படம் | NPR

ஊவா மாகாணசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றம் தொடர்பான விவாதங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கொழும்மை தளமாகக் கொண்டியங்கிவரும் சிவில் சமூக அமைப்புகள் மத்தியில் அவ்வாறானதொரு உரையாடல் இடம்பெறுகிறது. மேற்குலக இராஜதந்திர வட்டாரங்களும் இது தொடர்பில் கூர்ந்து அவதானிக்கின்றன. ஆனால், இப்படியாக கூர்ந்து நோக்கும், விவாதிக்குமளவிற்கு ஊவா தேர்தல் அப்படியென்ன ஆச்சரியமான பெறுபேறுகளை தந்துவிட்டது? இதற்கான பதிலை காணும் வகையில், முதலில் ஊவா தேர்தல் முடிவுகளை எடுத்து நோக்குவோம். ஊவா தேர்தலில் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349,960 வாக்குகளை பெற்று 19 ஆசனங்களைப் பெற்றிருந்தது. ஜக்கிய தேசியக் கட்சி 274,773 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களை பெற்றிருந்தது. மக்கள் விடுதலை முன்னனி 36,580 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை பெற்றிருக்கிறது.

ஊவா மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் 942,730. இதில் அளிக்கப்பட்ட வாக்குகள் 717,066. மேலும், நிராகரிப்பட்ட வாக்குகள் 34,269 ஆகும். இந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நோக்கினால் சுமார் 191,000 வாக்காளர்கள் எந்தவொரு தரப்பையும் ஆதரிக்க விரும்பவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் 75,133 மேலதிக வாக்குகளால் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றிருக்கிறது. வீதாசார அடிப்படையில் நோக்கினால், 51 வீதமான வாக்குகளையே ஆளும் கட்சி பெற்றிருக்கிறது. இந்தப் பின்னனியில் ஆளும் கட்சியின் வெற்றியை பெரியளவில் சிலாகித்து கூற முடியாதென்று ஒருவர் கூறுமிடத்து, அது சரியானதொரு கூற்றாகவே இருக்கும். ஏனெனில், ஆளும் கட்சி தன்னுடைய வெற்றியை பாரிய வாக்கு வித்தியாசமொன்றால் நிரூபித்திருக்கவில்லை. அந்த வகையில் ஆளும் கட்சி ஆட்டம் கண்டுவருவதான தோற்றம் தெரிகிறது. ஆளும் கட்சியின் செல்வாக்கு முன்னரைப் போல் இல்லையென்னும் அபிப்பிராயமும் நிலவுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை அரசியல் மூதலீடாகக் கெண்டிருந்த ஒரு கட்சியென்னும் வகையில் அந்த வெற்றியை, தொடர்ந்தும் ஒரு அரசியல் பிரச்சாரமாக்க முடியாதென்று ஒருவர் வாதிடலாம். இதில் ஒரளவு உண்மையில்லாமல் இல்லை. மக்கள் அன்றாட பிரச்சினைகளில் மூழ்கிக் கிடக்கின்ற சூழலில், உணர்வுபூர்வமான விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பில்லை என்பதில் உண்மையிருக்கிறது. ஆனால், அது முற்றிலும் உண்மையல்ல. அது ஏன் என்பதை இக்கட்டுரையின் பிற்பகுதியில் காண்போம்.

ஊவா தேர்தல் முடிவுகளின்படி பார்த்தால் ஆளும் கட்சி ஆட்டம் கண்டுவருவதான தோற்றம் தெரிகிறது ஆனால், ஊவா மாகாணத்தின் வாக்காளர்களை கருத்தில் கொண்டு நோக்கினால், மேற்படி முடிவு சிக்கலானதாகவே அமையும். ஊவா பல்லின வாக்காளர்களைக் கொண்ட ஒரு மாகாணமாகும். எனவே, பல்லின வாக்காளர்களை கொண்ட ஒரு மாகாணத்தில் ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ பெற்ற வெற்றியை ஒட்டுமொத்த மாகாணங்களுக்கும் பிரதியீடு செய்ய முடியாது. உதாரணமாக ஊவா மாகாணம் முற்றிலும் பெரும்பாண்மை மக்களைக் கொண்ட ஒரு மாகாணமாக இருந்திருப்பின், ஆளும் கட்சி ஆட்டம் கண்டுவருவதான முடிவு பெருமளவிற்கு சரியானதே! அந்த வகையில் ஏனைய சிறுபாண்மை மக்களின் ஆதரவையும் பெற்று ஆளும் கட்சியை தோற்கடிக்க முடியும். தனிச் சிங்கள மக்களின் ஆதரவை பிரதானமாக நம்பியிருக்கும் ஒரு அரசு என்னும் வகையில் சிங்கள மக்களின் ஆதரவு சரியுமிடத்து, நிச்சயம் அரசு ஆட்டம் காணவே செய்யும். ஆனால், ஊவா தேர்தல் முடிவுகளை நோக்குமிடத்து ஆளும் கட்சிக்கான சிங்கள மக்களின் ஆதரவு பெருமளவிற்கு சரியவில்லையென்றே தெரிகிறது. இந்த இடத்தில்தான் உணர்வுபூர்வமான விடயங்களை எடுத்து நோக்க வேண்டும். நான் ஏலவே குறிப்பிட்டது போன்று மக்கள் அன்றாட பிரச்சினைகளால் அழுத்தங்களுக்கு ஆளாகும் போது உணர்வுபூர்வமான விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என்பது உண்மையாயினும் கூட, இலங்கை அனுபவத்தில் தேர்தல் காலங்களில் அதிகம் உணர்வுபூர்வமான விடயங்களே மக்களை வசியப்படுத்துகின்றன.

