Photo, TAMIL GUARDIAN

ஜெர்மன், ப்ரைபேர்க் பல்கலைக்கழகப் பீடாதிபதியும் தத்துவவாதியுமான ஹைடகர் நவம்பர் 1933 இல், தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். லீக் ஒப் நேசனிலிருந்து ஜெர்மனி வெளியேறுவதற்கு, ஹிட்லருக்கு ஆதரவாக அனைத்து மாணவரும் வாக்களிக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தார். எமது தனிப்பெரும் தலைவர் இந்த வேட்கையை ஒட்டுமொத்த மக்களின் விழிப்புணர்வாக்கி மக்களை ஒருங்கிணைத்துள்ளார். எனவே, வாக்குச் சாவடிக்குப் போய் வாக்களிப்பதிலிருந்து எவரும் தவறக்கூடாதென்றார் அவர். இது பரிந்துரையல்ல; அதிகாரத்தைப் பயன்படுத்திய உத்தரவு.

ஒரு பல்கலைக்கழகத்தின் தலைவரின் அதி தீவிர நடவடிக்கை இது எனினும், கவனிக்கப்பட வேண்டிய விடயம், மாணவர்களின் சுய சிந்தனையைத் தடைசெய்யும் நோக்கில், ஒரு பல்கலைக்கழகத் தலைமை எவ்வாறு பக்கச்சார்பான முடிவுகளை எடுக்கிறது என்பதே.

இவ்வகையில் யாழ். பல்கலைக்கழக அறிவுசார்துறை எவ்வாறு நடுநிலையைக் கடைப்பிடிப்பதிலிருந்து வழுவி, ஒரு நிகழ்வை ரத்துசெய்தது என்பதே இந்தக் கட்டுரையின் சாரம்.

பல்கலைக்கழகத்தின் கடமை, சமூக சிந்தனையுள்ள அறிவுசார் மாணவர்களை உருவாக்குதலே. அதற்கான அறிவுச் சூழலை உருவாக்குவதற்கு மாணவர்களின் சிந்திப்புத் திறன், பகுத்தறிவு, கருத்துகளைக் கிரகிக்கும் பண்புகள் வளர்க்கப்பட வேண்டும். மாணவர் சிலரின் விருப்பு வெறுப்போ அல்லது வெளியார் அழுத்தமோ கல்விசார் புலமைக்குக் குந்தகம் விளைவிக்குமென நம்புகையில், பக்கச்சார்பற்ற நடுநிலை முடிவொன்றை எடுப்பதே பல்கலைக்கழகத்தின் கடப்பாடு.

இவ்வகையில் சுவஸ்திகா அருளிங்கம் கலந்துகொள்ள இருந்த நிகழ்வு ரத்துசெய்யப்பட்டது பற்றி அலசுகிறது இந்தக் கட்டுரை.

அக்டோபர் 31, 2023 அன்று யாழ். பல்கலைக்கழகத்தில் தொழிற்சங்கத் தலைவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருளிங்கம், ‘நெருக்கடிக் காலங்களில் நீதித்துறையின் சுயாதீனம்’ எனும் தலைப்பில் உரையாற்ற வளாகத்தின் சட்டத்துறை ஏற்பாடு செய்திருந்தது.

சட்டத்துறையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் பயில்கின்றனர். சட்டத்துறை, கலைப்பீடத்தின் ஒரு அங்கம். சட்டத்துறை மாணவர்கள் சுவஸ்திகாவின் உரையை எதிர்பார்த்திருந்தனர். சுவஸ்திகா பேசுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னராக, அந்த நிகழ்வு பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைநிறுத்தப்பட்டது.

இது பற்றி நவம்பர் 2, 2023 அன்று சுவஸ்திகா யாழ். பல்கலைக்கழக உபவேந்தருக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

அதன் சாரம் என்னவெனில், ஒரு மாத காலத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளை பாசிச அமைப்பு என சுவஸ்திகா கூறிய கூற்றால் மாணவர்கள் சிலர் அதிருப்தியுற்றார்கள் எனவும், ஆனால், அந்த நிகழ்வு திட்டமிட்டபடி நிகழும் எனவும் 30 அக்டோபர் 2023 அன்று சட்டத்துறைத் தலைவர் தெரிவித்திருந்தார். எனவே, சுவஸ்திகாவும் தனது உரையை நிகழ்த்த 31 அக்டோபர் 2023 அன்று பல்கலைக்கழகம் சென்றிருந்தார்.

