Photo, AP Photo/Eranga Jayawardena, OUTLOOKINDIA

தென்னிலங்கையின் ‘மாற்றத்தை’ நோக்கிய பயணத்தை தடுத்து நிறுத்தும் சக்திகளின் தலைவனாக புதிய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க தலைமையேற்றுள்ளார். வண்டியை ஓட்டிச் செல்ல வசதியாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனா பிரதம மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

தென்னிலங்கை மக்களும் பௌத்த மத பீடங்களும் எதிர்பார்த்திருந்த சர்வ கட்சி அரசாங்கத்திற்குப் பதிலாக மீண்டும் ராஜபக்‌ஷர்களின் பொது ஜன பெரமுன கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தையே ரணில் விக்ரமசிங்க தலைமையில் ராஜபக்‌ஷகள் அமைத்துள்ளனர். அந்தவகையில் ராஜபக்‌ஷகள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஜனாதிபதி தெரிவில் பொது ஜன பெரமுன இரு முகாம்களாகப் பிரிந்து நிற்பது போன்றதொரு தோற்றப்பாட்டை ராஜபக்‌ஷர்கள் நாடாளுமன்றில் உருவாக்கினர். பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் பீரிஸ் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகபெருமவை வழிமொழிந்தார். அதே கட்சியின் செயலாளர் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவின் பெயரை முன்மொழிந்தார். ஆனால் வாக்கெடுப்பின்போது பொதுஜன பெரமுன ஒரு ‘முகாமாக’ நின்றே ரணில் விகரமசிங்கவுக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளனர். இது பற்றி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது நாம் டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதி வேட்பாளராக முன் மொழிந்தும் அவரை வெற்றி பெற வைக்க முடியவில்லை என்று பதில் அளித்துள்ளார்.

பசில் ராஜபக்‌ஷ இலங்கையில் இருப்பதானது ஜனாதிபதித் தெரிவுக்கு பாதகமாக அமையலாம் என்பதால் அமெரிக்கா செல்ல முற்பட்ட அவரை முதலில் தடுத்த ரணில் விக்ரமசிங்க அமெரிக்கத் தூதுவருக்கூடாக கோரிக்கை விடுக்கப்பட்ட போது அதற்குச் செவி சாய்த்து பசில் ராஜபக்‌ஷவை நாட்டைவிட்டு வெளியேற அனுமதித்தார். ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது பசில் ராஜபக்‌ஷவினால் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கும் அப்பால் சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கூட்டமைப்பில் இணைந்து தற்போது நாடாளுமன்றில் சுதந்திர அணிகளாக செயற்படும் கட்சிகளும் மக்களுக்குப் பயந்த நிலையில் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாகக் கூறியவர்கள் வாக்களிப்பில் அவர்களது உறுப்பினர்கள் திசை மாறிப்போய்விட்டதாக ஒத்துக் கொண்டுள்ளனர்.

இவர்கள் மாத்திரமல்ல தமிழ் பேசும் நாளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்தவர்களும் சோரம் போய் உள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என வரிசையாக ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக வெளிப்படையாக அறிவித்திருந்த போதும் அந்தக் கட்சிகள் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறி வாக்களித்துள்ளதாக கூறப்படுகின்றது.

கட்சிகளின் அறிவிப்பும் அதற்கு எதிர்மாறான வாக்களிப்பும் மாற்றத்தை விரும்பும் மக்களுடன் இந்தக் கட்சிகள் பயணிக்கத் தயாராக இல்லை என்பதையே காட்டி நிற்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் 20 கோடி அளவில் பணம் பரிமாறப்பட்டதாக செய்திகள் பேசுகின்றன. மொத்தத்தில் இவை அனைத்தும் திட்டமிடப்பட்டவைகள்.

அரசியலில் மாற்றத்தை விரும்பாத சக்திகள் தென்னிலங்கை அரசியலில் மாத்திரமல்ல தமிழ் பேசும் அரசியலிலும் உள்ளன என்பதை ஜனாதிபதித் தேர்தலில் நாடாளுமன்ற அணியினரின் செயற்பாடுகள் காட்டி நிற்கின்றன.

தென்னிலங்கை மக்களும் இளைஞர் யுவதிகளும் எதிர்பார்த்து நிற்கும் மாற்றம் என்பது கடந்த 74 வருடமாக அரசியல்வாதிகள் கட்டிக்காத்து வருகின்ற அரசியல் கட்டமைப்பையே தகர்த்துவிடுவதற்கச் சமன். இந்தக் கட்டமைப்பால் இன்றைய அரசியயல்வாதிகளே கூடுதலாக நன்மை பெற்ற சலுகை பெற்ற சமூகமாக மேலெழுந்துள்ளனர். குறிப்பாக ராஜபக்‌ஷர்களும் அவர்கள் சார்ந்த அணியினருமாகும். ஆரம்பத்தில் மாற்றத்தைக் கோரி நிற்போருடன் சமரசம் கண்டுவிடலாம் என்றே இந்தச் சக்திகள் எண்ணின. ஆனால் கட்டுமீறிப் போகவே இரும்புக் கரம் கொண்டு அடக்கக்கூடிய தமக்கான தலைவரைத் தேடிக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு இந்தச் சக்திகள் தள்ளப்பட்டனர். இதன் விளைவே ராஜபக்‌ஷர்களுடன் கைகோர்த்துக் கொண்டு ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கியுள்ளனர்.

