படம் | Groundviews
ஊவா பக்கமிருந்து வரும் செய்திகள் சிறப்பானதாக இல்லை. எமது மேன்மைதங்கிய அரசின் வாக்கு வங்கி மலைப்பகுதியில் கீழே சரிந்துள்ளது. இது என்னைப் போன்ற மிகவும் பொதுவான மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்குகள் தொடர்ந்தும் சரிவை சந்திக்குமெனில் என்ன நடக்கப் போகிறது? மிகவும் பொதுவான பெண்மணியான எனது மனைவி ஏற்கனவே இறுதிச் சடங்கு நடந்தது போன்று இருக்கிறாள். ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் அவள் சுவரிலுள்ள எமது மேன்மைதங்கியவரின் புகைப்படத்தை பார்ப்பதும் அழுவதுமாக இருக்கிறாள். எமது மேன்மைதங்கியவர் மரணித்துவிட்டது போன்று ஏன் அழுகிறாய்? ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் துரோகிகளையும் உதைந்து கொண்டு அவர் இன்னும் உயிருடன் தானே இருக்கிறார் என்று அவளிடம் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு எனது மனைவி, ஆமாம் ஆமாம் உண்மை. ஆனால், அவர் உதையை பெறுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது? என்று தெரிவிக்கிறாள்.
பயப்படுவதற்கு எதுவும் கிடையாது என்று சிலர் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்த வரையில் ஆளுமையை தவிர வேறொன்றும் கணக்கில் எடுக்கப்படுவதில்லை என்பதுடன், ரணில், அநுர மற்றும் பொன்சேகா அனைவரையும் ஒன்றாக சேர்த்து வெற்றிக்கொள்ள போதுமான பிரகாசமான ஆளுமை எமது மேன்மைதங்கியவருக்கு இருக்கிறது. தேநீர் கோப்பை சோதனை பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு யாருடன் தேநீர் அருந்த வேண்டும்? எமது மேன்மைதங்கியவருடனா அல்லது ரணிலுடனா? நிச்சயமாக எமது மேன்மைதங்கியவருடன் தானே? ஆனால், இது மிக வேடிக்கையான கேள்வி என்று நான் நினைக்கிறேன். ஒரு கோப்பை தேநீர் இலவசமாகவும் அதிக இனிப்புடனும் கிடைத்தால் எமது மக்கள் யாருடனும் தேநீர் அருந்துவார்கள். வழமையாக தேநீர் அருந்தாத மக்களும் கூட அது இலவசமாக கிடைத்தால் அதை பாலுடனும் சர்க்கரையுடனும் சேர்த்து அருந்துவார்கள். இலவசமாக நானும் கூட விசத்தைக்கூட சர்க்கரையில்லாமல் அருந்துவேன்.
ஊவா பகுதியில் அமோக பெரும்பான்மையுடன் வெற்றிப் பெறுவது ஏன் கடினம் என்பதற்கு இதுவும் சரியானதாகும். மக்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லை. அவர்கள் எமது மேன்மைதங்கியவரிடமிருந்து தையல் இயந்திரங்கள், துவிச்சக்கர வண்டிகள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற பல்வேறு இலவச பொருட்களை பெற்றுக்கொண்டு பின்னர் சென்று ஹரீனுக்கு வாக்களிக்கின்றனர். இதுவும் தேநீர் கோப்பை போன்றது தான். இலவசமாக கிடைத்தால் அதை பெற்று அருந்துவார்கள். ஆனால், கொடுத்தவரை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தையல் இயந்திரம், துவிச்சக்கர வண்டி மற்றும் முச்சக்கர வண்டி வழங்கப்படுவதற்கும் இதே நிலைமைதான்.
எமது மேனமைதங்கியவர் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனில், அவர் ஏனைய அனைத்திற்கு முன்னதாக இந்தப் பழக்கத்தை மாற்றி கொள்வது பற்றி சிந்திக்க வேண்டும். அப்படியெனில், என்ன செய்ய வேண்டும் என்று லெனின் போன்று நான் கேட்கிறேன். இதற்கான பதில் மிகவும் எளிதானது. அதாவது, வாக்கு கிடைப்பது நிச்சயமின்றி எதையும் வழங்க வேண்டாம். வீட்டில் உள்ள நாய் நாம் சொல்வதை செய்துவிட்டால் அதை நன்கு உபசரிப்பதுண்டு. சொல்வதை செய்யும் முன்னரே உபசரிப்பது வழமையில்லை. அப்படி தான் நாம் இதைப் பார்க்க வேண்டும். அரசு பலவற்றிலும் மக்களை நாய்கள் போன்று நடத்துகிறது. அப்படியென்றால் இது ஏன் வாக்கெடுப்பிலும் கூட இருக்கக்கூடாது. நான் என்ன சொல்கிறேன் என்றால், இலவச தையல் இயந்திரம் அல்லது ஏன் சலவை இயந்திரமோ அவர்களுக்குக் கொடுங்கள். ஆனால், அவர்கள் அரசுக்கு தான் வாக்களிக்கிறார்கள் என்பதை காட்டியதன் பின்னர் கொடுங்கள்.