அந்த நிகழ்வு நிகழ்வதற்கு ஒரு மணிநேரம் முன்பதாக, குறிப்பிட்ட மாணவர்களின்  எதிர்ப்புக் காரணமாக நிகழ்வைப் பல்கலைக்கழகத்தில் நடாத்துவது சாத்தியமில்லை என்றும் வேறு இடத்தைத் தேர்ந்தெடுக்கலாம் எனவும் சட்டத்துறைத் தலைவர் சுவஸ்திகாவிடம் தெரிவிக்க, அதற்கு சுவஸ்திகா உடன்படவில்லை. அவர் பீடாதீபதியைச் சந்தித்து உரையாடக் கேட்டிருக்கிறார்.

பீடாதிபதியும் பதில் துணைவேந்தரும் கலந்துகொண்ட அச்சந்திப்பில், சுவஸ்திகா புலிகளைப் பாசிச அமைப்பென விளித்த காரணத்தால், மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டிருப்பதாகவும் பொறுப்பற்றதனமாய் நடப்பதாகவும் கூறி, எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்களுடன் தாங்கள் பேசியதாகவும், அவர்கள் எதற்கும் உடன்படாத நிலையில் நிகழ்வை நடாத்துவது சாத்தியமற்றதென்றனர் அவர்கள். அத்துடன், சுவஸ்திகா புலிகளைப் பாசிச அமைப்பு என விளித்ததில் தங்களுக்கும் உடன்பாடில்லை எனவும் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த சுவஸ்திகா தனது கடிதத்தில் குறிப்பிட்டதாவது:

‘பல்கலைக்கழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு சட்டத்துறை என்னை அழைத்தது ஒரு முரண்நகை என்று நான் மேலும் கூறினேன். நிகழ்வைத் தொடருமாறு நான் பீடாதிபதியிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தேன். ஆனால், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

எனது விரிவுரையை இரத்துச் செய்யும் முடிவை பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்ததன் மூலம், பல்கலைக்கழகத்திற்குள் சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்கு எதிராக ஓர் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரந்தளவில், மாணவர் அமைப்பு மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகம், ஜனநாயக வெளியின் மீதான இந்த அப்பட்டமான பாதிப்புக்கு எதிராக ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்றும், இவ்வாறானதொரு சம்பவம் மீண்டும் நடப்பதை அனுமதிக்கமாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன்.

எனது பங்கிற்கு, பீடாதிபதி உறுதியளித்த அதே விரிவுரைத் தொடருக்கான ‘ஒத்திவைக்கப்பட்ட’ அழைப்பிற்காக நான் காத்திருக்கிறேன். இந்த விடயத்தில் தாங்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் எனது கருத்தைப் பேசுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் இடமளிப்பீர்கள் எனவும், வெவ்வேறு கருத்து நிலைப்பாடுகளை உடையவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எந்தத் தடையும் இல்லாமல் உரையாடல்களிலும், விவாதங்களிலும் ஈடுபடுவதற்கான கலாசாரம் ஒன்று நிலவுவதனை உறுதிசெய்வீர்கள் எனவும் நம்புகின்றேன்.”

இந்தக் கடிதத்தின் சாரத்தை முன்வைத்து, இந்நிகழ்வு ரத்துசெய்யப்பட்டதன்  அரசியல் பின்னணியையும், சுவஸ்திகா மேல் கட்டமைக்கப்பட்ட பொய்ப்  பரப்புரைகளின் தாக்கத்தையும், சுவஸ்திகாவின் அரசியல் சமூக செயல்பாடுகள் சார்ந்து நோக்கல் அவசியம். இதன் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் பக்கச்சார்பற்ற நடுநிலைக் கொள்கை பேணப்படவில்லை என்பதையும், மாணவர்களின் துறைசார்ந்த அறிவுத்தேடலையும் அவர்களின் சிந்திக்கும் திறனையும் பல்கலைக்கழகம் எவ்வாறு புறக்கணித்ததென்பதையும் அலசுதல் அவசியம்.

பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்ட மாணவர்களுடன் உரையாடி நிலைமையை சுமூகமாக முயன்றது உண்மையெனினும் மாணவர்களுக்கு துறைசார் நிகழ்வுகளில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவுகளின் தலையிடுவதற்கான உரிமை இல்லை. ஏனெனில், அது கல்வி கற்கும் மாணவர்களின் அறிவியல் சுதந்திரம் சார்ந்த விடயம். அதனை முடிவெடுப்பது குறிப்பிட்ட துறைசார்  பிரிவு. இதில் பல்கலைக்கழக நிர்வாகம் கறாராக இருந்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த பல்கலைக்கழக நிர்வாகத்தையோ ஒட்டுமொத்த மாணவர்களையோ குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவது இக்கட்டுரையின் நோக்கமன்று. மாறாக இந்த குறித்த நிகழ்வில் எடுக்கப்பட்ட முடிவு பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனமே இக்கட்டுரையின் நோக்கம்.

சுவஸ்திகாவின் அரசியல் சமூக செயல்பாடுகள்

சுவஸ்திகா நீண்டகாலமாக சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர். அரகலய (போராட்டம்) காலகட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவைக் கொழும்பில் நிகழ்த்த முன்னின்று செயல்பட்டவர். அது மட்டுமல்ல, பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவரும், இச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட பல தமிழ், முஸ்லிம்களுக்கு இலவசச் சட்ட உதவியை நல்கியவருமாவார். தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள்  வரலாற்று ரீதியாக பெரும்பான்மைவாத சிங்கள தேசியவாதத்தால் மறுக்கப்பட்டதை, தெற்கிலுள்ள முற்போக்குச் சக்திகளிடம் கொண்டுசென்று பிரித்தாளும் அரசியல் மூலமாக ஆட்சியதிகாரத்தைத் தக்கவைக்கும் அரசியலின் ஆபத்தையும், இதற்கெதிரான தெற்கின் முற்போக்குச் சக்திகளின் பங்களிப்பையும் வலியுறுத்தியவர். இவரது அரசியல் தளம் பரந்துபட்டது. தொழிலாளர் உரிமை, முஸ்லிம் மக்கள் மேலான இனவாத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள், அரச நிறுவனங்களைத் தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டங்கள் எனப் பல்வேறு  தளங்களில் செயல்படுபவர் .

முக்கியமாக அவர்  இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றித் தொடர்ந்த சட்டரீதியான செயல்பாடுகளை மட்டுமல்ல, அதற்கெதிரான போராட்டங்களிலும் பங்குபற்றுபவர். இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் பற்றிப் பேசி வருபவர். போரில் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாட்களை வட கிழக்கு மக்கள் நினைவுகூரும் உரிமைக்காகக் குரல்கொடுப்பவர்.

சட்டத்துறையில் அவர் பெரும்பாலும் தொழிலாளர், பெண்கள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்கள் சார்பாக வாதிடுபவர். ஊடகங்களைப் பார்ப்பவர்கள் அவரது செயல்பாடுகளை இலகுவில் அறிந்துகொள்தல் பெரும் கடினமல்ல.

சமூக நீதிக் கோட்பாட்டில் தளராத நம்பிக்கை கொண்ட ஒருவர், இலங்கையில் எவ்வாறு நீதித்துறை சுயாதீனத்தை இழக்கிறது என்பதைத் தனது சட்ட அறிவால் மட்டுமல்ல, களச் செயல்பாட்டு அனுபவம் மூலமாகவும் சட்டத்துறை மாணவர்களுக்கு உரையாற்ற முன்வந்தது அந்த மாணவர்கள் தம்மைச் செழுமைப்படுத்தவும், தர்க்க ரீதியாகச் சிந்திப்பதையும், நீதித்துறையின் சுயாதீனம் இழக்கப்படுவதால் ஏற்படும் மோசமான விளைவுகளையும் புரிந்துகொள்ள உதவியிருக்கும்.

இந்த நிகழ்வை தடுத்து நிறுத்த சில மாணவர்களைத் தூண்டிவிட்டதன் பின்னணியில் வலதுசாரி தீவிர தமிழ் தேசியவாத சக்திகளின் திட்டமிட்ட பொய்  பரப்புரை முக்கிய பாத்திரம் வகிக்கிறது. இது ஒரு பாசிச மன நிலையிலிருந்து எழுந்துவரும் வன்முறை.

பாசிச மன நிலை

பாசிசம் பற்றிய ஆய்வாளர்களின் நோக்கிலிருந்து சில பொதுவான அம்சங்களைப் பார்க்கலாம்.

பழைய வரலாற்று புனைவுகளில் ஆழ்ந்து ஒரு ரம்மியமான தேசம் ஒன்று முன்னர் இருந்ததாக அது கற்பனை ஒன்றை வரைகிறது. இழந்துபோன தேசம் இனத் தூய்மையான தேசம், பாரம்பரிய கலாசாரம் கொண்டது. அதனை நாம் இழந்துவிட்டோம். அதனை மீளப்பெறுவதன் மூலமாக தேசத்தின் புகழை மீண்டும் நிலை நிறுத்த ஒரு தீரமிக்க தலைவன் அவசியம். அந்தத் தலைவன் கடவுளாக்கப்படுகிறான். அவனே தேசமாகவும் தேசத்தின் தந்தையாகவும் உருவகிக்கப்படுகிறான். முக்கியமாக அவன் ஆணாக இருப்பான். தேசம் என்பதே குறிக்கோள். சாதி, வர்க்க, பாலியல் அசமத்துவங்களை முதன்மைபடுத்துபவர்கள், மாற்றுக்கருத்துகளை முன்வைப்பவர்கள் தேச நலன்களை பலவீனப்படுத்துபவர்கள், எனவே, அவர்கள் தேச விரோதிகள்.

இவ்வாறான கட்டமைப்பில் தேச  நலன்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள்​என உருவகிக்கப்பட்ட தனி நபர்களையும் அமைப்புகளையும் பிரித்தெடுத்து அவர்களைத் துரோகிகளாக்கி அவர்களை கைதுசெய்து தடுத்துவைப்பதற்கும் கொல்வதற்குமான லைசென்ஸை பாசிச சிந்தனை வழங்குகிறது.

பாசிச சிந்தனைமுறை தர்க்கத்தையோ, பகுத்தறிவு மூலமான சிந்தனைமுறையையோ ஏற்பதில்லை. அது ஜனநாயகமானது தேசத்தை பலவீனமாக்கும் என நம்புகிறது. அது மட்டுமல்ல, இடதுசாரி சிந்தனை முறை, தொழிற்சங்கம் போன்றவற்றை தனது தேசக்கட்டுமானத்துக்கு எதிரானதாக கருதுகிறது. சகிப்புத் தன்மையை பலவீனமாக சித்தரிக்கிறது. அறிவார்ந்த சிந்தனைக்கு இடமில்லை.

பாசிச சிந்தனைக்கான முக்கிய ஆயுதம் பொய்மை கொண்ட பரப்புரை. ஹன்ன ஆறேண்ட் எனும் அறிஞரின் கூற்றுப்படி பாசிசமானது தொடர்ந்த பொய் பரப்புரைகள் மூலமாக உண்மைகளை மறைக்கின்றது. தொடர்ந்த பொய்மைகள் மூலமாக உருவாக்கப்பட்ட சூழல் முன்னர் நிகழாது என நினைத்த விடயங்கள் நிகழ்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் உருவாக்குகிறது என்கிறார்.

சுவஸ்திகா மேலான பொய் பரப்புரை

மேற்கண்ட பாசிச மனநிலையின்  பின்னணியில்,சுவஸ்திகா விடுதலைப் புலிகளை பாசிஸ்ட்டுகள் என்று சொன்ன ஒரு விடயத்தை வைத்துக்கொண்டு அவர் பற்றிய  கட்டுக்கதைகள் எவ்வாறு புனையப்பட்டது என்பதை கூர்ந்து கவனித்தல் அவசியம். இந்தக் கட்டுக்கதையின் அடிப்படையில்தான் ஒரு சில மாணவர்களைத் தூண்டி நிகழ்வை நிறுத்த வழிசமைக்கப்பட்டது என்பது புலனாகிறது.

நிகழ்வுக்கு ஏறத்தாழ ஒரு மாத காலத்துக்கு முன்னதாக சுவஸ்திகா அளித்த பேட்டி ஒன்றில் இனவாத அரசியலையும், இலங்கை அரசியல் ஆதிக்கத்தையும் விமர்சித்த அதேவேளை, விடுதலைப் புலிகளையும் விமர்சனத்துக்குள்ளாக்கினார். விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பாசிச அமைப்பாக கூறி அவர்களின் அரசியலை தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளிடமிருந்து பிரித்து பார்க்கவேண்டுமென்பதே அவரது பார்வை.

இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சுவஸ்திகாவுக்கெதிரான மிக மோசமான பாலியல் அவதூறுகளும், பொய் வதந்திகளும் திட்டமிட்டு பரப்பப்பட்டன. அவர் தமிழ் மக்களுக்கு விரோதி என்றும், அரச நிகழ்ச்சி நிரலில்  செயல்படுபவர் என்றும் இவருக்கு அதற்கான நிதி உதவிகள் கிடைக்கின்றன  என்றும் கட்டுக்கதைகள் கட்டப்பட்டன.

சுவஸ்திகா புலிகளைப் பாசிஸ்டுகள் என அழைத்ததில் உடன்பாடில்லை; ஏனெனில், அவ்வாறான அரசியல் இலங்கை அரசின் தமிழ் மக்கள் மேலான படுகொலைகளை நியாயப்படுத்தும் அரசியலுக்கு துணை போகும் என்பது போன்ற மென்போக்கு விமர்சனங்ககளும் முன்வைக்கப்பட்டன.

எனினும், சுவஸ்திகாவின் கருத்து நிலைப்பாடுக்கான அறிவு ரீதியான விமர்சனங்கள் ஏதும் இருக்கவில்லை. விடுதலைப் புலிகள் பாசிச சிந்தனை கொண்டவர்கள் அல்ல என அறிவு ரீதியாகவும் ஆதாரபூர்வமாகவும் நிறுவுவதற்கான முயற்சிகளை கைவிட்டு, பொய்களை புனைந்து, தமிழர்களுக்கெதிரானவராக அவரை கட்டமைத்து அதன் மூலம் வெறும்   உணர்ச்சியைத் தூண்டுதல் என்பதே இதன் பின்னணியில் நின்றவர்களின் நோக்கு.. ஒரு வகையில் புலிகளின் தலைமை பாசிச சிந்தனையை வரித்துக்கொண்டது என்பதற்கான மறுதலிப்பைக் கொணர இவர்களிடம் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதும் யதார்த்தம்.

ஒரு புறம் விடுதலைப் புலிகளை தமது ஆதர்ச புருஷர்களாகக்  கருதுபவர்களை சுவஸ்திகாவின் கூற்று காயப்படுத்தியிருப்பினும், இந்த எதிர்ப்பு ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் பிரதிபலிப்பல்ல. ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களினது கருத்துமல்ல. மாறாக ஒரு குறிப்பிட்ட அரசியல் பின்னணியை கொண்டவர்களின் பொய் பரப்புரையின் மேல் கட்டப்பட்ட ஒரு கருத்தியல் வன்முறை. இவ்வாறான போக்குகள் சகிப்புத்தன்மையற்ற பாசிச மன நிலையை தோற்றுவிக்கும் அபாயத்தை பல்கலைக்கழகமும், மாணவர்களும் உணர்தல் அவசியம்.

பாசிசம் ஒரு கருத்தியல் மட்டுமல்ல அது வன்முறையை வாழ்க்கையாக முன்வைக்கிறது. இன்று உலகம் முழுவதும் வலதுசாரி சிந்தனை முறை வலுப்பெற்றுக்கொண்டு வருகிறது. அயல் நாடான இந்தியாவில் இந்துத்துவ கருத்தியல் மூலமாக வன்முறையும் மற்றைய மதங்களுக்கெதிரான பரப்புரையும் தொடர்கிறது.

விடுதலைப் புலிகள் பாசிச அமைப்பா அல்லது பாசிச கூறுகளைக் கொண்ட அமைப்பா அல்லது பாசிச கருத்தியல் அற்ற அமைப்பா என்பது அரசியல் தத்துவார்த்த விவாதப்பொருள். விடுதலைப் புலிகள் அரசுக்கெதிரான  ஆயுதப்போராட்டத்தை பரந்த அளவில் முன்னெடுத்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அவர்களைப் பயங்கரவாதிகள் என்று அழைப்பதன் சர்வதேச அரசியல் கருத்துருவை மாற்றுக்கருத்தாளர்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில், அனைத்து ஆயுதப்போராட்ட வடிவங்களையும் மேற்குலகம் பயங்கரவாதம் என முத்திரை குத்தும் போக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது.

புலிகளை எதிர்ப்பதன் மூலம் அரச ஆதரவு சக்திகளாகச் செயல்படுபவர்களையோ அல்லது தாம் சார்ந்த ஆயுத இயக்கங்களின் தவறுகளை மறைத்து புலியெதிர்ப்பு செய்பவர்களையோ இந்த குறிப்பிட்ட மாற்றுக்கருத்தாளர்கள் என்ற கருத்துருவில் அடக்கவில்லை. இங்கு மாற்றுக்கருத்தாளர்கள் என குறிப்பிடுவது சகல அடக்குமுறைகளையும், ஜனநாயக மீறல்களையும் எதிர்க்கும் சமூக நீதியை வலியுறுத்தும் சக்திகளையே (dissents).

விடுதலைப் புலிகள் ஜனநாயக விழுமியங்களை மறுத்து, மாற்று சிந்தனைகளை தடுத்து ஒரு தலைவனின் கீழ் ஒரு இனத் தூய்மையான நாட்டை உருவாக்கும் திட்டத்திற்கான செயல்பாடுகளை முன்னெடுத்த நிகழ்ச்சி நிரலில் வட கிழக்கு பகுதிகளில் சிங்கள, முஸ்லிம் மக்களின் வெளியேற்றமும் படுகொலைகளும் இடம்பெற்றது வரலாறு (சிங்கள மக்களின் வெளியேற்றம், படுகொலைகளில் டெலோ போன்ற அமைப்புகளும் ஈடுபட்டன. ஆனால், அந்த அமைப்புகள் அழிக்கப்பட்டு செயலிழந்து புலிகளின் காலத்தில் அரசுடன் சேர்ந்து கொண்டன), 1986 இன் பின் விடுதலைப் புலிகள் தமது முழு ஆதிக்கத்தையும் செலுத்தி, 1989 இற்கு பின் ஏகப்பிரதிநிதிகளாக வந்த காலப்போக்கில் மாற்றுக்கருத்து கொண்ட ஜனநாயகவாதிகள், அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள், இடதுசாரிகள் என பலர் கைதுசெய்யப்பட்டனர்; கொலை செய்யப்பட்டனர். கருத்துச் சுதந்திரம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளானது. ஊடகங்கள் கட்டுப்படுத்தபபட்டன; வட கிழக்கில் தனது நிழல் அரசை அமைத்த பின் மக்களின் அனைத்து செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டன. தலைவனின் விருப்பு வெறுப்புகளே, தமிழ் தேசத்தினதும், அமைப்பினதும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்ற கருத்தியல் இயக்க உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் போதிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் வரை இந்தப் போக்கு மாறவில்லை. இந்தப் போக்கை மாற்றுக்கருத்தாளர்கள் பாசிசம் என கூறினர். பாசிச மன நிலை களையப்பட வேண்டியது என்பதுதான் அதன் நோக்கு. அது அரச ஆதரவு நிலைப்பாடாகாது.

இலங்கை அரசு

காலனித்துவ ஆட்சிக்குப் பின்னரான இலங்கை அரச உருவாக்கம் என்பது பெரும்பான்மைவாத இனத்துவ அரசுக்கட்டுமானம் என்பது வெளிப்படை. சிறுபான்மை இன உரிமைகளை அது மறுத்தது. அதன் உருவாக்கமே மலையக மக்களின் வாக்குரிமைகளை பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கியதிலிருந்து தொடங்கியது. அது ஜனநாயகம் என்ற போர்வையில் பாசிச கூறுகளைக் கொண்ட அரசு. காலத்துக்கு காலம் அது தனது பாசிச முகத்தைக் காட்டியிருக்கிறது. இலங்கை அரசை பாசிச கூறுகள் கொண்ட அரசு என வர்ணிப்பது பெயரளவுக்காக ஆவது சில ஜனநாயக அம்சங்களை கொண்டிருப்பதாலே. காலத்துக்குக் காலம் ஊடக சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்றவற்றை மீறி பெரும் ஜனநாயக மீறல்களை செய்தபோதும் அது ஒரு முழுமையான சர்வாதிகார அரசல்ல. இத்தாலிய அறிஞர் கிராம்சி சொல்வது போல முதலாளித்துவ ஜனநாயகமும், பாசிசமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இந்தக் கூற்று இலங்கை அரசுக்கு மிக பொருத்தமானது.

ஜே. ஆர். தலைமையில் 70களில் தொழிற்சங்கங்களுக்கெதிரான அடக்குமுறை, தமிழ் மக்களுக்கு மேலான திட்டமிட்ட கொலை வெறித் தாக்குதலும் அழிப்பும் நாடறிந்தவை. இவை பாசிச போக்கின் உச்ச கட்டமெனலாம்

அதேபோல, 2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலைகளும் இந்த இனவாத கருத்தியலின் பாசிச  வடிவமே.

இதன் தொடர்ச்சியாக ராஜபக்‌ஷ அரசு சிங்கள பேரினவாத கருத்தியலை மூலதனமாகக் கொண்டு இனங்களுக்கிடையே பேதத்தை வளர்த்து, ஒரு பாசிச அரசாக, கோட்டபாய தலைமையில் உருவாகி வருகையில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் திரண்டு ஒரு பெரும் எழுச்சியை வரலாறு காணாத மக்கள் போராட்டமாக மாற்றியதும், ராஜபக்‌ஷர்கள் பதவி துறந்ததும் அதன் விளைவாக ஒரு குறைந்தபட்ச ஜனநாயக இடைவெளி தோன்றியதும் யதார்த்தமே.

அந்த நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் ரணில் தலைமையிலான அரசு பல மோசமான மக்களுக்கெதிரான அடக்குமுறை சட்டங்களைக் கொண்டுவருகிறது, சிறுபான்மை இனங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் இனவாத நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அரச நிறுவனங்களைத் தனியார்மயமாக்குகிறது. சாதாரண மக்களின் வாழ்நிலை மிக மோசமாகிறது. பாசிச சக்திகளை வளரவிடாமல் தடுத்தலை ஜனநாயக விரும்பிகள், அறிவு சமூகம், சமூக செயல்பாட்டாளர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்தல் அவசியம்.

எனவே, பாசிச மனநிலை என்பது ஒரு குறிப்பிட்ட தமிழர் தரப்பில் மட்டும் இருப்பதில்லை. இது இலங்கை தழுவியது மட்டுமல்ல உலகளாவியது. இதனை வளராவிடாது தடுக்கும் கேடயங்களாக இருக்கவேண்டியது அறிவுசார் சமூகம். அதில் பல்கலைக்கழகத்துக்கு பெரும் பாத்திரம் உண்டு.

