பட மூலம், The Statesman

வேகமாகப் பரவிவரும் கொவிட்-19 கொள்ளை நோயினைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் முழு உலகமுமே முழுவீச்சில் போராடிவரும் சவால்மிகுந்த ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இக்கொள்ளை நோய்க்கு ஏழு உயிர்களைப் பறிகொடுத்த நிலையில் இலங்கையும் இப்போராட்டத்தில் இணைந்துள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம், ஒரு மாதத்திற்கும் மேல் தொடரும் ஊரடங்கு, வீடுகளுக்குள் சுய தனிமைப்படுத்தல், தடுத்துவைப்புக்கள், சுற்றிவளைப்புக்கள், நோய் தொற்றிய தடமறியும் நடவடிக்கைகள் என இக்கொடிய வைரஸிற்கு எதிரான, முன்னர் அறிந்திராத பல நடவடிக்கைகள் நிகழ்ந்தேறிக்கொண்டிருக்கின்றன. இனியும் என்ன நடக்குமோ என மக்கள் அறியாது கலங்கி நிற்கும் பதற்றம் மிக்க இச்சூழலில் சிறுபான்மைச் சமுதாயத்தினை வேறாக்கிப் பாகுபாட்டுக்கு உட்படுத்தாது இருப்பது மிக முக்கியமானதாகும். வைரஸைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பேரில் தன்னிச்சையாகவும் பாகுபாடுமிகு முறையிலும் நடவடிக்கைகளில் இறங்குவது இனநல்லுறவினைத் துண்டாடுவதோடு மாத்திரம் நிற்காது நோயுற்றிருப்பவர்கள் தம்மை அடையாளப்படுத்தாமல் வெருண்டோடும் நிலையினையும் உருவாக்கலாம். இதனால், கட்டுப்படுத்த நினைத்த வைரஸ் எங்கும் வியாபிக்கும் மோசமான நிலை உருவாகலாம். ஏனெனில், வைரஸிற்கு இனத்துவ எல்லைகள் கிடையாது.

ஏனைய பல அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் வைரஸ் பரவலை இலங்கை கட்டுக்குள் வைத்திருக்கின்றது என்றே கூறவேண்டும். தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் இதற்கு முன்னமே ஆரம்பித்திருக்கலாம் என்றபோதிலும் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த இற்றைவரை முன்னரங்கில் கடும்பணியாற்றிவருகின்ற அனைவரினதும் அர்ப்பணிப்புக்கள் பாராட்டப்பட வேண்டியவையாகும். எவ்வாறாயினும், கொவிட்-19 தொடர்பில் அரசாங்கம் எடுத்துவரும் அவசரகால நடவடிக்கைகள், குறிப்பாக நாடாளுமன்றம் செயற்படாத நிலையிலும், நீதிச்சேவை செயற்படாத நிலையிலும் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அரச இயந்திரத்திற்கு மேற்கொள்ளப்படவேண்டிய பரிசீலனைகளையும் கண்காணிப்புக்களையும் பலவீனப்படுத்தியுள்ளன. இராணுவத்தினைப் பயன்படுத்தி ஆட்சி செய்யத் தீர்மானித்துள்ள நிறைவேற்று அதிகாரமும் குடும்ப உறுப்பினர்களினால் திட்டமிடப்படாது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் குடிமைச் சுதந்திரத்தினையும் ஜனநாயக நிறுவனங்களையும் பாரிய அபாயநேர்வுக்குள் தள்ளியுள்ளன. கொவிட்-19 தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்காக என்ற பெயரில் எடுக்கப்பட்டு வரும் விதிவிலக்கான நடவடிக்கைகள், குறிப்பாக பாதுகாப்புப் படையின் கைகளிலும் புலனாய்வுத் துறையின் கைகளிலும் உள்ள பிரஜைகளின் தொடர்புகளின் தடத்தினை அறியும் தொழில்நுட்பங்கள் சமூகத்தில் பாரிய மட்டத்தில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதைச் சாதாரணமாக்கும் நிலைக்கு இட்டுச்சென்று கருத்து வேறுபாடுகள் செயற்திறன்மிகு முறையில் கண்காணிக்கப்படுவதற்கும் இட்டுச் செல்லலாம் என்ற அச்சத்தினை ஏற்படுத்துகின்றன.

எவ்வாறாயினும், வைரஸ் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் அணுகுமுறையால் மக்களின் வாழ்வும் சுதந்திரமும் ஏற்கனவே அபாயநேர்வுக்கு உள்ளாகியுள்ளன. கொவிட்-19 தொற்றினால் இறப்பவர்களின் உடல்களின் இறுதிச் சடங்கு தொடர்பான சுற்றுநிருபத்தினை சுகாதார அமைச்சு அண்மைய வாரங்களில் திருத்தியுள்ளது. முன்னைய சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக மார்ச் 27இல் வெளியிடப்பட்ட சுற்றுநிருபம்  24 மணித்தியாலங்களினுள் உடல் தகனம் செய்யப்படுவதை அல்லது புதைக்கப்படுவதை அனுமதித்திருந்தது. ஆனால், மார்ச் 31இல் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட கொவிட்-19 தொற்று ஏற்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மற்றும் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் பற்றிய தற்காலிக மருத்துவ நடைமுறை வழிகாட்டல்களினால் முன்னைய சுற்றுநிருபம் மாற்றப்பட்டுள்ளது. புதிய ஒழுங்குவிதிகளில் இறந்த உடல்களை அகற்றுவதற்கான ஒரே தெரிவு உடலங்களை எரியூட்டுவதே எனத் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாம் சமயத்தினைப் பொறுத்த அளவில் இறந்த உடல்களைத் தகனம் செய்வதற்கு சமயத்தில் அனுமதியில்லை. மாற்றம் செய்யப்பட்ட சுற்றுநிருபம் முஸ்லிம் சமுதாய மக்களின் மனங்களில் ஆறாத ரணத்தினை ஏற்படுத்திவிட்டது. இறந்த உடலை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவாறு அடக்கம் செய்வதற்கான உரிமையும் பறிக்கப்பட்ட ஒரு சமூகம் என்ற நிலைக்கு இன்று முஸ்லிம் சமூகம் திட்டமிடப்பட்டுத் தள்ளப்பட்டுள்ளது.

மார்ச் 30 வரையில் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் கொவிட்-19 தொற்றால் இறப்பவர்களை அடக்கம் செய்வது ஒரு தெரிவு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்ட முதலாவது முஸ்லிம் நபர் இறந்தவுடன் அவசர அவசரமாக பழைய சுற்றுநிருப வழிகாட்டல் ஓரிரவிலேயே மறைக்கப்பட்டு அந்த முஸ்லிமின் உடலம் இஸ்லாமிய சட்டத்தினை மீறி தகனம் செய்யப்பட்டது. தொற்றுக்குள்ளான முஸ்லிம் நோயாளி மார்ச் 30ஆம் திகதி பிற்பகல் 7 மணியளவில் நீர்கொழும்பு ஆதாரவைத்தியசாலையில் காலமானார். அந்த முஸ்லிமின் உடலம் குடும்ப உறுப்பினர்கள் யாரும் பார்க்க அனுமதிக்காமலேயே இரவோடிரவாகச் துரிதமாக தகனம் செய்யப்பட்டது (ஒரு வருடத்திற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளால் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 142 வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்ட இடமான நீர்கொழும்பில் முஸ்லிம்  உடலம் வலிந்து தகனம் செய்யப்பட்டமை ஒரு தற்செயல் நிகழ்வல்ல).

அரசாங்க வைத்தியசாலையின் அனைத்து வைத்தியர்களையும் மேற்பார்வை செய்யும் சுகாதாரப் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அனில் ஜயசிங்க தகனம் செய்யப்படுவது மாத்திரமே ஒரே தீர்வு என வழிகாட்டலை மாற்றுவதற்காகத் துரிதமாகவும் கமுக்கமாகவும் செயற்பட்டார். ஆனால், இதே பணிப்பாளரே இச்சம்பவம் நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் தொலைகாட்சியில் தோன்றி பொதுமக்களிடம் சடலங்களைப் புதைப்பதும் பாதுகாப்பானது எனவும்  உறுதிப்படுத்தியிருக்கின்றார். தகனம் செய்வது மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற திருத்தப்பட்ட ஒழுங்குவிதி ஏப்ரல் 1ஆம் திகதிதான் பகிரங்கப்படுத்தப்பட்டது. மாற்றம் நடந்த வேகமும் முன்னைய வழிகாட்டலை இரவோடிரவாக அகற்றியமையும் 30ஆம் திகதி நடந்த பிழையினை நியாயப்படுத்தவே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஏனெனில், 30ஆம் திகதிய தகனத்தினை இறந்தவரின் குடும்பத்தினரும் முஸ்லிம் சமய மற்றும் சமுதாயத் தலைவர்களும் கடுமையாக எதிர்த்திருந்தார்கள். ஏப்ரல் 1ஆம் திகதி இறந்த மற்றொரு நோயாளியின் உறவினர்களிடம் அவர்களின் அன்புக்குரிய அந்த நபரைத் தகனம் செய்ய தாங்கள் விருப்பம் தெரிவிப்பதாகப் படிவத்தில் கையொப்பமிடுமாறு பாரிய அழுத்தம் வழங்கப்பட்டது.

ஏப்ரல் 1ஆம் திகதி பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிரதமரின் சொந்தக் கட்சியினைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்ட கூட்டத்தில் சடலத்தினை அடக்கம் செய்வது பற்றிய பிரச்சினை பேசப்பட்டது. ஆனால், இந்த விடயம் அதற்கேயுரிய நுண்மைத்தன்மையுடன் கையாளப்படவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்ட வைத்தியர் ஜயசிங்க சடலத்தினைப் புதைப்பதை அனுமதிப்பதற்கு ஏன் மறுக்கின்றார் என்பதற்கான எவ்விதமான அறிவியல் காரணத்தினையும் முன்வைக்கும் திராணியற்றவராகச் சிறுமைப்பட்டிருந்தார். உடல்களைப் புதைப்பதற்கான தெரிவினைப் பற்றி ஆராய்வதற்காக இத்துறைசார் நிபுணர் குழுவொன்றினை நியமிக்குமாறு இக்கூட்டத்தில் பிரதமரிடம் முஸ்லிம் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதற்குத் தற்காலிகமாகப் பிரதமர் இணங்கினாலும் இதுவரை எதுவுமே நடந்ததாகத் தெரியவில்லை.

அரசாங்க வைத்தியர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எனும் மிகப்பெரிய அமைப்பு ஏப்ரல் 3ஆம் திகதி வைத்தியர் ஜயசிங்கவிற்கு எழுதிய கடிதத்தில் இலங்கைச் சட்டமும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களும் உடல்களைப் புதைப்பதை அனுமதிப்பதைச் சுட்டிக்காட்டியிருந்ததுடன் புதைப்பது சம்பந்தமான விடயத்தில் நிபுணர் குழுவொன்றினைக் கலந்தாலோசிக்குமாறும் அக்ககடிதத்தில் கோரியிருந்தது. ஆனால், இற்றைவரை எவ்வித நிபுணர் ஆலோசிப்பும் இடம்பெறவில்லை.

அரசாங்கத்தின் தற்போதைய வழிகாட்டல் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு முரணானதாகும். கொவிட்-19 இனால் இறந்தவர்களின் உடல்களைப் பாதுகாப்பாகக் கையாளுவது பற்றிய வழிகாட்டல்களை உலக சுகாதார ஸ்தாபனம் மார்ச் 24ஆம் திகதி வெளியிட்டது. “தொற்றுநோய் காரணமாக இறப்பவர்களின் உடல்கள் கட்டாயம் தகனம் செய்யப்படவேண்டும் என்பது ஒரு பிழையான கருத்தாகும். இது உண்மையல்ல” என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடுகின்றது. ஏனெனில், கொவிட்-19 என்பது சுவாசப்பைகளில் ஏற்படும் சுவாச நோயாகும். இது பிரதானமாக உடலின் திரவ துகள்கள் மூலமாகப் பரப்பப்படுகின்றது (எபொலா அல்லது கொலரா போன்றல்ல). இத்தொற்றினால் இறப்பவர்களின் உடல்கள் பொதுவாகத் தொற்றினைப் பரப்புபவை அல்ல. ஈமச்சடங்குகளுக்காகச் சடலத்தினைத் தயார்படுத்துபவர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணியவேண்டும். சடலத்தினைப் பார்ப்பவர்கள் தங்கள் கைகளைக் கழுவவேண்டும். எனவே, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கொவிட் 19 இனால் இறப்பவர்களின் உடல்கள் புதைக்கப்படலாம் அல்லது எரிக்கப்படலாம். உலக சுகாதார ஸ்தாபனம் அதன் அறிவியல் ரீதியான வழிகாட்டல்களைத் தயாரிக்கையில் “நாடுகளும் சுகாதாரப் பராமரிப்பு முறைமைகளும் இறந்தவர்களின் கௌரவத்தினைப் பாதுகாத்து இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டும் என வலியுறுத்துவதுடன் இறந்தவர்களினதும் அவர்களின் குடும்பத்தினரதும் கலாசார மற்றும் சமயப் பாரம்பரியங்களும் மதிக்கப்படவேண்டும் என வலியுறுத்துகின்றது. நீர்கொழும்பில் நடந்ததற்கு மாற்றமாக, கொவிட்-19 இனால் இறந்தவர்களின் உடல்களை அவசர அவசரமாக அகற்றுவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைக்கின்றது.

