பட மூலம், Army.lk

கொவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் பிரயத்தனப்படுகிறது.

தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல பகுதிகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. இங்கு மக்கள் வீடுகளில் தங்கியிருக்காமல் வெளியே நடமாடுகிறார்களா என்பதைக் கண்டறிவதற்காக இலங்கை இராணுவத்தினரும், பொலிஸாரும் ட்ரோன் (Drone) கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இராணுவ அதிகாரிகள் ஹெலிகொப்டரில் பறந்து பார்வையிடுவதைப் போல, ட்ரோன்கள் மூலமான தனிமைப்படுத்தல் கண்காணிப்பு (Surveillance) மேற்கொள்ளப்படுகிறது. எவ்வளவு கடுமையாக எச்சரித்தாலும் சிலர் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறுவதாக அரசாங்கம் சாடுகிறது.

ட்ரோன் என்பது ஆளில்லாமல் பறக்கச் செய்யப்பட்டு தொலைதூரத்தில் இயக்கப்படும் சிறிய விமானமாகும். இதற்கு இன்னமும் சரியானதொரு தமிழ்ப்பதம் உருவாக்கப்படவல்லை என்பதால், ட்ரோன் என்பதையே பயன்படுத்தலாம். கமரா பொருத்தப்பட்ட ட்ரோனை வான்வழியாக பயணிக்க செய்து, ஒரு இடத்தை புகைப்படம் அல்லது வீடியோ படம் பிடிக்க முடியும்.

வேறு நாடுகளைப் போன்று இலங்கையிலும் இராணுவ நடவடிக்கைகளுக்காகவே ட்ரோன் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. சிவில் யுத்த காலத்தில் இலங்கை இராணுவம் வேவுபார்ப்பதற்காக உபயோகித்த ‘கேலமா’ என்ற கருவியை ஞாபகப்படுத்தலாம். வேவு பார்ப்பதற்காக மாத்திரமன்றி, தூரத்தில் இருந்து ஓர் இலக்கைத் தாக்குவதற்கு ஆயுதங்களை காவிச் செல்லக்கூடிய ட்ரோன்களும் உலகில் உள்ளன.

மக்களைக் கண்காணிப்பதற்காக ட்ரோன்களைப் பாவித்தல், இந்தத் தொழில்நுட்பத்தின் சர்ச்சைக்குரிய பயன்பாடாக அமைந்துள்ளது. இது 2020 பெருந்தொற்றுக் காலத்தில் பல நாடுகளில் காணக்கூடிய தீவிர போக்காக மாறியுள்ளது.

ட்ரோன்கள் மூலம் அதிக காட்சிச் செறிவு (Image Resolution) புகைப்படங்களையும், வீடியோ படங்களையும் எடுக்க முடியும் என்பதால், ட்ரோன்கள் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஊடுருவுவதாகக் கூட அமையலாம்.

ட்ரோன் கண்காணிப்பின் மூலம் இலங்கை மக்களின் அந்தரங்கம் அச்சுறுத்தலுக்கு இலக்காகலாம் என சமூக செயற்பாட்டாளர்களும், ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இது பற்றி சிறப்பான கருத்துப் பகிர்வை மேற்கொண்டுள்ள ‘சிலோன் நியூஸ்’ இணையத்தளம், இவ்வாறு குறிப்பிடுகிறது: “பெருந்தொற்றின் ஆபத்தை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள்  PCR கருவிகள், மருத்துவமனைக் கட்டில்கள் போன்றவற்றின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தில், அவற்றிற்காக செலவழிக்காமல், அதிநவீன வேவுபார்க்கும் கமரா ட்ரோன்களுக்காகப் பணத்தை வாரியிறைப்பது பற்றி சமூக ஊடகங்களில் தீவிர வாதப் பிரதிவாதங்களுக்கு வித்திட்டிருந்தது” (சிங்களத்தில் எழுதப்பட்ட முழுக் கட்டுரையையும் வாசிக்க:  https://www.ceylonnews.lk/archives/13961).

