Photo: Selvaraja Rajasegar

நிலம், சமூக பொருளாதார இருப்புக்கான அடிப்படையாக அங்கீகரிக்கப்படும் நிலைமை அதிகரித்துவரும் நிலையில் இலங்கையில் நிலம் தொடரான ஒரு பிரச்சினையாகவே இருந்துவருகிறது. குடும்ப மட்டத்தில் மாத்திரமல்லாது சமூக மட்டத்திலும் நிலம் பிரச்சினைக்குரிய ஒரு விடயமாகவே அமைந்துள்ளது. அது உணர்வுபூர்வமானதும் அரசியல் சார்ந்தமுமான பிரச்சினையாகவும் கூட இருக்கிறது. அரசாளுவோர் தங்களின் அதிகாரத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் கருவியாகவும் இதனைக் கையாள்கின்றனர். நிலமானது வீடு, வேலை, உணவு உள்ளிட்ட இன்னும் பல மனித உரிமைகளுடன் பிணைக்கப்பட்ட ஒரு விடயமும் ஆகும். நிலத்துக்கான உரிமை என்பது, ஒரு குழுவினரின் அடையாளமாக, வாழ்வாதாரமாக, ஏன் பிழைத்துவாழ்தலுக்கான அடிப்படையாகக்கூட அமைகிறது. ஏனைய மனித உரிமையை அனுபவிப்பதற்கான முன் நிபந்தனையாக நிலவுரிமை அமைதல் வேண்டும். ஆனாலும், நிலவுரிமை சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளூரிலும், உள்நாட்டிலும் , சர்வதேசத்திலுமே போதியளவு பேசுபொருளாவதில்லை. ஏனெனில், நிலம் சார் பிரச்சினைகள் சிக்கலானவையானதாகும்.

மேற்படி குறிப்பினை பின்னட்டையில் தாங்கியவாறு இலங்கை மலையகப் பெருந்தோட்ட மக்களின் காணிப் பிரச்சினைகளையும் அதனோடுனைந்த வீட்டுப்பிரச்சினையையும் உள்நாட்டு , சர்வதேச சட்டங்கள், மனித உரிமை வாசகங்கள், ஐ.நா. பொது உடன்பாடுகள் என பலகோணங்களில் நின்று ஆராயும் ஆய்வறிக்கை ‘நாடற்ற – நிலமற்ற – அதிகாரமற்ற இலங்கை பெருந்தோட்ட சமூகத்தின் காணி உரிமையும் வீட்டு உரிமையும்’ (Stateless, Landless, Powerless – Land & Housing Rights of Plantation Community in Sri Lanka).

கண்டி, மனித அபிவிருத்தித் தாபனம் 2012ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கை இன்றைய திகதிக்கும் கூட பொருத்தமானதே. நிறுவனத்தின் தலைவர் பி.பி.சிவப்பிரகாசம் எழுதியுள்ள இந்த ஆய்வறிக்கை அறுபது பக்க சிறு நூலாக நான்கு அத்தியாயங்களைக் கொண்டதாக தொகுக்கப்பட்டுள்ளது.

முதலாவது அத்தியாயத்தில் அறிமுகக் குறிப்பாக காணி உரிமையும் மனித உரிமையும், உள்நாட்டு – சர்வதேச காணிச் சட்டங்கள், காணி உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்ட கட்டமைப்புகள், வீட்டுக்கான உரிமை, பெருந்தோட்ட சமூகத்தின் காணி உரிமை, வீட்டுரிமை பிரச்சினைகள், இந்த கற்கைக்கான அடிப்படைகள், நோக்கங்கள், முறைமை தொடர்பாக விபரிக்கப்படுகிறது.

இரண்டாவது அத்தியாயம், இலங்கைப் பெருந்தோட்டத் துறையின் திகில்நிலையும் எழுவினாக்களும், இலங்கைப் பெருந்தோட்டச் சமூகம், காணிப்பிரச்சினைகள், நிலநீக்கஞ்செய்யப்பட்ட பெருந்தோட்ட சமூகம், பெண்கள் – காணி – வீட்டு உரிமைகள், பிரஜாவுரிமையும் காணி மறுசீரமைப்பும், பெருந்தோட்டங்களின் தனியார் மயமாக்கம், பெருந்தோட்ட சமூகமும் காணி சார்ந்த பிரச்சினைகளும் முதலான விடயங்கள் ஆராயப்படுகின்றன.

