படம் | AP PHOTO/Eranga Jayawardena, Firstpost
இந்தியப் பிரதமரை கூட்டமைப்பினர் சந்தித்திருக்கிறார்கள். வழமை போல இந்தியா 13ஆவது திருத்தத்தையே தீர்வாக முன்வைத்திருக்கிறது. மோடி வந்தால் மாற்றங்கள் வரும் என எதிர்பார்த்திருந்த தமிழர்களில் ஒரு பகுதியினர், மோடியும் எங்களை கைவிட்டு விட்டார் என்று வழமைபோல சலிக்கத் தொடங்கி விட்டார்கள். அதே சமயம் மோடி வந்தால் என்ன? யார் வந்தால் என்ன? இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை மாறவே மாறாது என்று தாங்கள் தீர்க்க தரிசனம் உரைத்ததை இன்னொரு தரப்பினர் நினைவு கூர்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் மாவை சேனாதிராஜா கூறுகிறார். மோடியோடு தாங்கள் கதைத்தவை எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாது என்ற தொனிப்பட. அதாவது, கூட்டமைப்பிற்கும் மோடிக்கும் இடையே ஏதோ இரகசிய டீலிங் நடந்திருப்பதான ஓர் ஊகத்தை இது தோற்றுவிக்கிறது.
ஆயின், காங்கிரஸ் அரசைப் போலவே மோடியின் அரசாங்கமும் 13ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக முன்வைக்கக் காரணம் என்ன? பின்வரும் காரணங்கள் இருக்கக் கூடும்.
காரணம் 1
இந்தியா போன்ற பெரிய நாடுகள் தமது வெளியுறவுக் கொள்கையை எடுத்த எடுப்பில் மாற்றி விட முடியாது என்பது. அவ்வாறு ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை அதிரடியாக மாற்ற வேண்டிய ஒரு பிராந்திய நிர்ப்பந்தமோ அல்லது அனைத்துலக நிர்ப்பந்தமோ இல்லையென்பது. பிராந்தியத்திலும் அனைத்துலக அளவிலும் வலுச்சம நிலைகளில் பெருந் திருப்பங்கள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை என்பது.
காரணம் 2.
மோடியின் முன்னுரிமைப் பட்டியலில் ஈழத் தமிழர்கள் விவகாரம் எந்த இடத்தில் உள்ளது என்பது.
மோடியை பொறுத்த வரை அவர் குஜராத்தில் இருந்து ஒரே பாய்ச்சலில் பிரதமராக வந்தவர். கட்சிக்குள் அவரை விட மூத்தவர்கள் பலர் உண்டு. எனினும், மோடி என்ற தனி மனிதனை முன்னிறுத்தியே வாக்கு கேட்கப்பட்டது. இந்நிலையில், கட்சிக்குள் தன்னைவிட மூத்த தலைவர்கள் மத்தியில் தனது ஸ்தானத்தை கேள்விக்கிடமற்ற விதத்தில் அவர் நிறுவ வேண்டியிருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இதுதவிர அவர் தனது வாக்காளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளின் பிரகாரம் பெரு வளர்ச்சியை குறுகிய காலத்துள் காட்ட வேண்டியிருக்கிறது. அப்படி செய்வதென்றால் அயலுறவுகளிலும் வெளியுறவுகளிலும் பதற்றமில்லாத ஒரு போக்கை உறுதிப்படுத்த வேண்டியிருக்கும். ஏறக்குறைய சீனாவில் டெங் சியாவோ பிங் கடைப்பிடித்ததைப் போல. சீனாவானது வெளிச்சோலிகளில் அதிகம் தலையிடவில்லை. வெளியுறவுகளிலும் இயன்றளவுக்கு பதற்றத்தைத் தவிர்த்தது. இதன் மூலமே இப்போதிருக்கும் பெருவளர்ச்சியைப் பெற்றது. மோடியும் இந்த உதாரணத்தைப் பின்பற்றுவாராக இருந்தால் அயலுறவுகளில் அதிகபட்சம் பதற்றத்தை தவிர்க்கவே முயல்வார்.