2016ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி ‘ட்ரோன் தொழில்நுட்பத்திற்கு நாம் தயாரா?’ என்ற தலைப்பில் ராவய பத்திரிகையில் எனது கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் இவ்வாறு கூறியிருந்தேன்: “இன்றளவில் பொருட்களை கொண்டு செல்லுதல், இடர்நிலைமைகளை மதிப்பிடுதல், புகைப்படம் எடுத்தல், ஊடக செயற்பாடுகள் போன்ற அமைதிவழி நோக்கங்களுக்காக ட்ரோன் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். விரும்பியோ, விரும்பாமலோ ட்ரோன் தொழில்நுட்பம் இலங்கையில் கால்பதித்துள்ளது.”

இலங்கையில் சில அரச, தனியார் நிறுவனங்கள் அமைதிவழி நோக்கங்களுக்காக பல வருடங்களாக ட்ரோன்களைப் பயன்படுத்தி வருவதையும், இதனை ஒழுங்குமுறைப்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை விதிமுறைகளை வகுத்துள்ளதாகவும் நான் குறிப்பிட்டேன்.

ட்ரோன் பயன்பாடு அதிகரிக்கையில், எம்மைச் சேர்ந்த சிலர் அது பற்றி பயப்பீதியைக் கிளப்பலாம். ட்ரோன் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி பலன் பெறுவதுடன், அதனை கவனமாகவும், ஒழுக்கநெறிகளுக்கு அமைய, முறையான ஒழுங்குமுறைப்படுத்தல் வரம்புகளுக்கு உட்பட்டவாறு உபயோகிக்க வேண்டும்” என நான் கூறியிருந்தேன்.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பாகவும், ஒழுக்கநெறிகளுக்கு அமையவும் இலங்கையில் பயன்படுத்துவது பற்றி கூறிய முன்னோடிகளுள் ஒருவரான சஞ்சன ஹத்தொட்டுவ, இது பற்றி ட்விற்றரில் பதிவிட்டுள்ளார்.

ஊடக அறிக்கைகளை ஆராய்ந்தால், இந்தக் கண்காணிப்பிற்காக இலங்கையில் அதிக ஆற்றல் கொண்ட ட்ரோன் கருவிகளே பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது என அவர் கூறுகிறார்.

கொவிட்-19 இற்கு எதிராக ட்ரோன் கண்காணிப்பு ஆரம்பிக்கப்பட்டமை பற்றி தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கப்பட்ட காட்சிகளை அவதானிக்கையில், இராணுவம் பயன்படுத்தும் சில ட்ரோன்களில் Zenmuse H20 என்ற கமரா பொருத்தப்பட்டுள்ளமை தெரிகிறது. இதன்மூலம் தட்பவெப்ப படங்களை (Thermal Imaging) பிடிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதால், இரவிலும் மனித நடமாட்டங்களையும், வேறு அசைவுகளையும் கமராவுக்குள் சிறைப்படுத்தலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.


படம்: DailyMail

சஞ்சன ஹத்தொட்டுவ நியூசிலாந்தின் ஒட்டாகோ பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டத்திற்காக ஆய்வு செய்து வருகிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் விதிமுறைகளுக்கு கட்டுப்படும் தேவை இராணுவத்திற்கு கிடையாது (ஏனைய ட்ரோன் உரிமையாளர்களைப் போன்று). அதிகாரசபையின் அனுமதியை இராணுவம் பெறத் தேவையில்லை. ட்ரோன் கருவியை செலுத்துபவரின் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் அதனை அனுப்பவோ, இருளில் செலுத்தவோ முடியாது என்ற வகையில் அதிகாரசபை விதித்த கட்டுப்பாடுகள் இராணுவத்திற்கு ஏற்புடையவை அல்லவென்பதால், பிரஜைகள் மீதான கண்காணிப்பு எந்தளவு பரந்தது என்பதை நினைத்துப் பார்க்க முடியாது.”

உதாரணமாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் விதிமுறைகளுக்கு அமைய, தனியார் காணிகளுக்கு மேலாக உரிமையாளர்களின் அனுமதியின்றி ட்ரோன் கருவிகளைப் பறக்க விட முடியாது. இந்த விதிமுறை பொலிஸாருக்கும், இராணுவத்திற்கும் சொந்தமான கருவிகளுக்கு ஏற்புடையதாகுமா?

இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் ட்ரோன் பயன்பாட்டை அங்கீகரித்து ட்விற்றர் பதிவை இட்டுள்ளது. சீன அரசாங்கம் மக்களை ‘ஒழுங்குமுறையாக நடந்துகொள்ள மக்களை ஊக்குவிப்பதற்கு’ ட்ரோன்களைப் பயன்படுத்துவதாக அதில் கூறியுள்ளது.

அனைத்துப் பிரஜைகளும் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை முறையாக பின்பற்றுவதை இரவிலும் பகலிலும் கண்காணிப்பதற்காக, சீன அரசாங்கம் பரந்த அளவில் ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது. இது தவிர கடுமையாக எச்சரிக்கப்படுவதும், தண்டிக்கப்படுவதும் நிகழ்கிறது.

முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியேறிய மூதாட்டிக்கு சில அடிகள் மேலாக பறந்த ட்ரோன் கருவி, அவரைக் கடுமையாக ஏசுவதைக் காட்டும் வீடியோ டிக்-டொக் செயலியில் பகிரப்பட்டு வருகிறது (இங்கு தொலைதூரத்தில் இருந்து ட்ரோனை இயக்குபவர்கள், ஒலிவாங்கியின் மூலம் கடுந்தொனியில் ஏசுகிறார்கள்).

எதேச்சாதிகார ஆட்சி நிலவும் சீனா போன்ற நாடுகளில், ட்ரோன்கள் முதலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களின் சகல செயற்பாடுகளையும் கண்காணித்தல் என்பது பாரிய மனித உரிமை மீறலாகும். எனினும், இந்நாடுகளின் அரசுகள் இது பாதகமானது என்பதை ஏற்றுக்கொள்வதில்லை.

சீனாவில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த ட்ரோன் கருவிகளில் முகத்தை அடையாளம் காணும் (Facial Recognition) தொழில்நுட்பம் சேரும்போது, குறித்தவொரு இடத்தில் குறித்த செயலில் ஈடுபடும் நபரின் அடையாளத்தை இலகுவாக அறியக்கூடிய ஆற்றல் அதிகாரிகளுக்கு கிடைக்கிறது.


படம்: STR/AFP via Getty Images

பொதுநலன் கருதி அந்தரங்கத்தையும் (Privacy), தனிநபர் சுதந்திரத்தையும் (Personal Liberties) கட்டுப்படுத்த வேண்டியிருப்பதாக சீன அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கூறுகிறார்கள்.

இலங்கை என்பது பிரஜைகளின் உரிமைகளை மதிக்கும் ஜனநாயக வரம்புகளுக்கு உட்பட்டு ஆட்சி நிர்வாகம் செய்யும் நாடு. அது சீனா போன்ற நாடுகளில் அமுலாகும் சகலவற்றையும் பிரதிபண்ண முடியாது.

இதற்குப் பதிலாக, பொதுநலனுக்கும், பிரஜைகளின் உரிமைகளுக்கும் இடையில் நன்மை தரக்கூடிய சமநிலை பேணுவதே முக்கியமானது (தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்கள் சகலவற்றையும் முறையாக அனுசரிக்கும் பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளதால், ஒரு சிலர் அவற்றை மீறுவதன் மூலம் ஒட்டுமொத்த சமூகமும் ஆபத்துக்குள்ளாவதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது).

ஒரு சமூகத்தில் இரவு பகல் பாராமல் எந்நேரமும் திறந்தவெளியிலும் வீடுகளுக்கு உள்ளேயும் தாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு பிரஜைகளுக்கு ஏற்படுகையில், அவர்களின் நடத்தையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது என உளவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். குறிப்பாக, இத்தகைய கண்காணிப்பு மூலம் இனரீதியான, மதரீதியான சிறுபான்மையினர் மத்தியில் நிலவும் பாதுகாப்பற்ற உணர்வைத் தீவிரப்படுத்தலாம்.

ஒரு மக்கள் கூட்டம் பொதுவெளியில் சட்டபூர்வமாக ஒன்றுகூடி, அரசியல் சார்ந்த ஆர்ப்பாட்டத்தையோ, உரிமைப் போராட்டத்தையோ முன்னெடுக்கிறதெனக் கருதுவோம். இத்தகைய தருணங்களில், ஒன்றுகூடும் மக்களை பொலிஸார் வீடியோ படம் பிடிப்பது வழக்கம் (இதனை வட மாகாணத்தில் அடிக்கடி அவதானிக்கலாம்).

