Photo, THE HINDU

இலங்கை சுதந்திரம் பெற்று 76 வருடங்கள் கடந்துவிட்டன. பின்காலனித்துவ சூழலிலே சுதந்திரம் என்றால் என்ன? ஐரோப்பியக் காலனித்துவ ஆட்சியில் இருந்து அரசியல் ரீதியாக விடுதலை பெறுவதுதான் சுதந்திரமா? நாம் உண்மையிலே சுதந்திரத்தினை அனுபவிக்கிறோமா? ஒரு சுதந்திர நாட்டிலே யாருக்குச் சுதந்திரம் இருக்கிறது? யார் இன்னும் சுதந்திரமற்ற வாழ்க்கையினை வாழ்கிறார்கள்? சுதந்திரம் பெற்ற மக்களிடம் உண்மையிலே இறைமை இருக்கிறதா? போன்ற கேள்விகளை நாம் பின்காலனித்துவ நாடுகள் சார்ந்த‌ புலமைத்தளங்களிலும், செயற்பாட்டுத் தளங்களிலும் அடிக்கடி எழுப்பி வருகிறோம். இந்தக் கேள்விகளுக்கும் அப்பால் சென்று இறைமை என்பது விடுதலைக்குரிய கருத்தியலா என்ற கேள்வியினை இந்தக் கட்டுரை எழுப்புகிறது. இந்தக் கேள்வியின் மூலம் விடுதலை பற்றி காலனிநீக்கம் செய்யப்பட்ட ஒரு பார்வையினை முன்னெடுப்பதன் அவசியத்தினைக் கட்டுரை வலியுறுத்துகிறது.

அரசியல் சுதந்திரமும் தொடரும் பொருளாதார அநீதியும்

சுதந்திரத்தினைப் பற்றிச் சிந்திக்கையில் நாம் மொழி ரீதியிலான சுதந்திரம், பொருளாதார ரீதியிலான சுதந்திரம், அரசியல் ரீதியிலான சுதந்திரம் எனப் பல வகைப்பட்ட சுதந்திரங்கள் குறித்துப் பேசுகிறோம். இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலும் பின்னரும் ஐரோப்பிய காலனியக்க சக்திகளிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகள் தமக்கென இறைமை உடைய ஓர் அரசினை உருவாக்கிக் கொண்டனர். இந்த இறைமை வெறும் அரசியல் ரீதியிலான ஒன்றாகவே இருந்தது. பொருளாதார ரீதியிலே காலனித்துவச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட ஆசிய, ஆபிரிக்கப் பிராந்தியங்களுக்கு, காலனித்துவ வன்முறையினால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரச் சுரண்டல்களுக்கான நீதியும், நிவாரணமும் கிடைப்பதற்கான எந்த ஒரு தீர்க்கமான பொறிமுறையும் சுதந்திரத்தின் போது ஏற்படுத்தப்படவில்லை.

இதே காலப் பகுதியிலேயே மேற்கு நாடுகளின் ஆதிக்கத்தினை நிலைநிறுத்தும் வகையிலான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற‌ சர்வதேச நிதி நிறுவனங்களின் தோற்றமும் ஏற்பட்டது. காலனித்துவத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகள் மேற்கு நாடுகளிலும், தமது பிரதேசங்களை முன்னர் காலனித்துவ ஆதிக்கத்துக்கு உட்படுத்திய நாடுகளிலும் பொருளாதார மேம்பாட்டுக்காகத் தங்கியிருக்க வேண்டிய ஒரு நிலைமை உருவாக்கப்பட்ட முறைமை குறித்து ஃப்ரான்ஸ் ஃபனோன் (Frantz Fanon) The Wretched of the Earth (1961) என்ற நூலிலே குறிப்பிடுகிறார். இந்தத் தங்கியிருப்பின் தொடர்ச்சிக்கு வழி செய்யும் வகையிலேயே சர்வதேச‌ நிதி நிறுவனங்களின் உருவாக்கம் நோக்கப்படுகிறது. இதனையே ரிச்சாட் பீட் (Richard Peet) என்ற அறிஞர் “அரசியல் ரீதியான காலனித்துவ நீக்கமும், பொருளாதார ரீதியிலான மீள்காலனித்துவமும்” எனத் தனது Unholy Trinity: The IMF, World Bank and WTO (2003) என்ற நூலிலே குறிப்பிடுகிறார்.

காலனித்துவத்தினை மேற்கொண்ட நாடுகளுக்கும், விடுதலை பெற வேண்டிய‌ பிராந்தியங்களுக்கும் இடையில் ஒரு நீதியான உறவு, நிதி மறுபங்கீடு தேவை என்றும், வேறு பல‌ விடயங்களை முன்னிறுத்தியும் ஏய்மி செசாயார் (Aime Cesaire), லியோபோல்ட் செங்கோர் (Leopold Senghor) போன்ற கரீபியன், ஆபிரிக்க‌ சிந்தனையாளர்கள்/ செயற்பாட்டாளர்கள் பிரெஞ்சுக் காலனியாக்கதிக்கப் பேரரசில் இருந்து தேசிய அரசுகளாகத் தமது பிரதேசங்களை விடுவிப்பதனைக் காட்டிலும், பிரான்ஸுடன் ஒரு கண்டங்கடந்த சமஸ்டிக் கட்டமைப்பினை உருவாக்குவதே நீதியுடன் கூடிய விடுதலை என ஒரு கட்டத்திலே சிந்தித்திருந்தனர். இந்தச் சிந்தனை முறை வெற்றி அடையாவிட்டாலும், இது பொருளாதாரத் தங்கியிருப்பின் அபாயங்கள் பற்றி விழிப்புணர்வு கொண்ட ஒரு பார்வையாக இன்றும் பார்க்கப்படுகிறது. இந்தப் பார்வை பற்றி கரி வைல்டர் (Gary Wilder) Freedom Time: Negritude, Decolonization, and the Future of the World (2014) என்ற தனது நூலிலே விரிவாக எழுதியுள்ளார்.

தங்கியிருப்பு அரசியல் பொருளாதார ரீதியில் இன்றும் பின்காலனித்துவ நாடுகளிலே ஒரு பிரச்சினையாக இருக்கிறது. பல்தேசியக் கம்பனிகளுக்கும், பெரும் முதலாளிகளுக்கும், மேற்கு நாடுகளுக்கும் சார்பானதும், பின்காலனித்துவ நாடுகளில் வாழும் உழைக்கும் மக்களையும், வறிய மக்களையும், சமூகப் பொருளாதார ரீதியாகக் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட தலித் மக்கள், பூர்வகுடிகள் போன்றோரினையும் மேலும் பலமிழக்கச் செய்யும் பொருளாதாரக் கொள்கைகளை, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றன‌ எம் மீது திணித்துக் கொண்டிருக்கின்றன. அரசியல் ரீதியில் பெறப்பட்ட சுதந்திரத்தினால், தொடரும் நவகாலனித்துவ, நவதாராளவாத வன்முறைகளினால் எமது சமூகங்களின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. அரசியல் இறைமை ஓர் ஏமாற்றும் தந்திரமாகவே பொருளாதார அசமத்துவம் மிக்க உலகளாவிய சூழலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது இங்கு தெளிவாகிறது.

அரசியல் இறைமை: ஒரு வரலாற்றுச் சுருக்கம்

பின்காலனிய சூழலிலே அரசியல் இறைமை கிடைத்ததனைப் பலர் நன்மையான விடயமாகச் சுட்டுகின்றனர். ஆனால், அதனால் நன்மை பெற்றது ஒரு சிறு உயர் குழாமினரே. அரசியல் ரீதியாகப் பெறப்பட்ட இறைமையினைப் பயன்படுத்தி இந்த நாடுகள் பலவற்றிலே சிறுபான்மை இனங்களையும், மதங்களையும் சேர்ந்த மக்களும், உழைக்கும் மக்களும் ஒடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அரசியல் இறைமையிலே எந்தப் பங்கும் இருக்கவில்லை. இதன் விளைவாக இறைமை மறுக்கப்பட்டவர்களின் இறைமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல பின்காலனித்துவ நாடுகளினுள்ளே முன்னிறுத்தப்படுகிறது.