இப்படிப் பார்த்தால் பிராந்தியத்தில் நிலைமைகளை அதிகம் சிக்கலாக்காமல் உறவுகளைக் கையாள அவர் முற்படலாம். இது காரணம் இரண்டு.
காரணம் 3
ஈழத்தமிழர் விவகாரம் என்பது இந்தியா ஏற்கனவே கையைச் சுட்டுக்கொண்ட ஒரு விடயப் பரப்பாகும். எனவே, இது விஷயத்தில், மோடி தனது சொந்த முடிவுகளை எடுப்பதற்கு அவருக்கு கால அவகாசம் தேவைப்படக் கூடும். இது விஷயத்தில் சாம, பேத, தான, தண்டம், ஆகிய படிமுறைகளுக்கூடாகவும் அவர்கள் சிந்திக்கக் கூடும்.
காரணம் 4
இலங்கை அரசு மோடியை ஓரளவிற்கு அனுசரித்து போகும் ஒரு போக்கை வெளிக்காட்டியிருக்கிறது. திருகோணமலையில் விமானங்களை பராமரிப்பதற்கான ஒரு நிலையத்தை நிறுவுவதற்காக சீனாவிற்கு நிலம் வழங்கப்பட்டது ஒரு நெருடலான விவகாரமே. ஆனாலும் முன்னைய அரசோடு ஒப்புக்கொள்ளப்பட்ட, ஆனால், செயற்படுத்தப்படாத சில திட்டங்களை இலங்கை அரசு மோடியின் வருகைக்குப் பின் வேகப்படுத்தியுள்ளது. தவிர அவருடைய பதவியேற்பின் போது இரு நாட்டின் தலைவர்களும் ஒருவர் மற்றவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஒரு அரசுடைய தரப்புக்கு இது எப்பொழுதும் அனுகூலமான ஓர் அம்சம்தான்.
தொகுத்துப் பார்த்தால் மோடி பதவிக்கு வந்ததில் இருந்து இன்று வரையிலும் இலங்கை அரசானது, அவரை பெரியளவில் சீண்டக்கூடிய விதத்திலோ அல்லது அவருக்கு வீரம் காட்டும் விதத்திலோ முக்கிய திருப்பகரமான நகர்வுகள் எதையும் மேற்கொண்டிருக்கவில்லை. எனவே, மோடி, உடனடியான எதிர்நிலைப்பட்ட முடிவுகள் எதையும் எடுப்பதற்குரிய ஓர் அரசியற் சூழல் இதுவரையில் உருவாகவில்லை. இது காரணம் நான்கு.
காரணம் 5
சீன விரிவாக்கம் எனப்படுவது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலான ஒன்றுதான். ஆனால், அது நேட்டோ விரிவாக்கத்தைப் போல ஒரு படைத்துறை விரிவாக்கம் அல்ல. மாறாக அது ஒரு வர்த்தக விரிவாக்கமே. அது தொடர்ந்தும் வர்த்தக விரிவாக்கமாக இருக்கும் வரை முரண்பாடுகள் சந்தைப் போட்டிகளாகவே இருக்கும். இவ்வாறு வெவ்வேறு துருவ இழுவிசைகளுக்கு இடையிலான சந்தைப் போட்டிகளால் உருவாக்கப்படக் கூடிய ஒரு உலக ஒழுங்கானது பல துருவ பல்லரங்க உலக ஒழுங்காக அமையக்கூடும் என்பதை ஆய்வாளர்களும் விமர்சகர்களும் ஏற்கனவே விவாதிக்க தொடங்கி விட்டார்கள்.
இத்தகையதொரு பின்னணியில் சீன விரிவாக்கத்திற்கு எதிரான நகர்வெதுவும் படைத்துறை பரிமாணத்தை பெறுவதற்கான உடனடி வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகின்றன. எனவே, சீனாவை முன்னிறுத்தி இலங்கை அரசு இந்தியாவுடனான தனது பேரம் பேசும் சக்தியை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கும் ஒரு பின்னணியில் தமிழ் மக்களை ஒரு கருவியாக கையாண்டு இந்தியா இலங்கை அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்குரிய எத்தனங்களும் உடனடிக்கு குறைவாகவே தென்படுகின்றன.
