படம் | Cinema.pluz
இரண்டு திரைப்படங்கள் தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஒன்று புலிப்பார்வை, மற்றது கத்தி இவ்விரு திரைப்படங்களுக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த காரணத்தால் சீமானும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த சீமானின் சடுதியான எழுச்சியோடு ஒப்பிடுகையில் அண்மை வாரங்களில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியும் சடுதியானதே. சில வாரங்களுக்கு முன்புவரை பேஸ்புக்கில் ஒரே அணியில் மிக நெருக்கமாக நின்று எதிர்த்தரப்பை ஈவிரக்கமின்றி தாக்கிய நண்பர்கள், இப்பொழுது ஒருவர் மற்றவரை ஈவிரக்கமின்றி தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் இனமான அரசியலில் சீமானின் எழுச்சி எனப்படுவது ஏனைய தமிழகத் தலைவர்களோடு ஒப்பிடுகையில் சில விடயங்களில் வித்தியாசமானது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரே சீமான் தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவான, இனமான அரசியலின் கூர்முனையாக மாறினார். இறுதிக்கட்டப் போரின்போது உயிரை துச்சமாக மதித்து வன்னிக்கு வந்தவர் என்பதாலும், அங்கே புலிகளின் தலைமையை கண்டு கதைத்தவர் என்பதாலும், குறிப்பாக புலிகளின் தலைவர் கொல்லப்படுவதற்கு முன் அவருடைய கடைசிக்காலத்தில் சந்தித்துப் பேசியவர் என்பதாலும் சீமானுக்கு மற்றவர்களுக்கு இல்லாத ஒரு தகுதி கிடைத்தது.
பொதுவாக இந்திய மரபில் ஒரு தலைவரை அவருடைய இறுதிக்கட்டத்தில் சந்தித்திருக்கக்கூடிய ஒருவர் அவருடைய இறுதிச் செய்தி எதையாவது பெற்றிருப்பார் என்ற ஓர் எதிர்பார்ப்பு இருப்பதுண்டு.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின் சீமானும் அப்படித்தான் பார்க்கப்பட்டார். புலிகளின் சின்னத்தையும், அந்த இயக்கத்தின் தலைவரின் படத்தையும் அவர் அத்தகைய ஓர் அர்த்தத்தில் தான் பயன்படுத்தினார். புலிகள் இயக்கத்தின் தோல்வியையும் முள்ளிவாய்க்கால் பேரழிவையும் தடுக்க முடியாத காரணத்தால் தமிழகத்தில் ஏற்பட்டிருந்த குற்ற உணர்ச்சியால் அதிகம் பயனடைந்தவர் சீமான் எனலாம்.
சீமானின் எழுச்சியை இந்திய அரசுக் கட்டமைப்பும் புலனாய்வுக் கட்டமைப்பும் அச்சுறுத்தலாகப் பார்க்கவில்லை. தமிழ்த் தேசியம் என்று கருதப்பட்ட ஒரு தமிழ் இனமான எழுச்சிக்கு கோடம்பாக்கத்தில் இருந்து ஒரு புதிய தலைமை கிடைத்ததை அவை தமக்கு அனுகூலமாகவே பார்த்தன.
முள்ளிவாய்க்கால் பேரிழப்பை தடுக்க முடியாமல் போனது என்பது தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளின் தோல்வியாக கருதப்பட்டது, ஈழத்தமிழர்களை இரு பெரும் கட்சிகளும் பாதுகாக்கத் தவறிய ஒரு வெற்றிடத்தில் இவ்விரு கட்சிகளுக்கும் வெளியே குறிப்பாக தேர்தல் அரங்குக்கு வெளியே செயற்பாட்டியக்கங்கள் தோன்றின. அத்துடன், தன்னியல்பான மாணவர் எழுச்சிகளும் தோன்றின.