ஆனால், இறைமை என்பது விடுதலைக்கு வழி செய்யும் ஒரு கருத்தியலா? அது உண்மையிலே மக்களை மீட்சிக்குக் கொண்டு செல்லக் கூடிய ஒரு கருத்தியலா? அது வன்முறையினையும், புறமொதுக்கல்களையும் முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய ஒரு கருத்தியலா? இந்தக் கேள்விகளை ஆராய வேண்டுமாயின் இறைமையின் வரலாற்றினையும், அதன் நிறுவன வடிவங்களில் ஒன்றான‌ தேச அரசின் வரலாற்றினையும் நாம் அலச வேண்டியது அவசியம்.

ஐரோப்பாவிலே 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகளிலே இடம்பெற்ற மத ரீதியிலான யுத்தங்களினை அடுத்து அந்தப் பிராந்தியத்திலே அமைதி இடம்பெற வேண்டும் என்பதற்காக, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலத்தினைக் கொடுத்து அமைதியினை உருவாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட வெஸ்ட்ஃபாலியா உடன்படிக்கையின் வாயிலாகத் தோற்றம் பெற்ற ஒரு கருத்தே இறைமை. இது நிலப்பரப்பின் மீதான உரிமை சார்ந்த ஒரு கருத்து. ஒவ்வொருவரும் தமது இறைமைக்குரிய நில‌ எல்லையினை விட்டு வெளிச் செல்லக் கூடாது; மற்றையவரின் எல்லைக்குள் நுழைந்து பிரச்சினைகளை விளைவிக்கக் கூடாது என்ற நடைமுறையே இங்கு முன்னிறுத்தப்பட்டது. சமய ரீதியிலான‌ வேறுபாடுகளுக்கு முன்னால், இணைந்து ஒருமித்த முறையில் சகவாழ்வு வாழ முடியாத தோற்றுப் போன ஐரோப்பியர்கள் ஒருவரை ஒருவர் கொல்லுவதனை நிறுத்தி, அமைதியாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில் உருவாக்கப்பட்ட முரண்பாட்டுத் தீர்வுப் பொறிமுறையே இறைமை. 18ஆம் நூற்றாண்டிலே தேச அரசுகளின் பேரெழுச்சியுடன் இந்தக் கருத்தியல் மேலும் பலம்பெற்றதுடன் அது ஒரு கூட்டுரிமை சார் விடயமாகப் பின்வந்த காலத்தில் முன்னிறுத்தப்பட்டது.

ஐரோப்பாவிலே இறைமை என்ற கருத்து உருவாக்கப்பட்டதன் பின்னர், எதிர்பார்க்கப்பட்டது போல அன்றி, இறைமையின் பெயரினால் தொடர்ந்தும் வன்முறைகள் இடம்பெற்றன. தேச அரசுகளின் எல்லைக்குள் வாழ்ந்த தேசம் சாராத மக்கள், அல்லது சிறுபான்மை மக்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களையும், இன அழிப்பினையும், இனச் சுத்திகரிப்பினையும் எதிர்கொண்ட வரலாறே இறைமையுடன் சார்ந்து எழுச்சி பெற்ற ஐரோப்பிய நவீனத்துவத்தின் வரலாறாகவும் இருக்கிறது. இந்த வரலாற்றின் உச்சமான வெளிப்பாடே 20ஆம் நூற்றாண்டிலே ஜேர்மனியிலே யூத மக்கள் நாசிகளினால் படுகொலை செய்யப்பட்டமை. இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு என்பவற்றுக்கு அப்பால், ஒரு நாட்டுப் பிரஜைகளை சட்ட ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் வெவ்வேறுபட்ட அந்தஸ்த்துக்குரியவர்களாக உருவாக்குவதும், நிலைநிறுத்துவதும் இறைமை அரசியலின் ஏனைய ஒடுக்கும், புறமொதுக்கும் வடிவங்களாக அமைந்தன‌.

