படம் | AP Photo/Eranga Jayawardena, sulekha

“கோழி மேய்ச்சாலும் கோண்மேர்ந்தில மேய்க்க வேணும்” என்பார்கள். ஒன்றுமே இல்லாத வேலையென்றாலும், அது அரச வேலையாக இருந்தால் சரி என்பதுதான் இதன் அர்த்தமாகும். எமது இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டின் இந்தவொரு அம்சத்தினை இதனைவிட பொருத்தமாக விபரிக்க முடியாது. அரச உத்தியோகத்துக்கு எமது சமூகம் தரும் மரியாதையும் அங்கீகாரமும், இதற்கு மேலாக அவ்வுத்தியோகத்தின் நிரந்தரத் தன்மையும், ஓய்வூதிய சலுகைகளும் சேர்ந்து எமது இளம் பட்டதாரிகளை அதனையே நாடச் செய்கின்றது. அவை மட்டுமல்ல அரச உத்தியோகத்தர்கள் அனுபவிக்கும் சலுகைகள், கீழே வேலை செய்யும் பியன் தொடங்கி உயர் பணிப்பாளர் வரை அரச உத்தியோகக்காரர்களுக்கு அதிகளவு சீதனம் கொடுக்கப்படும். அவர்களது பிள்ளைகளுக்கு நல்ல பாடசாலைகளில் இடம் எடுப்பதும் சுலபம். இதனால்தான், எந்தப் பொங்குதமிழ் வீரர்களாக இருந்தாலும், எப்படித்தான் இராணுவத்தோடு போராடியவர்களானாலும், பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியவுடன் எந்த அரசுக்கு எதிராகப் போராடினார்களோ அந்த அரசையே தமக்கு நியமனம் தரும்படி கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்கள்! அது மட்டுமன்றி அரச வேலை எடுத்தவுடன் அதன் அதிகாரப் பண்பாடுகளைத் தாமும் உள்வாங்குவதோடு, தமது அரசியல் எஜமானர்களுக்கு அடிபணிந்த சேவகர்களாகவும் மாறத் தயங்க மாட்டார்கள்.

அரசின் பணியாளர்களென பண்டைய காலந்தொட்டு ஒரு குழுவினர் இருந்து வந்திருந்தாலும், நாம் இன்று அறிவது போன்ற பணித்துறை ஆட்சியென்பது (Bureaucracy) கடந்த 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில்தான் குறிப்பாக ஐரோப்பாவில் தோன்றியது. பின்பு காலனித்துவ ஆட்சியின் மூலம்தான் ஏனைய நாடுகளுக்குப் பரவியது. நாடுகள் அரச ஆட்சியென்னும் நிலப்பிரபுத்துவ கட்டமைப்பிலிருந்து விடுபட்டு முதலாளித்துவக் கட்டமைப்பிற்கு மாறியபோது தோற்றுவிக்கப்பட்ட நிர்வாக முறைமையே இதுவாகும். கொத்தடிமைகளாக இருந்த மக்கள் தமது நிலங்களிலிருந்து விடுபட்டு நகரங்களை நோக்கி வேலை வாய்ப்பு தேடி படையெடுத்தபோது அம்மக்கள் குழாமினை ஒழுங்கமைக்கவும், வளர்ந்துவரும் சிக்கலான சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புக்களை முகாமைத்துவம் செய்யவும் ஓர் படை ஆட்சியாளர்களுக்குத் தேவைப்பட்டது. முன்னரோ அரசாட்சியின் கீழ் வன்முறை சார்ந்த தண்டனை கொண்ட அச்சுறுத்தல் மூலம் மக்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், நவீன அரசுக்கு வன்முறையினைப் பிரயோகிப்பது மிகவும் செலவு மிகுந்ததாகவும் பேண்தகு முறையாகவும் இருக்கவில்லை. சிக்கலான பொருளாதார நடவடிக்கைகள் பெருகி வரும் சமூகத்தில் மக்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே வேலையை இலகுவாகவும் மலிவாகவும் பணித்துறையினைக் கொண்டு செய்விக்க முடியும் எனக் காணப்பட்டது. நவீன அரசின் அதிகாரத்தினைப் பிரயோகிக்கும் ஒரு புதிய வழிமுறையாகப்பணித்துறை மாறியது.