இத்தகைய சந்தர்ப்பங்களில், பொலிஸார் ட்ரோன் கருவிகளைப் பறக்கவிட்டு, ஒன்றுகூடியுள்ள மக்களின் செயற்பாடுகளை பல கோணங்களைப் படம் பிடிப்பதன் மூலம், அவர்களை அச்சுறுத்தலாம்.

“அந்தரங்கத்தைப் பேணுவதை விடவும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது முக்கியமானது” என அமைச்சரவைப் பேச்சாளர் சமீபத்தில் கூறியிருந்தார். பெருந்தொற்றுக்கு முன்னதாக, பயங்கரவாதம் பற்றி பேசப்பட்டு, இதே தர்க்கம் முன்வைக்கப்பட்டது.

பயங்கரவாதிகளைப் போன்று கொரோனா வைரஸையும் சமூகத்தில் ஒரே தடவையில் இனங்காண்பது கடினம் என்பது உண்மையே. எனவே, விசாரணைகளும், கண்காணிப்புகளும் அவசியம். அவை பொதுநலன்களுக்கு பங்களிப்பவை.

எனினும், ஜனநாயக நாடுகள் நீதிமன்றங்களின் மேற்பார்வைக்கு உள்ளாகும் வகையில், முறையான சமநிலை பேணி, அந்தக் காரியங்களை நிறைவேற்றி வருகின்றன.

சிவில் சுதந்திரத்தைப் பெரிதும் மதிக்கும் பிரான்ஸ் தேசத்தின் பாரிஸ் மேல் நீதிமன்றம் பொலிஸார் ட்ரோன் கருவிகளைப் பயன்படுத்தி மக்களைக் கண்காணிப்பதை 2020ஆம் ஆண்டு மே மாதம் தடை செய்தது.

பொதுவெளியில் நிற்கும் தனிமனிதர்களை முகத்தை அடையாளம் காணக்கூடிய அளவிற்கு ட்ரோன்களை தாழப் பறக்கவிட்டு புகைப்படம் அல்லது வீடியோ படம் எடுப்பதானது, அவர்களின் அந்தரங்கத்தை ஊடுருவுதலாகும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தொழில்நுட்பத்தை பொதுமக்களைக் கண்காணிப்பதற்காக பயன்படுத்துவதற்கு முன்னதாக அந்தரங்கத்தைப் பாதுகாக்கக்கூடிய சட்டதிட்டங்களை திருத்துங்கள். இல்லாவிட்டால், குறைந்தபட்சம் அத்துமீறிய படப்பிடிப்பிற்குள் சிக்கும் நபர்களின் தனிப்பட்ட அடையாளத்தை இனங்காண முடியாதவாறான தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை கட்டாயப்படுத்துங்கள் என்று பாரிஸ் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.

இதற்கு சில வாரங்கள் முன்னதாக, அமெரிக்காவின் கனெக்ரிகட் மாநிலத்திலும், இதே மாதிரியான சம்பவம் நிகழ்ந்தது. பெருந்தொற்று தீவிரமாக பரவிய சமயத்தில், வெஸ்ட்போர்ட் நகரில் மக்கள் ஆள்-இடைவெளி பேணுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்கு பொலிஸார் ட்ரோன்களைப் பயன்படுத்த திட்டமிட்டனர்.

எனினும், அமெரிக்காவின் சிவில் சுதந்திர சங்கத்தின் (ACLU) கடும் எதிர்ப்பிற்கு மத்தியில், இந்தத் திட்டத்தை பொலிஸார் முடக்கிக் கொண்டார்கள். இவ்வாறு செய்யாதிருந்தால், நீதிமன்றம் செல்ல சிவில் செயற்பாட்டாளர்கள் தயாராக இருந்தார்கள்.

மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டு பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது சமகாலத்தில் தீவிரம் பெற்றுள்ள விவாதமாகும்.

