படம் | Dbsjeyaraj
“பல ஆண்டுகளுக்கும் மேலாக, துப்பாக்கியின் நீண்டதொரு நிழலின்கீழ், எந்தவிதமான அர்த்தமோ நோக்கமோ இல்லாமல், சகல முனைகளிலிருந்தும் எழும் வன்முறையின் ஆதிக்கத்திலிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகுந்த ஆதங்கத்துடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் ஒதுங்கி நின்று இவை எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்கின்ற மக்களின் முகங்களையும் நாம் பார்க்க முடிகின்றது. இன்றைய சூழ்நிலையில் தெளிவாகச் சிந்தித்து ஆராய்வதென்பது நோய்வாய்ப்பட்ட நேரத்தில் நாங்கள் மேற்கொள்ளும் செயற்பாட்டை ஒத்ததாக இருக்கின்றது. எப்போதெல்லாம் நாம் எழுத நினைக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த யதார்த்தத்திற்குள் நாமும் புதைந்துபோய் விடுகின்றோம். புத்தி சுவாதீனத்தை இழந்து, எந்தவிதமான எதிர்ப்புணர்வுமின்றி, இந்தப் பயங்கரவாத, வன்முறைப் புதைகுழிக்குள் சமூகம் மூழ்கி அமிழ்ந்துவிட்டது என்றும் நாம் அஞ்சுகின்றோம். மனித ஆளுமைகள், ஆற்றல்களை எல்லாம் பறிகொடுத்துவிட்ட நிலைமையில் நமது சமூகம் இருக்கிறது… ஒதுங்கிப்போய் அமிழ்ந்து கொண்டிருக்கும் எமது சமூகத்திற்கு மீண்டும் புத்துதுயிரூட்ட சில வழிவகைகளைத் தேடுவதும், புறநிலை நோக்கும், விமர்சனபூர்வமான நேர்மையான நிலைப்பாடுகளை எடுத்து விளக்குவதும் இன்று மிக அவசியமாக உள்ளது. இதற்கு விலையாக எம்மில் சிலரின் உயிரும் பறிபோகலாம். இதனை விட்டால் நமது சமூகத்திற்கு வேறு மார்க்கமில்லை என்ற ரீதியிலேயே நாம் இதைக் கைக்கொண்டுள்ளோம்…”
– ராஜனி திராணகம – 1988
முறிந்த பனை (தமிழாக்கம், பயணி வெளியீடு – 2009, சில மாற்றங்களோடு)
தமிழ் சமுதாயத்தைப் பற்றி அன்று ராஜனி எழுதிய கருத்துக்களும் அவதானிப்புக்களும் இன்றையை எமது நிலைமைக்கு மிகவும் பொருத்தமானதாக அமைக்கின்றது. இந்த இக்கட்டான நிலைமையிலிருந்து மீண்டு, தமிழ் சமுதாயம் திரும்பவும் தலை தூக்குவதாயின் ஒரு சிலராவது சுதந்திரமாகச் சிந்திக்கத் தொடங்கவேண்டும். எல்லோரும் சிந்திக்கக் கூடிய ஒரு வாய்ப்பை, ஒரு வெளியை உருவாக்க வேண்டும்.
தமிழ் சமூகத்தின் தற்போதைய சிந்திக்கும் தன்மையை நோக்கினால், அது ஒரேவிதமாக, தனக்கு மிகவும் பரிச்சயமான, தனக்குப் பாதுகாப்பானது எனத் தான் கருதும் வழிகளில் தடம் மாறி, மிகவும் குறுகிய வட்டத்தினுள்ளே அகப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். மாற்றுக் கருத்துக்களோ, புரட்சிகரமான சிந்தனைகளோ, ஆரோக்கியமான கற்பனைகளோ, சுபீட்சமான எதிர்கால எண்ணக்கருக்களோ இல்லாது எமது சமூகம் காலத்துள் சிக்குண்டு, முழுமையாக உடைந்துபோய்த் தோற்கடிக்கப்பட்ட நிலையில் கிடக்கின்றது.
