Photo, Reuters/Dinuka Liyanawatte, The Wire
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்குச் சென்ற பிரத்தியேக விமானத்துக்கான கட்டணத்தை அரசாங்கமே செலுத்தியதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன முதலில் கூறிவிட்டு பிறகு அதை மறுதலித்தமை அண்மையில் சர்ச்சையொன்றைத் தோற்றுவித்திருந்தது.
ஆகஸ்ட் 16 செய்தியாளர் மகாநாட்டில் கோட்டபாயவின் தாய்லாந்து பயணம் தொடர்பாக செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த குணவர்தன முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவரின் பயணத்துக்கான செலவைக் கொடுப்பது அரசாங்கத்தின் சட்டரீதியான கடமையாகும் என்றும் தாய்லாந்துக்கு அவர் சென்ற விமானத்தின் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தியது என்றும் கூறினார்.
1986 ஆம் ஆண்டின் இல.4 ஜனாதிபதி உரித்துக்கள் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் ஓய்வுபெற்ற சகல நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளுக்கும் சிறப்புரிமைகளும் விசேட வசதிகளும் இருக்கின்றன. அவர்கள் மரணமடைந்தால் அவர்களின் விதவை மனைவிமாரும் அவற்றுக்கு உரித்துடையவர்கள். அவர்களுக்குக் கொடுப்பனவுகளும் செய்யப்படுகின்றன. முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் காலஞ்சென்ற ஜனாதிபதி பிரேமதாசவின் மனைவி ஹேமாவுக்கும் வாசஸ்தலங்களும் கொடுப்பனவுகளும் வசதிகளும் வழங்கப்படுகின்றன. கோட்டபாய நாடு திரும்பும்போது அவரும் அதே சிறப்புரிமைகளுக்கும் வசதிகளுக்கும் உரித்துடையவராக இருப்பார் என்று குணவர்தன விளக்கம் அளித்தார்.
ஆனால், அன்றைய தினம் மாலை அரசாங்க தகவல் திணைக்களம் கோட்டபாயவின் விமானப்பயணச் செலவை அரசாங்கம் செலுத்தவில்லை என்றும் வெளிநாட்டில் அவர் தனது செலவுகளுக்கு அரச நிதியைப் பயன்படுத்தவில்லை என்றும் அறிவித்தது. இதையடுத்து குணவர்தன கோட்டபாயவின் விமானப்பயணச் செலவை அரசாங்கம் செலுத்தியதாக தான் கூறவில்லை என்றும் ஊடகங்கள் தன்னை தவறாக மேற்கோள் காட்டிவிட்டன என்றும் மறுதலித்தார்.
பயணச்செலவை அரசாங்கம் பொறுப்பேற்றதாக அவர் கூறியதை ஒரு ஊடகம் அல்ல பெருவாரியான ஊடகங்கள் வெளியிட்டன. அப்படியென்றால் அவை சகலதுமே தவறான செய்தியையா வெளியிட்டன? தனக்கு ஏற்பட்ட அசௌகரியத்தை சமாளிக்கவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. ஊடகத்துறை அமைச்சராகவும் இருக்கும் குணவர்தனவின் கூற்றை அவரின் கீழ் இருக்கும் தகவல் திணைக்களமே மறுத்து அறிக்கை வெளியிட்டது என்பதே இங்கு விசித்திரம்.
அதேவேளை, அமைச்சரிடம் இருந்தும் தகவல் திணைக்களத்திடம் இருந்தும் வந்திருக்கும் முரண்பாடான அறிவிப்புகளின் பின்புலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் விளங்காமல் இருப்பது கோட்டபாயவின் விமானக் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தியதா இல்லையா என்பதும் அவர் வெளிநாட்டில் தனது செலவுகளுக்கு அரச நிதியைப் பயன்படுத்துகிறாரா இல்லையா என்பதுமேயாகும்.
ஜனாதிபதி உரித்துக்கள் சட்டத்தின் பிரகாரம் ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் அல்லது அவர்களின் விதவைகள் வாடகை இல்லாத அரசாங்க வீடு, ஜனாதிபதியின் ஓய்வூதியத்தின் மூன்றில் ஒரு பங்குக்கு சமமான கொடுப்பனவு மற்றும் செயலக கொடுப்பனவுகளுக்கு உரித்துடையவர்கள் என்பது உண்மையே. இவற்றுக்குப் புறம்பாக, அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படுவதைப் போன்ற உத்தியோகபூர்வ போக்குவரத்து மற்றும் சகல வசதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதிகளும் விதவைகளும் உரித்துடையவர்கள்.
