பட மூலம், @PARLNetworkSL

மனிதர்களின் இருத்தலின் நிலையாமையை அறிவித்த பல சிந்தனைப் பள்ளிகளும், தத்துவ மரபுகளும் பசியை  `பிணி` என்று விழித்தன. அவை சார்ந்து எழுந்த இலக்கியங்கள் பசிப்பிணியைத் தீர்ப்பது மேலான அறவாழ்வாக தம் அன்றாடத்துடன் இணைத்துக்கொண்டன. உலகம் முழுவதும் எழுந்த மகத்தான இலக்கியங்கள் பசியை நெருப்புடன் ஒப்பிட்டன. அடிவயிற்றிலும் நெஞ்சிலும் எரியும் நெருப்பாகப் பசி உருவகிக்கப்படுகின்றது.  தமிழில் எழுந்த பேரிலக்கியமான மணிமேகலை “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்கிறது. மணிமேகலையின் கதைப்புனைவில் மண்மேகலை என்னும் பெளத்த துறவி தேவகணங்களான தீவதிலகை, மணிமேகலா போன்றவற்றிடம் இருந்து ‘அட்சய பாத்திரம்’ என்பதைப் பெற்று பசித்திருப்போர்க்கு உணவளித்ததைப் பெரிய அறச்செயலாக வியாக்கியானம் செய்கிறது. இந்த அட்சய பாத்திரத்தை அந்தப் பெளத்த துறவி பெற்றுக்கொண்ட இடமாக ‘நாகதீவு’ அல்லது நயினா தீவு என்று அழைக்கப்பட்ட இலங்கை என்றும் மணிமேகலை தகவல்கள் தருகிறது.

(2018 இல் எழுதிய கட்டுரை ஒன்றின் நறுக்கு)

வன்னிப் பெருநிலத்தில் இறுதிப்போர் உச்சம் பெற்ற காலத்தில் இரண்டு கப்பல்கள் பற்றிய கதைகள் உலவின. ‘வணங்கா மண்’ என்ற கப்பல் மக்களுக்கு உதவியும் தீர்வுமாக பைபிளில் நோவாவினால் உயிர்களைப் பாதுகாக்க கட்டப்பட்ட கப்பலைப்போலப் பேசப்பட்டது; கடைசி வரை அது வந்து சேராமல் கதைகளில் மிதந்து கொண்டிருந்து விட்டுக் காணாமல் போனது. இன்னொரு கப்பல் நிஜத்திலே வந்து சேர்ந்தது எதேச்சையாக முல்லைத்தீவுக் கடலில் பழுதடைந்ததாகச் சொல்லப்பட்ட லெபனானிய கப்பல் அது. அது பற்றிய கதைகளும் நிறைய உலாவின. அது விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கொண்டு வந்தது, அரசி கொண்டு வந்தது என்று. இதில் அரிசி கொண்டு வந்தது என்பதை மக்கள் கண்கூடாகக் கண்டார்கள், அதனுடைய ‘வெள்ளை’ அரிசி போர்க்காலத்தில் வன்னியில் பரவலாகப் புழங்கியது. போர்க்கால நிவாரணங்களில் மக்களைப் பசியால் சாகவிடாமல் ஓரளவேனும் அது காப்பாற்றியது. முப்பது வருட யுத்தகாலத்தில் நிவாரணம், அத்தியாவசிய உணவுகள் போன்றன மக்களுக்குப் பரிச்சயமானவை. நெருக்கடிக்காலங்களில் எவ்வாறு இயங்குவது என்பதற்கு போர்ச்சூழலை மையமாகக் கொண்ட மாதிரிகள்  மக்களிடம் இருக்கின்றன. குறிப்பாகச் சொன்னால் வடக்கு – கிழக்கு தமிழ்  மக்களிடம் இருக்கின்றன. ஆனால், அம்மாதிரிகளும் அனுபவங்களும் கொரோனோ நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதுமாக அமுலாகியிருக்கும் ஊரடங்கில் பிழைத்துச்செல்ல உதவுமா என்ற கேள்வி இருக்கிறது. தவிர ஏற்கனவே பொருளாதாரச் சுரண்டலிலும் நெருக்கடியிலும் இருக்கும் மலையகத் தொழிலாளர்கள், அடித்தட்டுச் சிங்கள மக்கள் என்போருக்கு இந்த மாதிரியான பொருளாதார சமூகக் கதவுகள் அடைக்கப்பட்ட அறைகள், வீடுகள், லயங்கள், குடிசைகள் எப்படியான வாழ்க்கை முறைக்குள்ளும் மனநிலைக்குள்ளும் வைத்திருக்கின்றன என்பதும்  கவனிக்க வேண்டியிருக்கிறது.