ஆயினும், சுதந்திரமாகச் சிந்தித்தல், புதிய யோசனைகளின் தோற்றம், மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தல், ஆரோக்கியமான காழ்ப்புணர்வில்லாத வகையிலான பிரதிவாதங்கள், கருத்து வேறுபாடுகளைச் சகித்துக் கொள்ளல், ஒருங்கிணைந்த பரிணாம உருவாக்கங்கள் போன்றனவே ஒரு சமூகத்தின் இயல்பான உயிர்த்துடிப்பை, ஆரோக்கிய இயக்கப்பாட்டை, அதன் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்றன.
எமது வரலாற்றை நாம் திரும்பிப் பார்ப்போமானால் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைப்போக்கானது இவ்வாறு ஒரு குறுகிய வட்டத்தினுள்ளே எப்பொழுதும் முடங்கிக்கிடக்கவில்லை என்பது தெளிவாகிறது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற முழக்கத்தின் ஊடாகவும், சைவ சமயத்தில் மட்டுமல்லாமல் புத்த, சமண, சாக்த, வைஷ்ணவ மற்றும் அண்மைக் காலத்தில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களிலும் முழு நம்பிக்கையுடன் ஈடுபாடுகாட்டி, அனுபூதிமான்களாக மதிக்கப்பட்ட பெரியார்களின் மூலமாகவும், மார்க்ஸிய இடதுசாரிச் சிந்தனை, விஞ்ஞானத்துறை போன்றவற்றில் வல்லுநர்களாக திகழ்ந்தவர்களுடாகவும் தமிழ்ச் சமூகம் தனது பரந்துபட்ட சிந்தனைப் போக்கை வெளிக்காட்டி இருந்தது. ஆயினும், அதே சமூகம் தனக்கு நேர்ந்த பல கசப்பான நிகழ்வுகளாலும், தன்னைத்தானே அடக்கி அழித்ததாலும் தற்பொழுது ஒரு கிணற்றுத்தவளையின் நிலைக்குத் தன்னைக் கொணர்ந்துள்ளது.
“அடக்கப்படுபவரின் மனம்தான் அடக்குமுறையாளர்களின் கையில் உள்ள பலமான ஆயுதம்” என்கிறார் ஸ்ரீபன் பிக்கோ (Stephen Biko).
ராஜனி திராணகமவும் தென்னாபிரிக்க கறுப்பின விடுதலைக்குப் போராடி உயிர்நீத்த ஸ்ரீபன் பிக்கோ போல் தனது மக்களை, இவ்வாறான குறுகிய சிந்தனைப் போக்கில் இருந்து விடுவிப்பதற்காகப் போராடி தனது உயிரையும் அதற்காகத் தியாகம் செய்த பெண்மணியாகத் திகழ்கின்றார். ராஜினியின் பரந்த சிந்தனைகளும், எழுத்துக்களும், ஆக்கங்களும், செயற்பாடுகளும் அப்பொழுது அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும், அதற்காகப் போட்டியிட்டவர்களுக்கும் சகித்துக்கொள்ள முடியாதவொன்றாக இருந்தது.
ஆரம்பத்தில் ராஜனி இடதுசாரி மார்க்ஸியக் கோட்பாடுகளை ஆழமாகப் படித்து ஆராய்ந்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச இடதுசாரி இயக்கங்களுடனும், அமைப்புக்களுடனும், குழுக்களுடனும் நெருங்கிய தொடர்புகளை வளர்த்து, அவர்களுடன் கூடிச் செயற்பட்டதன் மூலம் ஆயுதப்போராட்டத்தின் தேவையை ஏற்றுக்கொண்டார். ஆயினும், காலப்போக்கில் ஏற்பட்ட உளமுதிர்ச்சியினாலும், இயக்கங்களுடனான நெருங்கிய நேரடிச் செயற்பாடுகளினால் ஏற்பட்ட அனுபவங்களாலும், முக்கியமாக இலங்கைத் தமிழ் இயக்கங்களின் இடையே எழுந்த உட்பூசல்கள், சகோதரப் படுகொலைகள், கருத்துவேறுபாடுகள், மோதல்கள் முதலியனவற்றாலும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி, ஆயுதப்போராட்டத்தின் ஆபத்துக்களையும், நீண்டகால விளைவுகளையும் நன்குணர்ந்து கொண்டார். அதன் காரணமாக ஆயுதப்போராட்ட அணுகுமுறையை நிராகரித்து, அதனிலிருந்து விலகி நடந்துகொள்ள முயற்சித்தார்.
