Photo, SAUDI GAZETTE, AFP Photo

கடந்த மாதம் மக்கள் கிளர்ச்சியை அடுத்து நாட்டை விட்டு தப்பியோடி மாலைதீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என்று நாடுவிட்டு நாடு மாறி ‘வசதியான அஞ்ஞாதவாசம்’ செய்யும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ இவ்வாரம் நாடு திரும்பவிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்துதருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

அதேவேளை, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவிருப்பதாகவும் அவரது பாதுகாப்புக்காகவும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு வசதியாக இராஜதந்திர அந்தஸ்தை பெறுவதற்காகவுமே இந்த ஏற்பாடு என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. நாட்டை சுபீட்சத்துக்கு வழிநடத்தக்கூடிய தொலைநோக்குடைய தலைவராக கோட்டபாயவை மூன்று வருடங்களுக்கு முன்னர் மக்கள் முன்  காட்சிப்படுத்திய ‘வியத்மகா’ அமைப்பைச் சேர்ந்த சீதா அரம்பேபொல என்ற பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகி அவர் நாடாளுமன்றம் வருவதற்கு வசதிசெய்யவிருப்பதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.

நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் தஞ்சமடைவதற்கு நாடொன்றை தேடும் முயற்சிகள் பயனளிக்காமல் போன நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்ப உத்தேசித்திருக்கிறார். அவரது சகோதரர்கள் அதிகாரப் பதவிகளில் இருந்து இறங்கினாலும் தொடர்ந்தும் இலங்கையில் இருப்பது மாத்திரமல்ல, அரசியலில் மீண்டெழும் நம்பிக்கையையும் மனதில் இன்னமும் கொண்டிருக்கும் நிலையில் நாடு திரும்புவதில் தனக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று கோட்டபாய துணிச்சலை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்போலும். சிங்கப்பூரும் தாய்லாந்தும் அவரை விருந்தோம்புவதில் அவற்றுக்கு இருக்கக்கூடிய அசௌகரியத்தை சில நிபந்தனைகள் மூலமாக வெளிப்படுத்தியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டபாய தனது அமெரிக்க குடியுரிமையை மூன்று வருடங்களுக்கு முன்னர் துறந்த போதிலும், அவரது மனைவி தொடர்ந்தும் அமெரிக்க குடியுரிமையைக் கொண்டவராக இருக்கிறார். ஒரேயொரு மகனும் அமெரிக்காவிலேயே வசிக்கிறார். அதனால் மீண்டும் அந்த நாட்டுக்குச் சென்று குடும்பத்தவர்களுடன் வாழ்வதற்கு வசதியாக ‘கிறீன் கார்ட்’ டை பெறுவதற்கான முயற்சிகளில் கோட்டபாய இறங்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில் இலங்கையில் தங்கியிருக்கப்போகும் நாட்களில் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கும் ஏற்பாடுகள் பற்றிய செய்திகள் வந்திருக்கின்றன. நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டுவந்த ஒரு ஜனாதிபதி எந்தவித அசௌகரியமும் இன்றி இருப்பதற்கான ஏற்பாடுகளை உறுதிசெய்வதில் அரசியல் வர்க்கம் எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறது என்று பாருங்கள்.

முன்னாள் ஜனாதிபதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகும் இயல்பு மீறிய ஒரு அரசியல் கலாசாரம் அண்மைக்காலமாக உருவாக்கப்பட்டுவருகிறது. அதன் முன்னோடி ஆட்சிமுறையில் பல தவறான போக்குகளுக்கு வழிகாட்டிய  மஹிந்த ராஜபக்‌ஷவே. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அவர் அதே வருடம் ஆகஸ்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு வந்தார். அவரையடுத்து மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வந்த அடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார். நாட்டின் அதியுயர் பதவியான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகித்த இவ்விருவரும் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதில் எந்தவிதமான அசௌகரியத்தையும் கொண்டிருக்கவில்லை.

இவர்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்தவர்கள் எவரும் இவ்வாறு செய்யவில்லை. முதல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தன பத்து வருடங்களுக்கும் அதிகமான காலம் பதவியில் இருந்துவிட்டு பிறகு 1988 அக்டோபரில் அரசியலில் இருந்து ஒய்வுபெற்றார். எட்டு வருடங்கள் கழித்து 1996 நவம்பர் 1 தனது 90ஆவது வயதில் அவர் காலமானார்.