இதனை விளங்கிக்கொள்வதற்கு நாம் தெற்கிற்கு செல்ல வேண்டியதில்லை. வடக்கு – கிழக்கு சூழலையே எடுத்து நோக்கலாம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பல்வேறு வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இறுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியில் சொல்லணா துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவர்களின் துயரத்தை துடைக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் உருப்படியாக எதனையும் செய்ய முடியவில்லை. ஆயினும், தேர்தல் என்றவுடன் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் பக்கமாகவே செல்கின்றனர். கூட்டமைப்பின் தேர்தல்கால கருத்துக்களின் அடிப்படையிலேயே வாக்களிக்கின்றனர். கூட்டமைப்பை எதிர்த்து பிரச்சாரம் செய்வோர் பலவாறான வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் கூட, அவர்களை மக்கள் ஏற்கவில்லை. இதன் மூலம் விளங்கிக்கொள்ள வேண்டியதென்ன? தமிழ் மக்கள் எவ்வாறு தங்களின் பொருளாதார பிரச்சினைகளை ஓரப்படுத்தி, கூட்டமைப்பிற்கு வாக்களிக்கின்றனரோ, அதே போன்றுதான் சிங்கள மக்களும் சிந்திப்பர். இந்தப் பின்னனியை முன்னிறுத்தித்தான் ஆட்சி மாற்றத்தை ஒருவர் எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழ் மக்களை எந்த இனவுணர்வு வழிநடத்துகிறதோ, அதே இனவுணர்வே சிங்கள மக்களையும் வழிநடத்துகிறது. இரு பக்கத்திலும் இந்த இனவுணர்வை உச்சளவில் கையாளும் ஆற்றல் பெற்றவரே அதிகாரத்தை கைப்பற்றுவர். உண்மையில் இது தற்போதிருக்கிற அரசியல்வாதிகளால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதொரு பாதையல்ல. மாறாக முன்னைய அரசியல்வாதிகளால் போடப்பட்ட பாதை. அந்தப் பாதையின் வழியாக நடந்து செல்வதைத்தான் தற்போதிருக்கிறவர்கள் செய்து வருகின்றனர். ஏனெனில், புதிய பாதையொன்றை போட்டு, அதில் பயணம் செய்வதைவிடவும் ஏற்கனவே போடப்பட்ட பாதையில் பயணிப்பது மிகவும் இலகுவானது. இந்த இலகுவான வழியை எவர்தான் புறக்கணிப்பர்?

ஒப்பீட்டளவில், இன்றைய சூழலில் சிங்கள மக்களின் இனவுணர்வுக்கு நெருக்கமானதொரு தலைவராக ஜனாதிபதி ராஜபக்‌ஷவே இருக்கிறார். அவரது தலைமையிலான அரசு குறித்தும், அவரது சகோதரர்கள் குறித்தும் என்னதான் எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்தாலும், அவ்வாறான விமர்சனங்களால் ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செல்வாக்கை பெருமளவிற்கு சரிக்க முடியவில்லை. இதற்கு எதிரணியில் ஒரு ஆளுமைகொண்ட தலைவர் இல்லாமையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். சமீபகாலமாக ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சியினர் ஆலோசித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் சிலரது பெயர்களும் வெளிவந்தன. எனினும், அவர்கள் எவராலும் ராஜபக்‌ஷ என்னும் மனிதருக்கு எதிராக சிங்கள மக்களை திருப்ப முடியுமா என்பது சந்தேகமே! இன்றும் தெற்கில் ஒரு ராஜபக்‌ஷ அலைதான் இருக்கிறது. அவருக்கு நிகராக ரணில் அலை, சந்திரிக்கா அலை அல்லது சோபித அலையோ இல்லை. ராஜபக்‌ஷவிற்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு அலையை தோற்றுவிக்கக் கூடிய தலைவர்களாக எவரையும் அடையாளம் காண முடியவில்லை. இந்த பின்புலத்தில் நோக்கினால் ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்படுவதென்பது, பலரும் விவாதிப்பது போன்று எளிதான ஒன்றல்ல.