இதை எப்படி செய்வது என்று நீங்கள் கேட்கிறீர்கள்? மீண்டும் அதேதான், மிக எளிதானது. நாம் தேர்தல் நடைமுறையை மாற்ற வேண்டும். இந்த வாக்களிப்பு தொடர்பான பிரச்சினை மிகவும் இரகசியமானது. யார் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் தான் இயந்திரங்களை பெறும் மக்கள் அவற்றை வழங்கியவர்களுக்கே உண்மையில் வாக்களிக்கிறார்களா என்று தெரிந்து கொள்வது என்பது கடினமான விடயமாகும். யார் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள கூடிய வகையில் இதை நாம் மாற்ற வேண்டும். நாட்டில் ஏனைய அனைத்தும் மிகவும் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் இருக்கின்றன. அமைச்சர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் பகிரங்கமாகவே தேர்தல் சட்டங்களை மீறுகின்றனர். தாங்கள் செய்யவில்லை என்று கூறும் போதே அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்பது வெளிப்படை. ஆகவே, வாக்கெடுப்பில் மட்டும் எதற்காக இரகசியம்?
இதை மாற்றுவது கடினமான விடயமல்ல என்று நான் உங்களுக்கு சொல்கிறேன். தேர்தல் தினத்தன்று காலை அரசு சமுர்த்தி சகாக்களை அல்லது நீலப் படையணியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை கூட வாக்களிக்கும் மக்களின் வீடுகளுக்கு அனுப்பி அவர்களுக்கு வாக்காளர் அட்டைகளை வழங்கி இந்த இடத்தில் வாக்களிக்குமாறு அவர்களிடம் கேட்க முடியும். (எதிரணி கட்சிகள் உடன் வர வேண்டியதில்லை. இது முழுமையாக நிதியளிக்கப்பட்ட அரச நடவடிக்கை. எதிர்க்கட்சியும் இதை செய்ய முடியும். ஆனால், அவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் மட்டும்). பின்னர் வாக்களிக்கப்பட்டதும் சமுர்த்தி சகாக்களும் நீல படையணி சிறுவர்களும் தங்களுக்கு வாக்களித்தது யார் என்பதை குறிப்பெடுத்துக் கொள்ள முடியும் என்பதுடன், யாருக்கு தையல் இயந்திரம் மற்றும் முச்சக்கர வண்டிகளை வழங்குவது என்பதை அரசு இதன் ஊடாக தெரிந்துகொள்ள கூடியதாக இருக்கும். அத்துடன், முச்சக்கர வண்டிகள், இயந்திரங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் என்பன சரியானவர்களின் கைகளுக்குச் செல்கின்றன என்பதையும் அவற்றை பெற்றுக்கொள்ளும் மக்கள் சரியாக செயற்படுகிறார்கள் என்பதையும் இந்த வழியில் தான் அரசு உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இது மிகவும் வெளிப்படையான முறையாகும்.
நாம் இதை செய்யும் போது வாக்களிப்பு தினத்தன்று சென்று வாக்காளர் அட்டைகளை அபகரிக்கவும் மக்களுக்கு அல்லது தேர்தல் கண்காணிப்பாளர் களுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தவும் வேண்டிய தேவை யாருக்கும் இருக்காது. சமுர்த்தி சகாக்களும் நீலப் படையணி சிறுவர்களும் அபகரித்தல் மற்றும் கண்காணித்தலை அவர்களாகவே செய்து கொண்டிருப்பார்கள். இது புதுமையானதும் மிகவும் புரட்சிகரமானதுமான முறையாக இருக்கும் என்பதுடன், வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்குகளை பெற்றவரது உத்தரவாதத்திற்கு சிறந்த உதாரணமாகவும் அமையும். ஏனைய நாடுகள், குறிப்பாக ஆபிரிக்காவிலுள்ள எமது நட்பு நாடுகளும் எம்மை பின்பற்றி மிகவும் வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல்களை நடத்த முடியும். எம்மை பின்பற்றுமாறு மேற்குல ஏகாதிபத்திய வாதிகளும் கூட வரவேற்கப்படுகின்ற போதிலும், அதற்கான தைரியம் அவர்களுக்கு இருக்கின்றது என்று நான் நினைக்கவில்லை.
“The Silva Elections” என்ற தலைப்பில் Groundviews இணையதளத்தில் வௌியான கட்டுரையின் தமிழாக்கமே மேல் தரப்பட்டுள்ளது.