படம் | NPR
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அதை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் மறுபுறத்தில் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனாலும், அந்த ஆட்சி முறை மூன்றரைத் தசாப்தகாலமாக நடைமுறையில் நீடித்து வருகிறது. அந்தக் கோரிக்கை நீண்ட காலமாக வெகுஜனக் கோரிக்கையாக மேலெழும்ப முடியாமல் இருந்ததற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை அடையமுடியாமல் போனவர்களினாலும், என்றைக்குமே அப்பதவியை அடையக் கூடிய அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற முடியாதவர்களினாலும் அது முன்வைக்கப்பட்டதேயாகும்.
1994 பிற்பகுதியில் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒரு வருட காலத்திற்குள் ஒழிப்பதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்து தேர்தலில் பெருவெற்றி பெற்ற திருமதி சந்திரிகா குமாரதுங்க பத்து வருடங்கள் ஜனாதிபதியாக இருந்த பிறகு, மேலும் ஒரு வருட காலத்துக்கு அப்பதவியில் தொடர முடியவில்லையே என்ற கவலையுடன் தான் கதிரையை விட்டு இறங்கினார். அவருக்குப் பிறகு அதிகாரத்துக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் பதவிக் காலங்களுக்கு இருந்த அரசியல் அமைப்பு வரையறையையும் இல்லாமற் செய்து இப்போது மூன்றாவது பதவிக் காலத்துக்கு தேர்தல் களத்தில் இறங்கும் ஏற்பாடுகளில் இறங்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
ஜனாதிபதி ஆட்சி முறையின் காரணமாக நாட்டின் ஆட்சி நிர்வாகத்தில் எதேச்சாதிகாரத்தனம் படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது. இத்தகைய துரதிர்ஷ்டவசமான ஜனநாயக விரோதப் போக்கிற்கு இதுவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகித்தவர்கள் சகலரும் தங்களது ‘பங்களிப்பைச்’ செய்திருக்கிறார்கள். அண்மைக் காலமாக இந்த எதேச்சாதிகாரப் போக்கு ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழ் மேலும் தீவிரமடைந்து மக்களின் குடியியல் சுதந்திரங்களுக்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் பேராபத்தை ஏற்படுத்துகின்ற சூழ்நிலை தோன்றியிருக்கிறது.
இதன் விளைவாக ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டுமென்ற நீண்டகாலக் கோரிக்கை பெருமளவுக்கு வெகுஜன மயப்பட்டு வந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. எதிரணி அரசியல் கட்சிகளும் சிவில் சமூக இயக்கங்களும் மாத்திரமல்ல, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவக் கட்சிகளில் சிலவும் கூட அந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி பிரசார இயக்கங்களைத் தீவிரப்படுத்தியிருக்கின்றமை இதன் பிரகாசமான வெளிப்பாடே ஆகும்.
மூன்றாவது பதவிக் காலத்துக்கு மக்களின் ஆணையைக் கேட்பதற்கு முனைந்திருக்கும் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்புக் கோரிக்கை தொடர்பில் அரசியல் சமுதாயத்தின் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அதிகரித்து வருகின்ற உணர்வு நிலை ஆட்சியதிகாரத்தில் தொடர்வதற்கான தனது முயற்சிகளுக்குப் பாதகமாக அமைந்து விடாதிருப்பதை உறுதிசெய்யக் கூடிய அணுகுமுறை ஒன்றைக் கடைப்பிடிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார். அண்மையில் வட பகுதிக்கு விஜயம் செய்த அவர் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற வைபவத்தில் நிகழ்த்திய உரை இதை தெளிவாக வெளிக்காட்டுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் ஈழக் கோட்பாட்டைக் கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்கு முன்வரக் கூடிய முதல் ஆளாகத் தானே இருப்பார் என்று ஜனாதிபதி அங்கு கூறினார்.
உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஐந்து வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்ட நிலையிலும் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களினால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கக் கூடிய அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தங்களது மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக் கூடிய அதிகாரப் பரவலாக்கத்துக்கு வழிவகுக்கவல்ல அரசியல் இணக்கத் தீர்வொன்றே தங்களது குறிக்கோள் என்று நாட்டுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் திரும்ப திரும்பப் பிரகடனம் செய்திருக்கின்ற நிலையிலும் ஜனாதிபதியிடமிருந்து இத்தகைய கருத்து வெளிப்பட்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது.
