படம் | Thehindu
நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டடைப்பின் புதுடில்லி விஜயம் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கிறது. இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் குழுவினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் டோவல் மற்றும் இந்திய வெளிவிவகார செயலர் சுஜாதா சிங் ஆகியோரை சந்தித்தித்து பேசியிருக்கின்றனர். இதில் பிரதமர் மோடியுடனான சந்திப்பே முக்கியமானது. கூட்டமைப்பின் புதுடில்லி விஜயம் தொடர்பில் தெற்கில் உள்ள அரசியல் விமர்சகர்கள் பல்வேறுபட்ட பார்வைகளை பதிவு செய்திருக்கின்றனர். ஒரு சிலரோ கூட்டமைப்பின் புதுடில்லி விஜயத்தால் அரசு எரிச்சலடைந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர். இன்னும் சிலரோ இது கொழும்பிற்கானதொரு தெளிவான செய்தி என்கின்றனர். இது பற்றி அபிப்பிராயம் வெளியிட்டிருக்கும் தெற்கின் மூத்த இராஜதந்திரியும் அரசியல் கருத்தியலாளருமான தயான் ஜெயதிலக, மேற்படி சந்திப்பின் மூலம் மோடி அரசு கொழும்பின் வீங்கிப் போய்கிடக்கும் தலையின் மீது ஜஸ் தண்ணீரை ஊற்றியுள்ளதாக தெரிவித்திருக்கின்றார். கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இப்படிப்பட்ட எத்தனையோ அபிப்பிராயங்களை நாங்கள் செவியுற்றிருக்கிறோம். விடயங்களை தமிழர் நிலையில் நின்று பார்க்க வேண்டியதே அவசியம். இதனை தமிழ்நிலை நின்று நோக்கினால் ஆச்சரியப்பட ஏதும் இல்லை எனலாம். மாறாக ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட விடயங்களே நடைபெற்றுள்ளன. இது பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இப்பத்தி தெளிவாக பதிவுசெய்தே வந்திருக்கிறது. அதாவது, தமிழர் பிரச்சினையின் மீதான புதுடில்லியின் கரிசனையென்பது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் வாயிலாக நடைமுறைக்கு வந்த 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே அமைந்திருக்கும். அதுவே இந்தியாவின் தமிழர் மீதான காதலின் எல்லைக் கோடாகும். இதில் தமிழர் தரப்பின் விருப்பு, வெறுப்புக்கள் என்பது வேறு விடயம். இந்த விடயங்கள் மிகவும் தெளிவாக தற்போதைய சந்திப்பின் போது சொல்லப்பட்டிருக்கிறது.
மோடி தனது பதவியேற்பின் போது பங்குகொண்ட இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மோடி எதனை குறிப்பிட்டாரோ, அதனையே தற்போது இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பிடமும் தெரிவித்திருக்கின்றார். அதாவது, 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும். இதனைத்தான் முன்னர் இந்தியாவின் மத்தியில் ஆட்சியமைத்திருந்த காங்கிரஸ் கட்சியும் குறிப்பிட்டு வந்தது. புதுடில்லிக்கு பயணமாவதற்கு முன்னர் கருத்துத் தெரிவித்திருந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இலங்கை அரசு இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதியை மீறிவிட்டதை தாம் வலியுறுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், கூட்டமைப்பின் பிறிதொரு முக்கிய தலைவரான சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்தியன் எஸ்பிரஸ் பத்திரிகைக்கு தமது விஜயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோது, தமது கட்சியின் வேண்டுகோளுக்கு ஏற்பவே மேற்படி சந்திப்பு இடம்பெறுவதாகவும், இதன்போது தற்போதைய வடக்கு – கிழக்கு மாகாண நிலைமைகளை தாம் எடுத்துரைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், தற்போதைய இந்திய அரசு தமிழர் பிரச்சினை தொடர்பில் முன்னைய காங்கிரஸ் அரசின் கொள்கையை தொடருகிறதா அல்லது புதிய வழியில் விடயங்களை அணுக முற்படுமா என்பதை அறிவதில் தாம் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் சுரேஸ் குறிப்பிட்டிருந்தார். சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஆர்வம், கூட்டமைப்பின் ஆர்வமாகவும் இருந்திருப்பின், அவர்களின் எதிர்பார்ப்பை புதுடில்லி நிறைவேற்றி இருப்பதாகவே கொள்ளலாம்.
கூட்டமைப்பு 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தெளிவானதொரு நிலைப்பாட்டை வெளிப்படுத்த தயங்கிவரும் நிலையிலேயே மோடி தலைமையிலான இந்தியா தனது எல்லையை தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கிறது. இனி முடிவு எடுக்க வேண்டியது கூட்டமைப்பேயன்றி இந்தியாவல்ல. ஆனால், இங்கும் ஒரு சிக்கலுள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல் என்னும் பொருளில் இந்தியா உதவி வழங்குவதாயினும் கூட, அதனை ஒரு பாய்ச்சலில் செய்துவிட முடியாது. முதலில் இது தொடர்பில் மஹிந்த அரசிற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் அல்லது அத்தகையதொரு புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு இடையீட்டாளராக இந்தியா பணியாற்ற வேண்டும். இவைகள் எடுத்த எடுப்பில் நிகழக் கூடியவையல்ல. இந்த விடயங்களும் கூட்டமைப்பு-மோடி சந்திப்பின் போது மறைமுகமாக தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன.
