பட மூலம், RTE

2015ஆம் ஆண்டில் இலங்கையின் அரசியலமைப்புக்கு செய்யப்பட்ட மேம்பாடுகளை ஒழிப்பதற்கான திட்டத்திலிருந்து அரசாங்கம் பின்வாங்குவதாக தோன்றினாலும்கூட அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தத்தினால் மேலும் மோசமாக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்தனவின் மூலமுதல் திட்டத்தின் முக்கியமான சில எதேச்சாதிகார அம்சங்கள் புதிய 20ஆவது திருத்த வரைவில் தொடர்ந்திருக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது அல்லது உத்தேச புதிய அரசியலமைப்பில் அவை உள்ளடக்கப்படலாம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூலமுதல் 20ஆவது திருத்தத்தில் பிரேரிக்கப்பட்டிருக்கும் வெளிப்படையான சில கெடுதியான ஏற்பாடுகள் ஏனைய அம்சங்களை பல விமர்சகர்கள் கவனிக்காமல் விடுவதற்கு வழிசெய்துவிட்டன. ஜனாதிபதி பதவியில் அதிகாரங்களை குவிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் பின்னணியில் நோக்குகையில், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 20ஆவது திருத்தம் பொறுப்புக்கூறல் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. பதில்கூறும் பொறுப்புடைமை என்பது ஜனநாயக அரசியலமைப்பு ஒன்றின் அதிமுக்கியமான அம்சமாகும்.

பொறுப்புகூறலும் கலைப்பதற்கான அதிகாரமும்

நிறைவேற்று அதிகார பீடத்தை அல்லது சட்டவாக்க சபையை (நாடாளுமன்றம்) கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் அரசில் கட்சிகள் சகல ஜனநாயக முறைகளிலுமே கிரமமாக நடைபெறுகின்ற தேர்தல்களின் மூலமாக பொறுப்புக்கூற வைக்கப்படுகின்றன. அவை, பொதுமக்களினால் எப்போது பொறுப்புக்கூற வைக்கப்படுகின்றன என்ற கேள்வி முக்கியமானது.

‘முதல் 100 நாட்களில்’ தேர்தலில் வெற்றிப்பெற்ற கட்சி அடுத்து நடத்தப்படுகின்ற எந்தவொரு தேர்தலிலும் பெருவெற்றியை பெறக்கூடிய சாத்தியமாகும். அதற்கு பிறகு அதிகாரத்திலுள்ள கட்சியின் மக்கள் செல்வாக்கு ஏற்றங்களையும் இறக்கங்களையும் காணுவது வெளிச் சூழ்நிலைகள் மீது (உதாரணமாக தொற்றுநோய் அல்லது வரட்சி) மீதே தங்கியிருக்கின்றது. அந்தக் கட்சி சட்டங்களை இயற்றுவதிலும் நிறைவேற்று அதிகார நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதிலும் கொள்கை முன்முயற்சிகளில் பெறக்கூடிய வெற்றிகளிலும் தோல்விகளிலும் கூட அந்த மக்கள் செல்வாக்கு தங்கியிருக்கிறது. உறுதியான முறையில் அதிகாரங்கள் வேறாக்கலை (Strong Separation Of Powers) கொண்ட அமெரிக்க முறையில் தேர்தல் திகதிகள் சட்டத்தினால் நிர்ணயிக்கப்படுகின்றன. அத்தகைய நாடுகளில் அரசியல் வட்டத்தை எவரும் ஊகித்து அறிந்துகொள்ள முடியும். மக்களின் அங்கீகாரத்தை பெறக்கூடிய செயற்திட்டங்கள் தேர்தல் திகதிக்கு முன்னதாகவே பூர்த்தி செய்யப்படுகின்றன. கூடுதலானளவுக்கு பிரச்சினைக்குரிய நிகழ்வுகள் தேர்தல்கள் நெருங்குகின்ற  நிலையில் மறக்கப்படக்கூடிய அளவுக்கு முன்கூட்டியே நடந்துவிடுகின்றன. உண்மையில் எல்லா காரணிகளையும் அரசியல்வாதிகள் கட்டுப்படுத்த முடியாது. தேர்தல் வருடமொன்றில் தொற்றுநோயின் பரவல் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான டொனால்ட் ட்ரம்பின் திட்டங்களை சீர்குலைத்து விட்டது.