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருக்கக் கூடிய அரசியல் செயற்பாட்டாளர் களினால் முன்வைக்கப்படுகின்ற எத்தகைய கோரிக்கைக்கும் உள்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களையோ அல்லது அவர்களின் அரசியல் பிரதிநிதிகளையோ பொறுப்பாளிகளாக்க முடியாது. அத்துடன், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் செயற்பாடுகளுக்கு எதிர்வினையாக அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற எத்தகைய நடவடிக்கையுமே உள்நாட்டுத் தமிழர்களையோ அவர்களின் அரசியல் பிரதிநிதிகளையோ இலக்கு வைப்பவையாக அமையவும் கூடாது.
மண்ணில் நிலவும் உண்மை நிலை இவ்வாறிருக்க ஜனாதிபதி ராஜபக்ஷ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்புக்கும் ஈழக் கோட்பாட்டுக்கும் இடையே வேண்டத்தகாத முடிச்சைப் போடுவதற்கு முனைந்திருப்பது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவரது பிரசாரங்கள் எத்தகைய திசை மார்க்கத்தில் அமையப் போகின்றன என்பதற்குக் கட்டியம் கூறி நிற்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக முன்னைய தமிழ் அரசியல் தலைவர்களினால் முன்வைக்கப்பட்ட ஈழக் கோரிக்கைக்கு சரிசம வலிமையைக் காட்டும் ஒரு அரசியல் வழிமுறையாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அன்றைய ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்தினார்கள் என்று தொனிக்கக் கூடியதான விசித்திரமான வியாக்கியானத்தையல்லவா ஜனாதிபதி ராஜபக்ஷ முன்வைக்கிறார்?
தென்னிலங்கை மக்கள் மத்தியில் சரிவு கண்டு வருகின்ற அரசின் செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டுமானால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்கு எதிரான உணர்வு நிலையை சிங்கள மக்கள் மத்தியில் தணிய விடாமல் வைத்திருக்க வேண்டுமென்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். இந்தச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட வியூகத்தின் தொடக்கமே ஜனாதிபதியின் கிளிநொச்சிப் பேச்சு என்பதில் சந்தேகமில்லை.
ஜனாதிபதி ராஜபக்ஷ இது காலவரையில் போட்டியிட்ட இரு ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் அவரின் பிரசாரங்கள் சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் எதிரான அரசியல் அணுகுமுறையின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னிறுத்தியே சிங்கள பௌத்த கடும் போக்கு சக்திகளையும் அணிதிரட்டிக் கொண்டு 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ பிரசாரங்களை முன்னெடுத்ததைக் காணக் கூடியதாக இருந்தது. உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து தென்னிலங்கையில் தீவிரமடைந்திருந்த இராணுவவாத அரசியல் உணர்வுகளையும், சிங்கள மக்கள் மத்தியில் தூண்டிவிடப்பட்ட போர் வெற்றிக் குதூகல மனநிலையையும் மூலதனமாகக் கொண்டே 2010 ஜனாதிபதித் தேர்தலை அவர் வெற்றி கொண்டார். எதிரணியின் பொதுவேட்பாளராக அத்தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டதாக தென்னிலங்கையில் ஆளும் கட்சியினர் பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டதையும் அப்போது காணக்கூடியதாக இருந்தது.
இப்போது 2015 ஜனவரியில் நடைபெறக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஈழக் கோட்பாட்டுப் பூச்சாண்டியைக் காட்டி சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்களை முடுக்கி விடுவதில் அவர் நாட்டம் கொண்டிருக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக தடைவிதிப்பதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் வழங்கிய தீர்ப்பு ஆளும் கட்சியினரால் தேர்தல் பிரசாரங்களின் போது உச்சபட்சத்துக்குப் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய வெளிநாட்டு நீதிமன்றத் தீர்ப்பொன்றினால் உள்நாட்டில் தமிழர் அரசியலில் சம காலத்தில் ஏற்படுத்த முடியாத தாக்கத்தைப் பற்றிய உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டு இனங்களுக்கிடையில் மேலும் குரோதத்தை வளர்க்கக் கூடியதாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் ஆபத்து இருக்கிறது.
சுருக்கமாகக் கூறுவதானால் இனக் குரோத அரசியலைத் தீவிரப்படுத்தினால்தான் தங்களுக்கு அடுத்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உண்டு என்று ஆட்சியாளர்கள் திட்டவட்டமாக முடிவெடுத்து விட்டார்கள்.
வீ. தனபாலசிங்கம்