வாக்கு வேட்டை அரசியலுக்கு வெளியே செயற்பாட்டியக்கங்களும், மாணவர் இயக்கங்களும் தோற்றம் பெறுவதை எந்தவொரு அரசுக் கட்டமைப்பும், அதன் புலனாய்வு கட்டமைப்பும் சகித்துக்கொள்வதில்லை. சமூகத்தின் அரசியலானது கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து செயற்பாட்டியக்கங்களின் கைகளுக்கு மாறுவதை எந்தவொரு அரசும் அச்சுறுத்தலாகவே பார்க்கும். தமிழகம் ஏற்கனவே பிரிவினை கோரி போராடிய ஒரு மாநிலம். முழு இந்திய பண்பாட்டின் மீதும் அதன் சனாதன மரபின் மீதும் கேள்விகளை எழுப்பிய, ஈ.வே.ரா. பெரியாரை போஷித்த ஒரு மாநிலம். இதுவரையிலும் ஈழத் தமிழர்களுக்காக 19 பேர் வரை தீக்குளித்திருக்கிறார்கள். எனவே, தமிழகத்தில், ஈழத் தமிழ் அரசியலை செயற்பாட்டியக்கங்களும் தேர்தல் அரசியலை பின்பற்றாத அமைப்புக்களும் முன்னெடுப்பதை இந்திய அரசுக் கட்டமைப்பும் அதன் புலனாய்வு கட்டமைப்பும் அச்சுறுத்தலாகவே பார்க்கும்.
ஆனால், நாம் தமிழர் கட்சி இத்தகைய பின்னணிகள் எதையும் கொண்டிருக்கவில்லை. அது புலிகள் இயக்கத்திற்கு நெருக்கமாக தன்னை காட்டிக் கொண்டது. அந்த இயக்கத்தின் தமிழக வாரிசு போலவும் தன்னை காட்டிக் கொண்டது. ஆனாலும், அதன் தலைவர் தமிழ்ச் சினிமா பண்பாட்டின் ஒரு உற்பத்தியே என்பது இந்திய அரசுக் கட்டமைப்புக்கும் அதன் புலனாய்வு கட்டமைப்புக்கும் ஆறுதலான விடயங்கள். இன்னொரு விதமாக சொன்னால் சினிமா பாரம்பரியத்தின் ஒரு பக்க வளர்ச்சியாக புலிச்சார்பு அரசியல் முன்னெடுக்கப்படுவதை அவை ஆதரிக்கின்றன என்றும் சொல்லலாம். ஏனெனில், தமிழகத்தின் பிரதான அரசியல் நீரோட்டம் என்பது ஏதோ ஒரு விகிதத்திற்கு கோடம்பாக்கம் சினிமா தொழிற்சாலையின் நீட்சியும் அகட்சியும் தான். எந்தவொரு புனிதமான இலட்சியத்தையும் வணிகப் பொருளாக்கி வீரியமிழக்கச் செய்ய கனவுத் தொழிற்சாலைகளால்முடியும். திராவிட இயக்கங்களுக்கும் இது நடந்தது.
சாகாவரம் பெற்ற கதாநாயகன் அல்லது அமானுஷ்ய சக்திகள் நிறைந்த கதாநாயகன் அல்லது கடவுளின் அம்சமான கதாநாயகன், அவனோடு மோதும், திருத்தவே முடியாத வில்லன். இருவருக்கும் இடையிலான மோதலை தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான அல்லது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான புராணகால மோதலின் நீட்சியாக கண்டு ரசிக்கும் பார்வையாளர்கள்.
தங்களால் முடியாததை அல்லது தங்களுக்கு செய்ய விருப்பம் இருந்தும், அதற்கு வேண்டிய துணிச்சலோ தியாக சிந்தையோ இல்லாத காரணத்தினால் தங்களுக்கான நீதியை யாரோ ஒரு மீட்பர் வந்து பெற்றுத் தருவார் என்று நம்புவதும் காத்திருப்பதுமே பார்வையாளர்கள் பண்பாடாகும். மக்களை பங்காளிகளாக்காத வாக்கு வேட்டை அரசியலும் பார்வையாளர் பண்பாட்டின் பாற்பட்டதே.