எனவே, இன்றைய சூழலில் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும் தமிழர் தரப்பு உற்றுநோக்க வேண்டியிருக்கிறது. தற்போது 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழாக மாகாண சபை குற்றுயிராகக் கிடக்கிறது. ஆரம்பத்தில் வட கிழக்கு என்பதாக புரிந்துகொள்ளப்பட்ட நிலைமைக்கு மாறாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு என்பதாக அரசியல் பிரித்தாளப்படுகிறது. 13ஆவது திருத்தச்சட்டத்தின் இரு தூண்கள் என்று சொல்லக்கூடிய காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை. எனவே, 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு புதுடில்லியை கோரும்போது, புதுடில்லியால் அரன்மனைப் புரட்சி எதனையும் செய்துவிட முடியாது. எனவே, கூட்டமைப்பு புதுடில்லியின் உதவியின் மூலம் ஓர் அரசியல் தீர்வை பெறுவதில் உறுதியாக இருப்பது உண்மையாயின், பொறுமையாகவும் நிதானமாகவும் பயணிப்பதை தவிர வேறு தெரிவுகள் எதுவும் கூட்டமைப்பிடமில்லை. அதற்கு முதலில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் அல்லது அதனை ஒரு சட்டகமாகக் கொண்டு ஒரு நிரந்தரத் தீர்வை காணுவதில் தாம் உறுதியாக இருக்கிறோம் என்பதை கூட்டமைப்பின் தலைமை தெளிவுபடுத்த வேண்டும். அது ஒன்றுதான் புதுடில்லி தமிழர் விவகாரத்தை உரிமையுடன் வலியுறுத்துவதற்கான வாயிலாக அமையும்.
உண்மையில் 87 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் தோல்விக்கு பின்னரான சூழலில் இன்றுவரை இந்தியா தமிழர் விவகாரத்தை உரிமையுடன் பேசுவதற்கான கதவு இலங்கைக்குள் இன்னும் திறக்கவே இல்லை. தமிழர் அரசியலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமை தாங்கிய கடந்த முப்பது வருடங்களாக இந்தியா முற்றிலுமாக தமிழர் விவகாரத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தது. 2009இல் புலிகளின் வீழ்சியைத் தொடர்ந்தே மீண்டும் இந்தியா குறித்த கரிசனைகள் தமிழர் அரசியலுக்குள் எட்டிப்பார்த்தது. இதற்கு கூட்டமைப்பு தமிழர்களின் முதன்மையான அரசியல் தலைமையாக வெளிவந்ததே பிரதான காரணமாகும். தற்போது கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளுமே ஒரு காலத்தில் புலிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி இந்தியாவில் அடைக்கலம் தேடியவர்கள்தான். குறிப்பாக இந்தியாவால் பயிற்சியளிக்கப்பட்ட மூன்று பிரதான இயக்கங்கள் தற்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. கூட்டமைப்பில் அங்கம் வகித்துவரும் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைமையில்தான் முதலாவது வட கிழக்கு மாகாண சபை நிர்வாகம் நிறுவப்பட்டது.
எனவே, கூட்டமைப்பின் தலைவர்கள் எவராலும் இந்திய – இலங்கை ஒப்பந்தம் பயனற்றது, அதில் ஒன்றுமில்லை என்று சொல்ல முடியாது. 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இடம்பெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் பங்குகொண்ட மிக முக்கிய தலைவர் இரா. சம்பந்தன் ஆவார். குறிப்பாக, காணி அதிகாரம் தொடர்பில் அப்போது பல்வேறு தகவல்களை வழங்கி, 13ஆவது திருத்தச்சட்டத்தில் காணி விவகாரத்தை உள்ளடக்குவதில் முக்கிய பங்காற்றியவரும் சம்பந்தனே ஆவார். இதனை 83 தொடக்கம் 87 வரையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பான ஆவணங்களில் காண முடியும். எனவே, 13ஆவது திருத்தச்சட்டத்தில் ஒன்றுமில்லை என்று எழுந்தமானமாக எவராலும் கூறிவிட முடியாது. ஆனாலும், பிரபாகரன் காலத்தில் புலிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி சில விடயங்களை பகிரங்கமாக சொல்ல முடியாத நிலைமை இருந்தது உண்மை. இதனை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் வார்த்தையில் சொல்வதனால், அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் பலர் பாதிக்கப்பட்டிருக்க நேர்ந்திருக்கலாம். சமீபத்தில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தொடர்பில் பி.பி.சி தமிழேசையிடம் கருத்துத் தெரிவித்தபோதே, சம்பந்தன் அப்படியொரு பார்வையை பகிர்ந்திருந்தார். அதனையே நானும் இங்கு பொதுமைப்படுத்தியிருக்கிறேன். அதாவது, அமிர்தலிங்கத்தின் கொலையை அன்று கண்டித்திருந்தால் பலர் பாதிக்கப் பட்டிருக்கலாம் என்று சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார். பாதிக்கப்படுதல் என்பதன் பொருள் என்ன? புலிகளுக்கு பிடிக்காதவைகளை ஒருவர் செய்ய முற்படின் அவர்கள் கொல்லப்படலாம் என்பதுதானே! இதற்கு சிறந்த உதாரணம் 2008இல் கிழக்கு மாகாண சபை தேர்தல் இடம்பெற்ற போது அதனை புறக்கணித்த கூட்டமைப்பு, பின்னர் அதே கிழக்கு மாகாண சபையில் போட்டியிட்டு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தது. 2008இல் புலிகள் தடுக்கும் ஆற்றலுடன் இருந்ததால் கூட்டமைப்பு அமைதியாக இருந்தது.