இதனால், இந்திய சீன முரண்பாடானது தமிழர்களுக்குச் சாதகமான ஒரு தீவிர நிலையை பெறும் பிராந்திய சூழல் உருவாகாத வரை ஈழத்தமிழர்கள் தொடர்பிலான இந்திய அணுகுமுறையிலும் திருப்பகரமான மாற்றங்கள் ஏற்படுவதற்கில்லை. இது காரணம் ஐந்து.
காரணம் 6
தமிழர்கள் விவகாரம் இப்பொழுது ஓர் எரியும் பிரச்சினையாக இல்லை என்பது. 2009 மே வரை ஒரு யுத்த களம் இருந்தது. எனவே, அது ஓர் எரியும் பிரச்சினையாக இருந்தது. ஆனால், இப்பொழுது அப்படியல்ல. ஆண்டுகள் தோறும் ஜெனிவாவை நோக்கி நம்பிக்கைகள் கட்டியெழுப்பப்படுவதும், ஜெனிவா தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின் நம்பிக்கைகள் நொறுங்கிப் போவதும் அல்லது சலித்துப் போவதுமான ஏற்ற இறக்கமான ஒரு உணர்வுச் சூழலே கடந்த ஐந்தாண்டுகளாக நிலவி வருகின்றது. இது தவிர தேர்தல்களின் போது கூட்டமைப்பு உற்பத்தி செய்யும் இனமான அலைகளும் தேர்தல் முடிந்தபின் வற்றிப் போய் விடுகின்றன. இவ்வாறாக ஜெனிவாவை நோக்கியும், தேர்தல்களை நோக்கியும் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புக்களும் பொங்கியெழுவதும் வடிவதுமான ஒரு பின்னணியில் ஈழத் தமிழர்கள் படிப்படியாக சலிப்படைந்து வருகிறார்கள். அவர்களுடைய அரசியல் ஈடுபாடும் குறைந்து வருகிறது.
தமிழ் மக்களின் பெருமளவிலான ஆணையைப் பெற்ற கூட்டமைப்புதான், பிரச்சினையை அதன் தீவிர நிலையில் அல்லது எரியும் நிலையில், அதாவது, நெருப்பை அணைய விடாமல் வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்களிடம் அதற்கு வேண்டிய அரசியல் இலக்கோ, அரசியல் தரிசனமோ, செயற்பாட்டு ஒழுக்கமோ கிடையாது. நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே கூட்டமைப்புக்கு அரசியல் ஏதும் கிடையாது. இவை காரணமாக ஈழத் தமிழர் விவகாரம் தணிந்து செல்லும் ஒரு பிரச்சினையாக மாறி வருகிறது.
ஆண்டு தோறும் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர்களின் போது அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் முடுக்கி விடுவதனால் தான் தமிழ் அரசியல் அனைத்துலக அரங்கில் ஒரு பேசு பொருளாக இருக்கிறதே தவிர கூட்டமைப்பு செய்த தியாகங்களாலோ அல்லது அதன் கெட்டித்தனங்களாலோ அல்ல.
இப்படியாக ஈழத் தமிழர் விவகாரம் காஸாவைப் போலவோ அல்லது சிரியாவைப் போலவோ ஓர் எரியும் பிரச்சினையாக இல்லாத வரை அதற்கு ஓர் உடனடித் தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று அனைத்துலக சமூகமும் சிந்திக்காது. இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் மோடியின் முதன்மைத் தெரிவு பட்டியலில் ஈழத்தமிழர் விவகாரம் எங்கே வைக்கப்படக்கூடும்? இது காரணம் ஆறு.