தேர்தல் திகதியை ஆளுங்கட்சியே தீர்மானிக்க அனுமதிக்கப்படுகின்ற முறைகளில் எதிர்க்கட்சி அனுகூலமற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றது. நாடாளுமன்றத்தை கலைத்து தனது விருப்புக்குரிய நேரத்தில் தேர்தலுக்கான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பிரதமருக்குள்ள ஆற்றல் ஆளுங்கட்சியையும் கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது. இந்த அதிகாரத்தை மட்டுப்படுத்துவதற்கான நோக்கத்துடனேயே ஐக்கிய இராச்சியத்தில் லிபரல் ஜனநாயகவாதிகள் 2011ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட பதவிகால நாடாளுமன்ற சட்டத்தை (Fixed Term Parliaments Act) கொண்டுவந்து நிறைவேற்றினார்கள். இந்த சட்டத்தின் கீழ் நம்பிக்கையில்லாத் தீர்மான பிரேரணை சாதாரண பெரும்பான்மையினால் அங்கீகரிக்கப்படும்போது அல்லது நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் அங்கீகரிக்கப்பட்டால் மாத்திரமே நாடாளுமன்றத்தை முன்கூட்டி கலைக்க முடியும். சகல எம்.பி.க்களுக்கும் மக்கள் வழங்கிய ஆணையை ஒரு நபர் தனது அரசியல் நோக்கங்களுக்காக முடிவுக்குக் கொண்டுவரும் நடைமுறையை நாடாளுமன்றங்களின் தாய் (Mother Of Parliaments) கைவிட்டு 9 வருடங்கள் கடந்த  பிறகு அந்த நடைமுறையை மீள கொண்டு வருவதற்கு இலங்கை விரும்புகிறது. ஐக்கிய இராச்சியத்தில் பிரதமரும் தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்பதே ஒரு வித்தியாசமாகும். இலங்கையில் ஒரு வருடத்துக்குப் பிறகு தனது பதவிக்காலத்துக்கு எந்தவிதமான குழப்பமும் இல்லாத வகையில் எந்த நேரத்திலும் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்.

இந்த மாற்றம் நிறைவேற்றப்படுமானால், ஜனாதிபதியின் ஆதிக்கத்தின் கீழ் எம்.பி.க்கள் வந்துவிடுவார்கள். பெரும் செலவு பிடிக்கின்ற இன்னொரு தேர்தல் பிரசாரத்தை உரிய காலத்துக்கு முன்கூட்டியே எதிர்கொள்வதற்கு எம்.பி.க்கள் அஞ்சுவார்கள். முதல் தடவையாக எம்.பி.க்களாக இருப்பவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் போகும் என்று அஞ்சுவார்கள். அத்தகைய ஒரு நாடாளுமன்றம் ஜனாதிபதி மீதான பயனுறுதியுடைய ஒரு தடுப்பாகவும் சமப்படுத்தலாகவும் (Check and Balance) செயற்படாது.

