படம் | Eranga Jayawardena/AP, Thehindu

சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரனை நிறுத்த வேண்டுமென முன்மொழிந்திருக்கிறார். இது குறித்து, ஜக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய எதிரணிகள் என்ன நினைக்கின்றன? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதே ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மனோகணேசனும் இதற்கு ஆதரவாக பேசியதுடன், எதிர்க் கட்சியினர் விக்னேஸ்வரன் ஒரு தமிழர் என்பதை காரணம்காட்டி, இந்த முன்மொழிவை நிராகரிக்க மாட்டார்கள் என்று தான் நம்புகிறார் என குறிப்பிட்டிருந்தார். இது ஊடக மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இம்மாதம் 7ஆம் திகதி ‘ராவய’ பத்திரிகையில் அரசியல் ஆய்வாளர் குசேல் பெரேரா எழுதியிருந்த கட்டுரை ஒன்றிலேயே இந்தக் கருத்தை முதன் முதலாக வெளியிட்டிருந்தார். இதனை அடியொற்றியே சுமந்திரன் இந்த விடயத்தை ஊடக அரங்கிற்கு கொண்டு வந்திருந்தார்.

கூட்டமைப்பில் இரா.சம்பந்தனுக்கு அடுத்து அபிப்பிராயங்களை சொல்ல வல்லவராக ஊடகங்களால் நோக்கப்படும் சுமந்திரன், இவ்வாறானதொரு அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியிருந்ததை ஊடகங்கள் அனைத்தும் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடு போன்றே அறிக்கையிட்டிருந்தன. ஆனால், சுமந்திரனின் மேற்படி அறிவிப்பு தொடர்பில் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களோ ஆகக் குறைந்தது தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா கூட அறிந்திருக்கவில்லை. ஆனால், சுமந்திரன் மேற்படி கருத்தை வெளிப்படுத்தியிருந்த மறுதினமே வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவ் முன்மொழிவை மறுதலிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். தன்னிடம் அவ்வாறான எண்ணம் எதுவுமில்லை என்று தெரிவித்திருந்த விக்கினேஸ்வரன், இவ்வாறான கருத்துக்களை எண்ணி சிரிப்பதா அல்லது அழுவதா என்றும் விளங்கவில்லை என்றவாறு தன் அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் விக்னேஸ்வரனுடைய அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் அவர் பலரால் சிரிக்கப்படும் நிலைக்கும், அதனை எண்ணி அவர் அழவேண்டிய நிலையில் இருப்பதையும் மறைமுகமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார் போலும்.

ஒரு பத்தி ஆய்வாளர் எத்தகைய அபிப்பிராயங்களையும் முன்வைக்க முடியும். ஆனால், அவ் அபிப்பிராயங்களை அரசியல் தலைவர்கள் என்போர் ஆழமான பரீசிலனையின் பின்னரே, பொது அரங்கிற்கு கொண்டுவர வேண்டும். சுமந்திரன் ஏன் இவ்வாறானதொரு விடயத்தை பொது அரங்கிற்கு கொண்டுவந்தார் என்பதை ஊகிப்பது கடினமாயினும் கூட, இது ஒரு முதிர்ச்சியற்ற வெளிப்பாடு என்பதில் இரு வேறு கருத்தில்லை. ஆகக் குறைந்தது இது போன்ற கருத்துக்களை பொது அரங்கத்திற்குள் கொண்டுவரும்போது, எவரது பெயர் முன்மொழியப்பட்டதோ, அந்த குறித்த நபரின் அனுமதியாவது பெறப்பட்டிருக்க வேண்டும். அதேவேளை, கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுடன் கலந்துரையாடி ஒரு பொது இணக்கப்பாட்டிற்கு வந்த பின்னரே இது போன்றதொரு அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், சுமந்திரன் எது குறித்தும் சிந்திக்காமல் இவ்வாறானதொரு அபிப்பிராயத்தை வெளியிட்டதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒரு சிக்கலுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றார். பெரும்பானமை இன மக்களான சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டுமென்று ஜக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னனியும் பதிலளித்திருக்கின்றன. இது சுமந்திரனும் அறியாத ஒன்றல்ல. ஆனால், மேற்படி நடவடிக்கையால் பரிகசிப்புக்குரிய ஒருவராக ஆகியிருப்பது வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனே அன்றி வேறு எவருமல்லர். விக்னேஸ்வரன் இதனை எந்தளவு உணர்ந்திருக்கிறார் என்பதற்கான பதில் அவரிடம் மட்டுமே உண்டு.