காரணம் 7
இந்திய – இலங்கை உடன்படிக்கையில் தப்பிப் பிழைத்திருக்கும் ஒரு பதாங்க உறுப்பே 13ஆவது திருத்தமாகும். ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலத்திற்கு முன் செய்யப்பட்ட ஓர் உடன்படிக்கை அது. அதன் விளைவாக உருவாகியதே 13ஆவது திருத்தம். இலங்கை – இந்திய உடன்படிக்கையானது இச்சிறிய தீவின் மீது இந்தியாவுக்கிருக்கும் மேலாண்மையை ஏற்றுக்கொள்கிறது. ஆனால், அது செய்யப்பட்டு 27 ஆண்டுகள் கடந்துவிட்டன. அது செய்யப்பட்ட போது இருந்த உலக ஒழுங்கு வேறு. இப்போதுள்ள உலக ஒழுங்கு வேறு. இப்போதுள்ள நிலைமைகளின் படி இலங்கை அரசு வெளியே போ என்று சொன்னாலும் சீனா வெளியேறுமா என்பது சந்தேகமே. இப்படிப் பார்த்தால் இந்திய – இலங்கை உடன்படிக்கை செய்முறையில் இல்லை என்றே அர்த்தம்.
இந்நிலையில், அந்த உடன்படிக்கையின் தப்பிப்பிழைத்திருக்கும் ஓர் உறுப்பாகிய 13ஆவது திருத்தத்தை ஒரு அடிப்படையாக கொள்வதன் மூலம் அந்த உடன்படிக்கையின் இதயமான பகுதியை, அதாவது, இலங்கைத் தீவின் மீதான இந்தியாவின் மேலாண்மையை மீள உறுதிப்படுத்த இந்தியா முயல்கிறதா? என்ற கேள்வி இங்கு முக்கியம். இது ஏழாவது காரணம்.
காரணம் 8
தமிழர்களுடைய பேரம் பேசும் சக்தி மிகக் கீழ் மட்டத்தில் இருக்கிறது என்பது. ஏற்கனவே, பார்க்கப்பட்ட ஆறாவது காரணத்தின் தொடர்ச்சியே இது. ஒரு மக்கள் கூட்டத்தின் அரசியல் அபிலாஷைகள் எரியும் விவகாரமாக இருக்கும் வரை அவற்றிற்கு பேரம் பேசும் சக்தியும் உயர்வாக இருக்கும். இல்லையென்றால் அது கீழே போய்விடும். 27 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்களால் நிராகரிக்கபபட்ட ஒரு தீர்வே மாகாண சபையாகும். அதற்கும் பல ஆண்டுகளின் பின் திருமதி. சந்திரிக்கா ஒரு தீர்வுப் பொதியை முன்வைத்தார். புலிகள் இயக்கம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கும் பல ஆண்டுகளின் பின் ஒஸ்லோ பிரகடனம் கைச்சாத்திடப்பட்டது. புலிகள் இயக்கம் பின்னர் அதிலிருந்தும் பின்வாங்கியது. இறுதியிலும் இறுதியாக புலிகள் இயக்கம் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ஒன்றுக்கான யோசனைகளை முன்வைத்தது. இது நடந்து ஏறக்குறைய ஒரு தாசப்த காலத்தின் பின் இப்பொழுது எல்லாமே பின்னோக்கி சென்றிருக்கிறது. இது எதைக் காட்டுகிறது? தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி மிகக் கீழ் மட்டத்தில் உள்ளது என்பதைத்தான். கடந்த ஐந்தாண்டுகளாக தமது பேரம் பேசும் சக்தியை கட்டியெழுப்ப கூட்டமைப்பு தவறி விட்டது. அதற்கு மக்கள் வழங்கிய மகத்தான ஆணையின் மீது அவர்கள் அதை செய்திருக்கலாம். ஆனால், அப்படி செய்யவில்லை. பேரம் பேசும் சக்தி இல்லையென்றால் வெளியார் தரும் தீர்வுகளை மறுப்பின்றி ஏற்க வேண்டியதுதான்.
சொத்துக்களையும், சுகங்களையும், சந்ததிகளையும் வெளிநாடுகளில் வைத்துக் கொண்டிருக்கும் தலைமைகளாலும், கொழும்பில் இழக்கப்பட முடியாத நிலையான நலன்களை வைத்துக்கொண்டிருக்கும் தலைமைகளாலும் விட்டுக்கொடுப்பின்றி பேரம் பேச முடியுமா? இது எட்டாவது காரணம்.
