படம் | AFP/ Ishara Kodikara, Foreign Correspondents Association Sri Lanka
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது அணி தீவிரமாக கலந்துரையாடி வருகின்றது. ஆனால், இந்த உரையாடல்களில் ஜே.வி.பி. ஆரம்பத்தில் கலந்து கொண்டபோதும் பின்னர் இடம்பெற்ற உரையாடல்களில் பங்குபற்றவில்லை. இலங்கையின் அரசியலமைப்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 35 வயதுக்கு மேற்பட்ட எவரும் போட்டியிடலாம் என்பது விதி. இந்த விதிதான் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட சரத் பொன்சேகாவுக்கு வழி ஏற்படுத்தியது.
எதற்காக பொதுவேட்பாளர்?
தனித்து போட்டியிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியால் விழுத்த முடியாதா என்பது இங்கு பிரதான கேள்வியாகும். மற்றையை எதிர்க்கட்சியான ஜே.பி.வியை பொறுத்தவரை அவர்களிடம் வாக்குப்பலம் இல்லை. ஜனாதிபதியாக வரக்கூடிய ஒருவர் ஐக்கிய தேசிய கட்சி – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளில் மட்டும் போட்டியிட்டு பதவிக்கு வர முடியும். ஆனால், வேறு எந்தக் கட்சிகளினாலும் முடியாது. வேட்டுமானால் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி தங்கள் கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளை மேற்படி இரு கட்சிகளுக்கும் செல்லவிடாமல் தடுக்கலாம்.
ஜனாதிபதித் தேர்தலை பொறுத்தவரை மேற்படி இரண்டு கட்சிகளையும் தவிர வேறு எந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்தாலும் அவர்களில் எவரேனும் ஜனாதிபதிபதியாக வரமுடியாது என்பது மக்களுக்கு பொதுவாகத் தெரிந்த கதை. இதனால், ஜே.வி.பி. ஆதரவாளர்கள் கூட இந்த இரு கட்சிகளில் போட்டியிடும் ஒருவருக்கு வாக்களிப்பார்கள் அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளாது விடுவார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளில் ஒருவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும். இல்லையேல் வாக்களிப்பை தவிர்க்க வேண்டிய நிலை.
வாக்களிப்பு வீதம் குறைவு
மேற்படி இருகட்சிகளில் இருந்துதான் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என்று தமிழ் மக்களுக்கு தெரிந்த காரணத்தினால் அனேகமானோர் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதில்லை. ஆனாலும், 1994ஆம் ஆண்டு சந்திரிக்கா போட்டியிட்டபோது தமிழ் மக்கள் அனைவரும் வாக்களித்திருந்தனர். ஏனெனில், ஐக்கிய தேசிய கட்சியின் 17 ஆண்டுகால ஆட்சிக்கும் யுத்தத்திற்கும் முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கில் சந்திரிக்காவின் சமாதானம் என்ற சொல்லை நம்பி வாக்களித்தனர். 1999 -2005ஆம் ஆண்டு தேர்தல்களில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவாகவே இருந்தது. ஏனெனில், இரு கட்சிகள் மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. 2010ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத்பொன்சேகாவுக்கு வாக்களித்தனர். அவருடைய செயற்பாடு களில் மக்களுக்கு உடனபாடுகள் இல்லையானாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக அன்று ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தனர்.
முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மேற்படி இரு கட்சிகளிலும் ஏதாவது ஒரு வேட்பாளர்களுக்கு வாக்களித்து வருகின்றமை வரலாறு. இங்கு கேள்வி என்வென்றால் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற்றால் மீண்டும் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த எதிர்க்கட்சிகள் ஏன் முற்படுகின்றன? இதில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு முழுமையான உடன்பாடு உண்டா? ஜே.வி.பி. தயக்கம் காட்டுவதன் நோக்கம் என்ன? நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகள்தான் பொது வேட்பாளர் விடயத்தில் அக்கறை செலுத்துகின்றன. சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் ரணில் விக்கிரமசிங்க, கருஜெயசூரிய ஆகியோரும் பொது வேட்பாளராக வர ஆசைப்படுகின்றனர். ஆனாலும், இணக்கப்பாடு இதுவரை இல்லை.