ஆயினும், அவர் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டுப் பணியாற்றினார். இதற்காக அவர் தான் வாழ்ந்த பாதுகாப்பான வெளிநாட்டுச் சூழலில் இருந்து இங்கு வந்து, தனது சொந்தக் குடும்ப நலன்களையம் கவனிக்காமல், இரவு பகலாக ஒடுக்கப்பட்ட, கஷ்டப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றினார். அக்காலப் பகுதியில் இருந்த போர், ஊரடங்கு போன்ற பயங்கரமான சூழ்நிலைமைகளின் போதும் சைக்கிளில் சென்று, விதவைகள், தாய்மார், ஒடுக்கப்பட்ட மக்கள், மாணவர்கள் என்று உதவி தேவைப்படுவோரைத் தேடிப்போய்ச் சந்தித்து, கவலைகளைப் பகிர்ந்து, பிரச்சினைகளைச், சவால்களை எதிர்கொள்ளும் வழிகள் பற்றி அவர்களோடு கலந்துரையாடி அவர்களுக்குத் தேவையான மன உறுதியை அளித்தார். அவர்களின் தேவைகளுக்காகவும், நீதிக்காகவும் அதிகாரிகளுடன் கையில் ஆயுதங்கள் இன்றி வாதப்போராடினார். அவர்களின் நிலைமைகளையும், துயரங்களையும் வெளியீடுகள், ஆக்கங்கள், நாடகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்து பதிவு செய்தார். இதேபோன்று வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், சாதிய ஒழுக்குமுறைகள், ஆணாதிக்கச் சிந்தனைகள் போன்றவற்றுக்கு எதிராகவும் ராஜனி பாடுபட்டார். பாதிக்கப்பட்ட பெண்களை ஒன்று சேர்த்து, அவர்களைக் குழுக்களாக இணைத்து, அவர்களுக்கான செயற்றிட்டங்களை, அமைப்புக்களை உருவாக்கி, சமூகமட்டத்தில் விழிப்புணர்வையும், திறந்த முற்போக்கான மனப்பான்மையினையும் ஏற்படுத்தப் போராடினார். இவ்வாறாகப் பொதுமக்களை முதன்மைப்படுத்தும் சமூக உருவாக்கத்திற்காக, ஒடுக்கப்பட்ட சிந்தனைகளுக்குள் இருந்து மக்களை விடுவிக்கும் செயற்பாடுகளைத் தனித்த ஒரு பெண்ணாக நின்று துணிச்சலுடன் அவர் மேற்கொண்டதை, அப்பொழுதிருந்த அதிகார வர்க்கங்களினால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
ராஜனி அப்பொழுது எழுதிய கருத்துக்களும், எடுத்த நிலைப்பாடுகளும், முன்வைத்த விமர்சனங்களும், நடாத்திய ஆய்வுகளும் எவ்வளவு தூரம் உண்மையான தீர்க்கதரிசனம் கொண்டவை என்பது இப்பொழுது புலனாகின்றது. நாம் இப்போது இருக்கும் நிலைமையைச் சற்று அவதானித்து, ஆராய்ந்து பார்த்தால், இன்றைய எமது நிலையானது அன்றிருந்த அந்தக் காலகட்டத்துடன் எவ்வளவிற்குப் பொருந்தி நிற்கின்றது என்பதைக் கண்டுகொள்ளலாம்.
இன்று எம்முடன் அவர் இருந்திருப்பின் எமது இக்கட்டான இந்தத் தருணத்தில் சமூகத்திற்குத் தகுந்த வழிகாட்டியாகவும், அருமையான தலைமைத்துவப் பண்பைக் கொண்டவராகவும் அவர் திகழ்ந்திருப்பார். துரதிஷ்டவசமாக, அக்காலத்து இளைஞர்களும், தலைவர்களும் அவரின் எச்சரிக்கைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் மனநிலையில் இருக்கவில்லை. அவரின் கருத்துக்களைச் செவிமடுத்திருந்தால் இவ்வளவு அவலங்களும் துயரங்களும் நடந்திருக்கத் தேவையில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.
