பட மூலம், AP Photo/Eranga Jayawardena

தற்போதைய அரசியலமைப்பை முழுமையாகப் பதிலீடு செய்யக்கூடிய புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இதில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்தமும் உள்ளடங்கும். அதன்படி இலங்கைக்கான மூன்றாவது குடியரசு அரசியலமைப்பொன்று தயாராகிக்கொண்டிருக்கிறது. இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு மூன்றாவது அரசியலமைப்பில் இருந்து வேறுபடும் என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. ஒரு புதிய குடியரசுக்காகவோ அல்லது புதியதொரு அரசியலமைப்புக்காகவோ தாங்கள் மனதிற்கொண்டிருக்கக்கூடிய எந்தவொரு அடிப்படைச் சிந்தனையையும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவும் அவரது அணியில் உள்ள அரசியலமைப்பு நிபுணர்களும் இன்னமும் மக்களுடன் பகிர்ந்துகொண்டதில்லை.

ஆனால், 20ஆவது அரசியலமைப்பு திருத்தமும் அதன் மீதான விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் முன்வரிசை உறுப்பினர்களில் சிலர் வெளியிட்ட கருத்துக்களும் இலங்கைக்கு மூன்றாவது குடியரசுக்கான அடிப்படைச் சிந்தனைகளை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு உறுதியான தடத்தை அடையாளம் காட்டியிருக்கின்றன. புதிய அரசியலமைப்பு 20ஆவது திருத்தத்தின் நோக்கத்தையும் உள்ளடக்கத்தையும் அழுத்தமாகத் தொடரக்கூடியது பெரிதும் சாத்தியமே. அதனால் புதிய அரசியலமைப்பு உச்சநீதிமன்றமும் நாடாளுமன்றமும் ஏற்கனவே அங்கீகரித்த அடிப்படைக் கட்டமைப்பைச் சுற்றியே நிர்மாணிக்கப்படும்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான அதிகார வேறாக்கல் (Division of Power) தொடர்பில் சிறியதொரு மாற்றத்தை எதிர்பார்க்கமுடியும். எதிர்காலத்தில் பிரதமர் பதவியைப்பெறக்கூடிய எவரும் தாங்கள் முக்கியமானவர்கள் இல்லை என்று உணராதிருப்பதை உறுதிசெய்வதற்கு பிரதமர் பதவிக்கு சற்று கூடுதல் அதிகாரங்கள் கொடுக்கப்படக்கூடியது சாத்தியம்.வேறு இரு மாற்றங்களும் கூட பெருமளவுக்கு சாத்தியமாகலாம். முதலாவதாக, கலப்பு தேர்தல் முறையின் (Mixed electoral system) சில அம்சங்களைக் கொண்டுவருவதற்கு தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் (Proportional representation)முறையில் மாற்றங்கள். இரண்டாவதாக, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் குறித்துரைக்கப்பட்டிருக்கும் மாகாண சபைகளின் அதிகாரங்களில் குறைப்பு. 13 மைனஸ் (13-) பாணியிலான ஒரு மாற்றம் செய்யப்படக்கடிய வாய்ப்பு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக நோக்குகையில், மூன்றாவது குடியரசு அரசியலமைப்பு மூலமுதல் 1978 அரசியலமைப்பு மற்றும் அதற்கான 18ஆவது, 20ஆவது திருத்தங்களில் இருந்து அடிப்படையில் வேறுபட்டதாக இருக்கப்போவது சாத்தியமில்லை. ஆனால், பரந்தளவு விளைவுகளைக் கொண்டுவரக்கூடிய சூட்சுமமான புதிய அம்சங்கள் சேர்க்கப்படலாம். மூன்றாவது குடியரசு அரசியலமைப்பின் திசைமார்க்கத்தை பற்றிய தடயங்களை நான்கு மூலங்களில் இருந்து விளங்கிக்கொள்ளமுடியும். அவையாவன:

(1) 19ஆவது திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் முன்வைக்கப்பட்ட வாதங்கள்

(2) 2018 அக்டோபரில் பிரதமரும் அமைச்சரவையும் பதவிநீக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் விசாரணைகளின்போது ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி முன்வைக்கப்பட்ட சட்டவாதங்கள்

(3) இவ்வருடம் ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் விசாரணைகளின்போது முன்வைக்கப்பட்ட சடடவாதங்கள்

(4) ஜனாதிபதி கோட்டபாய  ராஜபக்‌ஷவின் குழுவின் சமூக மற்றும் கோட்பாட்டு மையத்தின் ஆக்கக்கூறுகளாக அமைந்திருக்கும் வர்க்க சக்திகளின் ஒட்டுமொத்த அரசியல் செயற்திட்டம்.

