ஒரு அவசர உணர்வு காணப்படவில்லை. விசேட உபகரணங்களும், நிபுணத்துவமும் பயன்படுத்தப்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. பிரதேசம் பற்றிய அறிவும், மலைகளில் வேலை செய்த அனுபவமும் உடைய இப்பிரதேச மக்கள் இதில் பயன்படுத்தப்படவில்லை. அனுபவம் அற்ற இளம் இராணுவத்தினர் தோண்டுதல் நடவடிக்கையில் ஈடுபடும்போது அப்பிரதேசம் பற்றிய அனுபவமும் அறிவும் உடைய சமூகத்தினர் பார்வையாளர்களாக இருக்க நேர்வது ஒரு கவலைக்குரிய விடயமாகும். சர்வதேச ரீதியில் தொழில்நுட்ப உதவியைக் கோருவதும், பின் அனர்த்தத் தீர்மானங்கள் மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட சமூகம் பங்குகொள்வதும் சர்வதேசரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமமாகும்.

உடல்கள் எல்லாம் கண்டெடுக்கப்பட்டு கடைசி நபரின் விதியும் நிறுவப்படும்வரை தேடுதல் நடவடிக்கை தொடரவேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்பார்ப்பாகும். தேடுதல் நிறுத்தப்பட்டவிடுமோ என அவர்கள் அஞ்சுகின்றனர். தேடுதல் நடவடிக்கையின் முன்னேற்றம் பற்றி பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு கிரமமாகத் தெரிவிப்பது அதிகாரிகளின் கடமையாகும்.

நிவாரண முகாம்களின் நிருவாகம் முற்றிலும் சிவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதில் இராணுவத்துக்கு எவ்வித பங்கும் இருக்கக்கூடாது. முகாம்களுக்கு உள்ளும் வெளியிலும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு உரியது.

இராணுவத்தினர் தங்கள் நடவடிக்கைகளின் கட்டளைத் தளமாகக் கோயில் வளாகத்தைப் பயன்படுத்துவது, ஆரம்பத்தில் அவசியமாக இருந்திருப்பினும் இப்போது வணக்கத்தலத்தின் புனிதத்தைப் பேணுவதற்காக அது மாற்றப்பட வேண்டும். அவர்கள் கோயிலை விட்டு வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும்.

முகாம்களின் முகாமையாளர்களும் ஏனையோரும் முற்றிலும் சிங்களம் பேசுவோராக உள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்ட சமூகத்தினர் தமிழ்ப் பேசுவோராவர். அவர்களுக்கு இருமொழி அறிவும் உண்டு. தேவை மதிப்பீடு, மனநல ஆலோசனை, கருத்தறிதல், எதிர்காலச் செயற்பாடுகள் பற்றிய தொடர்பாடல் போன்றவை பாதிக்கப்பட்ட சமூகத்தினர் நன்கு அறிந்த மொழியில் நடைபெற வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நடமாட்ட சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்துத் தொடர்புகொள்ள அவர்களுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும்.

இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கி இருக்கும் குடும்பத்தினருக்கு அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றிய முழுத் தகவல்களும் வழங்கப்பட வேண்டும். பாடசாலைகளை விட்டு அவர்கள் எங்கு செல்ல இருக்கிறார்கள்? இடைக்கால ஒழுங்குகள் என்ன? அதன் தரம் எத்தகையது? தங்கள் பழைய இடங்களுக்கு அவர்கள் திரும்பிச் செல்ல முடியுமா? அவர்களுக்கு எங்கு நிலம் ஒதுக்கப்படும்? அது அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா? எப்போது அவர்களுக்கு நிலம் வழங்கப்படும்? எப்போது வீடுகள் கட்டப்படும்?

பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் பிரச்சினைகளைக் கையாளும்போது அகதிமுகாம் முகாமைத்துவம், மீள்குடியேற்றம் என்பவை தொடர்பாக முன்னைய அனர்த்த அனுபவங்களின்போது கற்ற பாடங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். தீர்மானங்களை மேற்கொள்வதில் பெண்களின் பங்குபற்றலுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். நிவாரண, மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அக்கறைகள் போதிய அளவு உள்வாங்கப்பட வேண்டும்.

பல சிவில் சமூகக் குழுக்கள் சார்பாக.