படம் | Adaderana

ஊவா மாகாண சபைத் தேர்தலானது கடந்த சனிக்கிழமை 20ஆம் திகதி இடம்பெற்றது. பல கட்டங்களாக நடாத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களில் பிந்திய தேர்தலாக ஊவா மாகாண சபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பதுளை மாவட்டத்தில் 09 தேர்தல் தொகுதிகளிலும் மொனராகலை மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதிகளிலுமாக மொத்தம் 834 வாக்களிப்பு நிலையங்களில் 942,740 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

இலங்கையில் தேர்தலின் போது தேர்தல் தினத்தன்று இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே உரிய தேர்தல் நீதியான, சுதந்திரமான, அமைதியான தேர்தலா? இல்லையா? என்பதை தீர்மானிக்கின்ற ஒரு நிலைமையே காணப்படுகின்றது. ஆனால், இந்த நிலையில் சிந்திக்கின்ற மனப்பாங்கு மாற்றமடைய வேண்டும். ஏனெனில், ஒரு தேர்தல் வன்முறைகளற்ற, நீதியான, அமைதியான தேர்தலா என்பதை தீர்மானிப்பதில் தேர்தல் அறிவித்த தினம் தொடக்கம் நிறைவுபெறும் வரையில் நிகழும் அனைத்து சம்பவங்களுமே தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அப்படிப் பார்க்கும்போது ஊவா மாகாண சபைத் தேர்தலில் தேர்தல் தினத்தன்று பாரிய சம்பவங்கள் குறைவானதாக காணப்பட்டாலும் தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தேர்தல் தினத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியவையாகவே இருந்தன.

தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் கூடுதலாக ஆளும் அரசின் ஆதரவாளர்களே ஈடுபட்டிருந்தனர் என்பது மிகத் தெளிவாக இருந்தது. அதாவது, ஆகஸ்ட் 6ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் மாகாண சபை அமைச்சருமாகிய அனுர விதான கமகே மற்றும் அவரது சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தேனுக விதானகமகே உட்பட அவரது ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறும் வகையில் வாகனப் பேரணி ஒன்றை நடத்தியது மட்டுமல்லாது, தேர்தல் அலுவலர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் இந்த விடயம் தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டுருந்தன.

தேர்தல் பிரசார காலப்பகுதியில் எதிர்க்கட்சி வேட்பாளர்களது அலுவலகங்கள் தாக்கப்பட்டமை, அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டமை, தேர்தல் விதிகளை மீறும் வகையில் செயற்பட்டமை போன்ற செயற்பாடுகளில் அதிகமானவை அரச தரப்பினராலேயே மேற்கொள்ளப்பட்டது. மேலும், அரச சொத்துக்களின் பயன்பாடு எவ்வித தடையும் இன்றி இடம்பெற்றது. பொலிஸ் திணைக்களம் அரசிற்கு சார்பானதாக நடந்துகொண்டமை, நீதிமன்றம் தடுத்தும் வரட்சி நிவாரணம் வழங்கப்பட்டமை போன்ற இன்னோரான சம்பவங்கள் ஊவா மாகாண சபைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. அது மட்டுமல்ல வெளிமாவட்ட நபர்கள் இலக்கத்தகடுகளற்ற வாகனங்களில் சென்று தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டமையானது பிரதேசத்தில் வாழும் வாக்காளர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது.

ஒரு சந்தர்ப்பத்தில் தேர்தல் ஆணையாளர் தேர்தலை பின்தள்ளிப் போடும் அளவிற்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. நீதியான தேர்தலை நடாத்த வேண்டிய அரச பொறிமுறை பாதை தவறி செயற்பட்டது.

தேர்தல் தினத்தன்று இடம்பெற்ற சம்பவங்கள் கூட இந்த நிலைமையை வெளிப்படுத்தியது. பண்டாரவளை பொலிஸ் நிலையத்தினுள் வைத்து பண்டாரவளை நகரபிதா ஆளும் அரசின் அமைச்சரின் குண்டர்களால் தாக்கப்பட்ட போதிலும், ஒருவரேனும் இக்கட்டுரை எழுதும் வரையிலும் கைது செய்யப்படவில்லை.

பண்டரவளை நகர நகரபிதா அவரது அதிகார பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கப்படும் போது அவருக்குப் பாதுகாப்பு வழங்காத பொலிஸார் பொதுமக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவர் என்பது கேள்விக்குறியே. இப்படியான சூழ்நிலையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தேர்தல் தினத்தில் எவ்வித சம்பவமும் இடம்பெறவில்லை என்று கூறுவதும் வேடிக்கையான ஒரு விடயமே.

வேட்பாளர்களின் பெயர் மற்றும் இலக்கம் பொறிக்கப்பட்ட வாகனங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகாமையில் நிறுத்தியிருந்தமை, பிரதேசத்தில் சுற்றித் திரிந்தமை, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தாக்கப்பட்டமை, வாக்காளர்கள் வேட்பாளர்களின் பெயர் பொறிக்கப்பட்ட பஸ்களில் கொண்டு செல்லப்பட்டமை போன்ற சட்ட மீறல்கள் இடம்பெற்ற போதிலும் அதனைத் தடுக்கும் அளவுக்கு பொலிஸ் திணைக்களத்திற்கு தைரியம் இருக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக அரசு தமது முழுப் பலத்தையும் இட்டு களத்தில் போட்டியிட்ட ஒரு தேர்தலாகவே ஊவா மாகாண சபைத் தேர்தலை கருத முடியும். இத் தேர்தலில் இடம்பெற்ற வன்முறைகள், தேர்தல் விதி மீறல்கள் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தலையும் வாக்காளர்களின் வாக்குரிமையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

ச. மணிமாறன்,
கள ஒருங்கிணைப்பாளர்,
தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV)