Photo: Selvaraja Rajasegar

ஊதியங்களைத் தம்மால் அதிகரிக்க முடியாதிருப்பதற்குப் பின்வரும் காரணங்களைத் தோட்ட முகாமைத்துவம் வழங்கியிருந்தது.

  1. உயர் ஊதியங்கள் மற்றும் ஊழியச் செலவு
  2. ஊழியர் உற்பத்தித்திறனின் தாழ்ந்த மட்டம்
  3. உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்ட ஊதிய மாதிரிக்கான அதிகரித்துவரும் தேவை

உயர் ஊதியங்கள் மற்றும் ஊழியச் செலவு

தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்த அளவில் ஊதியமே அவர்களின் பிரதான வருமான மூலமாக இருந்து வருவதுடன் ஆரம்பத்தில் 1941ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க ஊதியச் சபைக் கட்டளைச் சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டே ஊதியங்கள் தீர்மானிக்கப்பட்டன. இதற்கமைவாக, தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய வீதங்கள் ஊதியச் சபையிலேயே தீர்மானிக்கப்பட்டன. இந்த ஊதியச் சபையில் தொழில்வழங்குனரினதும் தொழிலாளர்களினதும் அரசாங்கத்தினதும் பிரதிநிதிகள் இடம்பெற்றனர். இருந்தபோதிலும் 1992ஆம் ஆண்டில் கூட்டு ஒப்பந்தத்தினை அறிமுகப்படுத்தியதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட தனியார்மயமாக்கலின் போதே இது மறுசீரமைக்கப்பட்டது. கூட்டு ஒப்பந்தத்தில் தொழில்வழங்குனரினதும் தொழிலாளர்களினதும் பிரதிநிதிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். பிரதானமாக ஊதியங்களின் திருத்தம் தொடர்பாக ஒன்று விட்ட வருடங்களில் கூட்டு ஒப்பந்தப் பிரதிநிதிகள் சந்திக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கூட்டு ஒப்பந்தம் தொடங்கப்பட்டதில் இருந்து அதன் உறுப்பினர்கள் பத்துத் தடவைகள் சந்தித்து தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பாகத் தீர்மானித்திருந்தனர். இதன் பிரகாரம், 1996 இற்கும் 2021 இற்கும் இடையில் இடம்பெற்ற கூட்டு ஒப்பந்தக் கூட்டங்களின் போது இணங்கப்பட்ட நாளாந்த ஊதிய வீதங்கள் பின்வருவனவாகும்:

Table 2. Daily Wage Decided at the CA -1994 to 2021

அட்டவணை 2 இல் காட்டப்பட்டுள்ளவாறு, 1994ஆம் ஆண்டில் 83 ரூபாவாக இருந்த நாளாந்த ஊதியம் 2021ஆம் ஆண்டில் 1000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது 1994ஆம் ஆண்டில் இருந்து  27 வருடங்களில் 12 மடங்கினை விடச் சற்றுக் கூடிய அதிகரிப்பாகும். நிச்சயமாக, இது இரட்டை இலக்க எண்ணிக்கையில் இருந்து 2021ஆம் ஆண்டில் நான்கிலக்க எண்ணிக்கை அதிகரிப்பாகும். தோட்ட முகாமைத்துவம் அதன் தோட்டப் பொதுக் கூட்டங்களில் இந்தப் போக்குகளைப் பற்றிப் பேசித் தொழிலாளர்களைத் தூண்டும் வழக்கத்தினைக் கொண்டிருந்தது. எவ்வாறாயினும், தொழிலாளர்களின் கொள்வனவுச் சக்தியில் மேல்நோக்கிய போக்கின் தாக்கமும் அது நாட்டில் கிராமியத் துறைக்கும் பெருந்தோட்டத் துறைக்கும் இடையிலான வருமான ஏற்றத்தாழ்வினை எவ்வாறு குறைத்துள்ளது என்பதுவும் கேள்விக்குரியதாகும். 2003/04 நுகர்வோர் நிதி மற்றும் சமூகப் பொருளாதாரக் கணிப்பீடு (CFS) மற்றும் குடும்ப வருமானம் மற்றும் செலவுக் கணிப்பீடு (HIE) அறிக்கைகள் நாட்டின் நகர, கிராமிய மற்றும் பெருந்தோட்டத் துறையில் வருமானப் பரம்பல் தொடர்பான எண்ணிக்கைகளைத் தொடர்ச்சியாக வழங்கிவருகின்றன. CFS 2003/04 இல் அறிக்கையிடப்பட்டவாறு, நகரத் துறையின் மாதாந்த வருமானம் 17,368 ரூபாவாக இருக்கும் அதேவேளை கிராமியத் துறையினதும் பெருந்தோட்டத் துறையினதும் வருமான அளவு முறையே 10,060 ரூபாவாகவும் 4899 ரூபாவாகவும் காணப்பட்டன. HIE 2016 அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அளவு நகரத் துறையின் சராசரி வருமானத்தினை 22,297 ரூபாவெனச் சுட்டிக்காட்டும் அதேவேளை கிராமியத் துறையின் அளவு 15,508 ரூபாவாக இருந்தது. எவ்வாறாயினும், பெருந்தோட்டத் துறைத் தொழிலாளர்களின் வருமானம் 8666 ரூபாவாக இருந்தது. இது கிராமியத் துறை வருமானத்தின் கிட்டத்தட்ட அரைவாசியாகும். எனவே, பெருந்தோட்டத் துறையில் தொழிலாளர்களின் ஊதியத்தினை அதிகரிப்பதில் பெருந்தோட்ட முகாமைத்துவம் தாராள மனப்பான்மையினைக் கொண்டிருந்தாலும் தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் நாட்டின் கிராமியத் துறையில் ஏனைய தொழிலாளர்களின் வருமானத்திற்கு நிகராக இல்லை என்ற விடயம் தெளிவானதாக இருக்கின்றது. மேலும், நாட்டில் வறுமை நிலையினை அளப்பதற்கு வருமானமே பிரதான கருவியாக இருக்கின்றது.