அரசு தன்னுடைய நிர்வாக, இராணுவ, பொலிஸ் கட்டமைப்புக்களைக் கொண்டு நாட்டைத் திறம்பட முடக்கியிருக்கிறது. அது நோய்த்தொற்றைத் தவிர்க்க அவசியமான ஒன்றுதான். ஆனால், தன்னுடைய கையில் இருக்கும் வண்டைப் பாதுகாக்க கைகளை  இறுக்கி மூடிகொண்டால் மட்டும் போதுமா?

கொரோனா தொற்று பற்றிய பயம் பங்குனி மாதத்து இரண்டாம் வாரங்களில் மக்களிடையே பதற்றத்தைக் கொடுக்கத்தொடங்கும்தே பணம்படைத்தவர்கள், சூப்பர் மாக்கெட்டுகளையும், எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் முற்றுகையிட்டனர். பணமுள்ளவர்கள் உணவுப்பொருட்களையும் சுகாதாரப் பயன்பாட்டுப்பொருட்களையும் வாங்கிக்கொண்டு வீடுகளுக்குள் அடைபட்டால் இல்லாதவர்களின் நிலை என்னவாகும்? என்ற இயல்பான சீற்றம் எழுந்தது. ஆனால், தாராளவாத மனநிலைக்குப் பழக்கப்பட்ட இந்த மக்கள் கூட்டம் தன்னுடைய மிகை நுகர்வை நிறுத்தவில்லை. அதனை அரசாங்கம், “நாட்டில் உணவோ எரிபொருளோ பற்றாக்குறையில்லை” என்று இடர்காலத்துக்குரிய பொறுப்பில்லாத தகவலாக அறிவித்தது. தொடர்ந்து நோய்த்தொற்று உக்கிரம் ஆக  நாட்டை இழுத்துச்சாத்த உத்தரவுமிட்டது.

இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் நோய் நிலமையை ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இலங்கையின் பொருளாதார வாழ்வு கையை மீறிச்செல்கிறதை அவதானிக்க முடிகிறது. உற்பத்தியினது கிராமங்களும் சரி, தொழில் முறைகளை ஒழுங்குபடுத்தி சந்தைக்குக் குவிக்கும் நகரங்களும் சரி உள்ளிருந்து புகையத்தொடங்கிவிட்டன. அன்றாடங்காய்சிகள் தொழிலோ வருமானமோ இல்லாமல், அடிப்படை உணவுப்பொருட்களையே பெறமுடியாத நிலை உருவாகி வந்திருக்கிறது. இந்த நேரத்தில் அரசியற் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தேர்தல் நேரத்தைக் கருதிக்கொண்டு அவரவர் தொகுதிகளில் சமைத்த உணவுகளை வழங்குகின்றனர். ஓர் இடத்தில் பிறைட் றைஸ் கொடுக்குமளவிற்குப் போயிருக்கிறது. சமைத்த உணவுகளை தினமும் வழங்குவதன் ஊடாகத் தங்களின் முகங்களை அவர்கள் பரிச்சயப்படுத்தவும், அப்பங்களைப் பகிரும் ஏசுக்களாக தங்களின் திருவுருவங்களை முன்நிறுத்தவும் முயல்வது பரவும் நோய்க்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை.