புதியதொரு அரசு நோக்கு 

கடந்த ஓரிரு வருடங்களாக அல்லது அதற்கும் கூடுதலான காலமாக இலங்கையில் புதியபாணி அரசொன்றை மனக்கண்ணால் காணும் புதியதொரு சட்ட – அரசியல் சிந்தனை வடிவம் ஆரவாரமின்றி தோற்றமெடுக்க ஆரம்பித்திருந்தது. இந்த அம்சத்தை அடிக்கடி அபாயச்சங்கொலி எழுப்பும் அரசியல் அவதானிகள் கூட தவறவிட்டுவிட்டனர். புதியபாணி அரசுக்கான அரசியலமைப்பு (1) 19ஆவது திருத்தத்தின் கலப்புத்தன்மையிலிருந்து (Hybridity) தீர்க்கமானமுறையில் விலகியதாகவும் (2) வெஸ்ட்மின்ஸ்டர் அமைச்சரவை – நாடாளுமன்ற அரசாங்கத்தின் சுவடுகளை கைவிட்டதாகவும் (3) நேரடியாக மக்களிடமிருந்து ஆணையைப்பெறுகின்ற ஜனாதிபதி தலைமையிலான நிறைவேற்று அதிகாரபீடத்தில் கேள்விக்கிடமின்றிய அரச அதிகாரமையத்தை கொண்டதாகவும் இருக்கும். இந்த அதிகாரமையமே மக்களின் இறையாண்மையின் மத்திய களஞ்சியமாக விளங்கும்.

புதிதாக வெளிக்கிளம்புகின்ற புதிய அரசியல் – அரசியலமைப்பு சிந்தனையை அரசியல் அதிகாரத்தை நாடுகின்ற அரசியல் வர்க்கத்தின் இரு பிரிவினரும் செல்வாக்குமிக்க சட்டவாதிகள் மற்றும் சட்டத்துறை கல்விமான்கள் சமூகமும் சிங்கள தேசியவாத தலைவர்களும் புதிதாக தோன்றிய தனவந்த தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களும் ஆதரிக்கின்றார்கள் போன்று தோன்றுகிறது.

இலங்கைச் சமூகத்தின் இந்தப் பிரிவினர் மத்தியில் 2015 – 2019 காலகட்டத்தில் ஒரு கூட்டு எதிரணியாக வளர்ச்சியடைந்த ‘அரசைக் பை்பற்றும் ‘ செயற்திட்டத்துக்கு அரசுக்கான புதிய நோக்கொன்று தேவைப்பட்டது. அந்த நோக்கு யஹபாலனயவின் ‘ தாராளபோக்கு (Liberal democratic political ideology ) ஜனநாயக அரசியல் கோட்பாட்டுக்கும் 19ஆவது திருத்தத்தின் அடிப்படைக் கட்டமைப்பை வடிவமைத்த தாராளபோக்கு அரசியலமைப்புவாத எண்ணங்களுக்கும்( Liberal constitutionalist assumptions) நேர் எதிரானதாக கோட்பாட்டுருவாக்கம் செய்யப்பட்டது.