ஐரோப்பாவினுள் நிலப்பரப்பு சார் இறைமையினை உருவாக்கி விட்டு, அதே காலப் பகுதியிலே ஐரோப்பிய அரசுகள் தமக்கு எந்த விதத்திலும் தொடர்பற்ற இன்று நாம் ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கக் கண்டங்கள் என்று சொல்லும் பிராந்தியங்களை ஆக்கிரமித்து அங்கு வாழும் மக்களை இனவழிப்புச் செய்து, அவர்களையும் அவர்கள் பயன்படுத்தி வந்த வளங்களைச் சுரண்டி, தமது பலத்தினைத் தமக்குரிய பிராந்தியங்களுக்கு அப்பாலும் நிலைநிறுத்திக் கொண்டனர். இது இறைமையின் வன்முறையின் மற்றொரு வடிவம்; அதன் வெளியக‌ வடிவம். ஐரோப்பாவுக்கு வெளியில் வாழ்ந்த மக்கள் இறைமையற்றவர்கள்; எனவே, அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என‌ ஐரோப்பியக் காலனித்துவவாதிகள் சிந்தித்திருக்கின்றனர் என்பதனையே இந்த வன்முறைகள் வெளிக்காட்டுகிறது. அமெரிக்காவின் பூர்வக் குடிகளின் படுகொலையும், அமெரிக்காவில் ஏற்பட்ட குடியேற்றக் காலனியாதிக்கமும் இந்தச் சிந்தனையின் அடிப்படையிலேயே உருவாகின.

பின்காலனிய நாடுகளும் இறைமையும்

நவீனத்துவ காலத்திலே ஐரோப்பாவில் ஏற்பட்ட வன்முறைக்குத் தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட, ஆனால் முரண்நகையாக‌ வன்முறையினை ஐரோப்பாவிலும், வெளியிலும் தொடர்ந்தும் உருவாக்கிய‌ ஒரு கருத்தியலே இறைமை. இந்தக் கருத்தியல் காலனித்துவத்துக்கு பிந்தைய காலத்திலே காலனித்துவத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலே விடுதலைக்குரிய ஒரு கருத்தியலாக பார்க்கப்படுகின்றமை பின்காலனித்துவத்தினால் வரலாற்றுப் புரிதலற்ற‌ முறையில் மேற்கொள்ளப்பட்ட ஐரோப்பிய நவீனத்துவத்தின் ஓர் இறக்குமதி என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. மஹ்மூட் மம்தானி (Mahmood Mamdani) இதனை பின்காலனித்துவ நவீனத்துவம் எனத் தனது மிக அண்மைய நூலான Neither Settler Nor Native: The Making and Unmaking of Permanent Miniroties (2020) இலே குறிப்பிடுகிறார்.

இறைமையின் உலகமயமாக்கம் ஐக்கிய நாடுகளின் உருவாக்கத்தின் பின்னர் சுயநிர்ணய உரிமை என்ற பெயரில் 20ஆம் நூற்றாண்டிலே சர்வதேச சட்டங்களின் மூலம் உறுதிபெற்றது. வெவ்வேறு காலங்களிலே தாராளவாதிகள், இனவாதிகள், மதவாதிகள், இடதுசாரிகள், பாசிசவாதிகள், காலனித்துவ எதிர்ப்புவாதிகள், சர்வதேச சட்டத் துறையில் ஈடுபடுவோர், கல்விசார் புலமையாளர்கள் என எல்லாத் தரப்பினரும் அங்கீகரித்த ஐரோப்பிய நவீனத்துவத்தின் துயரமே நிலப்பரப்பு சார் இறைமை என்ற கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின் போதாமைகளையும், வன்முறைகளையும் கேள்விக்குட்படுத்தும் போக்கு இப்போது மஹ்மூட் மம்தானி, நந்திதா ஷர்மா (Nandita Sharma – Home Rule: National Sovereignty and the Separation of Natives and Migrants (2020)) போன்றவர்களின் வரலாற்று ரீதியான எழுத்துக்களிலே உறுதியான முறையிலே வெளிப்படுகிறது.