அவரையடுத்து 1988 டிசம்பர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வந்த ரணசிங்க பிரேமதாச அவரது முதலாவது பதவிக்காலத்தில் 1993 மே தினத்தன்று கொழும்பில் தற்கொலைக்குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அதையடுத்து அன்று பிரதமராக இருந்த டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். 1994 நவம்பர் வரை பதவியில் இருந்துவிட்டு அவரும் அரசியலில் இருந்து ஒய்வுபெற்றுக்கொண்டார். 14 வருடங்கள் கழித்து 2008 செப்டெம்பரில் 94ஆவது வயதில் அவர் தனது சொந்த ஊரான கண்டியில் காலமானார்.

ஜெயவர்தனவும் விஜேதுங்கவும் தங்களது பதவிகளில் இருந்து இறங்கிய பிறகு அரசியலில் ஈடுபடவேயில்லை.

விஜேதுங்கவுக்கு பிறகு 11 வருடங்கள் ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்தில் இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 2005 நவம்பரில் பதவியில் இருந்து இறங்கினார். ஆனால், அவர் முன்னைய இரு ஜனாதிபதிகளையும் போன்று அரசியலில் இருந்து விலகியிருக்கவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக இரு ஜனாதிபதித் தேர்தல்களில் பொதுவேட்பாளரை நிறுத்தும் எதிரணியின் முயற்சிகளில் குமாரதுங்க முன்னணியில் நின்று செயற்பட்டார். ஆனால், நாடாளுமன்றத்துக்கு மீண்டும் வருவதற்கு அவர் ஒருபோதும்  முயற்சிக்கவில்லை. அவ்வாறு நாடாளுமன்றம் வருவதற்கு அவருக்கு ஆசையிருந்திருந்தாலும்கூட, அவருக்கு பிறகு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை தம்வசமாக்கிக்கொண்ட ராஜபக்‌ஷர்கள் அதற்கு ஒருபோதும் இடமளித்திருக்கமாட்டார்கள்.

அடுத்து வந்த இரு ஜனாதிபதிகளும் தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்கள். இப்போது கோட்டபாயவும் நாடாளுமன்றத்துக்கு வரக்கூடிய சாத்தியம் குறித்து பேசப்படுகிறது. அவரும் நாடாளுமன்றம் வருவாரேயானால் பதவியில் இருந்து விலகிய பிறகு நாடாளுமன்றத்துக்கு வருகின்ற மூன்றாவது இலங்கை ஜனாதிபதியாக விளங்குவார்.

உண்மையில், நாட்டின் அதியுயர் பதவியில் இருந்துவிட்டு சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக வருவதென்பது முன்னைய பதவியின் ‘ மேன்மையை ‘ கொச்சைப்படுத்துவது போன்றதாகும். ஜனாதிபதியை இனிமேல் ‘அதிமேதகு’ என்று சிறப்பித்து அழைக்கத்தேவையில்லை என்று தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்தது மிகவும் பொருத்தமானது என்றே தோன்றுகிறது.

இவர்கள் எல்லோரும் சிறப்பான ஆட்சியை நடத்திய பெருமைக்குரியவர்களாக இருந்தால், நாட்டு மக்களுக்கு நல்வாழ்வைக் கொடுத்தவர்களாக இருந்தால், வாழும் முறையால் வழிகாட்டியவர்களாக இருந்தால் மீண்டும் நாடாளுமன்றம் வந்து மக்களுக்கு தொடர்ந்தும் சேவை செய்ய அக்கறை காட்டுகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தவறான ஆட்சிமுறை, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பொதுச்சொத்துக்களை சூறையாடுதல் ஆகியவற்றுக்கு பெயர்போன இவர்கள் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாத்திரமல்ல, வெறுமனே அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவது என்பதே ஏற்றுக்கொள்ள முடியாதது. இவர்கள் ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில் நாடாளுமன்றத்தை மதித்துச் செயற்பட்டவர்களும் அல்லர். நாடாளுமன்ற ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் கிளர்ச்சிக்கு முகங்கொடுக்கமுடியாமல், மே மாத முற்பகுதியில் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு அவரது மூத்த சகோதரர் சமல் ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தில் ஒரு தடவை உரையாற்றியபோது தனது சகோதரர் ஜனாதிபதியாக இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். இலங்கை ஜனாதிபதிகளில் மக்களினால் மிகவும் மோசமாக வெறுக்கப்பட்டு இடைநடுவில் பதவியில் இருந்து விரட்டப்பட்ட முதலாவது ஜனாதிபதியென்ற அபகீர்த்திக்குள்ளான அடுத்த சகோதரர் கோட்டபாயவுக்கு எத்தகைய ஆலோசனையை சமல் கூறப்போகிறார் என்று பார்ப்போம்.

வீரகத்தி தனபாலசிங்கம்