யஹபாலனய நிர்வாகத்தின் ஆட்சிமுறைத் தோல்விகள், யஹபாலனய கூட்டரசாங்கத்திற்குள்  அதிகாரச்சண்டைகள் மற்றும் 2018 – 2019 அரசாங்கத்திற்குள் இரு போட்டி அதிகார மையங்களின் தோற்றம் ஆகியவை எல்லாம் 19ஆவது திருத்தத்தின் கீழ் நிறுவப்பட்ட பிரத்தியேகமான கலப்புத்தன்மையான ஆட்சிமுறைக் கட்டமைப்பின் நேரடியான விளைவுகள் என்றும் வியாக்கியானப்படுத்தப்பட்டிருந்தது. 2018 – 2019 காலகட்டத்தின்போது அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தவர்களினால் ஆட்சிமுறையின் நெருக்கடியை முன்னிலைப்படுத்திக் காட்டுவதற்கு முன்வைக்கப்பட்ட வியாக்கியானங்களில் ஒன்று நடைமுறையில் உள்ள ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு வெஸ்ட்மின்ஸ்டர் பாணி அமைச்சரவை – நாடாளுமன்ற அரசாங்க முறையை இணைத்தது 19ஆவது திருத்தத்தின் அடிப்படைத் தவறு என்பதாகும்.

இத்தகையதொரு பின்புலத்திலேயே, 2018 – 2019 காலகட்டத்தில் அரசு மற்றும் அரசியலமைப்பு பற்றிய எதிரணியின் நோக்கு தெளிவான ஒரு கோட்பாட்டு வடிவத்தைப் பெற்றது. 20ஆவது திருத்தம் இந்த அரசியல் நகர்வின் ஒரு இடைக்கால உற்பத்தியாகும். உத்தேச அரசியலமைப்பு 2015 – 2019 யஹபாலனய கூட்டரசாங்கத்தின் தோல்வியில் முடிந்த அரை மனதுடனான தாரள ஜனநாயக பரிசோதனைக்கு எதிரான அலையின் தர்க்கரீதியான ஒரு விளைவாகும்.

புதிய நோக்கும் திசைமார்க்கங்களும்

இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் அரசியலமைப்பு மாற்றத்தின் திசைமார்க்கங்கள் தொடர்பில் ஒரு தேர்வுமுறையான அல்லது பரீட்சாத்தமான அவதானிப்புகள் சிலவற்றை முன்வைக்கமுடியும்:

  • நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் எதேச்சாதிகாரத்தை கூடுதலான அளவுக்கு அரசியலமைப்பு ரீதியாக ஆழமாக்குவதற்கான உந்துதல் அடிப்படையில் 1978 அரசியலமைப்பில் அதன் கோட்பாட்டு மூல ஆதாரத்தைக் கொண்டதாகும். பின்னர் அது 18ஆவது, 20ஆவது திருத்தங்களில்மேலும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
  • வெஸ்ட்மினிஸ்டர் பாணி அமைச்சரவை – நாடாளுமன்றஅரசாங்க முறையின் நிறுவன ரீதியான சுவடுகளை குறிப்பாக, நாடாளுமன்றத்தின் வகிபாகம் மற்றும் பணிப்பொறுப்புடன் தொடர்புடையவற்றை அழித்தல்; அரசாங்க நிதி மீதான நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை குறைத்தல்.
  • வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எஞ்சியிருக்கக்கூடிய இன்னொரு சுவடான – நிறைவேற்று அதிகார பீடம் மீதான நிறுவன ரீதியான தடுப்புக்களை – இல்லாதொழித்தல்

இத்தகைய சூழ்நிலையில், 19ஆவது திருத்த நெருக்கடிக்கு நேரடி எதிர்வினையாக வெளிக்கிளம்புகின்ற இலங்கையின் மூன்றாவது குடியரசு அரசியலமைப்பு ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பெறுவது சாத்தியம். அதாவது, 1978 இரண்டாவது குடியரசின் கீழ் நிறுவப்பட்ட அரை ஜனாதிபதி ஆட்சிமுறைப் பாணியில் இருந்து இது வேறுபட்டதாகும்.

புதிய அரசியலமைப்பை வரைபவர்கள் பின்வரும் இரு புதிய அம்சங்களை பரிசீலிக்கவும் கூடும்:

(1) அமெரிக்காவில் உள்ளதைப் போன்று நாடாளுமன்றத்தின் சட்டவாக்க சுயாதிபத்தியத்தை நிறைவேற்ற அதிகாரத்தின் சில வகையான மட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதல்.