ஆனால், 2012இல் புலிகள் இல்லை. ஆனால், புலிகள் தமிழ் மக்களின் அரசியலை கொண்டு சேர்ப்பித்த இடத்திலிருந்து ஒரு ஆரோக்கியமான அரசியல் தளம் நோக்கி கூட்டமைப்பால் செல்ல முடியாது என்பதை அனைவராலும் விளங்கிக்கொள்ள முடியும். எனவே, அந்த சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு எடுத்த முடிவு மிகவும் சரியானது. ஆனால், 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒரு சட்டகமாகக் கொண்டு ஒரு தீர்வு நோக்கி முன்நகர்வதில் கூட்டமைப்பின் முயற்சிகள் போதுமானதாக அமையவில்லை. இதற்கு கூட்டமைப்பு 13ஆவது திருத்தச் சட்டம் குறித்து தெளிவற்ற வகையில் பேசிவருவதே பிரதான காரணம் ஆகும். ஆனால், கூட்டமைப்பால் தொடர்ந்தும் அவ்வாறு பேசிக் கொண்டிருக்க முடியாது. தற்போது புதுடில்லியிடமிருந்து அத்தகையதொரு பதிலே கிடைத்திருக்கிறது. தற்போதைய சூழலில் ஒரு புறம் யுத்தத்தில் வெற்றியீட்டிய அரசும் பிறிதொரு புறம் புலிகளின் யுத்தத்தை நியாயப்படுத்திய தமிழர் தரப்பும் அரசியல் ரீதியாக ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டியிருக்கிறது. அரசைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் அச்சத்தையே வெளிப்படுத்தும். இதனால், குறிப்பாக பொலிஸ் அதிகாரத்தை வடக்கு – கிழக்கு மாகாண சபைகளுக்கு கையளிப்பது தொடர்பில் புதுடில்லி அதிக அழுத்தங்களைப் பிரயோகிக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபடும் ஒரு விடயமாகும்.
எனவே, புறநிலைமைகளைக் கருத்தில் கொண்டுதான் கூட்டமைப்பு அரசியல் தீர்வு விவகாரத்தை கையாள வேண்டியிருக்கும். அவ்வாறில்லாது அனைத்தும் ஒரு இரவில் மாறிவிட வேண்டுமென்னும் வகையில் கோரிக்கைகளை முன்வைக்கும் பட்சத்தில், நிலைமைகளில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படப்போவதில்லை. கூட்டமைப்பு பொலிஸ் அதிகாரம் தொடர்பில் உடும்புப்பிடி பிடிப்பதை விடுத்து மாற்று யோசனைகளை பரிசீலிக்கலாம். தீர்வு குறித்து சிந்திக்கும்போது தமிழர் தரப்பு ஒரு விடயத்தை மறக்கலாகாது. இலங்கையில் தமிழர்களால், கடந்த முப்பது வருடங்களாக ஒரு அரச கவிழ்ப்புக்கான (Insurgency) யுத்தம் முன்னெடுக்கப் பட்டிருந்தது. அதில் இறுதியில் இலங்கை அரசு வெற்றியீட்டி இருக்கிறது. இந்த யுத்தத்தால் வெறுமனே இலங்கை அரசு மட்டும் பாதிக்கப்படவில்லை, மாறாக இந்தியாவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, கொழும்பின் தேசிய பாதுகாப்பு குறித்த நியாயமான கவலைகளை புதுடில்லி புறக்கணிக்காது. இந்தப் பின்னணியில் கூட்டமைப்பு புதுடில்லியின் ஆலோசனையை செவிமடுப்பதாயின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அடிப்படையில் செல்வதற்கான பச்சைவிளக்கை காட்ட வேண்டும் அல்லது அதனை நிராகரித்துவிட்டு தனிவழியில் போவதற்கான சிவப்பு விளக்கை காட்ட வேண்டும். புதுடில்லியை முழுமையாக கைகழுவிவிட்டு மேற்குலகை நம்பி பயணிக்க வேண்டும்.
தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.