பின்காலனித்துவ நாடுகளிலே பலவற்றிலே யார் நாட்டின் நிலப்பரப்புக்குச் சொந்தமானவர்கள், உள்ளக ரீதியாக யார் எந்த நிலத்துக்கு இறைமை உடையவர் என்ற போட்டிகளும், போர்களுமே பின்காலனியக் காலத்திலே எழுச்சி பெற்றன. காலனியக் காலத்திலே உருவாக்கப்பட்ட அல்லது கூர்மைப்படுத்தப்பட்ட இன ரீதியிலான‌ அடையாள வேறுபாடுகளும், நிலங்களை மொழி, இன அடிப்படையில் பிரிக்கும் காலனித்துவ நிருவாக முறைமைகளும் இந்த எழுச்சிக்கான அடித்தளங்களாகவும் அமைந்தன. சுதந்திரத்தின் பின்னர் இந்த நாடுகளை சகவாழ்வுக்குரிய கூட்டிணைவுகளாகச் சிந்திக்காமல், குறித்த இனங்களின், மதக்குழுவினரின் இறைமைக்கான பிராந்தியங்களாக, ஐரோப்பிய நவீனத்துவத்தின் பாணியிலே, அங்கு வாழ்ந்த‌ ஏனைய இனங்களைப் புறமொதுக்கும் வகையிலே சிந்தித்தமையே இந்த நாடுகளிலே இனவழிப்புக்களும், இனச்சுத்திகரிப்புக்களும் மேலோங்கியமைக்குக் காரணமாகியது. இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையின் போது மேற்கொள்ளப்பட்ட கொலைகள், ருவாண்டாவில் ஏற்பட்ட இனப் படுகொலை போன்றன ஐரோப்பாவுக்கு வெளியே நிலப்பரப்பு சார் இறைமைச் சிந்தனையின் விளைவாக‌ மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இறப்புக்குக் காரணமான வன்முறைகளாக அமைந்தன.

தாம் வாழும் அரசுகளினது இனவழிப்பிலே இருந்தில் விடுதலை பெறப் போராடிய பின்காலனித்துவ சமூகங்கள் கூட இந்த ஐரோப்பிய நவீனத்துவத்தின் பாணியிலேயே தமது விடுதலையினை கற்பனை செய்தார்கள். நாம் இன்று வாழும் பிராந்தியங்களிலே ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் எம் மூதாதையரிடம் இறைமை இருந்தது என, இறைமை என்ற கருத்தியலின் ஐரோப்பிய ஊற்றுக்களைக் கூட விளங்கிக்கொள்ளாது, நாம் திரும்பத் திரும்பச் சொல்லுவதும், எமது பிரதேசங்களில் ஐரோப்பியக் காலனித்துவத்தின் முன்னர் இருந்த இராசதானிகளையும் (உதாரணம்: யாழ்ப்பாண இராசதானி), பேரரசுகளையும் (உதாரணம்: சோழப் பேரரசு) இறைமை மிக்க பண்டைய‌ தேசங்கள் என நாம் வரலாற்றினைப் புறமொதுக்கி விபரிப்பதும் ஐரோப்பிய நவீனத்தவ சிந்தனையின் அடிப்படையில் எம்மத்தியிலே எழுச்சி பெற்ற கடந்த காலம் பற்றிய‌ பின்காலனித்துவக் கற்பனையின் வடிவங்களே. நாம் சிறுவர்களாக இருக்கும் போதில் இருந்து வரலாறு என்ற பெயரில் இந்தக் கற்பனை எம் மீது உட்பகுத்தப்படுவதனையும், தேசிய விழாக்கள், அரசியற் தலைவர்களின் பேச்சுக்கள், நாவல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றன இந்தக் கற்பனையினை நாளாந்தம் மீளுருவாக்கி வருவதனையும் பார்த்தாச் சட்டர்ஜி (Partha Chatterjee) The Truths and Lies of Nationalism (2022) என்ற‌ நூலிலே விபரிக்கிறார்.