69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியை நாட்டைவிட்டு வெளியேற வைத்த மக்கள், பிரதமரை பதவில் இருந்து இராஜினாமாச் செய்ய வைத்த மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்த வேளை கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியுற்று தேசியப்பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றம் நுழைந்தவரை அரசியலமைப்பு ஓட்டைகளை வைத்து ராஜபக்‌ஷர்கள் ஜனாதிபதியாக்கியுள்ள அதிசயம் இலங்கையில் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் மக்கள் வழங்கிய எண்ணிக்கையின் பலத்தை வைத்தக் கொண்டு ராஜபக்‌ஷகள் இன்னும் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்தப் போகின்றனர் என்று தெரியவில்லை. மொத்தத்தில் ‘மக்கள் வழங்கிய ஆணையை’ வைத்துக் கொண்டு அடங்க மறுக்கும் ராஜபக்‌ஷர்கள் மறுபுறம் வீழ்ந்து கிடக்கும் நாடும் தாம் வழங்கிய மக்கள் ஆணையை மீளப் பெற முடியாது கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கும் மக்களுமாகவே இலங்கைத் தீவு இன்றுள்ளது.

ராஜபக்‌ஷர்களின் அரணாக முன் நிறுத்தப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க இலங்கையில் ஒரு அரசியல் மாற்றத்தை விரும்பாத இன்றைய தென்னிலங்கையின் அரசியல் சக்திகளின் இரட்சகராக மேல் எழுந்துள்ளார். எனவேதான் ‘மாற்றத்தை விரும்பாத’ அனைத்து சக்திகளின் சார்பாக ஆர்ப்பாட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க முற்பட்டுவிட்டார், மாற்றத்தை விரும்பாதவர்களின் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க. விஷப் பரீட்சையில் இறங்கியுள்ளார்.

தமிழர் போராட்டத்திற்கு இதே அரசியல் சக்திகள் எவ்வாறு பயங்கரவாத முத்திரை குத்தி தோற்கடித்தனரோ அதேபோல் தற்போது காலிமுகத்திடல் போராட்டத்திற்கும் அதற்கு ஆதரவான தென்னிலங்கை மக்களினதும் போராட்டத்திற்கும் பாசிசவாத முத்திரையை குத்தியுள்ளனர்.

104 நாட்களை எட்டிய நிலையில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு தற்காலிக விடைகொடுக்க முன்வந்து அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது 21ஆம் திகதி வியாழக்கிழமை நடுநிசி தாண்டிய வேளையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மிலேச்சத்தனமாக படைத் தரப்பைக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார். இந்தத் தாக்குதலின் மூலம் ஆர்ப்பாட்டம் செய்ய நினைப்பவர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் குறிப்பாக ஒட்டு மொத்த தென்னிலங்கை மக்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்யமுற்படின் இரும்புக் கரம் கொண்டு அடக்க தயங்கப் போவதில்லை என்ற செய்தியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

அதாவது தென்னிலங்கை அரசியலில் ‘U TURN’ மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் மக்களையும் இளைஞர் யுவதிகளையும் தடுத்தி நிறுத்தி வேண்டுமானால் இன்றைய ஆளும் வர்க்கத்தைக் காப்பாற்றுவதுடன் அதற்குப் பங்கம் ஏற்படாத வகையிலான சில சமரசங்களுடன் இலங்கை அரசியலைப் பயணிக்க வைப்பதை நோக்காகக் கொண்ட பயணமாகவே ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பயணம் அமைய உள்ளது.

45 வருடகால நாடாளுமன்ற அரசியல் அனுபவமிக்க தலைவர் மக்களின் ‘நாடியை’ பிடித்து நாட்டுக்காக அரசியல் நடத்த வேண்டியவர் சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யூ போன்று இலங்கையை உருவாக்கி எதிர்கால சந்ததிக்கு கையளிக்க வேண்டிய தலைவர் தடம் மாறி பயணிப்பதென்பது என்பது நாட்டுக்கு மாத்திரமல்ல அவர் கடந்து வந்த அரசியல் பாதைக்கே களங்கமாக அமைந்துவிடும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பாதையை மாற்றிக்கொள்ள காலம் கடந்துவிடவில்லை. அவர் ராஜபக்‌ஷர்களின் அணியில் இருந்து மக்கள் அணிக்குத் திரும்பினாலே போதும்.

வி.தேவராஜ்