ஆயுத மோதல்களும், இறப்புக்களும், இழப்புக்களும் ஓய்ந்து போயிருக்கின்ற இக்காலகட்டத்திலும் நாம் இனவாதத்துள்ளும், துவேசத்துள்ளும், பகைமையினுள்ளும், குரோத மனநிலையினுள்ளும் அகப்பட்டுக்கொண்டு, குறுகிய சிந்தனையுடன் கூடிய பார்வையைக் கொண்டவர்களாகவே இருக்கின்றோம். ஆயினும், இத்தகைய இயல்பினைக் குரோத மனநிலையினை எம்முள்ளே வைத்துக்கொண்டு, வெளியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் இடும் கட்டளைகளை ஏற்று நடக்கும் பணிவும் அடக்கமும் நிறைந்தவர்களாக, ‘இரட்டைவேடத்தன்மை’ உடையவர்களாக நாம் வாழ்ந்து வருகின்றோம். W.E.B Dubois என்ற கறுப்பின அமெரிக்க எழுத்தாளர் கூறுவது போல, நாம் ‘இரட்டைப் பிரக்ஞை’ உடையவர்களாக இருக்கின்றோம்.
நாணற்புல்லானது காற்றடிக்காத போது நிமிர்ந்து நிற்பதும், காற்றடிக்கும் போது அதன் திசைக்கு ஏற்ப சரிந்து கொடுப்பதுமாகத் தனது வாழ்வைத் தக்கவைத்துக் கொள்வது போலவும், விலாங்கு மீனானது மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டித் தப்பித்துக் கொள்வது போலவும் நாம் இரண்டு விதமான சிந்தனையிலும் வாழப் பழகியுள்ளோம். இது ஒருவிதமான இயைபாக்கமாகக் கருதப்பட்டாலும், நாம் அதற்குள் அளவுக்கு அதிகமாக மூழ்கிச் செல்வது பின்னடைவாகவே உள்ளது.
தெரிந்தோ, தெரியாமலோ அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தமது தனிப்பட்ட நலன்களுக்கு எம்மைப் பயன்படுத்துவதற்காக இனவாத உணர்வுகளைத் தூண்டி, அவற்றை வளர்த்து, பேணிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய தோற்றப்பாடுகளும், மனநிலைகளும், சிந்தனைகளும் நீடிப்பதற்கு அரச பயங்கரவாத வன்முறைகளும், பாகுபாடுகளும் துணைபோகின்றன என்பது மறுப்பதற்கு இல்லை. ஆயினும், நாம் இக்காலத்துச் சிக்கல்களிலிருந்து, முட்டுக் கட்டைகளில் இருந்து தப்புவதாயின், ஒரு சுபீட்சமான எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதாயின், எமது மனப் பிரக்ஞைகளை மேம்படுத்தி விடுதலை பெறுவதாயின், நாம் இவ்வாறான குறுகிய இனவாதக் கோட்பாடுகளில் இருந்து விடுபட்டுப் பரந்த சிந்தனைத் தடத்தினை நோக்கி எம் கால்களைத் திருப்ப வேண்டும்.
தமிழ்ச் சமூகம் முன்னேறுவதற்கும், அபிவிருத்தியடைவதற்கும் இவ்வாறான பிற்போக்கான சிந்தனைகளுக்கும் சக்திகளுக்கும் இடம்கொடுக்காமல் பரந்த மனிதநேய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ராஜனி போன்ற இந்தத் தளத்தில் சிந்திப்பவர்களைச், செயற்படுவர்களை எல்லோரும் மதித்து முன்னுதாரணமாக எடுத்தோமானால் காலப்போக்கில் எமக்கும் அது நன்மை பயக்கும்.
இக்கட்டுரை ராஜனி திராணகமவின் 25ஆவது வருட ஞாபகார்த்தமாக வெளிவருகின்றது.
பேராசிரியர் தயா சோமசுந்தரம்