(2) பிரான்ஸில் உள்ளதைப் போன்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களை அமைச்சரவைக்கு ஜனாதிபதி நியமிப்பதற்கு வகைசெய்தல்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் கொரோனா நெருக்கடி முகாமைத்துவத் தந்திரோபாயத்தில் இந்த சாத்தியப்பாடுகளுக்கான தடங்கள் வெளிப்பட்டன. மக்களிடமிருந்து ஜனாதிபதி பெற்ற ஆணை நாடாளுமன்றத்தின் ஆணைக்கு மேலானதாக முதன்மை பெறவேண்டும் என்ற  சூட்சுமமான வாதமும் இவ்வருடம் மார்ச் மாதத்துக்குப் பிறகு வளர்த்தெடுக்கப்பட்டது. விசித்திரமானதாக தோன்றினாலும் கூட இந்த வாதத்தில் நாடாளுமன்றத்துக்குரிய மக்கள் ஆணை 250 நபர்களுக்கிடையில் பிளவுபடுகின்ற அதேவேளை, ஜனாதிபதிக்குரிய மக்கள் ஆணை தனிநபர் ஒருவருக்குரியதாகவே அமைகிறது என்பது சுட்டிக்காட்டப்டுகிறது.

அரசியலமைப்பு கலப்பினத்தன்மை

20ஆவது திருத்தம் மீதான நாடாளுமன்ற விவாதத்தின்போது 19ஆவது திருத்தத்தின் மீது அரசாங்கத் தரப்பினரால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஜனாதிபதி சிறிசேனவினாலும் ஏனைய பலராலும் சொல்லாலும் செயலாலும் அவ்வப்போது வெளிக்காட்டப்பட்ட ஒரு கருத்தை மீளவலியுறுத்துவதாகவே இருந்தது. தடுப்புக்களையும் சமப்படுத்தல்களையும் (Checks and balances) பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறைகளையும் உள்ளிணைவான ஆக்கக்கூறுகளாகக் கொண்ட ஜனநாயக ஆட்சிமுறை என்பது அரச கட்டமைப்புக்குள் வெவ்வேறு அதிகார மையங்களுக்கிடையிலான பேரம்பேசல் மற்றும் உடன்பாடு காண்பதற்கான கலந்துரையாடல்களுக்கு ஊடான விட்டுக்கொடுப்பு ஒன்றுக்கான பொறிமுறை ஒன்றை வேண்டிநிற்கிற மெதுமெதுவான ஆட்சிச்செயன்முறை என்பதை இலங்கையின் இன்றைய பல அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதே அதுவாகும். ஆளும் கூட்டணியின் அரசியல்வாதிகள் அவர்களுக்கு மக்களிடமிருந்து கிடைத்திருப்பதாக கூறப்படுகின்ற ஆணைகளுக்கு மத்தியிலும் உடன்பாடு காண்பதற்கான கலந்துரையாடல்கள், பேரம்பேசுதல் மற்றும் விட்டுக்கொடுப்பு ஆகியவற்றினூடாகவும் அரசியலமைப்பு ரீதியாக குறித்துரைக்கப்பட்டிருக்கும் தடுப்புகள் மற்றும் சமப்படுத்தல்கள் ஊடாகவும் நிறுவன ரீதியானதும் நபர்களுக்கிடையிலானதுமான நெறிமுறையுடன் பணியாற்றுவதற்கு பற்றுறுதியைக் கொண்டிருந்தால் மாத்திரமே 19ஆவது திருத்தத்தின் வழமைக்கு மாறான கலப்பினத்தன்மையும் ஆட்சிமுறை வகைமாதிரியும் உச்சபட்ச பயனைத் தர முடியும்.