ஏப்ரல் 4ஆம் திகதி 16 சிவில் சமூக அமைப்புக்களும் 167 பிரஜைகளும் ஜனாதிபதி கோட்டபாயவிற்கும் ,சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கும், பொதுச் சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்கவிற்கும், சுகாதார அமைச்சின் பிரதம தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீரவுக்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் கலாநிதி தீபிகா உடுகமவிற்கும், பிரதம சட்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் அஜித் தென்னக்கோனிற்கும் எழுதிய கடிததத்தில் உடல்கள் தகனம் செய்யப்படுவதைக் கட்டாயமாக்குகின்ற சுற்றுநிருபத்தினைத் திருத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர். கொவிட்-19 நோயாளிகளின் சமயத்தினை ஊடக அறிக்கைகள் பொதுவாக அடையாளப்படுத்துவதைப் பற்றி எச்சரித்திருந்த இவர்கள் இச்செயலால் கொவிட்-19 பரவலுக்கு முஸ்லிம் சமுதாயமே காரணம் என்று அச்சமுதாயத்தினைக் குறைகூறி பெரும்போக்கு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெறுப்புப் பேச்சுக்கள் குவிவது இடம்பெறலாம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

2020 ஏப்ரல் 8ஆம் திகதி, பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் சமயச் சுதந்திரத்தினையும் மனநல ஆரோக்கியத்தினையும் சிறுபான்மையினர் உரிமைகளையும் பாதுகாப்பதை தனது ஆணையாகக் கொண்டுள்ள நான்கு ஐ.நாவின் விசேட நிபுணர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதியிருந்தார். சுகாதார அமைச்சின் திருத்தப்பட்ட சுற்றுநிருபம் தன்னிச்சையானது மற்றும் பாகுபாடுமிக்கது என அக்கடிதத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளதுடன், உடலைத் தகனம் செய்வது கட்டாயமானது அல்ல எனவும், அது அறிவியல் அடிப்படை அற்றது எனவும், முஸ்லிம் சிறுபான்மையினர் தங்களின் சமயத்தினைச் சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான உரிமையினை இந்தக் கட்டளை பாதிக்கின்றது எனவும் அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. தகனம் செய்யப்படவேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது எதிர்விளைவினை ஏற்படுத்தும் என அக்கடிதத்தில் வாதிக்கப்பட்டுள்ளது: “தமது அன்புக்குரியவர்களின் ஈமச்சடங்கினை உரிய முறையில் நிறைவேற்ற முடியாமல் போகலாம் அல்லது சடலத்தினை நல்லடக்கம் செய்யும் உரிமையினைத் தம்மால் உறுதிப்படுத்த முடியாமல் போகலாம் எனும் அச்சத்தினால் கொவிட்-19 பற்றித் தெரியப்படுத்த குடும்பங்களும் சமுதாயங்களும் கொண்டுள்ள தயக்கத்தினை இது அதிகரிக்கின்றது”. இதனால் நோய் அதிகம் பரவுவதற்கான வாய்ப்பே காணப்படுகின்றது.