இவ்வாறான பணித்துறையின் அதிகாரத்தைப் பிரயோகிக்கும் பண்புகளை ஹிட்லர் ஜேர்மனியில்தான் முதன்முதலாக முழுமையாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது. யூதர்கள் உட்பட ஜேர்மனியின் ஒடுக்கப்பட்ட மக்களை வேவு பார்ப்பது தொடங்கி, அவர்களின் இடப்பெயர்வுகளை ஆவணப்படுத்தி வதை முகாம்களில் அவர்கள் கொலை செய்யப்படுவது வரை செய்து முடித்தது அதன் பணித்துறையாகும். அதன் தீர்மானங்களை அவர்கள் எடுக்கவில்லையாகிலும், அவர்களுடைய ஒத்துழைப்பின்றி ஹிட்லரினால் ஒன்றினையும் முறையாகச் செய்து முடித்திருக்க முடியாது. இச்செயற்பாட்டில் ஜேர்மன் பணித்துறையின் நலன்களும் அடங்கியிருந்தன என்பதனால் அவர்கள் ஒத்துழைத்தார்கள் என சிலர் வாதாடலாம். ஆனால், காலனித்துவ நாடுகளின் பணித்துறையினை அவதானித்தால், அங்கு அது தனது நலன்களுக்கு எதிராகவும் செயற்படுவதைக் காணலாம். உதாரணமாக, இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியினைத் தக்கவைத்துக் கொண்டிருந்த லட்சோப லட்சம் உள்ளூர் மக்களைக் கொண்ட அதன் வலிமையான பணித்துறை ஒன்று சேர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தினை சாதித்திருந்தால் அந்தக் கணமே அக்காலனித்துவ ஆட்சி சரிந்திருக்கும். வருடக்கணக்காக மக்கள் பெருந் தியாகங்கள் செய்து போராட வேண்டி இருந்திருக்காது. இங்கு தமது தேசிய நலன்களுக்கே புறம்பாக ஒரு பணித்துறை இயங்கியதனைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

இந்தக் கதை பின்காலனித்துவ நாடுகளில் இன்னமும் விரிகின்றது. காலனித்துவ ஆட்சியின் பின்னர் தேசிய அரசுகள் ஸ்தாபிக்கப்பட்டன. தேசிய அரசுகள் அதிகாரத்தினை கூட்டிணைப்பதற்காக (consolidate) எப்பொழுதுமே தமது பிரஜைகளை ஓரினத்தவர்களாக (homogenize) மாற்ற எத்தனிக்கின்றன. அதன் காரணமாக அங்கு அரசில் பங்குபெறாத சிறுபான்மை இனங்களானவை ஒடுக்கப்படுகின்றன. பலவிடங்களில் அவை இனச்சுத்திகரிப்பிற்கு ஆளாகின்றன. இங்கு சிறுபான்மையினங்களுக்கு எதிராக பாகுபாடான திட்டங்களை நிறைவேற்றுவதும், அரசின் மூலமான குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் அவற்றின் பணித்துறையின் கடமைகளாகின்றன. அதுவும் காலனித்துவ ஆட்சியில் நடந்ததைப் போலவே அதே சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பணித்துறையினாலேயே இவை நிறைவேற்றப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அதனைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய கூட்டு நலன்களுக்கு எதிராகத் தாமே இயங்கத் தலைப்படுகின்றனர்.

இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் முஸ்லிம் அரச பணியாளர்களின் ஒத்துழைப்பின்றி எதுவும் நடக்க முடியுமா என்ன? ஆனால், அவர்கள் செய்வது என்ன? மக்களை நீதி கேட்டு போராட வைக்கக்கூடிய முக்கிய தகவல்களை அவர்கள் மக்களிடமிருந்து மறைத்து விடுகின்றார்கள். வரைமுறையின்றி வளர்ந்து வரும் அரசின் அதிகாரத்திற்கு சவால் விடக்கூடிய ஒரே அமைப்புக்களான சிவில் சமூக நிறுவனங்களைக் கட்டிப் போடுவதில் முன்னிற்கின்றனர். இனங்களுக்கிடையிலான அதிகாரப் பரவலாக்கலுக்கு ஓரளவேனும் வழிவிடக்கூடிய மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிப் பொறிமுறைகளை உள்ளிருந்து கொண்டே உடைத்து விடுகின்றார்கள். யுத்தத்தினால் அவதியுற்ற மக்களைப் பராமரிக்கும் நலன்புரி நிலையங்களிலும் ஊழல் செய்யத் துணிவார்கள். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகளை செலவழிக்காமல் கொழும்புக்குத் திருப்பியனுப்புவதில் கிஞ்சித்தும் குற்ற உணர்வு உடையவர்களாக இருக்க மாட்டார்கள். தமது அரசு என்னென்ன அதிகாரங்களை எப்படியெப்படி பிரயோகிக்க முனைகின்றதோ அவற்றை அப்படியே செய்வதற்கு உதவுவார்கள். இவற்றிற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம்.