உண்மையில், ஜனாதிபதி ஆட்சிமுறையினதும் அமைச்சரவை – நாடாளுமன்ற அரசாங்க முறையினதும் அம்சங்களைக் கூட்டிணைத்த 19ஆவது திருத்தத்தின் கலப்பினத்தன்மையான வகைமாதிரி வழக்கத்துக்கு மாறான நெறிதிறம்பல்களையும் பொருள் தெளிவின்மைகளையும் கொண்டிருந்தது. அதற்கான காரணம், 19ஆவது திருத்தம் கூட்டரசாங்கத்தற்குள் இருந்த வெவ்வேறுபட்ட பிரிவினரின் நிகழ்ச்சி நிரலை கையாளுவதற்கான தொடர்ச்சியான பல அரசில் விட்டுக்கொடுப்புகளின் ஒரு உற்பத்தியாகும். எனவே, பெரும்பாலான கலப்பினத்தன்மையான அரசியலமைப்பு வகைமாதிரிகளில் உள்ளதைப் போன்று 19ஆவது திருத்தம் முறையாக செயற்படுவதற்கு அரசாங்கத்தில் உள்ள பல்வேறு வகைப்பட்ட அதிகார மையங்கள் மத்தியில் விட்டுக்கொடுப்பு நெறிமுறையின் அடிப்படையிலான உயர்ந்தளவு ஜனநாயகப் போக்கு தேவைப்படுகிறது.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தானே உருவாக்கிய மூலமுதல் 1978 அரசியலமைப்பின்  கலப்பினத்தன்மையான முறையின் இந்த நெறிதிறம்பல்களை ஒத்துக்கொண்டார் (1972 முதலாவது குடியரசு அரசியலமைப்பும் கூட வெஸ்ட்மின்ஸ்டர், குடியரசு மற்றும் சோசலிச அரசியலமைப்புகளின் அம்சங்கள் கூட்டிணைந்த கலப்பினத்தன்மையான ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது). ஜெயவர்தன தான் எதிர்நோக்கிய நெறிதிறம்பல்களை கையாளுவதற்கு தீர்மானங்களை மேற்கொள்ளும் செயன்முறைகள் முழுவதையும் தன்கையில் எடுத்துக்கொண்டு எதேச்சாதிகார மையப்படுத்தல் போக்கை கடைப்பிடித்தார். அவர் தனது மிகவும் பலம்பொருந்திய பிரதமர் மற்றும் அதேயளவுக்கு தன்முனைப்புடன் செயற்படக்கூடியவர்களாக இருந்த அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட ஆளும் கட்சி எம்.பி.க்கள் சகலரிடமிருந்தும் திகதி குறிப்பிடப்படாத பதவிவிலகல் கடிதங்களை கேட்டுப்பெற்று தன்வசம் வைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிர்வாகத்தின் தலைவர்கள் அரசியலமைப்பின் கலப்பினத்தன்மையினால் விளைவிக்கப்பட்ட ஆட்சிமுறைப் பிறழ்வுகளுக்கு முற்றிலும் எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பது 20ஆவது திருத்தம் மீதான நாடாளுமன்ற விவாதத்தின்போது தெளிவாகத் தெரியவந்த ஒரு உண்மையாகும். தற்போதைய வரலாற்று தருணத்தில் இலங்கைக்கு தேவைப்படுகின்ற பயனுறுதியுடைய – செயலூக்கமிக்க – விளைவுகளில் நாட்டம் கொண்ட – நேரடியானதும் வழமையான சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டதுமான ஆட்சிமுறையை பேரம்பேசுதல், கலந்துரையாடல் மற்றும் விட்டுக்கொடுப்பு ஆகியவை மந்தப்படுத்திவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போன்று தோன்றுகிறது. இவையே மிகவும் முக்கியமான இரு வருடங்களின்போதும் (2018 – 2019) இலங்கைச் சமுதாயத்தில் மெதுமெதுவாக வளர்ச்சியடைந்த அரசியலமைப்புக் கோட்பாட்டின் தடயங்களாகும்.

மிகவும் தணிவான ஒரு முறையில் இன்னமும் வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் கோட்பாட்டுடனான புதியதொரு அரசியலமைப்பின் ஊடான மிகவும் கருத்தூன்றிய அரச சீர்திருத்தத்திட்டத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. ஆனால், அதன் அரசியல் இலக்குகள் மிகவும் தெளிவானவை.