கொவிட்-19 இற்கான அரசாங்கத்தின் பதிற்செயற்பாட்டினை ஒரு வெற்றிடத்தில் நோக்கக்கூடாது. ஒரு வருடத்திற்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் குழுவொன்று இலங்கையில் தேவாலயங்களையும் உல்லாச ஹோட்டல்களையும் இலக்குவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தி வெறியாட்டமாடியபோதும் இலங்கை அரசாங்கத்தின் பதிற்செயற்பாடுகள் இனவாதம் பூசப்பட்டவையாகவே காணப்பட்டன. தாக்குதல் தொடர்பான சகல தகவல்களும் தாக்குதலுக்கு முன்னமே பல தடவைகள் அரசாங்கப் புலனாய்வுத் துறைக்குக் கிடைத்தும் அவையெல்லாம் குப்பைக் கூடைக்குள் போடப்பட்டதன் விளைவாக 45 சிறுவர்கள் உள்ளிட்ட 269 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. ஆனால், இப்படுபாதகச் செயலைப் புரிந்தவர்களோ அல்லது அதற்கு உடந்தையாக இருந்தவர்களோ இனம்காணப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புரைகளிலும் அப்பாவி முஸ்லிம்களைக் கைதுசெய்வதிலுமே அரசாங்கம் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக பிரபல சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முஸ்லிம்களுக்கெதிரான திட்டமிட்ட தாக்குதல்கள் 2014ஆம் ஆண்டு அளுத்கமவிலும் தர்ஹா நகரிலும் நடத்தப்பட்ட அதே பாணியில் 2018ஆம் ஆண்டும் ஹெட்டிப்பொல எனும் சிறு நகரிலும் நிகழ்த்தப்பட்டன. முஸ்லிம்களின் வீடுகளும் கடைகளும் தாக்கியழிக்கப்பட்டன. காவியுடை தரித்தவர்கள் உள்ளிட்ட காடையர்கள் வாகனங்களில் வன்முறைக் கூலிகளாக இறக்கப்பட்டு நகரத்தினை எரியூட்டும்போது படையினரும் பொலிஸாரும் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றமை வேலியே பயிர் மேய்ந்த கதையினை எடுத்துக்காட்டுகின்றது. உயிர்காக்க முஸ்லிம்கள் சிதறியோடிய வேளையிலும் அரசாங்கம் அவர்களைக் காக்க உதவாமல் போதிய படையினரை வீதியில் இறக்காது ஒரு சிறுபான்மை இனத்திற்கெதிராக வன்மம் தீர்க்கும் முகவராகச் செயற்பட்ட அவலம் முஸ்லிம் மக்கள் மனதில் மிகுந்த அச்சத்தினையும் கவலையினையும் தங்களின் எதிர்காலப் பாதுகாப்புப் பற்றிய ஆழமான பீதியினையும் ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் உணவகங்களில் சிங்களவர்களுக்கு உணவு வழங்கும்போது நஞ்சைக் கலக்குகின்றார்கள், முஸ்லிம் வைத்தியர்கள் சிங்களப் பெண்களின் கருவளத்தினைச் சிதைத்துவிடுகின்றார்கள் என்ற இனவாத வதந்திகள் பரப்பப்பட்டன. இதனை ஆணைக்குழு போட்டு ஆராயவேண்டும் என்று வைத்தியரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் அறிவீனமாகக் கொக்கரித்தமை இனவாதம் அறிவுக் கண்களை மறைப்பதைத் தெட்டத்தெளிவாகக் காட்டியது. இனவாத நெருப்புக்கு எண்ணைய் வார்த்து உயிர்களும் உடைமைகளும் அழிக்கப்பட்ட பின்னரே அதிகாரிகள் அமைதிகாக்குமாறு காலங்கடந்து கோரிக்கை விடுத்தனர். நீதிமன்றத்தினை அவமதித்த குற்றத்திற்காகச் சிறை சென்ற தேரரான ஞானசார ஜனாதிபதியின் மன்னிப்பினால் வழமைபோல் வெளியில் வந்து முஸ்லிம் அமைச்சர் ஒருவரும் இரண்டு ஆளுநர்களும் பதவிகளை இராஜினாமாச் செய்யாவிட்டால் ரத்த ஆறு ஓடும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு முஸ்லிம்களின் உயிரைப் பறிக்குமாறு பகிரங்கவேண்டுகோள் விடுக்கையில் அரசாங்கம் மௌனம் காத்து முஸ்லிம்களுக்கெதிரான அதன் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியது.

அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் “ஒரு நாடு, ஒரு சட்டம்” என்கின்ற ஒரு விடயம் பற்றிப் பேச்சடிபட்டது. இலங்கையின் ஏனைய திருமணச் சட்டங்களுக்குச் சமமாக முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை மறுசீரமைப்பதற்காக பெண்ணுரிமை ஆர்வலர்கள் கடுமையாக உழைத்ததன் காரணத்தினால் அவ்வாறான மறுசீரமைப்பிற்கான தளம் உருவாக்கப்பட்டது. ஆனால், மறுசீரமைப்பு செயன்முறையினை முன்னெடுப்பதற்கு பதிலாக தற்போதைய அரசாங்கம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை இல்லாமலாக்குவதற்குத் தயாராக இருப்பதுபோல் தெரிகின்றது. எமது சமூகங்களின் பல்வகைமையினையும் பன்மைவாதத்தினையும் ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் எந்த அளவிற்குத் தயாராகவுள்ளது என்பதையும் அரசாங்கத்தின் சகிப்புத்தன்மை என்னவென்பதையும் இது காட்டுகின்றது. இலங்கைக்குள் கொவிட்-19 கொண்டுவந்தவர்களும் அதனைக் காவித்திரிபவர்களும் அதனைப் பரப்புவர்களும் முஸ்லிம்கள்தான் என முஸ்லிம்கள் மீது முத்திரைகுத்தச் சில தனியார் ஊடக நிலையங்கள் வரிந்துகட்டிக்கொண்டு செயலில் இறங்கியுள்ளன. இது முஸ்லிம்களை மேலும் தனிமைப்படுத்தியுள்ளது. ஊடகங்களின் இந்த வெறுப்புப் பிரச்சாரம் இதேநிலையில் தொடர்ந்தால் தொற்றினைத் தாமாகவே முன்வந்து அறிவிக்கும் நிலை மாறலாம் என்பது கவனிக்கத்தக்க விடயமாகும். முஸ்லிம்கள் தேசப்பற்றில்லாதவர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல எனும் மனப்பதிவு இந்த வெறுப்புரைகளினால் சிங்கள மக்களின் மனதில் விதைக்கப்பட்டுவருகின்றது. யுத்தம் முடிவடைந்த நாள் முதல் இத்தகையதொரு பிம்பத்தினையே தீவிர இனவாதக் கட்சியான பொதுபலசேனவும் அதன் கூட்டுக் கட்சிகளும் சில குறிப்பிட்ட அரசியல்வாதிகளும் கட்டியெழுப்ப முழுமூச்சுடன் முயன்றுவருகின்றனர்.

இவைதான் உண்மையென எமக்குத் தெரியும்: வைரஸிற்கு இன மத வேறுபாடு தெரியாது. தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையினை அரசாங்கம் எடுப்பது அவசியமானதாகும். பிரஜைகள் அரசாங்கத்தில் நம்பிக்கைகொண்டு நோய்க்குறிகள் ஏற்படுகையில் மருத்துவப் பராமரிப்பினைத் தேடுவது பாதுகாப்பானது என உணரவேண்டும். தற்போது அமுலிலுள்ள கட்டாயத் தகனமும் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைச் சமூக விலக்கல் செய்வதும் இந்த இலக்குகள் எவற்றினையும் அடைவதற்கு உதவாது. மாறாக, உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு முரணாகத் தன்னிச்சையான பணிப்புரைகளை அமுல்படுத்துவது முஸ்லிம்களின் நம்பிக்கையீனத்தினை ஆழப்படுத்தி, உரிய பரிசோதனையினையும் மருத்துவப் பராமரிப்பினையும் கோருவதில் இருந்தும் அவர்களை விலக்கிவைக்கலாம். சர்வதேச எல்லைகளை அறியாத இந்த உலகளாவிய வைரஸ் எம் அனைவருக்கும் பொதுச் சுகாதாரப் பாதிப்பினை ஏற்படுத்தாது ஒரு சமூகத்தினுள் கட்டின்றிப் பரவலாம் என நினைப்பது அறிவீனமாகும். சகல இலங்கையர்களினதும் பாதுகாப்பிற்காக பிரிவினைவாதத்தினை விதைப்பதற்குப் பதிலாக நம்பிக்கையினையும் இனநல்லுறவினையும் உருவாக்குவதற்கான நேரமே இதுவாகும்.

சிறீன் சரூர்