மேற்கண்ட எட்டு பிரதான காரணங்களையும் ஏனைய உப காரணங்களையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு தெளிவான சித்திரம் எமக்குக் கிடைக்கும். தமிழ் மக்களின் அரசியலானது 27 ஆண்டுகள் பின்னோக்கிச் சறுக்கியுள்ளது. யுத்த காலங்களில் தமிழ் மக்கள் காலாவதியான பல மருந்துகளையும் விழுங்கியிருக்கிறார்கள். இப்பொழுது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் காலாவதியான ஓர் அரசியல் தீர்வை விழுங்க வேண்டியிருக்கிறதா?
இப்படியே போனால் இராஜதந்திரப் போர் என்பதற்கு தமிழ் அரசியல் அகராதியில் பின்னோக்கி பாய்தல் என்ற ஒரு புதிய விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கும். அப்படி ஒரு நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கே உரியது.
மோடியும், 13ஐ பற்றித்தான் பேசக் கூடும் என்பது ஓரளவிற்கு முன்கூட்டியே அனுமானிக்கக் கூடியதாக இருந்தது. மேற்கண்ட எட்டுக் காரணங்களுக்கு ஊடாகவும் அதை முன்னணுமானித்திருக்கலாம். ஆயின், அவ்வாறான ஓர் உரையாடலின் போது வட மாகாண முதலமைச்சருக்கு ஓர் இன்றியமையாத பாத்திரத்தை வழங்கியிருந்திருக்கலாம்.
இனப் பிரச்சினைக்கான தீர்வில் மாகாண சபை என்ற விடயப் பரப்பில் ஆகப்பிந்திய சுமார் 10 மாத கால அனுபவத்தை கொண்டவர் அவர். மாகாண கட்டமைப்பின் இயலாமைகள் குறித்து ஒரு ஓய்வுபெற்ற நீதியரசர் சாட்சியம் அளிக்கும் போது அதற்கொரு கனதியிருக்கும். எனவே, கூட்டமைப்பின் தூதுக்குழுவில் அவரையும் உள்ளடக்கியிருந்திருக்க வேண்டும். அவருக்கென்று பிறிதொரு சந்திப்பை ஏற்பாடு செய்யப்போவதாக இப்போது கூறப்படுகிறது. ஆனால், முதல் சந்திப்பிலேயே மாகாண கட்டமைப்பின் இயலாமையை மோடிக்கு காட்டியிருந்திருந்தால் அது ஒரு புத்திசாலித்தனமான தொடக்கமாக இருந்திருக்கும்.
27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபை உருவாக்கப்பட்ட போது அதற்கு பங்களித்தவர்களில் ஒருவரும், அம்மாகாண சபையின் மிக உயர் நிர்வாக பொறுப்பில் இருந்தவருமாகிய ஒருவர் எண்பதுகளின் முற்கூறில் இந்திய வெளியுறவுச் செயலர் ஒருவரோடு உரையாடிய போது செயலர் பின்வருமாறு தொனிப்பட சொன்னாராம்… “உங்களுடைய மிதவாத தலைவர்கள் எங்களிடம் வந்து Do Some Think -எதையாவது செய்யுங்கள் – என்று கேட்கிறார்கள். உங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் உங்களிடம் தான் ஒரு தீர்வு இருக்க வேண்டும். ஆனால், உங்கள் தலைவர்கள் அவ்வாறில்லை. அவர்கள் – Inept – திறமையற்றவர்களாக காணப்படுகிறார்கள்” என்று.
இப்பொழுது கூட்டமைப்பின் முறை, மேற்கண்ட வெளியுறவு செயலர் வர்ணித்ததைப் போன்ற தலைவர்கள் தாங்கள் அல்ல என்பதை அல்லது மோடி புகழ்ந்தது போல மதிப்புக்குரிய தலைவர்கள் தாங்கள் என்பதை அவர்கள் தமது மக்களுக்கு நிரூபித்துக் காட்டவேண்டிய வேளை வந்து விட்டது. நிரூபித்துக் காட்டுவார்களா?
தினக்குரல் பத்திரிகைக்காக நிலாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.