அமைச்சராக ஜனாதிபதி

அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம் அமைச்சரவையில் ஓர் அங்கமாக இருப்பதற்கும் கூட்டங்களுக்கு தலைமைத் தாங்குவதற்கும் ஜனாதிபதியை அனுமதித்தது. ஆனால், எந்தவொரு அமைச்சுப் பொறுப்பையும் அவர் வைத்திருக்க அனுமதிக்கவில்லை. இந்த ஏற்பாட்டை இல்லாமல் செய்து மட்டுப்பாடற்ற எண்ணிக்கையில் அமைச்சு பொறுப்புகளை வைத்திருப்பதற்கும் அந்த அமைச்சுப் பொறுப்புகளை தீர்மானிப்பதற்கும் அனுமதிக்கும் ஏற்பாட்டை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாடாளுமன்றத்துக்கு வெளியிலிருக்கும் ஜனாதிபதி ஒருவரினால் பதில் கூறும் பொறுப்புடைமைக்கு ஏற்படுகின்ற சேதம் இன்று விரும்பப்படுவதில்லை.

வெஸ்மினிஸ்டர் முறையிலே அமைச்சரவையின் ஒவ்வொரு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை பல்வேறு வழிகளில் சபையில் பொறுப்புக்கூற வைக்க முடியும் (எழுத்து மூல அல்லது வாய்மூல கேள்விகள் மற்றும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் உட்பட). ஜனாதிபதி ஒரு அமைச்சுப் பொறுப்பை வைத்திருக்கும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் பொறுப்புக்கூற வைப்பதற்கு எந்த வழியுமே இல்லை.

அமெரிக்க நடைமுறையிலுள்ள ஒழுங்கு முறையில் சகல அமைச்சரவை உறுப்பினர்களுமே சட்டவாக்க சபைக்கு (காங்கிரஸ்) வெளியிலுள்ளவர்களாக இருக்கிறார்கள். நிறைவேற்று அதிகாரத்துக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான அதிகார வேறாக்கல் தெளிவானது. இங்கு அமைச்சரவை உறுப்பினர்கள் சகலருமே (15 அமைச்சர்களுடனும் அமைச்சரவை அந்தஸ்துடன் பல நிறுவனங்களுக்கு தலைவர்களாக இருப்பவர்களும்) குழு முறையினூடாக (Committee System) பொறுப்புக்கூற வைக்கப்படுகிறார்கள். வெஸ்மினிஸ்டர் முறையில் இருக்கக்கூடிய ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக (அமெரிக்காவில் உள்ளதை போன்ற) பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவதே முன்னைய சபாநாயகரின் கீழான மேற்பார்வை குழுக்களின் (Oversight Committees) நோக்கமாக இருந்தது. தற்போதைய சபாநாயகர் இந்த மேற்பார்வை குழுக்களை தொடர்வதற்கு விரும்பவில்லையென்று தெரிகிறது. அவர் அமைச்சரினால் தலைமை தாங்கப்படுகின்ற அமைச்சின் ஆலோசனை குழுக்களையே (Ministry Consultative Committees) விரும்புகிறார் போலும். ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை தன்வசம் வைத்திருக்காத பட்சத்தில் முப்படைகளின் தளபதி என்ற வகையில் அவர் செய்ய முடியாமல் இருக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். இது புதிரான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளை கொண்ட அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற அடிக்கடி போர்களில் ஈடுபடுகின்ற தேசங்களில் ஜனாதிபதி பதவியையும் பாதுகாப்பு அமைச்சர் பதவியையும் வெவ்வேறு நபர்களே வகிக்கிறார்கள்.