எனவே, தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தினைக் கருத்திற்கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் வறுமை மட்டத்தினைப் புலனுணர்வது தவிர்க்க முடியாததாகும். தொகைமதிப்புத் திணைக்களத்தினால் 2016ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி நகரப் பிரதேசங்களில் வறுமையில் வாழும் மக்களின் சதவிகிதம் 1.3 ஆக இருக்கும் அதேவேளை கிராமியத் துறையில் இது 3.3 சதவிகிதமாகும். இருப்பினும் பெருந்தோட்டத் துறையில் இது 6.8 எனும் உயர்ந்த அளவில் காணப்பட்டது. எனவே, கடந்த 27 வருடங்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய அதிகரிப்பு அவர்களின் வருமான மட்டத்தினை உயர்த்தவில்லை என்பதையும் அல்லது இந்தத் தொழிலாளர்களின் மத்தியில் நிலவும் வறுமையினைக் குறைக்கவில்லை என்பதையும் மேலேயுள்ள விடயங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

2009ஆம் ஆண்டில் நடைபெற்ற ஊதியப் பேச்சுவார்த்தையின் முடிவில் விடுக்கப்பட்ட அறிக்கையினைக் கவனத்தில் கொள்வது சுவாரஷ்யமானதாக அமையும். இதற்கமைவாக, தொழிலாளர்கள் மாதாந்தம் 1000 ரூபா வரை சம்பாதிப்பதாலும் தோட்டங்களில் வறுமை மட்டம் தேசிய சராசரிக்குச் சமாந்திரமாகக் குறைவடைந்துள்ளதாலும் ஊதியங்களை மேலும் அதிகரிப்பதற்கான தேவை இல்லை எனப் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளும் அவற்றின் பிரதிநிதிகளும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். ஆனால், ஊதியப் பேச்சுவார்த்தைகளில் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகள் தொடர்ச்சியாக முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளை வெளியிட்டு வந்ததுடன் ‘உயர் ஊதியங்கள் உயர் ஊழியச் செலவினை ஏற்படுத்தி இறுதியில் தோட்டங்கள் நட்டத்தில் இயங்கும் நிலையினை உருவாக்கிவிடும்’ எனக் குறிப்பிட்டனர். பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளால் தொடர்ச்சியாக அறிக்கையிடப்பட்டு வந்த இந்தக் குற்றச்சாட்டுக்கள் சவால்விடுக்கத்தக்கவையாகும்.

பிரபல அறிஞரான கலாநிதி ஜனக ரத்னசிறி அண்மையில் தேயிலைத்துறை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளின் இலாப எல்லைகள் பற்றிப் போதிய ஆதாரங்களை வெளியிட்டிருந்தார். கலாநிதி ரத்னசிறியின் அறிக்கையின் படி நாட்டில் 325 தேயிலை ஏற்றுமதியாளர்கள் இருக்கின்றனர். மேலும் ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட கம்பனிகள் மட்டுமே தேயிலை ஏற்றுமதி செய்தன. ஆனால், பின்னர் தொழிற்சாலைகளும் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளும் உயர் இலாபம் கருதி தேயிலை ஏற்றுமதியில் ஈடுபடத் தொடங்கினர். மத்திய வங்கி அறிக்கையின் படி (2019) தேயிலையின் சராசரி ஏல விற்பனை விலை Rs./kg 546.67 ஆக இருக்கும் அதேவேளை சராசரி ஏற்றுமதி விலை கிலோவுக்கு 822.25 ரூபா ஆகும். இதனால் கிடைக்கும் லாபம் Rs./kg 275.58 ஆகும். 2019ஆம் ஆண்டில் மொத்தத் தேயிலை உற்பத்தி 300.13 Mkg ஆக இருந்த அதேவேளை ஏற்றுமதி செய்யப்பட்ட அளவு 292.65 Mkg ஆகும். இதனால் ஏற்றுமதியாளர்கள் 2019ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட மொத்த இலாபம் Rs. 80.65 பில்லியன் ஆகும். இவரின் முழுக் கட்டுரையினையும் இங்கே வாசிக்க முடியும் (4.9.2021). இதனைத் தவிர, உற்பத்தி தொடர்பாகத் தேயிலைத் தொழிலாளர்களின் சில கணக்கீடுகளும் இருக்கின்றன. இதற்கமைவாக, 17 கிலோ தேயிலைக் கொழுந்தில் இருந்து (நாட்கூலிக்கான தற்போதைய நியமம்) பாவிப்பதற்குத் தயாரான 4 கிலோ தேயிலையினை உற்பத்தி செய்ய முடியும். ஒரு கிலோ தேயிலையின் சந்தை விலை சுமார் 600 ரூபாவாகும். இதனால் தொழிலாளர் ஒருவரின் நாளாந்தப் பங்களிப்பு (4 x Rs.600) சுமார் 2400 ரூபாவாகும். ஆனால், இத்தொழிலாளர்கள் கோருவதோ வெறும் 1000 ரூபாய்தான். நாளாந்த உற்பத்தியின் 41 சதவிகிதமான இது நியாயமற்ற கோரிக்கையல்ல.