மாணவர்களின் நிலைப்பாடு

பொதுவாக மாணவர்களிடையே ஒரு குழு மனப்பான்மை இருப்பது சகஜமே. ஒரே வகுப்பில் இருப்பவர்கள், நண்பர்கள் என்ற ஒரு ஐக்கியம் உருவாவது வழமை. அது நல்ல விடயங்களுக்கும் பயன்படும். சில வேளைகளில் தவறான விடயங்களுக்கும் பயன்படும். குறிப்பாக, இந்தக் குழு மனோபாவம் தான் தனித்து விடப்படுவேனோ என்ற அவ நம்பிக்கையின் பால் எழும் போக்கு. இதனை herd mentality என மனோ தத்துவியலாளர்கள் அழைப்பர். எனவே, ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் இந்தப் பொய் பரப்புரையை உண்மையென நம்பியோ அல்லது திட்டமிட்டோ சக மாணவர்களிடம் பரப்பி அவர்களிடம் ஒரு ஆதரவை பெறுதல் முடியும். ஆனால், அவர்களைப் பின் தொடர்ந்த மாணவர்கள் தமது தவறுகளை உணர வாய்ப்புண்டு. அதற்கான சூழலை உருவாக்க வேண்டியது பல்கலைக்கழகத்தின் தலையாய கடமை.

இவ்வகையில், சுவஸ்திகா புலியை பாசிச அமைப்பு என அழைத்ததை வைத்துக்கொண்டு புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினரும், இலங்கை வாழ் தீவிர தேசியவாதிகளும், மலினமான அரசியலை தமது அரசியல் இருப்புக்காக முன்னெடுப்பதற்காக விடுதலைப் புலிகளின் அரசியலை கையிலெடுக்கும் அரசியல்வாதிகளுமே இந்தப் பொய் பரப்புரையின் காரண கர்த்தாக்கள். சுவஸ்திகாவின் அரசியல் செயல்பாடுகளை, அரசுக்கெதிரான களச்செயல்பாடுகளை, சட்ட ரீதியான நடவடிக்கைகளை திட்டமிட்டு மறைத்து பொய்களை புனைவதே அவர்களின் நோக்கு. இதன் மூலம், மாணவர்களின் சுய சிந்தனை, பகுத்தறிவு, மாற்றுக்கருத்துகளை ஏற்கும் பண்பு ஆகியவற்றை மழுங்கடிக்கும் செயல்பாட்டையே தமது அரசியல் இருப்புக்காக அவர்கள் முன்னெடுக்கின்றனர்.

இனவாத அரசுக்கெதிரான மக்கள் போராட்ட களத்தில் முன்நின்ற ஒருவரை, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சட்ட ரீதியாக மட்டுமல்ல, செயல்பாட்டு ரீதியாகவும் போராடும் ஒருவரை இலகுவாக தமிழ் விரோதி என முத்திரை குத்துவதன் பாசிச கருத்தியல் வன்முறை எவ்வாறு பல்கலைக்கழகம் வரை தாக்கம் செலுத்துகிறதென்பது மிக அபாயகரமான போக்கு.

நிகழ்வு தடைப்பட்ட பின் தாங்கள் வெற்றியடைந்தாக பிரலாபித்து மாணவர்களை பாராட்டி ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் அவரை விரட்டி அடித்ததாக ஒரு புனைவையும் அவர்கள் அவிழ்த்து விடுகிறார்கள். இன்னொரு புறம், சுவஸ்திகா அரச ஆதரவாளராயிருப்பினும், சமூக விரோத அமைப்புகளுக்காக வேலை செய்பவராக இருப்பினும் அவரை பேசவிட்டு இருக்க வேண்டும் என்ற இன்னொரு புனைவையும் அவர்கள் திட்டமிட்டு பரப்புகிறார்கள். இது மிக நாசூக்கான நச்சுதனமான திட்டமிட்ட  பொய்ப் பரப்புரை. இந்தப் பொய்ப்  பரப்புரைக்கு மாணவர்களும், பல்கலைக்கழகமும் பலியாவது காத்திரமானதல்ல.

வேடிக்கை என்னவெனில் அரச பத்திரிகையான டெய்லி நியூஸ் (2.11.2023) தனது பங்கிற்கு சுவஸ்திகா புலிகளைப் பாசிசவாதிகள் எனப் பல்கலைக்கழக நிகழ்வின் முதல் பகுதியில் பேசியதாகவும் அதனால் இடைவேளைக்குப் பின் அடுத்த பகுதியை பேசாவிடாமல் மாணவர்கள்  தடுத்தனர் என்றும் வதந்தி பரப்பியுள்ளது. நீதித்துறையின் சுயாதீனம் என்ற தலைப்பை கவனமாக கைவிட்டிருக்கிறது. மக்களை பிரிப்பதில் வலதுசாரிகள் எவ்வாறு ஒரு புள்ளியிலே இணைகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