தமிழகத்தில் ஈழத்தமிழர் அரசியலும் இப்படியொரு பார்வையாளர் பண்பாட்டிற்குரிய அரசியல் பொறிமுறைக்குள் சிக்குமாக இருந்தால் அது இந்திய அரசுக்கட்டமைப்புக்கும் புலனாய்வுக் கட்டமைப்புக்கும் ஆறுதல் அளிக்கும் ஒரு வளர்ச்சிதான். தமிழகத்தின் படித்த நடுத்தர வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாளர்களால் ஈழத்தமிழ் அரசியல் முன்னெடுக்கப்படுவதை விடவும் தமிழ் சினிமா பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக வரும் அமைப்பினால் அது முன்னெடுக்கப்படுவதை இந்திய மத்திய அரசும், தமிழக அரசும், இலங்கை அரசும் விரும்புகின்றன.
சீமானுக்கு தேர்தலில் ஈடுபடும் ஆசைகள் உருவாக முன்பு ஓரளவுக்கேனும் செயற்பாட்டு ஒழுக்கத்திற்குரிய சில பண்புகளை அவரிடம் காணமுடிந்தது. கடந்த தேர்தல்களில் காங்கிரஸையும் கருணாநிதியையும் தோற்கடித்ததில் அவருக்கு பங்குண்டு. இந்த வெற்றியினால் பெற்ற நம்பிக்கை அவரை தேர்தல்களில் ஈடுபட தூண்டக்கூடியதே. அப்படி தேர்தல் அரசியலில் முழுமையாக குதிக்குமிடத்து, அதன் தவிர்க்க முடியாத விளைவாக அவர் தமிழகத்தின் பிரதான நீரோட்ட கட்சிகளைப் போல சிந்திக்கவும் செயற்படவும் சுழித்துக்கொண்டோடவும் வேண்டியிருக்கும். அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.
இது தமிழக அரசியல் அரங்கிற்குள் மட்டுமல்ல முழு இந்திய அரசியல் அரங்கிற்கும் பொதுவான ஒரு பண்புதான். ஒரே நேரத்தில் ஒரு செயற்பாட்டாளராகவும், வெற்றி பெற்ற பெரு நீரோட்ட அரசியல்வாதியாகவும் ஒருவர் திகழ முடியாத அளவிற்கே இந்திய அரசியல் சூழல் காணப்படுகின்றது.
கடந்த தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் இணைந்தபோது இவைபோன்ற கேள்விகளும் சர்ச்சைகளும் எழுந்தன.
தமிழகத்தில் புலிகள் சார்பு அரசியலை சீமானுக்கு சில தசாப்தங்களுக்கு முன்னிருந்தே முன்னெடுத்து வருபவர் வைகோ. அவரைப்பற்றி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ஊடக நண்பர் கூறினார்… “சரியான வேளைகளில் பிழையான முடிவுகளை எடுக்கும் ஒரு தலைவர்” என்று. வைகோவும் காலத்திற்கு காலம் தனது கூட்டணிகளை மாற்றியமைத்திருக்கின்றார். தன்னை சிறை வைத்த ஜெயலலிதாவோடு பின்னாளில் கூட்டுச் சேர்ந்திருக்கிறார். தேர்தல் அரசியலில் ஈடுபடும் ஒரு கட்சியாக செயற்படும் போது காலத்திற்குக் காலம் தந்திரோபாயமாகவோ அல்லது உத்தியோகபூர்வமாகவோ முடிவுகளை எடுக்க வேண்டிய ஒரு நிலைமை எல்லாக் கட்சிகளுக்கும் உண்டு. ஆனால் ஒரு செயற்பாட்டியக்கத்திற்கு அத்தகைய சங்கடங்கள் கிடையாது.