பலம்பொருந்திய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக் குடியரசு ஒன்றை அமைப்பதே அந்த இலக்காகும். அதை அடைவதற்கு அரசாங்கம் (1) 20ஆவது திருத்தத்தை மையக்கூறாக சேர்த்துக்கொள்கின்ற (2) அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்துடன் ஒப்பிடும்போது மக்களின் இறைமையின் முதன்மையான கருவூலம் என்ற வகையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பில் இருக்கக்கூடிய எந்தவொரு பொருள்விளங்காத் தன்மையையும் நீக்குகின்ற (3) 1978 அரசியலமைப்பில் இருந்ததையும் விட இலங்கையை கூடுதலான அளவுக்கு ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்ட மூன்றாவது குடியரசாக்கும் ஒரு புதிய அரசியலமைப்பை  உருவாக்குவது சாத்தியம்.

ஜனநாயகவாதிகளுக்கு இருக்கும் தெரிவுகள்

20ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பின்போது வெளிக்காட்டப்பட்டதைப் போன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைக்கொண்ட இந்த அரசாங்கம் பரபரப்பில்லாத இன்னொரு விவாதத்துக்குப் பிறகு புதிய அரசியலமைப்பையும் நிறைவேற்றிவிடும். அரசாங்கம் இவ்வாறாக எல்லாவற்றையும் உடைத்துத்தகர்த்துக்கொண்டு அரசியலமைப்பை நிறைவேற்றுவதை தடுத்துநிறுத்துவதற்கு எதிர்க்கட்சியினால் என்ன செய்யமுடியும்? இருந்தாலும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு நீடிக்கக்கூடிய பொதுமக்கள் கலந்தாலோசனைச் செயன்முறையை சகல எதிரணிக் குழுக்களும் ஜனநாயக சக்திகளும் நீண்டகால நோக்கை மனதிற்கொண்டு பன்படுத்தவேண்டியது அவசியமாகும்.

அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குகின்ற காலகட்டம் தேர்தல் காலத்தைப் போன்றதாகும். அது பொதுமக்கள் மத்தியில் அடிப்படை அரசியல் பிரச்சினைகள் பற்றிய பிரக்ஞையை பெருமளவுக்கு தோற்றுவிக்கும் என்பதுடன் குடிமக்களை அரசியல் கலந்துரையாடல்களில் பெருமளவுக்கு பங்கேற்கவும் வைக்கும். ஜனநாயகம் பின்னடைவைக் காண்கின்ற ஒரு நேரத்தில் பொதுமக்களின் பெறுமதியான சுதந்திரம் மற்றும் ஜனநாயகப் பாரம்பரியத்தின் கதி போன்ற மெய்யான அரசியல் பிரச்சினைகளில் குடிமக்களின் அக்கறையையும் புதுப்பிப்பதற்கு இது ஒரு வாய்ப்பான தருணமுமாகும். இது புதிய அரசியலமைப்பு மற்றும் அதன் வரைவு தொடர்பில் பொதுவிவாதத்துக்கான பிரமாணங்களை தீர்மானிப்பதற்கு எதிர்க்கட்சிகள் தவறவிடக்கூடாத ஒரு வாய்ப்பையும் திறந்துவிடுகிறது.

ஆனால், எதிர்க்கட்சிகள் வெறுமனே அரசாங்கத்தின் அரசியலமைப்பு யோசனைகளுக்கு எதிர்வினையை வெளிப்படுத்துவதற்கு பதிலாக, நாட்டு மக்களுடன் சேர்ந்து அரசியல் கலந்துரையாடலின் பிரமாணங்களின் திசைமார்க்கத்தை தீர்மானிக்கக்கூடிய சில அடிப்படைக் கேள்விகளையும் கேட்கவேண்டும். கடந்தகால படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு கூடுதலான அளவுக்கு ஜனநாயக ரீதியான மூன்றாவது குடியரசு ஒன்றை உருவாக்குவதற்கு மக்களுடன் சேர்ந்து சிந்திப்பது எதிர்க்கட்சிகளையும் சிவில் சமூக இயக்கங்களையும் பொறுத்தவரை சிறந்த ஒரு அரசியல் தெரிவாக அமையும்.

பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட

A Constitution for a Third Republic? Time to Imagine a Better Republic for Sri Lanka என்ற தலைப்பில் 31.10.2020 அன்று கிறவுண்ட்விவ்ஸ் தளத்தில் ​வெளிவந்த கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு.