Photo: VATICAN NEWS

‘ஹெரோயினின் அரசியல்: பூகோள போதைப்பொருள் வர்த்தகத்தில் சி.ஐ.ஏயின் உடந்தை ஆப்கானிஸ்தான், தென் கிழக்காசியா, மத்திய அமெரிக்கா, கொலம்பியா’ என்ற நூல் அல்பிரட் W.மக்கோய் அவர்களால் திருத்திய பதிப்பாக 2005இல் வெளிவந்தது.

இராணுவ ஆக்கிரமிப்பின் பின்னர் வடக்கு – கிழக்கில் இலங்கை அரசு பன்முக போர் முனையை விரிவாக்கியது. நில ஆக்கிரமிப்பு, சிங்கள – பௌத்த மயமாக்கம், இராணுவ மயமாக்கம், வரலாற்றியல் திரிபு இன்னும் பிற. அவற்றில் மிக முக்கியமான புதிய போர்முனைக்களமாக போதைப் பொருள் மீதான போர் முக்கிய பேசு பொருளாக மாறியது. போதைப்பொருள் பாவனை இளைஞர்கள் மத்தியில் பூதாகரமான விளைவாக வெளிவந்த போது, அதனை குற்றமயப்படுத்தி அதனோடு தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக இடைத்தரகராக செயல்பட்ட, போதைப்பொருள் கடத்திய, சிறியளவு போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பல பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். போதைப்பொருளுக் எதிரான போரை ஏறத்தாழ பயங்கரவாதத்திற்கெதிரான போராக சித்தரித்து போர்க் களமுனை திறக்கப்பட்டது. பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதான காவல்துறையின் செய்திகள், தொடர்ந்தும் மக்களைப் போதைப்பொருளுக்கு எதிரான போர் சூழலுக்குள் உளரீதியாக மக்களை தக்கவைத்துக் கொண்டிருக்கக் கூடிய உத்தியை அரச இயந்திரங்கள் உருவாக்கின.

அல்பிரட் W.மக்கோய் தனது நூலின் முன்னுரையில், வியட்நாம் போர்க்காலங்களிலிருந்து தனது ஆய்வைத் தொடங்கி எவ்வாறு சி.ஐ.ஏ. அபினை வியட்நாமிலிருந்து எடுத்துச் சென்றது பற்றியும் தென் வியட்நாமில் நிலை கொண்டிருந்த அமெரிக்க துருப்பினருக்கு வழங்கப்பட்டது பற்றியும், பல்வேறு இரகசிய முகவர்கள் மூலம் மேற்கூறப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்பதை ஆய்வு மூலம் நிறுவ முயலுகின்றார்.