ஊரடங்கு இப்போது உடனடியாக உண்டாக்கியிருக்கும் விளைவுகள் சிலவுள்ளன,

  1. அன்றாடம் உழைத்து உண்ணும் மக்கள் அடிப்படை உணவோ போசனையோ இன்றித் தவிக்கின்றனர்.
  2. பொருளாதார ஏற்றத்தாழ்வும் சிக்கலும்வயல்கள், தோட்டங்களில் திருட்டுக்கள் அதிகரிக்கச் செய்துள்ளது.
  3. அரசாங்க அறிவிப்புப்படி குடும்ப வன்முறைகள் குறிப்பாக பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன.
  4. சிறுவர் துஷ்பிரயோயம் முப்பது சதவீதமளவில் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
  5. உளவியல் பிரச்சினைகள், தனிமனித அகப்பிறழ்வுகள்

மேற்படி உள்ள பிரச்சினைகளில் பெரும்பங்கை பொருளாதாரம் வகிக்கிறது. எனினும், நோய் நிலமை கருதி மக்கள் தொடர்ச்சியாக உள்ளிருக்கப் பணிக்கப்பட்டு இருக்கின்றார்கள். ஆனால், பசியோடு இருக்க முடியாது என்பதை அரசாங்கம் உணர வேண்டும். அரசாங்கம் மக்களுக்குரிய அத்தியாவசியத் தேவைகளுக்கு என்று திட்டங்களை அடுத்தடுத்து அறிவிக்கின்றது. ஆனால், அவை வந்து சேரும் பாட்டைக்காணோம். இதுதவிர சமுர்த்தி முதலான ஏற்கனவே அரசாங்கத்திடம் இருக்கும் தரவுகளை மட்டும் நோக்காகக் கொண்டு அரசாங்கத்தின் உதவிகள் வந்து சேர்வதாகவும் சொல்லப்படுகின்றது. இப்பழைய தரவுகள் எவ்வகையில் சரியானவை என்றும் சமுர்த்தி பெறாத மக்கள், தொழில்களை இழந்து அன்றாட அடிப்படைத் தேவைகளுக்காகக் துன்பப்படவில்லையா என்றும் எழும் விமர்சனங்கள் பரவலாக எழுந்துள்ளன. கிராம சேவகர் பிரிவுகளின் ஊடாகக் கொடுக்கப்படும் அரசின் உதவிகளோ நிவாரணங்களோ ‘வாயுள்ள பிள்ளை’களையே அதிகம் சென்று சேர்கிறது என்பதும் சொல்லப்படுகின்றது. இங்கே அறமோ நீதியோ அற்று பசி எரிந்துகொண்டே இருக்கப்போகின்றதா? தீவ திலகை தோன்றி அட்சய பாத்திரமொன்றை வழங்காது என்பது பொறுப்பானவர்களுக்கு தெரியாமலா இருக்கின்றது?

இடையில் மணித்தியாலக் கணக்கில் தளர்த்தப்படும் ஊரடங்கு ‘கடைக்குப்போகும்’ தளர்வாக மட்டுமே இருக்கிறது. முன்பு சொன்னது போல அது பணமுள்ளவர்களின் ஊரடங்குத்தளர்வேயாகும். தவிர இவ்விடைப்பட்ட பொழுதில் விவசாயிகளும் கடலுணவு விற்பவர்களும் மட்டும் குறைந்தளவிலேனும் தேவை இருப்பதனால் பயனடைகின்றனர், மற்றபடி ஏனைய தொழில் செய்பவர்கள் வீடுகளுக்குள்ளேயே உறைந்து போயுள்ளனர்.

வடக்கு – கிழக்கைப் பொறுத்தவரையில் பெருமளவில் வந்து குவியும் வெளிநாட்டுப்பணம், இந்தச் சர்வதேச கொடுநோயின் காரணமாக நின்றும் போயுள்ளது, எதிர்காலத்திலும் அதன் வருகை மட்டுப்பட்டே இருக்கும், எல்லோருக்கும் இதே பிரச்சினைகள் உலகம் முழுவதும் இருக்கத்தான் போகின்றது. வெளியோ நோய் நிலமையும் உள்ளே பசிப்பிணியுமாக மக்கள் அல்லாடப்போகின்றார்களா?