ஊதிய அதிகரிப்புக்கு அப்பால், உற்பத்திச் செலவு (COP) பற்றிப் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளால் முன்வைக்கப்பட்ட வாதங்கள் முன்பின் முரணானவை என்பதுடன் குறிப்பிட்ட அளவுக்கு நாட்டின் தேயிலைத் துறை பற்றிய தவறான வழிநடத்தலைக் கொண்டுள்ளதுமாகும். உற்பத்திச் செலவு பற்றிய கணக்கீடு சுயாதீனமான ஆய்வாக இருக்கவேண்டும். உற்பத்தியாளர்களினால் அது மேற்கொள்ளப்பட்டால், அதன் முடிவுப் பெறுபேறு நிச்சயமாக வியாபாரத்தில் நலன் கொண்டுள்ள தரப்புக்களுக்குப் பக்கச்சார்புடையதாகவே இருக்கும். எனவே, நாட்டில் உற்பத்திச் செலவினைக் கணக்கிடுவதற்காக இதுவரை நடத்தப்பட்ட ஒரு சுயாதீனமான ஆய்வினைக் கண்டுபிடிப்பதென்பது மிகக் கடினமானதாகவே இருந்தது. 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ‘இலங்கையின் வாழ்க்கை ஊதியம்: பெருந்தோட்டத் துறையின் (தேயிலை)’ பகுப்பாய்வு பற்றிய கொள்கைக் கற்கைகளுக்கான நிறுவனத்தின் (IPS) வெளியீட்டில் தேயிலையின் உற்பத்திச் செலவு பற்றிய மிக அண்மைக்கால எண்ணிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் படி, தேயிலையின் உற்பத்திச் செலவில் ஊழியச் செலவு 2014/15 காலப்பகுதியில் 63 சதவிகிதமாகக் (பாவிப்பதற்குத் தயாரான ஒரு கிலோ தேயிலைக்கு) காணப்பட்டது. இந்த ஆய்வில் உற்பத்திச் செலவில் ஊழியச் செலவு தொடர்பாகக் கொள்கைக் கற்கைகளுக்கான நிறுவனம் ஓர் இணையத்தளத் தொடர்பினைக் குறிப்பிட்டு தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் வெளியீட்டில் உள்ள எண்ணிக்கைகளைப் பயன்படுத்தியிருந்தது. எவ்வாறாயினும், இந்த இணைப்பு திகதியிடப்படாததாகவும் தற்போது செயற்பாட்டில் இல்லாததாகவும் இருக்கின்றது என்பதுடன் இவ்வாறு திகதியிடப்படாத மற்றும் செயற்பாட்டில் இல்லாத இணைப்பில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகும்.

மேலும், ஏனைய பிரதான தேயிலை உற்பத்தி நாடுகளான இந்தியா, கென்யா, பங்களாதேஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டுத் தேயிலையின் உற்பத்திச் செலவு தொடர்பாக ஆய்வு இன்னும் ஓர் அவதானிப்பினை மேற்கொண்டுள்ளதுடன் இலங்கையில் சார்பளவிலான ஊழியச் செலவு உயர்வாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே, இந்தச் சூழமைவில் கூற்றுக்களின் செல்லுபடியாகும் தன்மையும் பிரச்சினைக்குரியதாக இருக்கின்றது. மேலும், பெருந்தோட்ட அமைச்சினால் வெளியிடப்பட்ட பெருந்தோட்டப் பயிர்கள் தொடர்பான புள்ளிவிபரத் தகவல்களும் (SIPC) தேயிலையின் மொத்த உற்பத்திச் செலவு பற்றிய விபரங்களை வழங்குகின்றது. இருந்தாலும் இது ஊழியச் செலவின் விபரங்களை வழங்கவில்லை. எனவே இந்த வெளியீடுகளினால் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நாட்டில் தேயிலையின் உற்பத்திச் செலவின் ஊழியச் செலவுப் பகுப்பாய்வுக்காகப் பயன்படுத்தப்பட முடியாதவையாகும். SIPC இன் கூற்றுப்படி, பாவனைக்குத் தயாரான தேயிலையின் ஒரு கிலோவுக்கான உற்பத்திச் செலவு கொழுந்தின் விலை காரணமாகவும் கொழுந்தின் போக்குவரத்துச் செலவு காரணமாகவும் தொழிற்சாலை ஊழியச் செலவு காரணமாகவும் பொதியிடல் பொருட்களின் செலவு காரணமாகவும் இயந்திரப் பராமரிப்புச் செலவு காரணமாகவும் 2005ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு துரிதமாக அதிகரித்துள்ளது. மேற்குறிப்பிட்ட காரணிகள் அந்தக் காலப்பகுதியில் தேயிலைத் துறையின் உற்பத்திச் செலவில் பாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. எவ்வாறாயினும், 2015ஆம் ஆண்டில் உற்பத்திச் செலவில் 3 சதவிகிதக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து உற்பத்திச் செலவு மீண்டும் 2018 வரை படிப்படியாக அதிகரித்துள்ளது. உற்பத்திச் செலவு தொடர்பில் பொதுவெளியில் நம்பத்தக்க தகவல்கள் இல்லை என்பதனையே இது சுட்டிக்காட்டுகின்றது. எனவே, உற்பத்திச் செலவு தொடர்பான சில வாதங்கள் செல்லுபடியற்றவை மற்றும் நம்பத்தகுந்தவையல்ல என்பதுடன் இவற்றுக்குச் சவால் விடுக்கவும் முடியும்.

ஊழியர் உற்பத்தித்திறனின் குறைந்த மட்டம்

ஊழியர் உற்பத்தித்திறனின் குறைந்த மட்டம் என்பது இலங்கையில் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளின் வலுவான குற்றச்சாட்டாக இருக்கின்றது. நாட்டில் தேயிலைத் தொழிலாளர்களின் வினைத்திறனின்மையினைக் காட்டுவதற்கு ஏனைய நாடுகளின் தேயிலை உற்பத்தித்திறனின் மட்டத்துடன் நமது நாட்டு மட்டத்தினைப் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகள் அடிக்கடி ஒப்பிடுகின்றன. 2018ஆம் ஆண்டில் இலங்கையில் தேயிலையின் சராசரி உற்பத்தித்திறன் வருடத்திற்கு ஹெக்டேயருக்கு 1500 கிலோவாகும். எவ்வாறாயினும், இது இந்தியாவிலும் (2227 kg/ha/year), கென்யாவிலும் (2104 kg/ha/year) கணிசமான அளவு உயர்வாகக் காணப்பட்டது. எவ்வாறாயினும், இந்த நாடுகளில் உள்ள தேயிலைக் கன்றுகள் இலங்கையில் நடப்பட்டுள்ள தேயிலைக் கன்றுகளை ஒத்தவையா என்பது எமக்குத் தெரியாது. உதாரணமாக, தேயிலைச் செடிகளின் பராமரிப்பு, மண்ணின் நிலைமைகள், தேயிலைக் கொழுந்து பறிப்பதில் பயன்படுத்தப்படும் உத்திகள், தேயிலைத் தொழிலாளர்கள் பெற்றுள்ள பயிற்சி ஆகியவையும் தேயிலையின் உற்பத்தித் திறனைப் பாதிக்கின்றன.

தொழிலாளர் உற்பத்தித் திறன் என்பது பொதுவாகத் தொழிலாளர் மணித்தியாலம் ஒன்றுக்கான உற்பத்திக்கும் உள்ளீட்டுக்கும் இடையிலான விகிதாசாரமாகவே அளக்கப்படுகின்றது என்பது நன்கறியப்பட்ட விடயமாகும். தொழிலாளர் உற்பத்தித்திறனும் மனித வளங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவையாகும். ஊக்கப்படுத்தல், பயிற்சி மற்றும் விருத்தி, தொழிற்துறை உறவுகள், ஊழியர் மதிப்பீடுகள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மற்றும் ஊழியர் நலனோம்புகை ஆகியவை தொழிலாளர் உற்பத்தித்திறனுடன் தொடர்புடைய மனித வளக் காரணிகளாகும். பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளால் அவற்றின் தொழிலாளர்களுக்காக அவ்வாறான ஊக்கப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதற்கான போதிய சான்றுகள் எம்மிடம் இல்லை – சில நலனோம்புகை நிகழ்ச்சித்திட்டங்கள் கடந்த சில வருடங்களாகத் தொடர்ச்சியாகக் குறைவடைந்து வருகின்றன. தெரிவுசெய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு நடத்தப்படும் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றிப் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் (PHDT) அறிக்கையிட்டுள்ளது. நிகழ்ச்சித்திட்டத்தின் காலஅளவு பெரும்பாலும் ஒரு நாளாக அல்லது அரை நாளாக இருப்பதுடன் நிகழ்ச்சித்திட்டத்தின் உள்ளடக்கத்தினை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. எனவே, தோட்டங்களில் தொழிலாளர் உற்பத்தித்திறன் என்று பார்க்கையில் தோட்ட முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்படும் தொழிலாளர் ஊக்குவிப்பின் தாக்கத்தினை மதிப்பிடுவது மிகக் கடினமானதாக இருக்கின்றது.