போதைப்பொருள் மீதான போர்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக நாடுகள் சங்கத்திடமிருந்து ஐ.நா. போதைப்பொருள் மீதான தடையை பொறுப்பெடுத்தது. அபின் உற்பத்தி தொடர்பில் மிக இறுக்கமான தடையை அமுல் செய்தது. அதேபோல் போதைப் பொருள் கடத்தல், பண மோசடி, நாடு கடந்த ஒருங்கமைக்கப்பட்ட வன்முறை போன்றவற்றை தடைசெய்து, அவற்றை நடைமுறைப்படுத்த காவல்துறையின் உதவியை நாடியது. 1998இல் ஐ.நாவின் நாடு கடந்த ஒருங்கிணைக்கப்பட்ட வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு அந்தந்த நாடுகளிற்கு சட்ட அதிகாரத்தை வழங்கியது. அமெரிக்கா படிப்படியாக போதைப்பொருள் மீதான போரை விரிவுபடுத்தியது. 1950 களில் இந்தோ சீன அபின் வர்த்தகத்தில் பிரான்ஸிற்கு அதிகளவான பங்கு இருந்ததைத் தெரிந்து கொண்டும், அமெரிக்கா பிரான்ஸை காட்டிக் கொடுக்காமல், அதற்கான குற்றவாளிகளாக வியட்நாமில் உள்ள கம்யூனிசத்தை குற்றம் சுமத்தியது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் தென்கிழக்காசியாவின் அபின் வர்த்தகத்தில் ஹொக்கொங் தலைநகரமாக மாறத் தொடங்கியது. 1970களில் றிச்சட் நிக்ஸன் ஜனாதிபதி காலத்தில் ஆசியாவின் போதைப் பொருள் மீதான போர், அமெரிக்கப் படைகளை பர்மா நோக்கித் திருப்பியது. ஏறக்குறைய 12,000 அமெரிக்கத் துருப்பினர் வட பர்மாவில் இந்நடவடிக்கைகளுக்காக களமிறக்கப்பட்டனர். 1996இல் கிளின்ரன் நிர்வாகம் ‘கொலம்பியா திட்டம்’ மூலம் லத்தின் அமெரிக்க நாடுகளை நோக்கி போதைப்பொருள் மீதான போரைத் திசை திருப்பியது. 20ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா, பூகோள போதைப் பொருள் மீதான போரை விரிவாக்கத் தொடங்கியது. இதன் மூலம் உலகிலேயே பிரமாண்டமான சிறைச்சாலையைத் திறந்து நபர்களைச் சிறைபிடிக்கத் தொடங்கியது. போதைப் பொருளை தடைசெய்தல்தான் அதனுடைய உள்வாங்கலுக்குரிய மிகப்பெரிய உத்தியாகக் கையாளப்பட்டது. இதுவே போதைப்பொருள் வர்த்தகத்தை இன்றும் விரிவாக்கியது. போதைப்பொருள் வழங்கலில் தட்டுப்பாடு ஏற்பட்டு நுகர்தலில் அளவுக்கதிக தேவை ஏற்படுகின்ற போது விலை அதிகரித்த தொடங்கியதோடல்லாமல் அபினை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியது. இதனால் அதற்கேற்ற புவியியல் சூழல் உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியில் லஞ்சம் அதிகரித்தது. காவல்துறை, படைத்துறை அதிகாரிகளை விலைக்கு வாங்குவதன் மூலம் போதைப் பொருள் வர்த்தகம் இன்னும் விரிவாக்கப்பட்டது. 1969 செப்டெம்பரில் ஜனாதிபதி பதவியேறி மூன்று மாதங்களின் பின் ஒப்பரேசன் இன்ரசெப்ற் என்ற நடவடிக்கைளை நிக்ஸன் மெக்சிக்கோ எல்லையில் தொடங்குகின்றார் (மேற்குறிப்பிட்ட நூல்).

பொலிஸாரின் நடவடிக்கைகளை தேர்தல் ஊக்கிகள் கட்டமைக்க முடியும். அரசியல் துருவமயப்படுத்தலால் வன்முறைக்குள்ளான சமுதாயத்தில் பொலிஸ் துறையை அல்லது படைத்துறையை களமிறக்குவதென்பது வெறுமனே திறமை நுட்ப முடிவு மட்டுமல்ல, அரசியல் முடிவு (G.Treja 2020). மெக்சிக்கோவை பொறுத்தவரையில், இடது சாரி – வலதுசாரி அரசியல் துருவங்களுக்கிடையே இருந்த எதிர்ப்புணர்வு போதைப் பொருளுக்கு எதிரான போரில் பாரிய தாக்கத்தைச் செலுத்தியது. பிலிப்பு கல்தறோன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் (2006 – 2012) அரசு போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் குழுக்களுக்கு எதிராக போரைக் கட்டவிழ்த்தது. இப்போருக்கு படைத்தரப்பு களமிறக்கப்பட்டது. இத்தலையீடு அரசுக்கெதிரான அரசியல் சிக்கலை உருவாக்கியதோடு, போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் குழுக்களுக்கிடையேயும் போரை உண்டு பண்ணியது. நாளடைவில் மெக்சிக்கோ வன்முறைக் கலாச்சாரத்திற்குள் தள்ளப்பட்டது. போரில் இறந்தவர்களை விட அதிகளவான பொதுமக்கள் போதைப்பொருளுக்கு எதிரான போரில் இறந்தனர். பழமைவாத கட்சியிலிருந்து தேர்தல் மூலம் தெரிவாகிய ஜனாதிபதி இடதுசாரி தேர்தல் வாக்கு வங்கியை நோக்கி போதைப்பொருளுக்கு எதிரான போரைத் திருப்பினார். குறிப்பாக “kingpin strategy” மூலம் போதைப் பொருள் வர்த்தக குழுக்களின் தலைவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட உத்தியினூடாக, குழுக்கள் மேலும் மேலும் பிளவடைந்தன. வலதுசாரி வாக்கு வங்கி உள்ள இடங்களில் வன்முறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சியினர் ஆட்சி செய்கின்ற இடங்களில் வன்முறை இன்னும் அதிகரித்தது. இராணுவமயமாக்கல் தவிர்க்கப்பட முடியாததாக கட்டமைக்கப்பட்டது. பயங்கரவாதத்தையும் போதைப்பொருளையும் இணைத்து, போதைப்பொருள் பயங்கரவாதம் (narcoterrorism )என்ற சொல்லாடல் கட்டமைக்கப்பட்டது. அதனுடன் சேர்த்து போதைப்பொருள் பயங்கரவாதிகள் கட்டமைக்கப்பட்டார்கள். இச் சொல்லாடக் கட்டமைப்பு 9/11 க்கு முன்னர் உருவாக்கப்பட்டது.