இங்கே தற்காலிகமாகப் பட்டினிச்சாவைத் தடுக்க உள்ள வழி அரசு தன்னுடைய நலன்புரி கடமைகளை விரைவாகவும் சரிவரவும் செய்வது, இதற்கு முதல் போர்க்காலத்தில் அரசுடன் இணைந்து பல தொண்டு நிறுவனங்களே நிவாரணப்பணியாற்றியிருந்தன. போரின் பின்னர் அவர்களும் வெளியேற்றப்பட்டனர். பெருங் கஜானாக்களைக்கொண்ட அரசசார்பற்ற நிறுவனங்களோ தொண்டு நிறுவனங்களோ இலங்கையில் இப்போது கிடையாது. புதிய அரசாங்க அமைவின் பின்னர் வெளிவந்த அறிவிப்புக்களால் இருந்த தொண்டு நிறுவனங்கள் இலங்கையில் செயற்றிட்டங்களை மட்டுப்படுத்திக்கொள்ளவும், நிறுத்திக்கொள்ளவும் ஆரம்பித்த நாட்களில் இந்த நோய்நிலைமை வந்து சேர்ந்திருக்கிறது. ஏற்கனவே, வரியும் கடனும் சுமந்துகொண்டிருந்த மக்களின் அன்றாடத்தின் மீது சட்டென்று பாய்ந்து விட்டது. இந்த நிலமையில் நாடு முழுவதும் இப்பிரச்சினையைக் கருத்திற் கொண்டு சில சமூக செயற்பாட்டு இயக்கங்கள், பண்பாட்டு இயக்கங்கள் ஊரடங்கின் மத்தியிலும் சுழித்துக்கொண்டு அடிப்படை உணவுத்தேவைகளை நிறைவேற்றச் சிரமப்படுகின்ற மக்களுக்கு உதவ முனைகின்றனர். குறிப்பாக வடக்கில் ஊடகவியலாளர்கள் தங்களுக்கு ஊரடங்குச் சட்டத்திலும் வெளியே செல்ல இருந்த அனுமதியை மக்களுக்கு உதவப் பயன்படுத்திக்கொண்டது நல்லதொரு விடயமாகவிருந்தது. மேலும், தற்பொழுது சமூக செயற்பாட்டு இயக்கங்களும் செயற்பாட்டாளர்களும் இணைந்து இவ்வுதவிகளைப் பெற்றுத் தேவையுள்ள மக்களிடம் கொண்டு சேர்க்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளன. அவை தங்களுடைய நோக்கத்தினையும் செயற்பாட்டு வடிவங்களையும் பொது வெளிக்கு இவ்வாறு அறிவித்திருக்கிறார்கள்.

கொரோனா தொற்றுநோய்க்கால ஊரடங்குக் காலத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களிற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களைத் திரட்டுவதற்கும் விநியோகித்தலுக்குமான வலையமைப்பு

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டு வாழும் பொதுமக்களின் தேவைகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கும், அவற்றிற்குத் தேவையான நிதியைத் திரட்டவும், விநியோகித்தலை மேற்கொள்ளவும், அரச உதவிகள் தொடர்பான தகவல்கள் பரிமாறல் தொடர்பாகவும் இக் குழு இயங்கும்.

பல்வேறு இடங்களிலும் உதவி கோரல்கள் எழுந்தாலும், பலரும் தன்னார்வலர்களாகவும் அமைப்புகளாகவும் அர்ப்பணிப்பு மிக்க உதவிகளைச் செய்தாலும், நாம் செய்யக் கூடிய உதவிகளுக்கு எல்லைகள் உண்டு. நிதி திரட்டல் மற்றும் விநியோகித்தலிலும் பலருடைய கூட்டு உதவிகளும் தேவை. அப்பொழுதே மக்களின் தேவைகள் பூர்த்தியாகும்.