தற்போது அந்த வசதிகளை பெறுபவர்கள் என்றால் அது திருமதி குமாரதுங்கவும் மஹிந்த ராஜபக்ஷவும் சிறிசேனவுமாகவே இருக்கவேண்டும்.
இவர்களில் ராஜபக்ஷவும் சிறிசேனவும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். கோட்டபாயவின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவை அரசாங்கம் பொறுப்பேற்றிருந்தால், தங்களது வெளிநாட்டு பயணங்களுக்கான செலவையும் இனிமேல் தருமாறு இவர்கள் அரசாங்கத்தை கேட்கவும் கூடும்.
இதனிடையே, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற வசதிகள் குறித்து குணவர்தன செய்தியாளர் மகாநாட்டில் கூறிய மறுநாளே திருமதி குமாரதுங்கவின் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வசதிகளைப் பொறுத்தவரை, ராஜபக்ஷ அரசாங்கத்தினால் திருமதி குமாரதுங்கவுக்கு பாரபட்சம் காட்டப்பட்டதாக முறைப்பாடு தெரிவிக்கும் வகையில் அந்த அறிக்கை அமைந்தது. ஆனால், ஜனநாயக ஆட்சிமுறையை நிறுவுவதற்கு அவசியமான கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு அங்கமாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் தற்போதைய அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்படுகின்ற சகல சிறப்புரிமைகளும் வசதிகளும் ஒரு ஒப்புரவான முறையில் குறைக்கப்படவேண்டும் என்பது திருமதி குமாரதுங்க வலியுறுத்தல் என்று அறிக்கை கூறியது.
ஜனாதிபதி பதவி வகிப்பவர்கள் அவர்களது அந்தஸ்துக்குப் பொருத்தமான முறையில் ஒய்வுகாலத்தில் கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதை உறுதிப்படுத்துவதே அவர்களுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படுவதற்கு சட்டரீதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டதற்கான அடிப்படைக் காரணமாக இருக்கலாம். ஆனால், இலங்கையில் இது வரையில் ஜனாதிபதியாக இருந்தவர்களில் எவருமே பதவியில் இருந்து இறங்கிய பிறகு அரசாங்கத்தை நம்பியிராமல் தங்கள் சொந்தத்தில் வசதியான வாழ்வை உறுதிசெய்யமுடியாதவர்கள் அல்லவே. அவர்கள் வசதிபடைத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக அல்லது அரசியலுக்கு வந்தபிறகு சொத்துக்களைக் குவித்தவர்களாக இருந்தார்கள்.
இன்று இருக்கக்கூடிய முன்னாள் ஜனாதிபதிகளான திருமதி குமாரதுங்கவும் மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் அரசாங்கத்தினால் வசதிகளும் கொடுப்பனவுகளும் செய்யப்படாவிட்டால் வசதியான – கண்ணியமான வாழ்க்கையை வாழமுடியாதவர்களா என்ன?
கோட்டபாயவின் விமானப்பயணச் செலவு தொடர்பில் மூண்ட சர்ச்சையைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வசதிகள் குறித்து ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் இந்த கேள்வியை எழுப்ப எம்மை நிர்ப்பந்திக்கின்றன.
ஒரு காலத்தில் அரசியலில் ஈடுபட்டு தங்கள் சொத்துக்களை இழந்து இறுதிக்காலத்தில் கஷ்டப்பட்டவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்தக் காலத்தில் அரசியலில் ஈடுபட்டு சொத்துச் சேர்க்காதவர்கள் என்று எத்தனை பேரை அடையாளம் காட்ட முடியும்?
முன்னாள் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் காலஞ்சென்ற சாம் விஜேசிங்க புதிதாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர்களுக்கு நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படுகின்ற பயிற்சிப்பட்டறைகளுக்கு அழைக்கப்படுவதுண்டு. ஒரு தடவை புதிய உறுப்பினர்களிடம் நீங்கள் ஏன் நாடாளுமன்றம் வந்திருக்கிறீர்கள் என்று அவர் கேட்க எல்லோரும் மக்களுக்குச் சேவை செய்யவே வந்திருக்கிறோம் என்று உரத்த குரலில் பதிலளித்தார்களாம். உடனே அவர் இல்லை…இல்லை.. நீங்கள் வசதிவாய்ப்புக்களைப் பெருக்கவே வந்திருக்கிறீர்கள் என்று வெளிப்படையாக கூறினாராம். 1990 களில் விஜேசிங்க பத்திரிகை நேர்காணல் ஒன்றில் இதை கூறியதை வாசித்தது நன்றாக நினைவில் இருக்கிறது.
