Photo, Chamila Karunarthne/EPA-EFE, UPI
தமிழ்த் தலைமைகளை ஒன்றிணைப்பது என்பது கல்லில் நார் உரிப்பது போன்றது என்பது பொதுவான கருத்து. அது உண்மையும்கூட.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ்த் தலைமைகளில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்களை ஒன்றிணைப்பது சாத்தியமாகியது. ஆனால், 2009 மே மாதத்தில் போர் மௌனித்ததன் பின் இந்த ஒற்றுமை சிதைவடையத் தொடங்கியது. அப்படியானால் 2009 மே மாதம் வரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது ஒரு நெல்லிக்காய் மூட்டையாக இருந்துள்ளது என்பதுதான் உண்மை.
தமழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 2002ஆம் ஆண்டு போர் தவிர்ப்பு ஒப்பந்தம் கைச்சாத்தாகிய வேளையில் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகத்தில் அரசியல்வாதிகள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட சந்திப்பொன்று நடைபெற்றது.
அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு தமிழ் கட்சியின் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரைப் பார்த்து தமிழீழ விடுதலைப் புலிகளைப்பற்றி காரசாரமான விமர்சனத்தை பெரிய சத்தத்துடன் முன்வைத்தார். சந்திப்பில் கலந்து கொண்ட அனைவரதும் கவனம் அந்த இருவரையும் நோக்கித் திரும்பியது. விமர்சனத்தை முன்வைத்தவரின் ஆக்ரோசம் தணியவே கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஓடிவந்து அவரைக் கட்டி அணைத்து ‘நீ வெளிப்படையாகப் பேசுகின்றாய். நான் பேச முடியாது மௌனமாக உள்ளேன்’ என்று கூறிவிட்டு கூட்டத்தைவிட்டு வெளியேறினார்.
உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டு கூட்டமைப்பாக அன்றி ‘கட்டி வைக்கப்பட்ட அமைப்பாக’ இருந்தது என்று கூறுவதே பொருந்தும். எனவேதான் விடுதலைப் புலிகள் இல்லாத காலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நெல்லிக்காய் மூட்டை சிதறத் தொடங்கியது. ‘ஒற்றுமை’ சீர்குலைந்தது. ஒற்றுமை இல்லாத கூட்டமைப்பிற்குள் மாத்திரம் அல்ல கூட்டமைப்பில் இருந்து பிரிந்த தலைமைகளையும் ஒன்றிணைப்பது இயலாத காரியமாக இன்றுவரை உள்ளது.
யாழ். பல்கலைக் கழக மாணவர்கள், புத்திஜீவிகள், சிவில் சமூகத்தினர், மதத் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் தமிழ்த் தலைமைகளை ஒன்றிணைத்துவிட கடும் பிரயத்தனம் மேறகொண்டும் அது சாத்தியமாகாமல் போயிற்று. தமிழ்த் தலைமைகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்திவிடுவதில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்த அரசியல் விமர்சகர் ஒருவர் இதுபற்றிக் குறிப்பிடுகையில் ‘தமக்கும் இந்தக் காரியத்தில் முழுமூச்சுடன் இறங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் தமிழ்த் தலைமைகள் தொடர்ந்தும் தோல்விகளையே கொடுத்துள்ளனர்’ என்று குறிப்பிட்டார்.
தமிழ்த் தலைமைகள் தமக்குத் தேவை ஏற்படும்போது ஒன்றிணைவதும் பின் பிரிந்து நின்று அரசியல் செய்வதும் சகஜமான விடயமாக மாறிவிட்டது. இது தமிழர் அரசியலில் தமிழ்த் தலைமைகள் வளர்த்துவிட்ட ‘சாபக்கேடான அரசியல்’ என வடபகுதி புத்திஜீவி ஒருவர் குறிப்பிட்டார்.
தமிழர் அரசியலில் வேரோடிப்போயுள்ள இந்த ‘சாபக்டோன அரசியலை’ மாற்ற முடியாதா?
மாற்ற முடியும்.
தமிழ் இளைஞர்கள் யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் களத்தில் இறங்கினால் இது சாத்தியமாகும்.
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ‘கோட்டா கோ கம’வுக்குச் சொந்தக்காரர்களான இளைஞர் யுவதிகள் இதனைச் சாதித்துக் காட்டியுள்ளனர்.
அகிம்சை வழியில் போராட்டத்தை முன்னெடுத்து குறுகிய 50 நாட்களுக்குள் இலங்கையின் பிரதமரையே வெளியேற வைத்துள்ளனர். ராஜபக்ஷர்களுக்கும் ‘மொட்டுக் கட்சிக்கும்’ வாக்களித்த 69 இலட்சம் மக்களை மாத்திரமல்ல தென்னிலங்கை மக்களையே சிந்திக்க வைத்து ஓரணியில் தன்னிச்சையாக அணிதிரள வைத்துள்ளனர். தமது கோரிக்கைகளை மக்கள் மயப்படுத்தி மக்கள் கோரிக்கையாகவும் உருவாக்கி மக்களை அதன் பங்காளராக்கி வெற்றியும் பெற்றுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு விடிவையோ விமோசனத்தையோ ஏற்படுத்த திராணியற்று இருக்கும் தமிழ்த் தலைமைகள் ஒற்றுமைப்படுவதாலும் நன்மை ஏற்படப்போவதில்லை. ஏனெனில் இவர்களிடம் கொள்கையோ கோட்பாடோ இல்லை.
எனவே, தமிழ் மக்களை நேசிக்கின்ற சமூக ஆர்வலர்கள், புத்தி ஜீவிகள், சிவில் சமூக அமைப்புகளைக் கொண்ட வினைத்திறன் கொண்ட மாற்றுத் தலைமையை உருவாக்க தமிழ் இளைஞர் யுவதிகள் பல்கலைக்கழக சமூகம் என்பன களத்தில் இறங்க வேண்டும்.
இது வடக்கு கிழக்கு மலையக மற்றும் முஸ்லிம் என அனைத்து தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்குமான கடமையாகும்.
– இது உங்களுடைய யுகம்.
– தமிழ் பேசும் மக்களிடையே புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டிய வரலாற்றுக் கடப்பாடு உங்களுடையது.
– தென்னிலங்கையில் புதிய அரசியல் கலாசாரத்துக்காக மேல் எழுந்து வருகின்ற இளைஞர் சக்திகளுடன் தமிழ் பேசும் மக்கள் சார்பில் பேச வேண்டிய சக்தியும் நீங்கள்தான். ஏனெனில், தமிழ் பேசும் மக்களின் தலைவிதி இளைஞர்களாகிய உங்களது கைகளிலேயே தங்கியுள்ளது.
வி.தேவராஜ்