ஜனாதிபதி ராஜபக்‌ஷ சிங்கள மக்களின் உணர்வுகளுக்கு நெருக்கமான தலைவராக இருப்பதற்கு பிறிதொரு காரணமும் உண்டு. ராஜபக்‌ஷ உலக நாடுகள் பலவற்றாலும் குறிப்பாக ஒட்டுமொத்த மேற்குலகாலும் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டிருந்த புலிகள் அமைப்பை இலங்கைக்குள் இல்லாமலாக்குவதில் வெற்றிபெற்றார். அந்த வெற்றி, கட்சி பேதங்களை கடந்து சிங்கள மக்களால் உளமாற அனுபவிக்கப்பட்டது. இனவுணர்வினால் வழநடத்தப்படும் மக்கள் இப்படியான வெற்றிகளை கொண்டாடுவது இயல்பான ஒன்றே! இதே வெற்றியை பிரபாகரன் பெற்றிருந்தால் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் அதனை உளமாற கொண்டாடியிருப்பர். ஆனால், சிங்கள மக்கள் உளமாற அனுபவித்த ஒன்றின் மீதுதான் தற்போது அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக நாடுகள் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன. இது சாதாரண சிங்கள மக்களை பொறுத்தவரையில் புலிகளை இல்லாதொழித்த எங்கள் தலைவர் மீது அந்நிய சக்திகள் வேண்டுமென்றே பழி போடுகின்றன, எங்கள் நாட்டுக்கு எதிராக சதிசெய்ய முயல்கின்றன, என்றவாறான பார்வையே கொடுக்கும். எனவே, எங்கள் தலைவரை நாங்கள் இந்த நேரத்தில் கைவிடுவது சரியானதுதானா என்னும் தார்மீக கேள்வியை எழுப்பும். ஜனாதிபதி ராஜபக்‌ஷ இந்த இனவுணர்வை சரியாக கையாளுமிடத்து, அவரை விழுத்துவது இயலாத ஒன்றாகவே அமையும். ஒருவேளை யுத்தத்திற்குப் பின்னரான சூழலில், மேற்குலக நாடுகள் இவ்வாறான அழுத்தங்களை முன்வைக்காது போயிருந்தால் சாதாரண சிங்கள மக்கள் பெருமளவிற்கு யுத்த வெற்றியை மறந்து போயிருப்பர். ஆனால், இன்றும் யுத்தத்தை ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பது ஜக்கிய நாடுகள் சபையும், மேற்குலக அமைப்புக்கள் மற்றும் தமிழ் புலம்பெயர் அமைப்புகள்தான்.

எனவே, அடுத்த வருடம் இடம்பெறவுள்ளதாக நம்பப்படும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரையில் அவரது முழுக் கவனமும் சிங்கள மக்கள் மீது மட்டுமே இருக்கும். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் என்னதான் பிரச்சாரங்களை மேற்கொண்டாலும், கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மீறி அவர்கள் சிந்திக்கமாட்டார்கள் என்பதை ராஜபக்‌ஷ நன்கறிவார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இது தெளிவாக நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். ஜனாதிபதி ராஜபக்‌ஷவை எதிர்த்து களமிறங்கிய சரத்பொன்சேகாவை கூட்டமைப்பு ஆதரித்தது. அந்த நேரத்தில் தமிழ் மக்களே தேர்தல் வெற்றியின் போக்கை தீர்மானிக்கக் கூடியவர்கள் என்னும் கணிப்பே தமிழர் தரப்பிடம் இருந்தது. அந்த நேரத்தில் பேசிய கூட்டமைப்பின் தலைவர் நாங்களே கிங்மேக்கர் ஆவோம் என்று கூறியதாக நினைவு. இறுதியில் கூட்டமைப்பின் முடிவு அதுவரை உறங்கிக் கொண்டிருந்த சிங்களவர்களையும் தட்டியெழுப்பி மகிந்த ராஜபக்‌ஷவின் பக்கமாக கொண்டு சேர்த்தது. எனவே, தமிழ் மக்களின் வாக்குகளை நிச்சயமாக தெற்கு கருத்தில் கொள்ளப்போவதில்லை. எனவே, கூட்டமைப்பு எத்தகைய முடிவை எடுப்பினும், அது குறித்து ராஜபக்‌ஷ கவனம் கொள்ளப்போவதில்லை. உண்மையில் நடக்கவுள்ள தேர்தல் சிங்கள இனவுணர்வை நிறுத்துப் பார்ப்பதற்கான ஒரு தேர்தலாகவே அமையும். இதுவரை இல்லாதளவிற்கு தெற்கின் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் களமிறங்கும் தேர்தலாகவே இது அமையும் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறான பவுத்த தேசியவாத அமைப்புக்களின் முன்னால் இருக்கும் ஒரேயொரு தெரிவு நிச்சயமாக ஜனாதிபதி ராஜபக்‌ஷவாகவே இருக்கும். இதனை விளங்கிக் கொண்டுதான் தமிழர் தரப்புக்கள் தங்களின் முடிவை அறிவிக்க வேண்டும். கூட்டமைப்பு எத்தகையதொரு முடிவை எடுப்பது, தமிழ் மக்களின் நலனுக்கு உசிதமானதாக அமையுமா என்பதை பிறிதொரு பத்தியில் பார்ப்போம். ஒரு வரியில் சொல்வதானால் ஆட்சி மாற்றமென்பது பலரது உள்ளம் அவாவுவது போன்று இலகுவான ஒன்றல்ல.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.