இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கத்தால் 1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்துடன் இணைந்ததாக 15ஆவது வருடமாக கடந்த 05.08.2014 அன்று மவுண்டலவேனியா ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

விருது வழங்கும் விழா சிறப்பாக இடம்பெற்றாலும் விருதுகளுக்கான தெரிவுகள் தொடர்பில் அவ்விழாவில் பங்கேற்றிருந்த ஊடக ஆசிரியர்கள், மூத்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்களிடையே கடும் விமர்சனங்களும் விசனங்களும் பரிமாறப்பட்டதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக பத்திரிகை பக்க வடிவமைப்பு, கேலிச் சித்திரங்களுக்கான சிறப்பு விருதுகளுக்கு எந்த ஊடகமோ ஊடகவியலாளரோ தகுதி பெறவில்லையென நடுவர் குழுவினால் அறிவிக்கப்பட்டிருந்ததே இவ்விமர்சனங்களுக்கும் விசனங்களுக்கும் காரணமாக அமைந்திருந்தது. அத்துடன், தமிழ் ஊடகங்களுக்கு ‘கோட்டா’ முறையில் விருதுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

பத்திரிகை பக்க வடிவமைப்பு மற்றும் கேலிச்சித்திரங்களுக்காக விருதும், விசேட விருதும் 3 மொழிகளுக்கும் பொதுவாக வழங்கப்படுவதே வழமை. அந்த அடிப்படையில் மூவின ஊடகங்களையும் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிப்பர். இதில் மொழி வேறுபாடின்றி விருதுக்கும் சிறப்பு விருதுக்கும் உரியவை, உரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனால், இம்முறை பக்கவடிவமைப்புக்காக 15 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட நிலையில் விருதுக்கு மட்டும் ஒன்றை தெரிவு செய்துவிட்டு, ஏனைய 14 விண்ணப்பங்களும் சிறப்பு விருதுக்கு தகுதியற்றவையென நடுவர் குழுவால் நிராகரிக்கப்பட்டன. அதேபோன்று, கேலிச்சித்திரங்களுக்கான விருதுக்காக 12 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட நிலையில் விருதுக்கு மட்டும் ஒன்றை தெரிவுசெய்து விட்டு ஏனைய 11 விண்ணப்பங்களும் சிறப்பு விருதுக்கு தகுதியற்றவையென நடுவர் குழுவால் நிராகரிக்கப்பட்டன. இந்த இரு விருதுகளிலும் சிங்கள, தமிழ் ஊடகங்களே நிராகரிக்கப்பட்டன. அத்துடன், இவ்விருதுகளுக்கு ஏற்கனவே விருதுகளைப் பெற்றிருந்த மிகவும் திறமையான பலர் விண்ணப்பித்திருந்த நிலையிலேயே அவை நிராகரிக்கப்பட்டன.

பக்க வடிவமைப்புக்காக விண்ணப்பிக்கப்பட்ட 15 விண்ணப்பங்களில் 14 விண்ணப்பங்கள் சிறப்பு விருதுக்கு கூட தகுதி பெறாத நிலையில் எப்படி ஒரு விண்ணப்பம் மட்டும் விருதுக்கு தெரிவானது? அதேபோன்று, கேலிச்சித்திரங்களுக்காக விண்ணப்பிக்கப்பட்ட 12 விண்ணப்பங்களில் 11 விண்ணப்பங்கள் சிறப்பு விருதுக்குக்கூட தகுதிபெறாத நிலையில் எப்படி ஒன்று மட்டும் விருதுக்கு தெரிவானது? சரி அப்படியென்றாலும் கூட, இந்த இரு பிரிவுகளிலும் விருதுக்கு யாரும் தெரிவு செய்யப்படவில்லை. சிறப்பு விருதுக்கு மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனரென நடுவர் குழு அறிவித்திருந்தாலும் கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், இரு பிரிவுகளிலும் விருதுக்கு ஒவ்வொன்று தகுதி பெற்றிருந்த போதும், மிகுதியில் ஒன்று கூடவா சிறப்பு விருதுக்கு தகுதிபெறவில்லை என்பதே அங்கிருந்த ஊடகவியலாளர்களின் விசனமும் விமர்சனமுமாகவிருந்தது.

சிறந்த வணிகச் செய்தியாளருக்கான ஆங்கிலப் பிரிவுக்கான விருதுக்கு யாருமே தெரிவு செய்யப்படாத நிலையில் சிறப்பு விருதுக்கு ஒருவர் தெரிவு செய்யப்பட்டதும், நெருக்கடியான சூழலில் செய்தி தேடலுக்கான விருதுக்கு இரு பிரிவுகளிலுமே யாருமே தெரிவு செய்யப்படாமை போன்றவற்றைக் கூட ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், பக்கவடிவமைப்பு, கேலிச்சித்திரங்களுக்கு விருதுகளுக்கு தெரிவு செய்துவிட்டு சிறப்பு விருதுக்கு யாருமே தகுதியில்லையென்ற நடுவர் குழுவின் அறிவிப்புத்தான் விசித்திரமானது.