மூன்றாவது அத்தியாயத்தில் சமகால பெருந்தோட்ட காணி பிரச்சினைகள், காணியும் அபிவிருத்தியும் தொடர்பான பிரச்சினைகள், மேல்கொத்மலை நீர்மின் திட்டம், பிரதேச சபைகளின் சேவைகள், கானல்நீராகிப் போயுள்ள காணியும் அபிவிருத்தியும் போன்ற விடயங்கள் ஆராயப்படுகின்றது.

நான்காம் அத்தியாயம் எதிர்காலத்திட்டம் பற்றியும் பரிந்துரைகளையும் வழங்குகிறது. இந்த ஆய்வினைப் பொருத்தவரையில் நான்காம் அத்தியாயம் முக்கியமான அம்சங்களைத் தாங்கி வந்துள்ளது எனலாம். இலங்கை சர்வதேச மனித உரிமை சமவாயங்களில் கையெழுத்திட்டுள்ள CERD (இனப்பாகுபாட்டை ஒழித்தல்), ICCPR (சர்வதேச அரசியல் குடியியல் உரிமை), ICESCR (சர்வதேச சமூக பொருளாதார கலாசார பண்பாட்டு உரிமைகள்), CRC (குந்தை நல உரிமைகள்), MWC (புலம்பெயர் தொழிலாளர்கள்) CEDAW (பெண்களுக்கு எதிரான பேதப்படுத்தலுத்தலை ஒழித்தல்) முதலான சமவாயங்களின்படி மலையகப் பெருந்தோட்ட காணி – வீட்டு உரிமைகளை அணுகும் மூலோபாயங்களை முன்வைக்கிறது.

இதற்கு தற்போதைய தொழிற்சங்க – அரசியல் தளத்திற்கு அப்பால் சென்ற மக்கள் நோக்கிய அரசியல் முன்வைப்பு ஒன்றையும் வேண்டி நிற்கிறது. சமூக பொருளாதார அரசியல் அதிகாரங்கள் மக்களுக்கு கிடைக்கத்தக்கதான பணிகளை நோக்கியதாக அரசியல், தொழிற்சங்க, சிவில் சமூக, அரச்சார்பற்ற நிறுவனங்களின் இயக்கம் அமைதல் வேண்டும். பெருந்தோட்ட சமூகமானது சமத்துவமான சமூகநீதி மிக்க நிலைபேறான அபிவிருத்தியை அடையும் இலக்கினைக் கொள்ளுதல் வேண்டும்.

இந்த ஆய்வறிக்கையானது பின்வரும் பரிந்துரைகளையும் முன்வைக்கிறது.

  • இலங்கை அரசும் அரசாங்கமும் காணி, காணி பயன்பாடு தொடர்பில் பொதுக் கொள்கை ஒன்றை வகுத்தல் வேண்டும். அரச காணிகள் மாத்திரமின்றி தனியார் காணிகள் தொடர்பிலும் உள்ளூர், மாகாண, தேசிய மட்ட கலந்துரையாடல்கள் அவசியமானது.
  • இலங்கை அரசானது சுயாதீன காணி ஆணைக்குழு (காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு அப்பால்) ஒன்றை அமைப்பதுடன் அதன் மாகாண கிளைக் காரியாலயங்களும் அமைக்கப்பட்டு வினைத்திறனான காணிப் பயன்பாடும் கொள்கையும் நிகழ்ச்சிநிரலும் கொண்டதாக மக்களின் காணி உரிமை உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
  • காணி தொடர்பிலான மக்களிடையே – சமூகங்களிடையே ஏற்பட்டிருக்கக்கூடிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காணக்கூடிய மூலோபாய திட்டங்கள் வகுக்கப்படுதல் வேண்டும்.
  • காணி தொடர்பான கொள்கையாக்கம், காணி வரைபு, காணி அளவீடு, காணிப்பகிர்வு காணி குறித்தான தகவல்கள் உள்ளூர், மாகாண, தேசிய மட்டத்தில் சமுதாய சிவில் சமூக கலந்துரையாடல் ஊடாக வெளிப்படைத் தன்மையுடன் பகிரப்படுதல் வேண்டும்.
  • பொதுவசதிகள் உடனான வீடமைப்புக்கும் மேலதிக வருமான மீட்டலுக்கும் ஏற்றதாக பெருந்தோட்ட சமூகத்தினருக்காக உருவாக்கப்படுதல் வேண்டும்.
  • தற்போதைய காலங்கடந்த லயன் வாழ்க்கை முறை மாற்றப்பட்டு அரச, பெருந்தோட்ட, தனியார்தோட்டங்களில் வதியும் அனைத்து குடும்பங்களுக்கும் வீடமைப்பு காணிகளாக 20 பேர்ச்சர்ஸ் வழங்கப்படுதல் வேண்டும்.
  • ஒவ்வொரு பெருந்தோட்ட குடும்பம் ஒன்றுக்கும் இரண்டு ஏக்கர் காணி வாழ்வாதார தேவைக்காக வழங்கப்படுதல் வேண்டும்.