சீமான் அடுத்த தேர்தலை நோக்கி சிந்திக்க தொடங்கி விட்டதாகவே தெரிகின்றது. கடந்த தேர்தல்களில் அவரது உழைப்புக்குக் கிடைத்த பலன்களால் பெற்ற நம்பிக்கையும், புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதிப் பலமும் அவரை அவ்வாறு சிந்திக்க தூண்டக்கூடும். ஆனால், கடந்த காலங்களில் அவர் பெற்றுக்கொடுத்த வெற்றிகளுக்காக அவரை போற்றிய தரப்புக்களே இப்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளன.
சர்ச்சைகள் உருவாகிய பின் அவரது வேண்டுகோளின் பேரால் புலிப்பார்வை திரைப்படத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. எனினும், குறுகிய காலத்திற்குள் சடுதியாக கட்டியெழுப்பப்பட்ட அவரைப் பற்றிய படிமம் சடுதியாக நொறுங்கிப் போய்விட்டது என்பதே இப்போதுள்ள உண்மை.
தமிழகத்தின் ஈழ ஆதரவு அரசியலை பொறுத்த வரை சீமான் ஒரு முதல் அனுபவம் அல்ல. ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸும், நடிகர் விஜயகாந்தும் ஈழத்தமிழ் அரசியலை ஒரு காலகட்டம் வரை தீவிரமாக முன்னெடுத்து பின்னாட்களில் தீவிரத்தை குறைத்துக் கொண்டார்கள். வைகோ, பழ நெடுமாறன், கொளத்தூர் மணி மற்றும் பிரபல்யத்திற்கு ஆசைப்படாத, ஆனால், எல்லா விதமான இடர்களையும் எதிர்கொண்ட ஒரு தொகுதி செயற்பாட்டாளர்கள் போன்றவர்களே அன்றிலிருந்து இன்று வரை ஒப்பீட்டளவில் மாறா நிலைப்பாட்டை பேணி வருகிறார்கள். மற்றும்படி காலத்திற்குக் காலம் யாரோ ஒரு தலைவர் அல்லது ஜனவசியம் மிக்க ஒருவர், ஈழத்தமிழ் அரசியலை தத்தெடுப்பதும், தமிழ்த் தேசியத்தின் கூர்முனை போல துருத்திக் கொண்டு தெரிவதும், பிறகொரு காலம் தீவிரம் அடங்கி தணிந்து போவதும் தமிழகத்திற்கு புதியதல்ல.
இங்கு பிரச்சினை சீமான் அல்ல. காலத்திற்குக் காலம் யாராவது ஒருவர் தமிழ்த் தேசியத்தின் கூர்முனையாக திகழ்வதும் பின்னாளில் கூர்மழுங்கிப் போவதும் ஏன்? என்ற கேள்விக்கான பதில் தான். ஈழத்தமிழ் அரசியலானாது தமிழகத்தில் பெருங்கட்சிகளுக்கு இடையிலான வாக்குவேட்டை வியூகங்களுக்குள் சிக்கியிருக்கிறது என்பதே அந்த பதிலாகும். அல்லது வாக்கு வேட்டை அரசியலுக்காகப் பயன்படுத்தக்கூடிய விதத்தில் தமிழ்த் தேசியத்தின் பிரதான கூறு அதிகபட்சம் உணர்ச்சிகரமான இனமான அரசியலாகவே காணப்படுகிறது என்பதே.
ராமதாஸோ அல்லது விஜயகாந்தோ அல்லது சீமானோ அத்தகைய உணர்ச்சிகரமான ஓர் இனமான அரசியலுக்குரியவர்கள்தான். நெடுமாறன், வைகோ போன்றவர்களும் வெகுசனத் தளத்தில் உணர்ச்சிகரமான அரசியலை முன்னெடுப்பவர்கள்தான். மோடியின் பதவியேற்பு வைபவத்தின்போது மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டதை எதிர்த்து வைகோ ஒரு கடிதம் எழுதியது வாசகருக்கு நினைவிலிருக்கும். இக்கடிதத்தை ஒரு தடவை வாசித்து பாருங்கள். அது பெருமளவிற்கு உணர்ச்சிகரமான வார்த்தைகளால் வரையப்பட்டிருக்கின்றது. அதில் ஒருவித சினிமாத்தனம் இருக்கிறது. அறிவுபூர்வமான அரசியற் சொற்தொகுதிகள் அதில் ஒப்பீட்டளவில் குறைவு.