திருகோணமலை மாவட்டத்தில் அரச அதிபராக இருப்பவரான முன்னாள் இராணுவ ஜெனரலின் கட்டளைப்படி காணி பெர்மிட்டுக்கள் வழங்கப்பட்ட மக்களிடமிருந்து, அது வழங்கப்பட்ட தகவல்களை மறைக்கும் பிரதேச செயலாளர்களைப் பார்த்திருக்கின்றோம். அரசு சாரா நிறுவனங்களையும் சமூக அமைப்புக்களையும் கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டளையிடும்போது, என்ன காரணத்திற்காக இக்கொள்கை முன்வைக்கப்படுகின்றது என்பதை உணராமல் வருடாவருடம் தமது மாவட்டங்களில் இயங்குகின்ற அமைப்புக்களை அனுமதி வழங்கியும் வழங்காமலும் தமது அதிகாரத்தினை பிரயோகிக்கும் அரச அதிபர்களையும் பார்க்கின்றோம்.

இன்று ஆட்சியிலிருக்கும் கட்சி பெரும்பான்மை இல்லாத ஒரே மாகாண சபையான வட மாகாண சபையில, அங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு தகுந்த அதிகாரங்கள் கிட்டாமலும், அவர்களை இயங்க விடாமலும் செய்வதிலும் எமது பணித்துறையே முன்னின்று பணியாற்றுவதைக் காணலாம். யாழ். மாவட்ட மக்களின் குறை நிறைகளை ஒரு ஆய்வு நிறுவனம் கேட்டறிய முயன்ற ஒரு சந்தர்ப்பத்தில், அங்குள்ள அரச அதிகாரிகளின் அலட்சிய மனோபாவத்தைப் பற்றியதான குற்றச் சாட்டுக்களே மக்கள் மத்தியில் மலிந்திருக்கக் காணப்பட்டது. இந்தப் பணித்துறைக்கு மத்திய அரசிலிருந்து வந்த நிதிகளையே அது செலவு செய்வதற்கு ஏதாவது உதவி புரியச் சென்றால் தெரியும் சேதி. அந்த விதி, இந்த நடைமுறை என்று அவர்களின் முடிவுறாத இழுத்தடிப்புக்களினால் மனம் உடைந்து விரக்தியுடன் தற்கொலை செய்யத்தான் தோன்றும்.

கேட்டால் இருக்கவே இருக்கின்றன பல காரணங்கள். “அரசியல் தலைவர்கள் சொல்வதைத்தான் செய்கின்றோம். நாம் செய்யாவிட்டால் வேறு யாராவது செய்ய இருப்பான்…”, “எமது வேலைக்கு மண்ணள்ளிப் போடுவார்கள்”, “குடும்பம் பொறுப்பு என்று நிறைய…” என அவை நீளும். எவ்வளவு காலமாக இதனைச் சொல்லி வாழப்போகின்றார்கள் என்பது அவர்களைப் பொறுத்த விடயமாகும். ஆனால், மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்குமே தமது சமூகத்துக்காக ஏதேனும் கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமை உண்டல்லவா? இதற்காக அவர்களை வேலையை விடச் சொல்லவில்லை. ஒத்துழையாமை இயக்கத்தினை ஆரம்பியுங்கள் என்று கூட நாம் கேட்கவில்லை. ஆனால், தரப்படும் சிறிய வாய்ப்புக்களையாவது உபயோகியுங்கள் எனத்தான் கேட்கின்றோம்.

அரசின் கற்ற பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அத்தகையதொரு வாய்ப்பாகின்றது. அதன் சிபாரிசுகளிலொன்று, அரசியல்மயப்படுத்தப்படாத நிர்வாக சேவையின் அவசியத்தினை வலியுறுத்கின்றது. இது அரசினது அறிக்கை, அதனை நிறைவேற்றும் பொறுப்பினையும் இப்பொழுது ஒரு செயற்திட்டம் மூலம் அது ஏற்றுக்கொண்டிருக்கின்றது. அதன் மூலம் எமது குறிக்கோள்களுக்கு இசைவாக போக்குகளை நெறிப்படுத்துவதும் இலகுவான பணியாகும். இதன் அடிப்படையில் அரசியல் தலைமைகளுக்கு சேவகம் செய்யாத மாண்பு மிக்கதாக தமது பணித்துறையினை மாற்றுவதற்காகவேனும், அவர்கள் இயங்கத் தொடங்கினால் என்ன? அரசின் பணியிலுள்ள உயர்தர அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மூலம் கூடி இச்சிபாரிசுகளினை நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் வழிமுறைகளையும் அவர்கள் ஆராயலாம். புத்தாக்கமான தீர்வுகளை அவர்கள் எட்ட முடியும் என்பது நிச்சயம்.

இதுவரை, அரசில் மாற்றங்கள் வந்தால் மட்டுமே தாம் மாறும் வழக்கம் கொண்டிருந்தவர்கள், இட மாற்றலுக்கும் சம்பளப் பிரச்சினைகளுக்கும் மட்டுமே தமது தொழிற்சங்கங்களை உபயோகித்து வந்தவர்கள், ஒரு புரட்சிகர மாற்றத்தைத் தோற்றுவிக்கும் முகவர்களாக மாறினால் என்ன?

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.