கொவிட்-19ஐக் கட்டுப்படுத்துவதில் வெளிநாடுகள் பெற்ற அனுபவங்கள் சிலவற்றை நாம் பகிர்ந்து கொண்டுள்ளோம். ஜனநாயக வரம்புகளுக்கு உட்பட்டவாறு, இடர்காப்பு முகாமைத்துவத்தையும், பொதுச் சுகாதாரத்தையும் வலுவூட்டுவதன் மூலம் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தலாம் என்பதற்கு தாய்வானும், நியூசிலாந்தும் சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.

ட்ரோன் கமராக்களில் பதிவு செய்யப்படும் பிரஜைகளின் படங்கள், அவற்றின் ஊடாக வெளிப்படும் தனிநபர் நடத்தைகள் போன்றவற்றை பொலிஸார்/ இராணுவத்தினர் எவ்வளவு காலம் சேமித்து வைப்பார்கள்? அவற்றைக் கையாளும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது? அரசியல் பகையாளிகளும், சிவில் செயற்பாட்டாளர்களும் சென்று வந்த இடங்களையும், அவர்கள் மேற்கொண்ட தொடர்புகளையும் கண்டறிவதற்கு இந்த டிஜிட்டல் தரவுகளை முறைகேடாகப் பயன்படுத்தலாம் அல்லவா? இவை போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

காலத்திற்குப் பொருத்தமானவையாகத் திகழும் அந்தரங்கம், தரவுகளைப் பாதுகாத்தல் ஆகிய இரு விடயங்களையும் கையாள்வதற்குரிய சட்டவரம்புகள் இலங்கையில் நலிவானவையாகக் காணப்படுகின்றன. அந்தரங்கம் பேணுவதற்கான உரிமை (Right to Privacy) என்பது இன்னமும் சட்டமாகவில்லை. அந்தரங்கத்தைப் பாதுகாத்தலுக்கான (Privacy Protection) வேறு சட்டங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பாதுகாப்பே உள்ளது.

இதேவேளை, டிஜிட்டல் வடிவில் பெறப்படும் பிரஜைகளின் தனிப்பட்ட தகவல்களை முறையாகப் பாதுகாக்க அந்தரங்கத் தகவல் பேணல் சட்டமும் இலங்கையில் இல்லை. இத்தகைய சட்டம் பற்றி முன்னைய அரசாங்கம் முன்மொழிவை மேற்கொண்டிருந்தாலும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன்னதாக அதனை நிறைவேற்ற முடியாமல் போனது.

ட்ரோன் என்பது வெறுமனே வேவு பார்ப்பதற்கு மாத்திரமான கருவியல்ல என்றே கடைசியில் கூற வேண்டியதாக இருக்கிறது. தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் பயனுள்ள வகையில் ட்ரோன் கருவிகளைப் பயன்படுத்துவது எவ்வாறென பல நாடுகள் பரீட்சித்துப் பார்த்து வருகின்றன.

உதாரணமாக, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை, அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் சேர்ந்து கொவிட் கட்டுப்பாட்டுக்கான சுகாதார ட்ரோன் சேவையை ஏற்படுத்த சமீபத்தில் ஆரம்ப நடவடிக்கை எடுத்தது.

மருத்துவமனைகளுக்கு மத்தியிலும், சுகாதார நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு இடையிலும் கொவிட்-19 பரிசோதனை மாதிரிகள், சுகாதார பணியாளர்களுக்கான பாதுகாப்பு உடைகள் போன்றவற்றை பரிமாறிக்கொள்ள அரச வாகனங்களும், கூரியர் சேவைகளும் பயன்படுத்தப்பட்டன. எனினும், நெருக்கடி தீவிரம் பெற்று தேவைகள் அதிகரித்த காரணத்தால் தாமதங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாகவே எடை குறைந்த மாதிரிகள் உள்ளிட்ட பொருட்களை GPS செய்மதித் தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்பாக ஒருங்கிணைக்கக்கூடிய ட்ரோன்களைப் பயன்படுத்தி பொருட்களைக் கொண்டு செல்ல அவர்கள் முனைகிறார்கள்.

ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் முறையாக பயன்பெற்று, அதனை கவனமாகவும், ஒழுக்கநெறிகளுக்கு அமையவும், முறையான ஒழுங்குமுறைகளுக்கும் உட்பட்டு பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

நாலக்க குணவர்த்தன