நான்கு காரணங்கள் உண்டு
இதற்கு நான்கு காரணங்களைக் கூறலாம். ஒன்று – பொதுவேட்பாளர் வெற்றி பெற்றால் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற விதிகள் எதுவும் அரசியல் யாப்பில் இல்லை. ஆதரவு வழங்கிய கட்சிகள்தான் கூட்டுச் சேர்ந்து பொதுக் கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும். இரண்டாவது – ஐக்கிய தேசிய கட்சி ஆதிக்கம் செலுத்தும் என்ற அச்சம் ஜே.வி.பி. போன்ற சில கட்சிகளுக்கு உண்டு. மூன்றாவது – பொது வேட்பாளராக சந்திரிக்காவை நிறுத்தினால் வெற்றி பெற்றதும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசு வந்து விடும் என்பதும், ரணில் அல்லது கருஜெயசூரிய போட்டியிட்டால் ஐக்கிய தேசிய கட்சி அரசு பதவிக்கு வந்துவிடும் என்ற அச்சமும் ஜே.வி.பிக்கு உண்டு. நான்காவது – தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கினால் பொது வேட்பாளரின் வெற்றி நிச்சியமில்லை என்ற உணர்வுகளும் உள்ளன. ஆகவே, இந்த நான்கு விடயங்களும்தான் பொது வேட்பாளர் நியமனத்தில் தாமத்தை ஏற்படுத்துகின்றன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விலக்கிவிட்டு பொதுவேட்பாளர் நியமனத்தை செய்ய முடியாத நிலை உள்ளது. அத்துடன், கூட்டமைப்பை வைத்துக் கொண்டு வேட்பாளருக்கான பொதுக் கொள்கையை வகுக்க முடியாது. ஏனெனில், அரசியல் தீர்வு குறித்த விடயத்தில் பிரதான கட்சிகளிடம் தெளிவான கொள்கை இல்லை. ஆகவே, வடக்கு – கிழக்கு இணைந்த சுயாட்சி ஒன்றைக் கோரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வைத்துக் கொண்டு பொதுக் கொள்கையை வகுக்க முடியாது. 2010ஆம் ஆண்டு பொதுவேட்பாளர் விடயத்தில் இந்த பிரச்சினைகள் எழவில்லை. ஏனெனில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விழுத்துவது என்ற கொள்கை மாத்திரமே அப்போது இருந்தது. அத்துடன், பொது வேட்பாளரின் வெற்றியிலும் சிறிய சந்தேகம் காணப்பட்டது. ஆனால், இம்முறை அவ்வாறு இல்லை.
வெற்றி வாய்ப்புக்கு மூன்று காரணங்கள்
தற்போது அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு உண்டு. ஆகவே, பொது வேட்பாளர் வெற்றிபெறக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அவதானிகள் கருதுகின்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் முரண்பாடுகள் மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்ப்புகளை உருவாக்கலாம். அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் தமது கட்சி சார்பாக வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம் என ஜே.பி.வி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த இடத்தில் பொது வேட்பாளர் என்ற கருத்தில் இருந்து விலகி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் அவருக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கலாம். அதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. ஒன்று – ஐக்கிய தேசிய கட்சியோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும், விக்கிரமபாகு கருணாரத்ன போன்றவர்களின் இடதுசாரி கட்சிகளும், மனோ கணேசனும் ஆதரவு வழங்கக் கூடிய நிலை உண்டு. இரண்டாவது – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீது வெறுப்புள்ளவர்களின் வாக்குகள் ஜே.பி.வி. வேட்பாளருக்கு போய்ச் சேரும். இதனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குகள் குறைவடையலாம். மூன்றாவது – சர்வதேச ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேரடியாக கிடைக்கும்.
இதனால், ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறும் வாய்ப்புகள் உண்டு எனலாம். மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் அரசு வெற்றி பெற்றாலும் இரண்டு இலட்சத்து 30 ஆயிரம் வாக்குகளையும், 17 ஆசனங்களையும் இழந்துள்ளது. இதன் காரணத்தினால்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் திட்டமிடப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் 50.1% எடுத்தால் கூட ஜனாதிபதியாகலாம். ஆகவே, கடந்த தேர்தல்களைப் போலன்றி 64 வீதம் என்று இல்லாமல் 50.1% கிடைத்தாலே போதும் என்ற நிலையில் போட்யிடவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜே.பி.வி. வேட்பாளரை நிறுத்தினால் அவருடைய வெற்றிவாய்ப்புக்கு ஆபத்து ஏற்படலாம்.
தினக்குரல் பத்திரிகைக்காக நிக்ஷன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.