இலங்கையும் போதைப்பொருள் வர்த்தகமும்

இலங்கை பூகோள போதைப்பொருள் வர்த்தகத்தில் பிராந்திய மையமாக விளங்குவதாக ஆய்வுகள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தின் தெற்குப் பாதை இந்து சமுத்திரத்திற்கூடாகச் செல்கின்றது. இதற்கான முக்கிய காரணியாக கடல்வழி அமைகின்றது. ஒரு நாட்டிற்கான கடல் எல்லையாக தரையிலிருந்து 12 கடல்மைல் உள்ள நிலையில் அந்த கடல் எல்லையில் தான் கைதுகளை மேற்கொள்ள முடியும். அதற்கு அப்பாற்பட்ட கடல்வெளி கண்காணிக்கப்படாமலே உள்ளது. இலங்கையின் கடல் எல்லைக்குள் கடத்தப்படுகின்ற போதைப் பொருள் கொள்கலன்களுக்குள் அடைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டு அதிலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. சென்ற வருடம் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் பல பேர் கைது செய்யப்பட்டது நினைவிருந்தால், போதைப்பொருள் தடுப்பு காவல்துறை அதிகாரிகளே போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டது அம்பலமானது. இவர்கள் கடல் மார்க்கமாக போதைப்பொருளை கடத்தி வந்து, பாதுகாத்து வெவ்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்து வந்துள்ளது தெரியவந்தது. இவர்கள் பொய்யான கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு போதைப்பொருளை பல விநியோகத்தர்களுக்கு வழங்கி பல கோடிக்கணக்கான பணத்தைச் சேர்த்திருந்தார்கள். புள்ளி விபரத்தின் படி 40 பேருக்கு ஒருவர் இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட 18 காவல்துறை அதிகாரிகளும், கடத்தலின் உத்தியாக, சர்வதேச கடல் எல்லையிலிருந்து மீன்பிடி வள்ளங்கள் மூலம் போதைப் பொருளைக் கடத்தி, அதன் ஒரு பகுதியை விற்றுவிட்டு மிகுதியை கைப்பற்றியதாக நாடகமாடியது தெரியவந்தது. இந்த இரசகசியம் ஒரு வர்த்தகர் ஊடாகவே வெளிவந்தது என்பதையும் மறந்துவிடக்கூடாது. மேற்கூறப்பட்ட கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பல விருதுகளையும் வென்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு

போதைப்பொருள் மீதான போர் ஏகாதிபத்தியத்தை விரிவாக்குவதற்கு பயன்படுத்தப்படுவதான குற்றச்சாட்டுக்கள் பூகோள ரீதியில் முன்வைக்கப்படுகின்றன.  வடக்கு – கிழக்கு அதற்கு விதிவிலக்கல்ல. வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் மீதான போரை கிளர்ச்சி – எதிர்ப்பை அடக்குவதற்கான கருவியாக (Counter insurgency tool) அவதானிக்க வேண்டியுள்ளது. வடக்கு கிழக்கில் கைப்பற்றப்படும் போதைப் பொருளின் அளவு அதனுடைய சனத்தொகையுடன் ஒப்பிடும் போது அளவுக்கதிகமாகத் தோன்றுகின்றது.