இத்தகைய பரிந்துரைகளைச் செய்யும் அதேவேளை, அதற்கான நியாயப்பாடுகளையும் அறிக்கை ஆதாரபூர்வமான தகவல்களுடன் முன்வைக்கிறது.

மலையகத் தமிழர் சமூகமானது தேசிய நீரோட்டத்தில் இருந்து நீண்டகாலமாகவே விலக்கி வைக்கப்பட்டுள்ளது. அடிமைக்கூலி முறைமை போன்று வைக்கப்பட்டுள்ள இந்த மக்கள் காணி முதல் பல்வேறுபட்ட விதங்களில் அந்நியமாக்கப்பட்டுள்ளார்கள். 2009/2010 கணக்கெடுப்புகளின்படி 1.1 மில்லியன் சனத்தொகை சராசரி 4.3 குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையில் அண்ணளவாக 255,813 குடும்பங்கள் பெருந்தோட்டப் பகுதியில் வாழ்கின்றனர். அரச, பெருந்தோட்ட பிராந்திய கம்பனிகள் வசம் சுமார் 250,320 ஹெக்டேயர் காணிகள் காணப்படும் அதேவேளை 178,092 ஹெக்டேயர் காணிகளே பயிர் பயன்பாட்டில் உள்ளது. ஏறக்குறைய 70,000 ஹெக்டேயர் காணிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. அவை பிராந்திய கமபனிகள் மட்டத்தில் 57,442, ஜனவசம 6000, அரச பெருந்தோட்ட யாக்கங்கள் 5000 ஹெக்டேயர்கள் என ஏறக்குறைய மொத்த பயிர் காணிகளில் 25 சதவீதம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

பயன்படுத்தப்படாமல் உள்ள காணிகளை பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அறிவிக்கின்ற போதும் அவை பெருந்தோட்ட சமூகம் சார்ந்து நடைமுறைக்கு வரவில்லை. இரண்டு லட்சம் குடும்பங்கள் என சராசரியாகக் கொண்டு தலா குடும்பத்துக்கு 20 பேர்ச்சஸ் எனக் கொண்டாலும் அது 40 லட்சம் பேர்ச்சஸ் ஆக அமையும். அதாவது சுமார் 10 ஆயிரம் ஹெக்டேயர்களே ஆகும். எனவே, சுமார் 70 ஆயிரம் ஹெக்டேயர் பயன்படுத்தப்படாத நிலத்தில் ஏழில் ஒரு பங்கு நிலத்தைப் பகிர்ந்து அளித்தாலே தலா ஒரு குடும்பத்துக்கு 20 பேர்ச்சஸ் காணி என்ற அடிப்படையில் வீடமைப்புக்காக ஒதுக்க முடியும்.

இருநூற்றாண்டு காலமாக உழைக்கும் வர்க்கமாக நிலமற்ற சமூகமாக வாழும் மலையகப் பெருந்தொட்ட சமூகத்திற்கு காணி அல்லது நிலம் ஏன் அடிப்படை உரிமையாக அமைதல் வேண்டும் என்பதனை மனித உரிமை கண்ணோட்டத்துடன் முன்வைக்கும் இந்த நூல் அரசியல் கொள்கை வகுப்பாளர்கள், அரசியல் சமூக ஆர்வல்களின் வாசிப்புக்கு உள்ளாவது அவசியம்.

மல்லியப்புசந்தி திலகர்