சுதந்திரத்தினைக் காலனிநீக்கம் செய்தல்

இலங்கையினை ஐரோப்பிய நவீனத்துவத்தின் பாணியில் ஒரு குறித்த மக்களிற்கு உரிய பிராந்தியமாகச் சிந்தித்தமையின் விளைவே சிங்கள பௌத்த ரீதியில் இந்தத் தீவில் தமிழர்கள் மீதும் ஏனைய சிறுபான்மை மக்களின் மீதும் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புச் செயன்முறைகள். ஆனால், இந்த இனவழிப்பின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக ஐரோப்பிய நவீனத்துவத்தின் பாணியிலிலேயே தமிழ்த் தேசியம் கற்பனை செய்யப்பட்டது. அதுவே விடுதலையின் வடிவமாக முன்னிறுத்தப்பட்டது. அந்தக் கற்பனையின் ஒரு வன்முறை விளைவாகவே 1990இலே முஸ்லிம் மக்கள் வடபகுதியில் இருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர்.

நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று ஒவ்வோரு சுதந்திரத் தினத்திலும் கூறினாலும், நாம் பெற்ற சுதந்திரம் பொருளாதார ரீதியில் மேற்கு நாடுகளினதும், பெரும் முதலாளிகளினதும் ஆதிக்கத்திலே தங்கியிருப்பதனையும், அரசியல் ரீதியிலே ஐரோப்பிய நவீனத்துவத்தின் வன்முறையான வடிவங்களுக்கு ஊடாகக் கட்டப்பட்டிருப்பதனையுமே நாம் காண்கிறோம்.

நாம் இன்னும் சுதந்திரம் பெறவில்லை என்று, சுதந்திர தினத்தினைக் கரிநாள் என அழைப்பவர்களும் கூட‌ வன்முறை மிக்க ஐரோப்பிய நவீனத்துவம் தமது சமூகங்களிலே நிறுவன ரீதியாக‌ நிலைபெறுவதனையே தமது விடுதலையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அதுவே அவர்களின் எதிர்ப்பின் குரலாகவும் அமைந்து விடுகின்றமை பின்காலனித்துவத்தின் ஒரு வரலாற்றுத் துன்பியல். விடுதலை அரசியலிலே இறைமைக்கும், இன, மத, அடையாள‌ ரீதியிலான தேசியங்களுக்கும் அப்பால் சென்று எம்மால் விடுதலை பற்றி சிந்திக்க முடியாமல் இருக்கின்றமையையே நாம் எம்மைச் சுற்றிக் காண்கிறோம்.

சுதந்திர தினத்திலே ஐரோப்பியக் காலனித்துவத்தின் வன்முறைகளைப் பற்றிப் பேசுவதும், சிங்கள பௌத்த இனவாதத்தின் வன்முறைகளை எதிர்ப்பதுவும் மாத்திரம் போதாது. விடுதலை என்ற இலட்சியத்தினை இனவழிப்புக்கும், இனச் சுத்திகரிப்புக்கும் வித்திடும் ஐரோப்பிய பாணி நவீனத்துவச் சிந்தனை முறையில் இருந்தும், அதனது அரசியற் கட்டமைப்புக்களிடம் இருந்தும் விடுதலை செய்வது எப்படி என்றும் சிந்திக்க வேண்டியது அவசியம். இன்னொரு வகையிலே சொன்னால் சுதந்திரத்தினை நாம் காலனித்துவ நீக்கம் செய்ய வேண்டும். அப்போது விடுதலை ஒரு பிரதேசத்தில் வாழும் எல்லாரினையும் உள்வாங்கிய, சமூக நீதியினையும், நீதியான மீள்பங்கீட்டினையும் வலியுறுத்திய‌ இலட்சியமாகப் பரிணமிக்கும். இல்லாவிட்டால் ஐரோப்பிய நவீனத்துவம் ஒரு நச்சுவட்டமாக எம்மத்தியில் வன்முறையினை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

மகேந்திரன் திருவரங்கன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறையிலே சிரேஸ்ட விரிவுரையாளாராகக் கடமையாற்றுகிறார்.