ஒரு ஆட்சிமாற்றத்திற்கான உரையாடல் தெற்கு அரசியல் வட்டாரங்களில் சில மாதங்களாகவே நடைபெற்று வருகிறது. ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை விழுத்துவதோடு மட்டுமல்லாது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் இல்லாமலாக்கப்பட வேண்டும் என்பதே மேற்படி உரையாடல்களின் அடிப்படையாக இருக்கிறது. இந்த அடிப்படையில் முதலில் தெற்கில் செல்வாக்குமிக்க சோபித தேரரை நிறுத்துவது தொடர்பில் சிந்திக்கப்பட்டிருந்தது. இதற்கு சோபித தேரரும் இணக்கம் தெரிவித்திருந்தார். அதிகாரத்தில் தான் இருக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்த சோபித தேரர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குதல் என்னும் ஒரு தனித்த இலக்கின் (Single task) அடிப்படையில் போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பெயரும் இந்த இலக்கிற்காக சிலரால் பிரேரிக்கப்பட்டிருந்தது. ஆனால், சந்திரிக்கா இது குறித்து திட்டவட்டமாக எதுவும் தெரிவிக்காவிட்டாலும் கூட, அவரது பெயரும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனாலும், ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்த்து நின்று, தோற்கடிக்கும் ஆற்றலுள்ள ஒருவராக இதுவரை எவரும் தென்படவில்லை. ஒப்பீட்டளவில் ராஜபக்‌ஷவின் முன்னைய செல்வாக்கில் சிறிது வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கூட ஒரு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் எதிரணிகளிடம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே! இது பற்றி ஒரு முறை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அவர் ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். சந்திரிக்கா ஒரு பொது வேட்பாளராக வருவார் என்பது சந்தேகமே. ஏனெனில், அவர் தோல்வியடைய விரும்பமாட்டார். வெல்லக் கூடியதொரு சூழல் இருந்தாலொழிய அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார். சம்பந்தர் இவ்வாறு ஆழமாக சிந்திக்கும் போது, சுமந்திரன் ஏன் அரசியல் முதிர்ச்சியற்ற ஒருவராக நடந்து கொண்டிருக்கிறார் என்பது விளங்கவில்லை. சுமந்திரனுக்கு வேறு ஏதேனும் உள்நோக்கம் இருந்திருப்பின் அது வேறு விடயம். இன்றைய சூழலில் தெற்கில் மகிந்த ராஜபக்‌ஷ என்னும் ஒரு திடகாஸ்திரமான சிங்கள மனிதருக்கு முன்னால் நிற்கக்கூடிய தகுதிநிலை ஒருவருக்கு இருக்கிறதென்றால், அது ஒப்பீட்டளவில் சந்திரிக்கா குமாரதுங்கவாக மட்டுமே இருக்க முடியும். பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பப் பின்னனி, முன்னாள் ஜனாதிபதி என்னும் அடையாளம், இடதுசாரி மற்றும் தாராளவாத சக்திகளின் ஆதரவை இலகுவில் திரட்டக் கூடிய ஆற்றல், மேலும் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிர்தப்பியவர். இப்படிப்பட்ட பின்னனியுடன் தெற்கில் வேறு எவரையும் காண முடியாது. ஆனால், அப்படிப்பட்ட ஒருவர் கூட தோல்வியடைய விரும்பமாட்டார் என்கிறார் சம்பந்தன். இப்படிப்பட்டதொரு சூழலில் தற்போதுதான் கற்றுக் அரசியல் கொண்டிருக்கும் விக்கினேஸ்வரனை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது குறித்து சுமந்திரன் பேசுகின்றார் என்றால் இதனை என்னவென்பது. சுமார் 65 வருடகால அரசியல் அனுபவத்திற்கு பின்னரும் கூட நாம் வெறும் வீண் விம்பங்களில் திருப்தியுற முற்படுகின்றோமா?

சுமந்திரன் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்ட காலத்தில் மிகுந்த நிதானத்துடனும், தெளிவுடனும் பேசக் கூடிய ஒருவராகவே தன்னை நிலைநிறுத்தியிருந்தார். ஆனால், நாளடைவில் சுமந்திரனும் மெதுவாக நிதானத்தை விடுத்து, கற்பனாவாத சுலோகவாதிகளின் அரசியலின் பக்கமாக சாயத் தொடங்கினார். அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெல்லவேண்டிய நிலை இருப்பதும் இதற்கொரு காரணமாக இருக்கலாம். தற்போது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற சுமந்திரன் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான தயார்படுத்தல்களில் இறங்கிவிட்டார். இத்தகையதொரு சூழலில்தான் ஒரு ஊடக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றார். ஆனால், இவ்வாறான பரபரப்பு கோசங்கள் தமிழர் அரசியலின் முதிர்ச்சியற்ற தன்மைக்கான சான்றாக அமையுமேயன்றி, வேறு எந்தவொரு உருப்படியான மாற்றங்களுக்கும் வித்திடாது. ஆனால், மேற்படி பரபரப்பால் தமிழர் அரசியலில் விக்கினேஸ்வரனின் இடம் நகைப்புக்கிடமான ஒன்றாகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. ஒரு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் என்னும் உயர்ந்தவொரு ஸ்தானத்தில் நின்றுகொண்டிருந்த விக்கினேஸ்வரன், இன்று அரசியலில் மிகவும் மலினப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார். தன் தொடர்பில் கூட்டமைப்பு வட்டாரத்திலிருந்து வெளிப்படுத்தப்படும் ஒரு அபிப்பிராயத்தை மறுதலிப்பதற்காக, தானே அறிக்கை வெளியிட வேண்டிய இக்கட்டு நிலை இன்று விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டிருக்கிறது. இது எதனைக் காட்டுகின்றது? விக்கினேஸ்வரன் ஒரு திடகாஸ்திரமான தலைவராக இருக்கிறார் என்பதையா அல்லது நகைப்புக்கிடமான நிலையில் இருக்கிறார் என்பதையா? பதில் விக்னேஸ்வரனின் எதிர்கால செயற்பாடுகளில் தங்கியிருக்கிறது.

யதீந்திரா
நன்றி சமகாலம்