அந்த நாடுகளில் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் கூட அமைச்சராக யாரை நியமிப்பது என்பதை தீர்மானிப்பதில் ஜனாதிபதிக்கு பங்கு இருக்கிறது. சாத்தியமானால் பாதுகாப்பு அமைச்சராக எந்த எம்.பியை நியமிப்பது என்பதை தீர்மானிப்பதில் சிலவகையான விசேட வாய்ப்பை ஜனாதிபதிக்கு வழங்க முடியும். ஜனாதிபதியை பாதுகாப்பு அமைச்சராக்குவது இதற்கொரு தீர்வல்ல. இது முக்கியமான அமைச்சு பொறுப்பு ஒன்றுக்கான பதில் கூறும் பொறுப்புடைமை ஏற்பாட்டை தகர்க்கிறது. அங்கொன்று இங்கொன்றாக தொடர்பற்ற வகையிலான அரசாங்க நிறுவனங்களை தன் பொறுப்பில் ஜனாதிபதி வைத்திருக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை பொறுப்புக்கூறலை அதுவும் குறிப்பாக ஜனாதிபதியின் கீழ் கணக்காய்வுக்கு உட்படுகின்ற நிறுவனங்களின் எண்ணிக்கை குறைப்பது பொறுப்புக்கூறலை சீர்குலைக்க வாய்ப்பாகும். ஜனாதிபதி செயலகத்தையும் அதன்கீழ் வருகின்ற அமைப்புகளையும் கணக்காய்விலிருந்து விலக்குவதற்கான முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்படுமானால் பொறுப்புக்கூறல் என்பது இல்லாததாகவே போய்விடும்.

விலக்கீட்டு உரிமையும் பொறுப்புக்கூறலும்

19ஆவது திருத்தத்தின் கீழ்கூட பதவியிலிருக்கும்போது ஜனாதிபதியை அவரது உத்தியோகபூர்வமானதும் தனிப்பட்டதுமான நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் பொறுப்புக்கூற வைக்க முடியாது.  பிரஜை ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற ஜனாதிபதியின் நடவடிக்கைகள் மாத்திரமே விதிவிலக்கான சந்தர்ப்பங்களாக அமைகின்றன. இங்குகூட ஜனாதிபதியை நீதிமன்றத்துக்கு இழுக்க முடியாது. சட்டமா அதிபரே நீதிமன்றில் ஆஜராவார்.

ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுவாரேயானால், அதற்கு பரிகாரம் காண்பதற்கு இரண்டு வழிமுறைகள் மாத்திரமே உள்ளன. அவர் மீது அரசியல் குற்றப் பிரேரணை கொண்டுவந்து பதவி நீக்குவதே (Impeachment) முதலாவதும் வெளிப்படையானதுமான வழிமுறையாகும். ஆனால், இது மிகவும் சிரமம் மிக்க ஏற்பாடாகும். இதற்கு 150எம்.பி.க்களின் அங்கீகாரமும் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையொன்றும் தேவைப்படுகிறது. மற்றைய பரிகாரம் ஜனாதிபதியின் நடவடிக்கையினால் தங்களது அடிப்படை உரிமை மீறப்பட்டு பாதிக்கப்படுகின்ற பிரஜை ஒருவர் அரசியலமைப்பின் 126ஆவது சரத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறியபோது பயன்படுத்தப்பட்ட பரிகாரம் இதுவாகும்.

இந்த ஏற்பாட்டை நீக்கிவிடுவதற்கு இன்றைய ஆட்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள். அவர்களது முயற்சிகள் வெற்றிபெறுமானால், பிரஜைகளாகிய  எமக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு இருக்காது. அதனால், ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் தயாரில்லாதவரை அவர் விலக்கீட்டு உரிமையுடன்தான் (Impunity) விரும்பியதையும் செய்ய முடியும்.

ஜனாதிபதியின் ஆதிக்கத்தின் கீழான நாடாளுமன்றம் மட்டுப்பாடற்ற எண்ணிக்கையில் அமைச்சுகளையும் அரச நிறுவனங்களையும் கணக்காய்வுக்கு உட்படாத வகையில் பொறுப்பில் கொண்டுள்ள – பதில்கூறும் கடப்பாடு இல்லாத அமைச்சராக ஜனாதிபதி. அடிப்படை உரிமை மீறலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய தேவையும் அவருக்கு இல்லை. இதுதான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் சாராம்சமா? 150 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் இதனை ஆதரிக்கப் போகிறார்கள்?

பேராசிரியர் ரொஹான் சமரஜீவ

“Presidential accountability is what the 20th Amendment is about” என்ற தலைப்பில் ‘டெய்லி எவ்டி’ இல் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.