எவ்வாறாயினும், பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளால் மேற்கொள்ளப்பட்ட உயர் விளைச்சல் வகையினைக் (HYV) கொண்டு மீள்நடுகை செய்தமை தோட்டங்களில் தொழிலாளர் உற்பத்தித் திறனில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு காரணியாகக் கருதப்படுகின்றது. 2018ஆம் ஆண்டில் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு அமைவாக, 2018ஆம் ஆண்டில் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகள் மொத்தமாக 197 ஹெக்டேயர்களில் மீள்நடுகை செய்துள்ளன. இது பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் வரும் மொத்தத் தேயிலைத் தோட்டங்களின் வெறும் 0.2 சதவிகிதம் மாத்திரமேயாகும். பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளின் தேயிலைத் தோட்டங்களின் மொத்த விஸ்தீரணம் 69,222 ஹெக்டேயர்கள் என்பதுவும், இது நாட்டின் தேயிலைத் தோட்டங்களின் மொத்த அளவின் 38.6 சதவிகிதம் மாத்திரமே என்பதுவும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். எஞ்சிய 61.4 சதவிகிதமான 122,448 ஹெக்டேயர்கள் சிறுதோட்ட உடமையாளர் வகையினைச் சேர்ந்ததாகும். எவ்வாறாயினும், பெருந்தோட்டக் கம்பனிகளில் கொழுந்து பறிக்கப்படும் பயிர்களின் விஸ்தீரணம் 66,897 ஹெக்டேயர்களாகும். இதில் உயர் விளைச்சல் வகை 54.8 சதவிகிதமாகும். அதாவது 36,650 ஹெக்டேயர்கள். எஞ்சியவை 45.2 சதிவிகிதமாகும் அல்லது 30,248 ஹெக்டேயர்களாகும். இவை பிரித்தானியர்களால் நடப்பட்ட ‘seedling tea bushes’ என அறியப்படும் தேயிலைச் செடிகளைக் கொண்டுள்ளன. நன்கு பராமரிக்கப்பட்ட seedling tea bushes இன் விளைச்சல் வருடத்திற்கு ஹெக்டேயரிற்கு 900 கிலோவாகும். எனவே, மிகவும் மந்தகதியிலான மீள்நடுகையும் 45.2 சதவிகித பழைய தேயிலைச் செடிகளும் சேர்த்து பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளில் மிகவும் குறைந்த ஊழியர் உற்பத்தித் திறனுக்கு இட்டுச்செல்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

நாளாந்த ஊதியத்திற்காகப் பறிக்கப்படும் கொழுந்தின் அளவு பிரித்தானியர்கள் தேயிலைத் தோட்டங்களை நிறுவியபோது அவர்களால் நிர்ணயிக்கப்பட்டதாகும். இது ‘பறிக்கும் நியமங்கள்’ (plucking norms) என்று தோட்டங்களில் அறியப்படுகின்றது. பறிக்கும் நியமங்கள் தேயிலைச் செடிகளுக்கு ஏற்பவும் காலநிலைக்கு ஏற்பவும் மாறுபடுகின்றன. தற்போதைய சூழமைவில், பழைய தேயிலைச் செடிகளில் இருந்து பறிக்கப்படும் கொழுந்துகளுக்கான பறிக்கும் நியமம் நாளொன்றுக்கு 15 முதல் 16 கிலோ வரையானதாகும் (33 lbs. to 35 lbs). இது பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளில் உயர் விளைச்சல் வகைகளுக்கு 17 முதல் 18 கிலோ வரையானதாகும் (37lbs to 39lbs).

எவ்வாறாயினும், கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் இணங்கப்பட்ட நாளாந்த ஊதிய அதிகரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்று இணங்கப்பட்ட பறிக்கும் நியமங்களை விட அதிகமாகப் பறிக்குமாறு பிராந்தியப் பெருந்தோட்டங்கள் தொழிலாளர்களுக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவருகின்றன. இதேபோன்று, ஊதியம் நாளொன்றுக்கு 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டபோது, நாளொன்றுக்கு 17 முதல் 18 கிலோ எனும் பறிக்கும் நியமத்திற்கு முரணாக நாளொன்றுக்கு 20 கிலோ பறிக்குமாறு தோட்ட முகாமைத்துவம் தேயிலை பறிப்பவர்களைக் கேட்டுள்ளது. குழப்பமடைந்த தொழிலாளர்கள் தோட்டங்களில் உள்ள பழமையான மற்றும் மோசமாகப் பராமரிக்கப்பட்ட தேயிலைச் செடிகளில் இருந்து 20 கிலோ பறிப்பதிலுள்ள சிரமத்தினை வெளிக்கூறியுள்ளனர். தற்போது இது தொழிலாளர்களுக்கும் தோட்ட முகாமைத்துவத்திற்கும் இடையில் தீர்க்கப்படாத போராட்டமாக மாறியுள்ளது – இது தோட்டங்களில் பதற்ற நிலைமையினை உருவாக்கியுள்ளதுடன் தொழிலாளர்களுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையில் தொழிற்துறை உறவுகளையும் பாதித்துள்ளது. இது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை உருவாக்கும் சாத்தியத்தினைக் கொண்டுள்ளது. வருகின்ற மாதங்களில் சுமுகமான தீர்வு எட்டப்படாவிட்டால் இந்த விளைவுகள் தொழிற்துறையினைப் பாதித்து இந்தச் சமுதாயத்தின் வாழ்வாதாரங்களையும் பாதிக்கும்.

“கொழுந்து மடுவம்” என அழைக்கப்படும் தோட்டங்களில் காணப்படும் கொழுந்து நிறுக்கும் இடம் தொடர்பாகவும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இம்மடுவங்களில் இடம்பெறும் நிறுக்கும் செயன்முறையும் தேயிலை பறிப்பவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்று இணங்கப்பட்டவாறு, தோட்டத்தில் பறிக்கப்பட்ட கொழுந்துகளைத் தொழிலாளர்கள் நிறுப்பதற்காகக் கொண்டுவருகின்றனர். களத்தில் உள்ள கங்காணியும் ஒன்றிரண்டு ஆண் தொழிலாளர்களும் (மடுவத்தில் உள்ள கொழுந்துகளைத் தேயிலைத் தொழிற்சாலைக்குக் கொண்டு வருவதற்கான பொறுப்பினையும் கொண்டவர்கள்) தொழிலாளர்கள் கொண்டுவரும் கொழுந்துகளைக் கூட்டாக நிறுக்கின்றனர். சாக்கின் எடையினைச் சமனிலைப்படுத்துவதற்காக ஒவ்வொரு தடவை நிறுக்கும்போதும் இரண்டு கிலோ கழிக்கப்படுகின்றது. ஆனால், அதிகமான சந்தர்ப்பங்களில் சாக்கின் எடை புறக்கணிக்கப்பட்டு ஒவ்வொரு சுற்றின்போதும்  3 முதல் 4 கிலோ வரை குறைக்கப்படுகின்றது.

கொழுந்து மடுவத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினைப் பெண் தொழிலாளி ஒருவர் குறிப்பிட்டார். 42 வயதுடைய பதிவுசெய்த தொழிலாளியான இவர் உயர் தரம் வரை படித்தவர். பாடசாலை செல்லும் மூன்று பிள்ளைகளின் தாயான இவருக்குத் தேயிலை பறிப்பதில் பத்து வருட அனுபவம் உண்டு. முழுவதும் உயர் விளைச்சல் வகையினைக் கொண்டு தோட்டத்தில் கன்றுகள் பதிலீடு செய்யப்பட்டன. தோட்டங்களில் பொதுவாக மூன்று வேளைகளில் தேயிலை பறிக்கப்படுகின்றது: காலை, பின் மதியம், மாலை. ஒரு குறிப்பிட்ட நாளில் இவர் காலை வேளையில் 10 கிலோ பறித்தார். ஆனால், இது 7 கிலோ எனப் பதியப்பட்டது. ஏனெனில் 3 கிலோ கொழுந்து மடுவத்தில் சாக்கின் எடைக்காகக் கழிக்கப்பட்டது. இதேபோல், இவர் பின் மதியத்தில் 8 கிலோ கொண்டுவந்தார். இதில் 3 கிலோ கழிக்கப்பட்டது. மாலையிலும் இவர் 8 கிலோ கொண்டுவந்தார். இதில் சாக்கின் எடைக்காக 3 கிலோ கழிக்கப்பட்டது. இதன்படி இவர் பறித்த கொழுந்துகளின் மொத்த எடை (10+8+8) 26 கிலோவாகும். இதில் மூன்று வேளைகளிலும் சாக்கின் எடைக்காக 9 கிலோ கழிக்கப்பட்டது (3+3+3). எஞ்சியது (26 – 9) 17 கிலோவாகும். இவர் எப்படியோ முயற்சித்து 26 கிலோ பறித்து நாளொன்றுக்கு 1000 ரூபா பெற முயற்சித்தாலும் தோட்டத்தில் “சாக்கின் எடையினைக்” கழிக்கும் நடைமுறை காரணமாக மொத்தமாக 9 கிலோ கழிக்கப்பட்ட காரணத்தினால் இவரினால் அந்த இலக்கினை எட்ட முடியவில்லை – இந்த நடைமுறையினைத் தொழிலாளர்கள் நெறியற்றதெனவும் ஒரு வகைச் சுரண்டல் எனவும் கருதுகின்றனர். எனவே, இவரின் ஊதியம் 1000 கொடுப்பனவில் கணக்கிடப்பவில்லை. ஆனால் பறிக்கப்பட்ட மொத்தக் கொழுந்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. இதற்கமைவாக, இவருக்கான கொடுப்பனவு அக்குறிப்பிட்ட நாளன்று (Rs.50 x 17 kilos) 850.00 ரூபாவாகும். பல தோட்டங்களில் இந்த அட்டூழியம் ஒரு பொதுவான போக்காக மாறியுள்ளதுடன் இது தோட்டங்களில் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மறைத்தடக்கி வருவதுடன் இலங்கை அரசாங்கம் அரச தரப்பாக இருக்கின்ற பல்வேறு தொழில் சமவாயங்களிலும் கூட்டு ஒப்பந்தத்திலும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள அவர்களின் உரிமைகளையும் மீறிவருகின்றது. கடந்த சில மாதங்களாகத் தேயிலைத் தோட்டங்களில் பெண் தொழிலாளர்கள் அனுபவித்துவரும் சொல்லொணாத் துயரத்தினை இக்கட்டுரைக்காகச் சேகரிக்கப்பட்ட சான்றுகள் எடுத்துவிளக்குகின்றன – CV இல்லாத காரணத்தினால் தொழிற்சங்கங்களினால் தன்முனைப்பான வகிபாத்திரத்தினை வகிக்க முடியாதுள்ளதுடன் தொழிற்சங்கங்களினால் பல தோட்டங்களில் அவற்றின் சந்தாக்களையும் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