அதேபோன்று பத்தி எழுத்தாளர்களுக்கான விருதுகளுக்கு பேட்டிகளோ, கேள்வி பதில்களோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், கடந்த ஒரு சில வருடங்களாக கேள்வி பதில்களுக்கு விருதுகள், சிறப்பு விருதுகள் வழங்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுவது தொடர்பிலும் நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களிடையே விமர்சனங்கள் எழுந்தன. இது பத்தி எழுத்தாளர்களின் தரத்தை குறைக்கும் ஒரு செயல் என்பதுடன், நடுவர்கள் குழுவுக்கு பத்தி எழுத்து என்றால் எதுவுமே தெரியாத என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வில் இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கத் தலைவர் சிறி ரணசிங்கவும் இலங்கைப் பத்திரிகை ஸ்தாபன பிரதித் தலைவர் சிங்ஹ ரட்னதுங்கவும் வெளியிட்ட ஆசிச்செய்தியில் ஓரிடத்தில் “நடுவர் குழுவால் முன்னெடுக்கப்படுகின்ற தெரிவு முறையில் ஊடகவியலாளர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதை வருடா வருடம் அதிகரிக்கின்ற விண்ணப்பங்கள் காட்டுகின்றன” எனக் குறிப்பிட்டிருந்தனர். அந்த வருடம் அவர்கள் குறிப்பிட்டது போல் 14 பிரிவு விருதுகளுக்காக 309 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்தன. ஆனால், கடந்தமுறையும் விருதுகள் தெரிவில் சில குறைபாடுகள் இருந்தபோதும்,, விமர்சனங்கள் எழுந்தபோதும் அதனை யாரும் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை.

இதேவேளை, 2013ஆம் ஆண்டுக்கான நடுவர் குழுவின் தலைவர், பேராசிரியர் டியுடர் வீரசிங்கவின் அறிக்கையில் ஓரிடத்தில் “கடந்த வருடம் நடுவர் குழுவால் முன்வைக்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு அமைவாக கேலிச்சித்திரங்களில் ஓரளவு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தமை பாராட்டுக்குரியது” என்கிறார். 2012ஆம் ஆண்டு விழாவில் கேலிச் சித்திரங்களுக்கு விருதும் சிறப்பு விருதும் வழங்கப்பட்டன. ஆனால், அதனை விட 2013ஆம் ஆண்டு கேலிச்சித்திரங்கள் முன்னேற்றம் கண்டிருப்பதாக நடுவர் குழுவின் தலைவர் அறிக்கை விடுத்துள்ள நிலையில், 15 விண்ணப்பங்களில் ஒன்று மட்டும் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டு, ஏனைய 14 விண்ணப்பங்களையும் இதே நடுவர் குழுதான் தகுதியில்லையென நிராகரித்துள்ளது. அப்படியானால் கேலிச்சித்திரங்களில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என நடுவர் குழுவின் தலைவர் தெரிவித்திருப்பது என்ன?

அதேபோன்று தனது அறிக்கையில் இன்னுமொரு இடத்தில், “புகைப்படங்களைப் பொறுத்தவரையில் இம்முறை தேர்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தவைகள் முன்னைய வருடங்களைப் போன்று சிறப்பான தரத்தில் இல்லாதது பெரும் குறைபாடாகவுள்ளது” என்கிறார். ஆனால், சிறந்த புகைப்பட விருதுக்காக விண்ணப்பித்த 15 பேரில், ஒருவர் விருதுக்கும், இன்னொருவர் சிறப்பு விருதுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதாவது, நடுவர் குழுவின் தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு நேர் எதிர்மாறாகவே தெரிவுகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், இம்முறை விருதுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை பெரும் வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் நடுவர் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டுகின்றார். அதாவது, 2012ஆம் ஆண்டு 309 விண்ணப்பங்கள் கிடைத்த நிலையில், 2013ஆம் ஆண்டுக்கான 189 விண்ணப்பங்களே கிடைத்துள்ளன. 2012ஆம் ஆண்டைவிட 2013ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் 120ஆல் வீழ்ச்சி கண்டுள்ளன. நடுவர்குழு மீது ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனமே விண்ணப்பங்களில் வீழ்ச்சி ஏற்படக் காரணமாகவுள்ளது. முன்னரும் சில தடவைகள் நடுவர் குழுவின் தெரிவுகள் தொடர்பில் சிங்கள ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து வழங்கும் இவ்விருதுகள் தனியார்துறை ஊடகங்கள், ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையும் ஊடகங்களின் தரத்துக்கும் ஊடகவியலாளர்களின் திறமைக்கும் கிடைக்கும் அங்கீகாரமாகவே கருதப்பட்டு வரும் நிலையில், இவ்விருதுகள் தெரிவில் ஏற்படும் சில குறைபாடுகள் ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் மத்தியில் விசனத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்விமர்சனம் கூட, இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கமும், இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து வழங்கும் ஊடக விருதுகளின் தரத்தில் குறைவு ஏற்பட்டுவிடக் கூடாதென்ற எண்ணத்தில் மட்டுமே முன்வைக்கப்படுகின்றது. ஏனெனில், பல்வேறு சவால்கள், நெருக்கடிகள் குறைந்த ஊதியங்களுக்கு மத்தியில் தம்மைப் பணயம் வைத்து மக்களுக்காக ஊடக சேவையாற்றும் தனியார்துறை ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கும் ஒரு ஊக்கமருந்தாக, ஒரு கௌரவமாக இந்த விருதுகளே உள்ளன. எனவே, ஊடக விருதுக்கான தெரிவுகள் சிறப்பாக இடம்பெறவேண்டும். தேவையற்ற நிராகரிப்புகள், ‘கோட்டா’ முறைகள் ஒழிக்கப்பட வேண்டும். இல்லாதுவிட்டால், இந்த ஊடக விருதுகளின் தரமும், அதற்கான விண்ணப்பங்களும் வீழ்ச்சியடைவதைத் தவிர்க்க முடியாது.

நடுவர் குழுவின் நடுநிலை தவறிய தெரிவுகளால் தமிழ் ஊடகங்கள், தமிழ் ஊடகவியலாளர்களே அநீதிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, நடுவர் குழுவினர் தமது தெரிவுக்கான முறையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இல்லாதுவிட்டால் நடுவர் குழுவை மாற்றியமைக்க வேண்டும்

கே.எஸ். பாலா