படம் | The Daily Beast
1994ஆம் ஆண்டில் இருந்து எதிர்க்கட்சியாக இருப்பதால் இம்முறை எந்த வழியிலாவது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்றும் என்ற எதிர்பார்ப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகமாகவே இருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் தற்போது விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்களையே முன்வைக்க ஆரம்பித்துள்ளனர். இனவாதத்தின் அளவுகோளை உயர்த்துவதன் மூலமே அதிகாரத்தை கைப்பற்றலாம் என்பது இலங்கையில் பொதுவிதியாக இருப்பதால் ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்கள் தற்போது வெளிப்படுகின்றன.
ஜனாதிபதி கூறிய கருத்து
ரணில் விக்கிரமசிங்க லண்டன் சென்று புலம்பெயர் தமிழர்களையும் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளையும் சந்தித்தார் என்று சில அமைச்சர்கள் கூறுகின்றனர். சில சிங்கள நாளேடுகளும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன. ரணில் விக்கிரமசிங்க லண்டனுக்குச் சென்று அங்கு பலதரப்பட்டவர்களைச் சந்தித்தார் என்பது பொதுவான செய்தி. வெளிநாட்டுக்குச் சென்றால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பலரையும் சந்திப்பது வழமையானது. ஆனால், புலம்பெயர் தமிழர்களை அல்லது நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளை ரணில் சந்தித்தாரா இல்லையா என்பது தொடர்பாக சரியான தகவல்கள் இல்லை. இந்த நிலையில்தான் தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்டால் மாத்திரமே நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கலாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்றுமே இல்லாதவாறு வித்தியாசமான கருத்து ஒன்றை கூறியுள்ளார். ரணில் லண்டன் சென்று வந்த பின்னர் ஜனாதிபதி இவ்வாறான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைப்பதற்கும் தமிழ் ஈழ கோரிக்கையை கைவிடுவதற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. ஜனாதிபதி ஏன் அவ்வாறு கூறினார் என்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளன. ஜனாதிபதின் கருத்தை ஐக்கிய தேசிய கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. கோமாளித்தனமான அரசியல் பேச்சுக்களை கைவிட வேண்டும் என சரத்பொன்சேகாவும் கூறியுள்ளார். சாதாரண மக்களில் அனேகமானோர் எந்த ஒரு கருத்துக்களையும் ஆழமாக சிந்தித்து பார்த்து சரி பிழை எது என்பதை தீர்மானிப்பது மிகவும் குறைவு. ஜனாதிபதி அல்லது அரசியல்வாதிகள் புலிகள் தொடர்பாக எந்தக் கருத்தை கூறினாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பண்பு அனேகமான சிங்கள மக்களிடம் உள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி கூறியது
சில சிங்கள ஊடகங்களும் அதனை ஊதிப் பெரிதாக்கி விடுகின்றன. இவ்வாறன ஒரு சூழலில் புலிகள் தொடர்பான கருத்து ஒன்றை யார் முதலில் முன்வைக்கின்றனரோ அவருடைய கருத்து மாத்திரமே முதலில் மக்களிடம் போய் சேரும். அதற்குப் பின்னர் கொடுக்கப்படுகின்ற விளக்கங்கள் எதனையும் சாதாரண மக்களில் பலர் நம்புவதில்லை. இந்தப் பண்பை கடந்த கால தேர்தல்களிலும் காணக்கூடியதாக இருந்தது. ஆகவே, தமிழ் ஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க தயார் என ஜனாதிபதி வெளியிட்ட கருத்து சாதாரண மக்கள் பலரிடம் ஆழமாக ஊன்றியுள்ளது என்பதை சில சிங்கள ஊடகங்களின் செய்திகள் மூலமாக அறிய முடிகின்றது. அதேவேளை, மக்கள் நம்புகிறார்களோ இல்லையோ ஐக்கிய தேசிய கடசியும் பதிலுக்கு புலிகள் தொடர்பான கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளது.
சுவிஸ்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரக கட்டடத்தை புணரமைப்பு செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றை அரசு புலிகளின் முகவர்களுடன் செய்ததாகவும், ஆகவே புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பது யார் என்பதை மக்கள் அறிய வேண்டும் என்றும் கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார். இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை அரசில் உள்ள சில குழுக்கள் கையாள்வதாக மூத்த இராஜதந்திரி தமாரா குணநாயகம் கூறியதை அடிப்படையாக் கொண்டு புலிகளுடன் அரசுக்கு தொடர்பிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி இவ்வறு குற்றம் சுமத்துகின்றது.
இனப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை
ஆகவே, இனப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதை விட புலிகள் பற்றிய கதைகளை முன்னிலைப்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதே நோக்கமாக இருப்பதை இங்கு காணலாம். புலிகள் இயக்கம் உருவாவதற்கு முன்னர் 1956இல் பண்டாரநாயக்கா பேசிய இனவாதம், பிரித்தானியர் காலத்தில் அநகாரிக தர்மபால பேசி பௌத்த தேசியவாதத்தின் தொடர்ச்சியாக காணப்பட்டது. 1983இல் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஜே.ஆர். கூறிய தமிழ் பயங்கரவாதம், 2009ஆம் ஆண்டு மே மாதம் வரை வடக்கு – கிழக்கு பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களுக்கும், அங்கு இராணுவ முகாம் உள்ளிட்ட பௌத்த விகாரைகளை அமைப்பதற்கும் வலுச்சேர்த்தது. அதன் பின்னரான புலிகள் இல்லாத காலகட்டம் கடந்த 60 ஆண்டுகால சிங்கள குடியேற்றங்களை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கும் ஒற்றை ஆட்சித் தன்மையை நிலை நிறுத்தவும் வசதியாக அமைந்து விட்டது.
இந்த இடத்தில் இருந்துதான் பிரதான தேசிய கட்சிகள் எனக் கூறப்படும் ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தல் காலங்களில் ஏன் இனவாதத்தை பேசுகின்றனர் என்பதை அறிய முடியும். இலங்கையின் வெளியுறவுக் கொள்கை அரசின் சில குழுக்களினால் கட்டுப்படுத்தப்படுகின்றது என்பதை தமாரா குணநாயகம் கூறித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. அவருடைய பதவிக்குப் பிரச்சினை வந்து விட்டது என்பதால் அவர் தற்போது அவ்வாறு கூறுகின்றார். இலங்கையில் வெளியுறவுக் கொள்கை என்பது தமிழர் எதிர்ப்பு அரசியலுடன்தான் வரையறுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த பத்தியில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. ஜே.ஆர். காலத்தில் இருந்து இலங்கையின் இராஜதந்திர சேவை தமிழ் மக்களுக்கு எதிரான வேலைத்திட்டங்களுடன்தான் செயற்பட்டு வருகின்றது என்பதை கடந்த கால செயற்பாடுகள் மூலம் அறிய முடியும். இந்த நிலையில், தமாரா குணநாயகம் கூறிய மேற்படி கருத்தை முன்லைப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சி பிரச்சாரங்களை செய்யுமானால் அது ஜனாதிபதித் தேர்தலில் பாரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று கூற முடியாது.
தமிழ்த் தரப்பின் நிலை
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு பரிந்துரை செய்துள்ளமை ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சாரத்துக்கு சாதகமாக இருக்கலாம். ஆனாலும் ரணில் நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் பிரதிநிதிகளை சந்தித்தனால் எற்பட்ட விளைவுதான் இந்த தடை நீக்கம் என்றும் – இதன் காரணத்தினால்தான் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்க தமிழ் ஈழ கோரிக்கையை கைவிடுமாறு மஹிந்த ராஜபக்ஷ கூறினார் என்றும் – அமைச்சர்கள் கருத்துக்களை முன்வைத்தால் அது மக்களை இலகுவாக சென்றடையும். ஆகவே, தற்போதைக்கு சாதமான நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்டு எனலாம்.
இந்த இடத்தில் தமிழ் தரப்பு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றன. தமிழ் இனவாத்தை பேசி தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்குகளை பெறுகின்றது என்பது உண்மை. இனவாத்தை பேசி வெற்றிபெற்று அரசு என்ற தளத்தில் இருந்து கொண்டு மக்களுக்கு சிங்கள கட்சிகளால் ஏதாவது செய்ய முடியும். ஆனால், கூட்டமைப்புக்கு அது முடியாத காரியம். ஆகவே, தமிழ் மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தி தமது நிலைப்பாட்டை தொளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் சிங்கள கட்சிகள் அல்லது அமைச்சர் டக்ளஸ் தேவானந்த செய்வது பேன்று ஏன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் செய்ய முடியாது என்ற சாதாரண மக்களின் கேள்விகள் உண்மையாகி சரணாகதி அரசியலுக்கு வழிவகுக்கும் ஆபத்து ஏற்படலாம்.
தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.