இரத்தினச் சுருக்கமாகக் கூறுவதாயின், உயர் விளைச்சல் வகையின் ஏக்கரளவை விஸ்தரிப்பதில் காட்டப்படும் மந்தநிலை மற்றும் தொழிலாளர் முகாமைத்துவத்தில் காணப்படும் குறைபாடு ஆகியவையே நாட்டில் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளின் தோட்டங்களில் குறைந்த மட்டத்திலான தொழிலாளர் உற்பத்தித்திறனுக்கு பங்களிப்பு வழங்கியுள்ள பிரதான காரணங்களாகும். தற்போதுள்ள தேயிலைக் கன்றுகளில் இருந்து உயர் உற்பத்தித்திறனைப் பெறுவதே பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளின் எதிர்பார்ப்பாகும். பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளின் தோட்டங்களில் காலநிலையும் உயரமான பகுதியில் செறிந்துள்ள மண்னின் நிலையும் நாட்டில் உயர் பெறுமதிமிக்க தேயிலையினை உற்பத்தி செய்வதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்த ஆற்றலை உச்சப்படுத்தப் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளின் தரப்பில் போதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, தோட்டங்களில் இரண்டு தரப்புக்களுக்கும் நன்மையளிக்கும் விதத்தில் தோட்டத் தொழிலாளர்களினதும் முகாமைத்துவத்தினதும் ஈடுபாட்டுடன் வருமானப் பகிர்வு மாதிரி/ உற்பத்தித்திறன் அடிப்படையிலான மாதிரி ஆகியவற்றினை விஸ்தரிக்கும் திட்டத்தினைப் பல பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வைத்துள்ளன.

உற்பத்தித்திறன் அடிப்படையிலான ஊதிய மாதிரிக்கான முன்மொழிவு

பெருந்தோட்டங்களில் இன்று 135,000 நிரந்தரத் தொழிலாளர்கள் மாத்திரமே உள்ளனர் என்பதை நாம் அறிவோம். தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தற்காலிக அடிப்படையில் 175,000 தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதற்குப்  பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகள் எதிர்பார்த்துள்ளன. அதிகமான பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனித் தோட்டங்கள் மாதமொன்றிற்கு 12 நாட்கள் வேலை வழங்குவதற்கும் எஞ்சிய நாட்களில் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தேயிலைக் கன்றுகளைப் பராமரிப்பதில் ஈடுபடுத்துவதற்கும் திட்டமிட்டு வருகின்றன. இது பல பெருந்தோட்டங்களில் அமுல்படுத்தப்படுவதில்லை. சில தோட்டங்கள் மாத்திரமே இந்த நடைமுறையினை அமுல்படுத்தியுள்ளன. இந்த வருமானப் பகிர்வு முறைமையின் கீழ் பின்வரும் முன்மொழிவுகள் பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளன:

  1. தோட்டங்களின் தேயிலைக் கன்றுகளை நபரொருவருக்கு 1500 எனப் பிரித்தல்.
  2. கன்றுகளின் பராமரிப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட உரத்தினையும் பீடைக்கொல்லிகளையும் ஊழியத்தினையும் வழங்கல். மேலும் மொத்தச் செலவு பெருந்தோட்ட முகாமைத்துவத்திற்கு மூன்று தவணைக் கொடுப்பனவுகளில் செலுத்தப்படவேண்டும்.
  3. அறுவடை செய்யப்பட்ட தேயிலைக் கொழுந்துகள் சம்பந்தப்பட்ட தோட்டத்திற்கு வழங்கப்படவேண்டும் என்பதுடன் தேயிலையின் 50% அல்லது 60% தேறிய விற்பனைச் சராசரி விலை இந்த முறைமையின் கீழ் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.
  4. தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணித் துண்டுகளைத் தவிர்ந்த மாற்றுத் துண்டுகளில் தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  5. தோட்டத்தில் 12 நாட்கள் வேலைக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா வீதம் வழங்கப்படும். இதில் சங்கத்துக்கான சந்தா, EPF, ETF போன்ற கழிவுகளும் கோயில் அபிவிருத்திப் பங்களிப்புக்கள், லோண்டரி, கூட்டுறவுக் கடைகள் போன்ற ஏனைய பங்களிப்புக்களும் கழிக்கப்படும்.
  6. தோட்டங்களில் இந்தப் பணி முறைமையினை நிறைவேற்றுவதற்காகத் தொழிலாளருக்கும் தோட்ட முகாமைத்துவத்திற்கும் இடையில் ஓர் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்.

மேற்குறிப்பிட்ட ஒப்பந்த அடிப்படையிலான வேலை அல்லது வாங்குபவருக்குக் கொழுந்துகளை விற்பதனைப் பொறுப்பேற்கும் மாதிரி சில பெருந்தோட்டங்களில் அவதானிக்கப்பட்டதுடன் இதில் பின்வரும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன:

  1. அதிகமான சந்தர்ப்பங்களில், தொழிலாளர்களுக்கு 100 அல்லது 150 வருடங்கள் பழமையான தேயிலைச் செடிகள் உள்ள துண்டுகள் வழங்கப்படுகின்றன. உயர் விளைச்சலைத் தரும் தேயிலைக் கன்றுகளில் இருந்து பலன் பெறுவதற்கு இவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
  2. தொழிலாளர்களுடனான ஒப்பந்த ஆவணம் (உடன்படிக்கை) ஒரு சட்ட ஆவணமல்ல. இதனால் தோட்ட முகாமைத்துவத்தினால் இந்த முறைமையினை ஒரு குறுகிய அறிவித்தலுடன் வாபஸ் பெற முடியும். தொழிலாளர்களினால் காணிக்கு உரித்தாண்மை கோர முடியாது. குத்தகை விபரங்களும் உடன்படிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
  3. தொழிலாளர்கள் தோட்டங்களில் மேலதிக வருமானம் பெறுவதைப் போல் அவர்களினால் மேலதிக வருமானத்தினைப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தாலும் அதிகமான நேரங்களில் தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட காணித்துண்டில் வேலைக்குச் செல்லும்போது அவர்கள் அறுவடை செய்யும் கொழுந்துக்கென ஏற்றுக்கொள்ளப்பட்ட விலை இல்லாமல் இருக்கின்றது. சிறுதோட்ட உடமையாளர்களின் நிலங்களில் கொழுந்துக்கு வழங்கப்படும் விலைக்கும் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளின் தோட்டங்களில் கொழுந்துக்கு வழங்கப்படும் விலைக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது.

இவ்வாறான குறைபாடுகள் இருந்தபோதிலும் தொழிலாளர்கள் மலைநாட்டில் தொடர்ந்து தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும் தனித்துவமான அடையாளம், கலாசாரம், சம்பிரதாயம் ஆகியவற்றினைப் பாதுகாத்துக்கொண்டு “மலைநாட்டுத் தமிழர்கள்” எனத் தமது வாழ்க்கையினைத் தொடர்வதற்கும் இவ்வாறான பொருளாதார ஈடுபாடுகள் தொழிலாளர்களுக்குச் சிறந்தவையாகும். இவ்வாறான பொருளாதார ஈடுபாடு இல்லாதபோது தொழிலாளர்கள் வேலை தேடிப் பெருந்தோட்டத்தினை விட்டு நிரந்தரமாக வெளியேற முடியும். சில தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இதனைச் சாதகமான ஒரு நடவடிக்கையாகப் பார்ப்பதற்கு எத்தனிப்பதுடன் இந்த ஒப்பந்த முறைமையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நம்பிக்கையினை வழங்கும் நீடுறுதியான தொழில் மற்றும் வாழ்வாதார வழிக்கான வடிவமாக இது இறுதியில் மாறலாம் என எண்ணுகின்றனர். இவ்வகையிலான ஒப்பந்த அடிப்படையிலான பயிர்செய்தல் மற்றும் கொழுந்துகளை விற்பனை செய்வதைப் பொறுப்பேற்றல் போன்றவை பெருந்தோட்டச் சமுதாயத்தின் வாழ்வாதாரம், பாதுகாப்பு, நலனோம்புகை மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றினை உறுதிப்படுத்தும் உறுதியான மற்றும் செயற்திறன்மிக்க கொள்கை மற்றும் நிறுவனச் சட்டகத்தினுள் அமுல்படுத்தப்படவேண்டும். இல்லாவிடின், இச்சமுதாயத்தின் பெரும்பான்மையான பிரிவினர் அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் வாழ்விற்காகவும் தொடர்ந்தும் தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறையினைச் சார்ந்துள்ள காரணத்தினால் இது பதற்றமான சூழ்நிலையினை உருவாக்குவதற்கான அதிக சாத்தியமுள்ளது. மேலும், உலகளாவிய போட்டி, செலவு, தரம், நீடுறுதித்தன்மை, காணி உரிமைக்கான அதிகரித்த கிராக்கி, உலகளாவிய மற்றும் தேசிய பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் காரணமாகத் தேயிலைத் தொழிற்துறையில் மறுசீரமைப்புக்களுக்கும் மாற்றங்களுக்குமான தேவை காணப்படுகின்றது. ஆனால், இவ்வாறான மறுசீரமைப்புக்களும் மாற்றங்களும் தொழிற்துறைக்கும் தேசிய பொருளாதாரத்துக்கும் பல நூற்றாண்டுகளாகப் பாரிய பங்களிப்பு வழங்கிவரும் சமுதாயத்துக்குப் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடாது.

பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ் மற்றும் கலாநிதி ஆர். ரமேஸ்

 

பின்வரும் முகவரிகளில் ஆசிரியர்களை அணுகமுடியும்: பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ், சமூகக் கற்கைகள் திணைக்களம், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் திணைக்களம், திறந்த பல்கலைக்கழகம், நாவல, நுகேகொட: [email protected]/[email protected], கலாநிதி ஆர். ரமேஸ், சிரேஷ்ட விரிவுரையாளர், அரசியல் அறிவியல் திணைக்களம், கலைப் பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்: [email protected]

1000 ரூபா ஊதிய அதிகரிப்பும் உருவாகிவரும் இரண்டக நிலையும் (பகுதி 1)