இதுதான் விவகாரம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைர்கள் ஈழத்தமிழர்களின் விவகாரத்தையும் தமிழ்த் தேசிய அரசியலையும் அதிகபட்சம் உணர்ச்சித்தளத்தில் வைத்தே கையாண்டு வருகிறார்கள்.
இதன் விகார வளர்ச்சி தான் கருணாநிதி. நாலாம் கட்ட ஈழப்போரின் போது எழுதிய கவிதை வடிவிலான அறிக்கைகள் எனலாம். வன்னி கிழக்கில் லட்சக்கணக்கான மக்கள் முற்றுகையிடப்பட்டிருந்த காலத்தில் கருணாநிதி மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்களும் உட்பட அவர் வெளியிட்ட பல அறிக்கைகள் கவிதைகள் போலிருந்தன.
அது கருணாநிதியின் ஆளுமையின் பாற்பட்ட ஒரு பலவீனம் என்பதை விடவும், அவர் அதை ஒரு மலிவான தந்திரமாகச் செய்தார் என்பதே சரி. மிகவும் சீரியஸான ஒரு விவகாரத்தை அவர் இலக்கியமாக எழுதியதன் மூலம் அதை நீர்த்துப்போகச் செய்தார். யாரும் கேட்டால் நான் அறிக்கை விட்டேன் என்று சொல்லலாம். ஆனால், அந்த அறிக்கையில் சீரியஸான அரசியல் இருக்காது. ஒரு சொரியலான இலக்கியம்தான் இருக்கும்.
இப்படியாக தமிழகத்தலைவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்த் தேசியத்தையும் ஈழத்தமிழ் விவகாரத்தையும் உணர்ச்சிப் பரப்பிலேயே பேணிக்கொண்டிருக்கும் வரை அது வாக்கு வேட்டை அரசியலின் நிகழ்ச்சி நிரல்களுக்கிடையில் சிக்கி நீர்த்துப் போய்கொண்டேயிருக்கும்.
எனவே, குறைந்தது புலிகள் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட கடந்த ஐந்தாண்டுகளிலும் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையிலாவது தமிழகத்தில் உள்ள இன உணர்வாளர்களும் இனமான அரசியல்வாதிகளும் மெய்யான தமிழ்த் தேசிய சக்திகளும் பின்வரும் விடயங்களையிட்டு தீவிரமாக சிந்திக்க வேண்டியுள்ளது
1. கட்சி அரசியலைச் சாராது ஈழத் தமிழர் அரசியலை முன்னெடுக்கும் விதத்திலும், தன்னியல்பான மாணவர் எழுச்சி போன்றவற்றிற்கு தலைமை தாங்கும் விதத்திலும் ஒரு பொதுச்செயற்குழுவை உருவாக்குவது. அதில் சம்பந்தப்பட்ட எல்லாக்கட்சிகள் மற்றும் செயற்பாட்டியக்கங்களின் பிரதானிகளையும் பிரதிநிதிகளையும், இந்தியா முழுவதிலுமுள்ள முற்போக்கான செயற்பாட்டாளர்களையும் உள்ளடக்குவது.
2. ஈழத்தமிழர் விவகாரம் அல்லது தமிழ்த் தேசியம் தொடர்பில் பொறுப்புக் கூறவல்ல முடிவுகளை அக்குழுவே எடுப்பது.
3. தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து தமிழகமானது மத்திய அரசை எப்படிக் கையாள வேண்டும் என்பதை அக்குழுவே அறிவுபூர்வமாக தீர்மானிப்பது.
4. தமிழ்த் தேசியத்தையும் ஈழத்தமிழ் விவகாரத்தையும் கையாள்வது தொடர்பில் அதிகபட்சம் அறிவுபூர்வமான முடிவுகளை எடுக்க உதவியாக ஒரு சிந்தனைக் குழாத்தை உருவாக்குவது. அதில் ஏனைய மாநிலங்களைச் சேர்ந்த புத்திஜீவிகளையும் இணைப்பது.
5. தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தைப் பலப்படுத்தும் விதத்தில் தமிழ் இனமான அரசியலின் உணர்ச்சித் தளத்தை இயன்றளவுக்கு அறிவால் பிரதியீடு செய்வது.
6. ஒரு பொதுத் தமிழ் நிதியை புலம் பெயர்ந்த தமிழர்களோடு இணைந்து உருவாக்குவது.
7. ஒரு பொதுத் தமிழ் ஊடகத்தை முதலில் தமிழில் தொடங்கி, பின்னர் ஆங்கிலத்திற்கும் பிற இந்திய மொழிகளுக்கும் விரிவாக்குவது. அது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் மாறாதிருப்பதோடு, ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்திய வெகுசனத்தை போதியளவு அறிவூட்டுவது.
8. தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பொருத்தமான முடிவுகளை எடுப்பது.
9. இவை மட்டுமல்ல தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து தரமான கலைப் படங்களை தயாரிப்பவர்களுக்கு இக்குழுவே உதவலாம். அதற்கு வேண்டிய நிதியையும் பெற்றுக்கொடுக்கலாம். இது தொடர்பில் இந்தியா முழுவதிலும் உள்ள முற்போக்கான திரைக்கலைஞர்களையும் படைப்பாளிகளையும் இணைக்கும் ஒரு பொதுத்தளமாக அது செயற்படலாம். அப்படியொரு நிலை வந்தால் கத்தியை எங்கே வைப்பது? புலிப்பார்வையை எங்கே வைப்பது? பிரசன்ன விதானகேயை எங்கே வைப்பது? என்பதில் ஒரு பொது முடிவை எட்டலாம்.
இதுதான் பிரச்சினை. தமிழ் இனமான அரசியலை அதன் பெரும் கூறாகக் கொண்டுள்ள தமிழ்த் தேசியத்திற்குரிய ஒரு பொதுத்தளம் என்று ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு பொது அமைப்போ அல்லது செயற்பாட்டியக்கமோ தமிழகத்திலுமில்லை, புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் இல்லை. மெய்யான பொருளில் இப்போது தமிழ்த் தேசிய அரசியலுக்கு மையம் இல்லை. மையம் இல்லையென்றால் ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு நிலைப்பாட்டையே எடுக்கும். தமிழ்ச் சக்தி சிதறுண்டு போகும்.
ஈழத்தமிழ் அரசியலை பொறுத்த வரை அப்படியொரு மையம் தாயகத்திலிருந்தே உருவாக வேண்டும். கூட்டமைப்போ அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ அதைச் செய்ய வேண்டும். ஆனால், தாயகத்தையும், தமிழகத்தையும், புலம்பெயர்ந்த சமூகத்தையும் ஏதோ ஒரு புள்ளியில் இணைக்கும் ஒரு மையமாக செயற்படுவதற்கு கூட்டமைப்பு தயாரில்லை. அதற்கு வேண்டிய அரசியல் தரிசனமும் செயற்பாட்டு ஒழுக்கமும் அவர்களிடம் இல்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் மக்கள் ஆணை இல்லை. ஆயின், யார் அதைச் செய்வது? மெய்யான தமிழ்த் தேசியத்தின் அதிகார பூர்வ குரலாக யார் ஒலிப்பது?
தினக்குரல் பத்திரிகைக்காக நிலாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.