இன்று சகல சமூகங்கள் மத்தியிலுமே அரசியலை மாத்திரம் தொழிலாகக் கொண்ட பிரிவினர் இருக்கிறார்கள். அரசியலை சமூகத்தின் நலன்களுக்காக அல்ல தங்களையும் தங்களைச் சார்ந்தவர்களையும் வளப்படுத்தவே இவர்கள் பயன்படுத்துகிறார்கள். பழிபாவத்துக்கு அஞ்சாமல் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்ற சக்திகளினால் இன்று அரசியல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அரசியல்வாதிகளின் தவறான ஆட்சிமுறையும் அதிகார துஷ்பிரயோகமும் ஊழல் மோசடிகளும் பிரதான காரணங்களாகும். வாழும் முறையால் வழிகாட்டக்கூடிய அரசியல்வாதிகளை இன்று எம்மால் காணமுடியவில்லை. ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போதும் பதவிகளில் இருந்து இறங்கிய பின்னரும் பொது மக்களின் பணத்தில் சொகுசாக வாழ்வதிலேயே அரசியல்வாதிகள் நாட்டம் காட்டுகிறார்கள். ஆனால், மக்களின் வாழ்க்கைத்தரமோ அதலபாதாளத்துக்குச் சென்றிருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் எமது காலத்தில் வாழ்ந்துசென்ற – வாழும் முறையால் வழிகாட்டிய ஒரு கனவானை நினைவூட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.
அப்துல் கலாம் ஒரு அரசியல்வாதியல்ல. அவர் ஒரு அணு விஞ்ஞானி. உபகண்டத்தில் அணுவாயுதப்போட்டி தீவிரமடையத் தொடங்கிய காலகட்டத்தில் இந்தியாவின் அணுத்திட்டங்களுக்கு பெரும் பங்களிப்பைச் செய்த அவரை 2002 இந்திய அரசியல்வாதிகள் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தனர்.
எந்தவிதமான எதிர்பார்ப்புமே இல்லாமல் அந்தப் பதவிக்கு வந்த அப்துல் கலாம் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 2007 நடுப்பகுதியில் பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும்போது இவரைப் போன்ற ஜனாதிபதி இனிமேல் எப்போது கிடைக்கப்போகிறார் என்ற ஏக்கத்தை சாதாரண மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். உயர்பதவிகளில் இருப்பவர்கள் இனிமையாகவும் எளிமையாகவும் செயற்படமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியமையே அப்துல் கலாம் என்ற தற்பெருமையோ அல்லது பகட்டுத்தன்மையோ இல்லாத மனிதனின் ஆளுமையின் பெரு வெற்றி.
எந்தவொரு பதவிக்கும் பெருமையோ அதிகாரமோ உண்மையில் கிடைப்பது அதை அலங்கரிக்கும் நபர்கள் நடந்துகொள்ளும் விதத்தில்தான் என்பதை எமது காலத்தில் நாம் காணக்கூடியதாக நடைமுறை வாழ்வில் காண்பித்த ஒருவராக அப்துல் கலாம் விளங்கினார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்கிய பிறகு ராஷ்டிரபதி பவனில் இருந்து வெறுமனே இரு சூட்கேஸுகளுடன் மாத்திரமே அப்துல் கலாம் வெளியேறினார். ஒரு தடவை இராமேஸ்வரத்தில் இருந்து புதுடில்லி சென்ற அவரின் ஐம்பதுக்கும் அதிகமான உறவினர்கள் ராஷ்டிரபதி பவனில் சில நாட்கள் தங்கியிருக்க விரும்பினார்களாம். ஒரு வாரம் தங்கியிருந்த அவர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு தடவை கூட அரசாங்க வாகனம் பயன்படுத்தப்படவில்லை. அது மாத்திரமல்ல, அவர்களது உணவுக்கான செலவைக்கூட தனது தனிப்பட்ட கணக்கில் சேர்த்து அதற்கான கட்டணங்களை வசூலித்துவிட வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவை அப்துல் கலாம் பிறப்பித்திருந்தாராம்.
தங்களது குடும்பங்களுக்கு மாத்திரமல்ல, தங்களைச் சார்ந்த பரிவாரங்கள் சகலதுக்கும் அரசாங்கப் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை தேடிக்கொடுக்கும் அரசியல்வாதிகள்தான் இன்று எம்மைச் சூழ காணப்படுகிறார்கள்.
வீரகத்தி தனபாலசிங்கம்