குழுவின் மூலமாக ஆற்றக் கூடிய பணிகளைக் கீழே வரையறுத்துள்ளோம்

  1. இக் குழுவின் பிரதான நோக்கம் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை உரிய தரவுகளின் மூலம் வினைத்திறனான வகையில் சேர்ப்பித்தலும். பசிப் பிணியிலிருந்து மக்களைப் பாதுகாத்தலும்.
  2. சில தொகைப் பொருட்களை நாம் வழங்கினாலும் அரசு வழங்கினாலும் அவை எவ்வளவு காலத்திற்குப் போதுமானவை?
  3. உதவிகள் தேவையானவர்களுக்குச் சென்று சேர்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தல், மீளவும் உதவி தேவைப்படும் போது வலையமைப்பைப் பயன்படுத்துவதன் மூலமாக உதவிகளை வினைத்திறனான வகையில் கொண்டு சேர்ப்பித்தல்.
  4. பல வகைகளிலும் நிதியினைப் பெற்றுக் கொண்டாலும் அவை குறித்த நபர்களின் அல்லது அமைப்புகளின் நன்மதிப்பின் பேரிலேயே கையளிக்கப்படுகிறது. உதவும் எண்ணம் கொண்ட பலர் இருப்பினும் அவர்களுக்கு பொது நம்பிக்கையை உண்டாக்க பல அமைப்புகளினதும் தனிநபர்களினதும் கூட்டு நம்பிக்கையை தொகுக்கும் வடிவமாக இக்குழு பணியாற்றும்.
  5. அரச அதிகாரிகள், குறித்த பிரதேச அரசியல் தரப்புகள் போன்றவற்றின் தேவையான விபரங்களின் கோரல், அவர்கள் முறையாக இயங்காதவிடத்து ஆற்றக் கூடிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளை வழங்க முடியும்.

இக் கூட்டுச் செயற்பாட்டில் தன்னார்வலர்கள் நிதிப்பங்களிப்பை அல்லது பொருள் உதவிகளைச் செய்வதன் ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தேவையான அன்றாட உழைப்பாளிகள், முதியவர்கள், வறுமையில் வாழும் குடும்பங்களிற்குத் தேவையான உதவிகளை நாம் கொண்டு சேர்ப்பிக்க முடியும்.

போருக்குப் பின்னர் வடக்கில் தோன்றிய பண்பாட்டு இயக்கங்களும், சமூகச் செயற்பாட்டு இயக்கங்களும் தங்களுடைய அரசியல் நிலைப்பாடுகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் வெளியே இடர்காலத்தினைக் கருத்தில் கொண்டு இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பசியும், வறுமையும் மக்களைத் திருடர்களாகவும் வன்முறையாளர்களாகவும் மாற்றிய கதைகளை வரலாறு நெடுகிலும் அவதானித்து வந்துள்ளோம், ஒடுக்கப்படுபவர்களினதும் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டவர்களினதும் வன்முறை என்பதில் இருப்பதன் அறம் கனதியானது. நாம் எங்களுடைய மக்கள் திருடர்களாகவும் கொலைகாரர்களாகவும் மாறும் காலத்தைப் பார்க்கப்போகிறோமா? கொடுங்காலம் ஒன்றைக் கடப்பதற்கு நம்மிடம் பகிர்வு தேவைப்படுகிறது. இருப்பதை, மேலதிகமாக இருப்பதைப் பகிர்ந்து கொள்வதன் ஊடாக நாம் இந்த கொள்ளை நோய்க்காலத்தைக் கடப்போம் என்பதுதான் அறமாகும். செல்வம் படைத்தவர்கள், அரச ஊழியர்கள் என்று பலரும் இதில் பங்கெடுக்கலாம். அன்றாட உழைப்புக்கு வழியில்லாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு உதவலாம். அது நம்முடைய கடமையாகும், அதுவே நீதியுமாகும். இத்தனைகாலத்து மனித வரலாற்றின் சிந்தனையை, நாகரிகத்தை, அறவுணர்வை, நீதியின் எல்லைகளை ஒரு கிருமி உடைத்துப்போட்டது, என்பதாக நாம் இதைக்கடந்து செல்ல வேண்டாம். சமூகம் தன்னைத்தானே கொலை செய்துகொள்ளும் பேரவலம் நிகழ வேண்டாம்.

“யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி”

யதார்த்தன்