போர் என்பது ஒரு போதை. ஏதோ ஒரு போரை இலங்கை அரசு வடக்கு – கிழக்கில் தக்கவைத்துக் கொண்டேயிருக்கின்றது. 2015இல் அப்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு – கிழக்கு இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்ததன் பின்னர் அதிகரித்த போதைப்பொருள் பாவனை உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து குறிப்பிடுகையில் 2009 க்கு முன்னர் இவ்வாறான நிலைமை இருந்ததில்லை எனவும் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்திற்கெதிரான போர் முடிவிற்கு வந்தபோது, இலங்கை அரசு வடக்கு – கிழக்கை தொடர்ந்தும் போர்க் கொதிநிலையிலே வைத்தக் கொள்ள விரும்புகின்றது. அதற்காக வெவ்வேறு உத்திகளை கையாளுகின்றது. அவற்றுள் ஒன்றே வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் மீதான போர், போதைப்பொருள் மீதான போரை எவ்வாறு மெக்சிக்கோவின் ஆளுங்கட்சி தனக்கான அரசியல் கருவியாகப் பயன்படுத்துகின்றது என்பதை இக்கட்டுரையில் முன்னர் பார்த்தோம், அதே போலவே இலங்கை அரசும் போதைப்பொருள் மீதான போரை தனக்கு சாதகமாக, ஏகாதிபத்திய எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும், அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பை நசுக்குவதற்கும் பயன்படுத்துகின்றது.​

வடக்கு – கிழக்கு போதைப்பொருள் வர்த்தகத்தின் பிராந்திய மையமாக மாற்றப்படும் போது மெக்சிக்கோவைப் போல் பல்வேறு குழுக்கள், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைக் கொண்டிருக்க, செயற்கையான போட்டியை உருவாக்க வேண்டும். அவ்வாறாக ஏகபோக உரிமைக்கான போட்டி, குழுக்களுக்கிடையேயான போரை உருவாக்கி, வன்முறையை கட்டவிழ்க்கின்றது. போதைப்பொருளுக்கு எதிரான போரை அதிகரிக்கின்ற போது, போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களின் தலைவர்கள் “kingpin strategy” உத்தி மூலம் இலக்கு வைக்கப்படும் போது இன்னும் பல குழுக்கள் உருவாவதற்கான சூழலை இலங்கை அரசு உருவாக்குகின்றது. இதனால் தொடர்ந்து வடக்கு – கிழக்கு இராணுவமயமாக்கத்திற்குள் தக்கவைக்கப்பட வேண்டிய தேவையை அரசே உருவாக்குகின்றது.

போதைப்பொருளுக்கான தேவையை அதிகரித்து, வழங்கலைக் மட்டுப்படுத்துகின்ற போது, போதைப்பொருளின் விலை அதிகரிப்பதோடு, பல விநியோக முறைகளைத் திறப்பதற்கான வழியை தேட வலிந்து தள்ளப்படுகின்றார்கள்.

வடக்கு – கிழக்கில் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன. இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது குறிப்பாக இளைஞர்களின் சமூக முதலீடு அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பில் பயன்படுத்தப்படாமல் அதற்கெதிரான திசையில் திருப்பப்படுகின்றது. போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவோர் பெரும்பாலும் இளவயதினர் என அடையாளங் காணப்பட்டுள்ளனர். அவர்கள் போதைப்பொருள் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில், அவர்களுக்காக பரிந்து பேச, நியாயப் பிரச்சாரம் செய்வதற்கு குழுக்கள் முன்வரமாட்டா. இவ்வாறாக சிறையிலடைக்கப்படும் இளைஞர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியானது. ஒரு தலைமுறை விடுதலை – மைய சிந்தனையிலிருந்து திசை திருப்பப்படுகின்ற போது அது விடுதலை வரலாற்றில் ஏற்படுத்தப்போகும் வெளி என்பது மீள்நிரப்பப்பட முடியாததாகிவிடும்.

இலங்கை அரசு தனக்கெதிராக எழும் எதிர்ப்புச் சக்திகளை அடக்குவதற்காக போதைப்பொருள் போரைப் பயன்படுத்துகின்றது. போதைப்பொருள் மீதான இலங்கையின் போர் வடக்கு – கிழக்கில் கூட்டு அடையாள சமூக கட்டமைப்பைச் சிதறடிக்கின்றது.

எழல் ராஜன்