பல்கலைக் கழகத்தின் சார்பு நிலையும் நடுநிலை தவறலும்

யாழ். பல்கலைக்கழகம் 70களிலும் 80களின் ஆரம்பப் பகுதிகளிலும் பல்வேறு கருத்து நிலைப்பாடுகளையும் விவாதங்களையும் மாணவர் மத்தியில் ஊக்குவித்தது. அதற்கான விவாத மேடைகளை உருவாக்கியது. அந்த செழுமையான கலாசாரம் மீண்டும் திரும்புவதே ஒரு அறிவார்ந்த, சமூகப்பொறுப்புள்ள மாணவ சமூகத்தை உருவாக்கும்.

மாணவர்களில் ஒரு பிரிவினர் அறிவார்ந்த ஒரு செயல்பாட்டிற்கான தடையை கோரி நிற்கையில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நிலைப்பாடு என்ன? இவ்வாறான செயல்கள் தொடரின் அதற்கான பல்கலைக்கழக நடவடிக்கைகள் எவ்வாறு  எதிர்காலத்தில் இருக்கப்போகிறது .

சுவஸ்திகாவின் உரை சட்ட மாணவர்களின் துறைசார் அறிவை வளப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது. அவரது துறைசார் நிபுணத்துவம் மாணவர்களுக்கு எவ்வாறு பயன்படும் என்பதையே பல்கலைக்கழக நிர்வாகம் கருத்திலெடுக்க வேண்டும். அவர் புலிகளைப் பாசிச அமைப்பு என்று வேறோர் இடத்தில் பேசியதை முன்வைத்து, அவர் பற்றிய புனைவுகளால் கட்டப்பட்ட வெளியார் பரப்புரைகளால் எழுந்த மாணவர்களின் எதிர்ப்பைக் காரணங்காட்டி  இந்நிகழ்வை ரத்துசெய்தது அறிவுசார் சமூகத்தை வளர்க்கும் பல்கலைக்கழகத்தின்  பக்கசார்பற்ற நடுநிலை கோட்பாடுக்கு எதிரானதாகவே பார்க்க முடிகிறது  .   சகிப்புத்தன்மையற்ற வன்முறையாளர்களை உருவாக்க பல்கலைக்கழகம்  தேவையில்லை.

மாணவர்களுக்கு  கருத்து சொல்வதற்கும், ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் உரிமை இருக்கிறது. ஆனால், பல்கலைக்கழகத்தின் கல்வித்துறையின் கற்கை நெறிகளில் தலையிடுவதற்கான உரிமை இல்லை. நாளைஒரு மாணவன் விடுதலைப் புலிகள் பற்றிய அல்லது இன்னொரு ஆயுத அமைப்பு பற்றிய ஆய்வொன்றை மேற்கொண்டு குறித்த அமைப்பு பாசிச கூறுகளைக் கொண்டிருந்தது என ஒரு முடிவுக்கு வந்தால் அது எமது மனதைப் புண்படுத்துகிறது என்று மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடென்ன. ஒருவரின் அறிவுசார் சுதந்திரத்தை மறுத்து, அவரது ஆய்வை பரிசீலிக்க முடியாதென நிர்வாகம் முடிவெடுக்குமா?

அறிவுசார் சமூகத்தை உருவாக்க வேண்டிய பல்கலைக்கழகம் ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற காரணத்தை முன்வைத்து அவரை பேச விடாமால் தடுத்தது அறமாகாது. அது பல்கலைக்கழக விழுமியங்களுக்கு முரணானது. முக்கியமாக பல்லின மாணவர்கள் பயிலும் சட்டத்துறைக்கான துறைசார் நிகழ்வு ஒரு குறிப்பிட்ட தமிழ் மாணவர்களின் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தப்பட்டதென்பது ஏற்புடையதல்ல. பாசிச மன நிலைக்கு பல்கலைக்கழகமும் துணைபோகின்றதா என்ற ஐயம் எழுவது தவிர்க்க முடியாததே. நீதித்துறையில் சுயாதீனம் பற்றிய கேள்வியை எழுப்ப வந்தவரை அவரது பேச்சு சுதந்திரத்தை தடுத்ததன் முரண் நகை பற்றி சுவஸ்திகா வினவுதல் பற்றி பல்கலைக்கழகம் என்ன சொல்லப்போகிறது.

இவ்வகையில் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் எதிர்காலத்தையும் பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்தையும் கவனத்தில் கொண்டு சுவஸ்திகாவின் நிகழ்வை மீண்டும் பல்கலைக்கழகம் நடத்துவது அவசியம். இதற்கான அழுத்தங்களைப் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்னெடுத்தல் அவசியம்.

ராகவன்